மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள அவரது வீட்டில் 27.01.2016 புதன்கிழமை அதிகாலை 6 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளார்.
இவரது இறுதிக்கிரியைகள் 29.01.2016 நேற்று வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று ,அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து இவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு நேற்று நண்பகல் பூதவுடல் ஊர்வலமாக விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன் எடுத்துவரப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இவரது உடல் கல்லடி சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தில் வைக்கப்பட்டது .
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கல்லூரி பணிப்பாளார், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள், அரச அலுவலக அதிகாரிகள் , கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மண்ணின் புகழ் பூத்த மிருதங்க வித்துவான் திரு. வேல்முருகு சிறிதரன் அவர்களை இன்று இம்மண் இழந்து நிற்கின்றது. இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார்.
இவர் தனது தந்தை திரு. வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார்.
தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடம் பல வருட காலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார்.
தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்..
பின் 2001ஆம் ஆண்டில் இருந்து மிருதங்க போதனாசிரியராகவும், 2005 ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலும் இசை நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றி வந்தார்.
வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார் .
இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடன கலைஞரான திருமதி உமா ஆனந்த் அவர்களின் நடன நிகழ்விற்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்பு செய்தார்.
இவர் வடஇலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும், இந்துக்கலாசார இந்து சமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான சி. இராஜதுரை அவர்களால் “லய இசைச்செல்வன்” என்ற பட்டத்தினையும் கல்லாறு சத்தியசாயி பாபா சபையினால் “சர்ம வாத்தியகலாபதி” எனும் பட்டத்தினையும் மிருதங்க சாகரம் , மிருதங்கக்கலைமாமணி, போன்ற பல பட்டங்களையும் பெற்ற மிருதங்கக் கலைஞராவார்.
இவர் மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசை விழாக்கள் நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.
இன்று நாம் இக்கலைஞரை இழந்தமையானது ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
இவரது இடத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையானது மிகவும் மன வேதனைக்குரியதொன்றாகும்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இப்புகழ் மிக்க கலைஞரின் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.