இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட போது, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டார்கள். வடகிழக்கு மாகாணங்களில் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகக்குறைவாக இருக்கின்றார்கள். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் 394 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதேபோன்ற ஒரு விபரத்தை தயாரித்து வழங்கி வருகின்றோம். மாற்று வழிகளை தேடுமாறு கோரியிருந்தோம். பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்கின்றார்கள். மாகாணத்தில் மட்டும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் கொடுக்கின்றது.
அமைச்சர்களின் விருப்பமாகவும், பாடசாலைக்குச் செல்லாதவர்களும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்றது. கணித பாட ஆசிரியர்கள் 188 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான பாடத்திற்கு 161 ஆசிரிய வெற்றிடங்களும், ஆங்கில பாடத்திற்கு 51 வெற்றிடங்களும் நிலவுகின்றன.
தமிழ் பாட ஆசிரியர்கள் 99 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த நியமனங்களை யார் வழங்குவது? மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வேறு மாகாணங்களில் வழிவகுத்த விடயங்களை மாகாண கல்வி அமைச்சிடம் கொடுத்தோம். அதை யாரும் கேட்பதாக இல்லை.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக மாகாண சபையில் சண்டையும் சர்ச்சரவும் நிகழ்ந்தது. தற்போது, ஓய்ந்து நின்மதியாக இருக்கின்றது.மேலும் கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.(15)