மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் கவனயீர்ப்பு நிகழ்வு!

Monday, March 8, 2021


 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.


நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் போன்ற உயர் தீர்மானங்களை மேற்கொள்ளும் சபையில் பெண்கள் பிரதிதித்துவம் வெறுமனே 5.3 வீதங்களே காணப்படுகின்ற நிலையில் அவை மாற்றப்பட்டு சட்டவாக்கல் சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல், தற்போது இராஜாங்க அமைச்சின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக உருவாக்கி பெண் அமைச்சரின் ஒருவரின் கீழ் கொண்டுவருதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படல் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உமது பங்கு என்ன? மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா? பெண்களின் மனித உரிமைகள் எங்கே? வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டினை ஆளமுடியாதா? போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

O/L பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுக்கும் கடும் எச்சரிக்கை!

 


2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடையவுள்ளது. எனவே, பரீட்சை நிறைவடைந்தவுடன் அமைதியான முறையில் கலைந்துச் செல்லுமாறு, பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது, பரீட்சை முடிந்தவுடன் பரீட்சை நிலையங்களிலோ அல்லது பரீட்சை நிலைய வளாகத்திலோ அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதல் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், பரீட்சை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு செயற்படுவோரின் பரீட்சைப் பெறுபேறுகளை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
READ MORE | comments

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை..!!

 


உலக சுகாதார ஸ்தாபனத்தின் covax திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட astrazeneca covishield தடுப்பூசிகள் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.


இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

covax திட்டத்தின் மூலம் நாட்டிற்கு வழங்கப்பட்ட 2 லட்சத்து 64 ஆயிரம் astrazeneca covishield தடுப்பூசிகள் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 563 பேருக்கு astrazeneca covishield தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை கோரியிருந்த AstraZeneca COVIShield தடுப்பூசிகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் இலங்கை சுகாதார தரப்பிடம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனம் கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாரமொன்றில் 3 மில்லியன் AstraZeneca COVIShield தடுப்பூசிகளை வழங்குமாறு சீரம் நிறுவனத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்!!


 சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலேயே இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார், நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் தெரியப்படுத்தி நீதிமன்ற தடையுத்தரவினை வழங்க முற்படுகையில், பெயர் குறிப்பிட்டவர்கள் அவ்விடம் இல்லாமையால் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

இவ்வாறு பொலிஸார் வருகை தந்து, தடையுத்தரவினை வழங்க முற்பட்டபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதை காண முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர், கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
READ MORE | comments

இராணுவ சிப்பாயின் தாக்குதலுக்கு உள்ளாகிய 22 வயது இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

 


இராணுவ சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
READ MORE | comments

அம்பாரை மல்வத்தை பகுதியில் மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்!

 


அம்பாரை மல்வத்தை பகுதியில் 08/03/2021 இன்று காலையில் மோட்டார் வாகனம் ஒன்று பிரதான வீதியில் கட்டுப்பாட்டினை இழந்து வயலுக்குள்  பாய்ந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது .


சாரதி வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
READ MORE | comments

அரச ஊழியர்களுக்கு ஓர் அறிவிப்பு!

Sunday, March 7, 2021

 


அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் நாளை(08) முதல் வழமைப்போன்று கடமைக்குத் திரும்ப வேண்டுமென, அரசாங்கம் அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ஏழு வாரங்களான குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!

 


கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட 7 வாரங்களான குழந்தை ஒன்று பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்தது.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நுரையீரலில் ஏற்பட்ட நோய்நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழந்தைக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை தெரியவந்தது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்தது.

அந்த குழந்தையின் தாய்க்கும் கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!!


 மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை (திங்கட்கிழமை) காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுவருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் சண்முகராஜா,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம் மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் பிரதிதவிசாளர்,பிரதேசசபை உறுப்பினர்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இன்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் சிலரின் பெயரை வாசித்து அவர்களுக்கு தடையுத்தரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.எனினும் அவர்கள் குறிப்பிட்ட பெயரில் அங்கு யாரும் இல்லையென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது அங்கிருந்து நாளை காலை 9.00மணிக்கு முன்னர் வெளியேறிச்செல்லுமாறு பொலிஸாரினால் பணிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

சுகாதார நடைமுறைகளைப்பேணி மிகவும் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர் நடந்துகொண்டுள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை அவர் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் குறித்த பெண்களின் அனுமதியின்றி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை நீதிமன்ற உத்தரவுடன் வருவதாகவும் காலை 09.00மணிக்கு முன்பாக அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
READ MORE | comments

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Saturday, March 6, 2021

 


ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்பமயப்படுத்துவதற்கான (ஒன்லைன்) விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியிலான இலங்கை ' என்ற வேலைத்திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அரச நிறுவனங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சேவை பெறுனர்களின் விருப்பத்தின் பேரில் , தேசிய அடையள அட்டை தகவல்களை ஒன்லைன் மயப்படுத்த இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் , இலங்கை வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, டயலொக் நிறுவனம், சம்பத் வங்கி, ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியா, எச்.எஜ்.பி.சி. உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஓய்வூதியத் திணைக்களம் , ஹட்டன் நெஷனல் வங்கி உள்ளிட்டவற்றுடனும் ஒப்பந்தம் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நபர்களின் அடையாளத்தை பிழையின்றி மிக சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதோடு , துரித சேவையையும் வழங்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

READ MORE | comments

சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் கைது!!


 நடைபெற்று வரும் 2020 ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வலஸ்முள்ள பகுதியில் உள்ள பாடசாலையில், தனிப்பட்ட பரிட்சாத்தியாக பரீட்சையில் பங்கேற்ற மாணவன் ஒருவன், மற்றொரு மாணவனுக்காக பரீட்சை எழுதியுள்ளதாக பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் நேற்று வலஸ்முள்ள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் பரீட்சை எழுதியுள்ள நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவனை இன்று நீதிமன்னத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

O/L பரீட்சையில் கொரோனா தொற்றுடன் 55 மாணவர்கள் தோற்றுகின்றனர்!!

 


க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

 


திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நேற்று  (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி சிறிகாந்த், திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சீ.பிரகாஷ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கான திருப்பெருந்துறை திண்மக்கழிவகற்றும் நிலையம் தொடர்பான குறைபாடுகள் தொடர்பில் கதைக்கப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான அமைதியும் வழங்கப்பட்டது.

அத்தோடு கொடுவாமடு திண்மக்கழிவகற்றும் நிலையத்திற்கு எவ்வாறான கழிவுகளை கொண்டு செல்வது, பொது மக்களது குப்பைகளை எவ்வாறு அகற்றுவது வைத்தியசாலை கழிவுகளை எவ்வாறி கையாழ்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

வாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை!- சரத் வீரசேகர


 ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர் வலியுறுத்தினாலும் போர்க் குற்ற விசாரணையை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை குறித்து இந்தியா தற்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பொய்யான அறிக்கை என குறிப்பிட்ட சரத் வீரசேகர, இந்த அறிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

மட்டக்களப்பு- கல்குடாவில் ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

Friday, March 5, 2021

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதுடன் இன்று இரவு 08.30 மணிக்கு ஒன்பதாவது ஜனாஸாவும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்;களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டது

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் அட்டாளைச்சேனை ஒருவர், காத்தானகுடி ஒருவர், அக்கறைப்பற்று ஒருவர், சாய்ந்தமருது மூன்று, கோட்டமுனை ஒன்று, ஏறாவூர் இரண்டுமாக மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் இன்று (05.03.2021) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.READ MORE | comments

கல்முனையில் ஒரு உண்ணாவிரதம் மீண்டும் ஆரம்பமானது

 


வடக்கு கிழக்கு மாகாண பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஏற்பாட்டில் கல்முனையில் ஒரு உண்ணாவிரதம் மீண்டும் ஆரம்பமானது. பல அம்ச கோரிக்கைகள் முன்வைத்து சுழற்சி முறையினால் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், கல்முனை மாநகர சபை உறுப்பினர், காணாமலாக்கப்பட்டோர் ஒன்றிய முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கெடுப்பு


(நூருல் ஹுதா உமர்)
READ MORE | comments

இலங்கையில் முதல் முறையாக கொவிட் சரீரங்கள் புதைக்கப்பட்டன!!

 


நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள் புதைக்கப்பட்டுள்ளன.


கொவிட்-19 தொற்றினால் மரணித்த இருவரின் சரீரங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி - சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சூடுபத்தினசேனை பகுதியில் கொவிட்-19 சரீரங்களை புதைப்பதற்கு அனுமதிக்கப்படடுள்ளது.

இந்த நிலையில், இரண்டு சரீரங்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் மூன்று சரீரங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ MORE | comments

மட்டக்களப்பு உண்ணாவிரதம் 3வது நாளாக தொடர்கிறது!

 


இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இதன்படி, அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (5) முன்னெடுக்கப்படுகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின்  ஏற்பாட்டில்  நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஸ்ரீநேசன் , பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பெருமளவானோர் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

READ MORE | comments

55 வயது மதிக்கத்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தெரிவிப்பு!

 


ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் இன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து விட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55 - 60 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வெள்ளை சாரமும், மெருன் நிற ஷேட்டும் அணிந்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
READ MORE | comments

பொத்துவிலிலும் ஆரம்பமானது உணவு தவிர்ப்பு போராட்டம்! கலையரசன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கிய அகிம்சை வழியிலான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கல்முனை திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழற்சி முறையிலான போராட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, தாமோதரன் பிரதீபன் உள்ளிட்டோருடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

READ MORE | comments

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டுச் சந்தைக்கு!!

 


பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வைரஸை அழிக்கும் குறித்த முகக்கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

தற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!!

 


யுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு டாம் வீதியில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட யுவதியின் தலையை தேடும் நோக்கில் இன்றைய தினமும் களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கரையோர காவல்துறை பிரிவு அதிகாரிகளினால் நேற்றைய தினம் மதியம், முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரையான களனி கங்கையின் இரு பக்கங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, தற்கொலை செய்து கொண்ட உப காவல்துறை பரிசோதகரின் மூத்த சகோதரி, முறையற்ற தொடர்பு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை பரிசோதகர் தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே, அவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை உப பரிசோதகரால் கொலை செய்யப்பட்ட குறித்த யுவதி, அவரின் வீட்டிற்கு சில சந்தர்ப்பங்களில் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தொடர்பில் அந்த காவல்துறை உப பரிசோதகரின் மனைவி அறிந்திருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
READ MORE | comments

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Thursday, March 4, 2021

 


கொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.


கடந்த முதலாம் திகதி 167 பேருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று (03) மாலை கிடைக்கப்பெற்ற போதே மேற்படி 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரப்பகுதியில் 10 பேர், தர்மபுரத்தில் 05 பேர் மற்றும் யதன்சைட் பகுதியில் ஒருவருமாக 16 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் கொட்டகலை பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளின் ஐந்து ஆசிரியர்களும் 07 மாணவர்களும் அடங்குவதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்.

மேலும் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம்!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாலை செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது.


மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளிலும் 07 பிரதேச பிரிவுகளிலே அதிகமாக டெங்கு நுளம்பின் தாக்கமும் பரவலும் காணப்படுகின்றது. இதனை கட்டுபடுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வலயக்கல்வி அதிகாரிகள் ஆகியோரின் இணைந்த செயற்பாட்டின் மூலமாகவே டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தி கொள்ள முடியும் என பிரஸ்தாபிக்கப்பட்டது.

மக்களுக்கு போதுமான தெளிவூட்டல்களை வழங்குவதும் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்களை மேற்கொண்டு ஆலோசனை வழங்குவதற்கு தேவையான ஆளணிகளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அமர்த்தப்பட்டவர்களை சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் படி மேலதிக அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டு மரணங்கள் பதிவாயுள்ளது. குறிப்பாக 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் 40 வீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்ரிடத்தக்கது. குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதி, ஒட்டமாவடி மத்தி, காத்தான்குடி, கோரளைப்பற்று, ஏறாவூர் நகர், ஒட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலே அதிக அளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். கடந்த மாதங்களை விடவும் இம்மாதம் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த டெங்கு நோய் பரவலை பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் தங்களின் வீடுகளில் உள்ள கழிவுகளை முறையாக அகற்றி டெங்கு நுளம்பு பெருகுகின்ற இடங்களை நுத்தப்படுத்தி இந்நோய் பரவலில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிராந்திய சுகாதார பணிமனை, வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உதவி திட்டமிடல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

இலங்கையில் வேகமாக பரவி வரும் நோய்! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

 


டைனியா தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் அனுராதபுர பகுதியில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் டாக்டர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.

இதற்கு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும் என்றும் டாக்டர் கூறினார்.

சாதாரணமாக விட்டால் உடல் முழுதும் பரவுவதுடன், ஏனையோருக்கும் தொற்றும் ஆபத்து உள்ளது.

டைனியா (அல்லது கருப்பு குழாய்) தொற்று என்பது வெவ்வேறு பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு நோயாகும். பூஞ்சை உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கின்ற தோல் நோயாகும்.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழக்குளத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்

 


வெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மட்/குருக்கள்மடம் ஏத்தாழக்குளம் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன.

குறித்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் இப்பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

READ MORE | comments

இந்துக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டார் பிரதமர் மஹிந்த

 


மஹா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சைவ மக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இச்சிவராத்திரி நோன்பினை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் சைவத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

அதன்போது சைவச் சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மஹா சிவராத்திரி விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் ! இப்படியும் ஏமாத்துவாங்க உஷாரா இருங்கள்

 


யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.

இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்துவார்.

பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும், அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்து செல்வார்.

அங்கு சென்றதும் அவர் முதலில் அந்த வீட்டிற்குள் சென்று விட்டு, சில நிமிடத்தில் ஏதேனும் காரணம் கூறி முச்சக்கர வண்டி சாரதியையும் வீட்டிற்குள் அழைப்பார்.

சாரதி வீட்டிற்குள் சென்றதும் வீட்டினுள் இருக்கும் இளைஞர்கள், சாரதி அந்த பெண்ணுடன் தவறான நோக்குடன் நடந்து கொள்வதற்கு வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி சாரதியை மிரட்டி பணத்தினை கொள்ளையிடுவார்கள்.

இந்நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு ஓர் முச்சக்கர வண்டி சாரதியை வீட்டினுள் அழைத்து சென்று அங்கிருந்த இளைஞர்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டு அவரது தங்க சங்கிலி மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்ட சாரதி சென்றிருந்த போது, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது தொலைபேசியில் கொள்ளை கும்பலின் புகைப்படங்களை காட்டி இவர்களா? கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் என வினாவியுள்ளார்.

அவர் அவர்களை அடையாளம் காட்டிய பின்னர், அவரின் தொடர்பு இலக்கத்தை பெற்ற பின்னர் முறைப்பாடுகள் எதனையும் பதியாது. பாதிக்கப்பட்ட நபரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரியுள்ளார்.
READ MORE | comments

பேஸ்புக் காதல் ! அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’

 “பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக மீட்கப்பட்ட குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதான திலினி யேஹன்சா என்ற யுவதியின் பேஸ் புக்கில் எழுதப்பட்டிருக்கும் வசனமாகும்.

அந்த யுவதி, ஒரு இளைஞர் சமூக ஆர்வலர், சமூகத்தில் நல்மதிப்பை கொண்டிருந்தவர், ஆனால், திருமணம் முடித்த ஒருவருடன் ஏற்பட்ட  பேஸ்புக் காதலால், தலையிழந்து முண்டம் கண்டம் துண்டங்களாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

தான் நேசித்த பெண்ணை இதயம் இல்லாமல் யாராவது கொல்ல முடிந்தால், மனிதநேயத்தை எந்தளவுக்கு சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது என சொல்லத் தேவையில்லை. ஒரு மனிதன் தலையைத் துண்டித்து உடலை ஒரு பையில் வைத்து பஸ்ஸில் ஏற்றிக்கொண்முடியுமா? அந்தளவுக்கு யாருக்குத்தான் இதயத்தை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியும்.

அவ்வாறு இதயத்தை கட்டுப்படுத்தி கொண்டு படுகொலைச் செய்த, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப-பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி​ரேமசிறி, பதுளையிலுள்ள தனது வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

மார்ச் 1ஆம் திகதி பகல் வேளையில் புறக்கோட்டை- ஐந்துலாம்புச் சந்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்த மர்ம பயணப் பொதியில், பெண்ணொருவரின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சி.சி.ரி.வி கமெராக்களில் பதிவான காட்சிகளின் ஊடாக, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

மர்ம பயணப் பொதி போடப்பட்டது மட்டுமன்றி, எங்கிருந்து ஏற்றப்பட்டது. உள்ளிட்ட விவரங்களும் மிகவேகமாக பொலிஸாரின் கைகளுக்கு கிடைத்தன, அதனடிப்​படையில், ஹங்வெல விடுதிக்குச் சென்றிருந்த பொலிஸார், விவரங்களைத் திரட்டிக்கொண்டு பதுளை- படல்கும்பர பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் வீட்டை நேற்று முன்தினம் (2) சென்றனர்.

எனினும், பொலிஸ் வந்திருக்கின்றனர், ஏனென்று பாருங்கள்” என தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, வீட்டின் பின்பக்கமாக தப்பியோடிய சந்​தேகநபர், தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். ஆனால், யுவதியின் தலைக்கு என்ன நடந்ததென்பது இதனை எழுதும் வரையிலும் மர்மமாகவே இருந்தது.

பேஸ் புக்கின் ஊடாக காதல் கொண்ட இவ்விருவரும் அவ்வப்போது, வெளியில் சுற்றிதிரிந்துள்ளனர். இந்தக்காதல் எவ்வளவு நீளமானது, படுகொலை, தற்கொலை இவ்விரண்டுக்கும் காரணங்கள் என்ன என்பதெல்லாம் வெளியாகவில்லை.

ஆனால், ​பொலிஸ் உப- பரிசோதகர், திருமணம் முடித்தவர் என்றும் யுவதி திருமணம் முடிக்காதவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையியே, “அந்த யுவதி, கடுமையான அழுத்தங்களை தனக்கு கொடுத்துவந்தாள்” என உப-பொலிஸ் பரிசோதகரின் எழுத்துமூல ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ளது.

படல்கும்பர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அவர், விடுமுறையில் இருந்துள்ளார். கதிர்காமத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து பெப்ரவரி 27ஆம் திகதியன்று வெளியேறிய அந்த யுவதி, தனது காதலுடன் சேர்ந்து ஹங்வெல்லயிலுள்ள விடுதியொன்றுக்கு பெப்ரவரி 28ஆம் திகதி வந்துள்ளனார்.

ஆனால், விடுதியை விட்டு வெளியேறும் போது, பயணப்பையுடன் இளைஞன் மட்டுமே சென்றுள்ளார் என்பதும் விடுதியிலுள்ள சி.சி.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது. அத்துடன், விடுதியில் கையளிக்கப்பட்ட அடையாள அட்டையிலிருக்கும் விவரங்களை வைத்துக்கொண்டே, பதுளை- படல்கும்பர பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

சந்கேநபர், காட்டுக்குள் தப்பியோடி தலைமறைவாகி விட்டதால், பல பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டன. ஆனால், சந்தேகநபரான பொலிஸ் உப- பரிசோதகர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

தாய் மற்றும் உறவினர்களால் யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடந்த 27ஆம் திகதி கதிர்காமம் செல்வதாகத் தெரிவித்து இவர் வீட்டை விட்டு வெ ளியேறியுள்ளாரென்றும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த யுவதியின் சகோதரர் பிரதேச அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் வலைத்தளம் ஊடாகவே யுவதியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேகநபர், தான் திருமணம் முடிக்காதவர் என அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியை கொலை செய்த சந்தேகநபர், தலையை வேறாக்கி முண்டத்தை மாத்திரம் பயணப் பொதியில் போட்டு, ஹங்வெல்ல நகரிலிருந்து தனியார் பஸ் ஒன்றில் ஏறி புறக்கோட்டை- ஐந்துலாம்புச் சந்தியில் அந்தப் பொதியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியும் பொலிஸாரால் மார்ச் 2ஆம் திகதியன்று பரிசோதனை செய்யப்பட்டதுடன்,இதன்போது சந்தேகநபரின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட விடயங்களை விடுதியிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளர்.

விடுதி உரிமையாளரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சந்தேகநபர் யுவதியுடன் விடுதிக்கு 28ஆம் திகதி வருகைத் தந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இ​தேவேளை, சந்தேகநபருக்கு 18 வயது மகனொருவர் உள்ள நிலையில், சந்தேகநபரின் மனைவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, கடந்த 27ஆம் திகதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி 2ஆம் திகதி அதிகாலை மீண்டும் வீட்டுக்கு வந்ததாகவும் இவர் உப பொலிஸ் பரிசோதகராவதற்கு முன்னர் அமைச்சு பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் சிறந்த பொக்சிங் வீரர் என்பதுடன், நீண்டகாலமாக பழகிவந்த யுவதியை ஏன் கொன்றார் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட யுவதியின் ஆடைகள் அடங்கிய பொதியொன்று ஹங்வெல பஸ் தரிப்பிடத்திலிருந்து நேற்று முன்தினம் (2) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யுவதி, சந்தேகநபரின் விவரங்கள் கிடைத்திருந்தாலும், “தலை” மர்மமாகவே இருக்கிறது

READ MORE | comments

குடும்ப தகராறு காரணமாக தாயார் விபரீத முடிவு, 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பு!!

 


கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் குதித்திருந்த நிலையில், காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


எனினும் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் நேற்று பிற்பகல் கிணற்றில் குதித்திருந்தார்.

பின்னர் அவர், உயிருடன் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பிள்ளை சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய இரு பிள்ளைகளும் தேடப்பட்டு வந்தநிலையில் உயிரிழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 2, 5 மற்றும் 8 வயதுகளை உடைய பிள்ளைகளே மரணித்துள்ளனர்.
READ MORE | comments

தனது மகளை இளைஞன் ஒருவர் கடத்திச்சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை - மட்டக்களப்பு தாந்தாமலையில் சோகம்!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு,தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் இளம் குடும்பப்பெண் ஏரம்பமூர்த்தி-நிஷாந்தி வயது 37 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து சொண்ட சம்பவம் புதன்கிழமை (03 ) மாலை இடம்பெற்று;ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-அண்மையில் உயர்தர பிரிவில் பரிட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் முடிக்க கடத்திச் சென்ற நிலையில் சம்பவத்தினை நினைத்து மனமுடைந்த நிலையில் இருந்த தாயார் தனது வீட்டில் யாரும் இல்லா நிலையில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணையின் போது அறியமுடிந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
 
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
READ MORE | comments

வீட்டின் உரிமையாளரின் சாரத்தை அணிந்துகொண்டு நள்ளிரவில் திருட்டு- மட்டக்களப்பில் சம்பவம்!

Wednesday, March 3, 2021மட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டிய திருடனால் ஏழரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சம்பவம் தினத்தன்று அதிகாலையில், வீட்டின் அறையில் இரு பிள்ளைகளும் வரவேற்பு அறையில் தாயும் மற்றுமொரு பிள்ளையும் உறங்கியுள்ளனர். வீட்டின் வெளிப்பகுதியில் வீட்டு உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் மலசல கூடத்தில் சிறிய யன்னல் அமைக்க விடப்பட்டிருந்து. அப்பகுதி வழியாக திருடன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த உரிமையாளரின் ஒரு சாரத்தை எடுத்து கட்டிக்கொண்டு அறையினுள் புகுந்துள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த குறித்த வீட்டின் உரிமையாளரின் மனைவியோ அவதானித்த போது, கணவர்தான் பிள்ளைகள் தூங்கும் அறைக்கு சென்றுள்ளார் என நினைத்து, என்ன அறையில் செய்கின்றீர்கள் எனக் கேட்டார். எனினும் பதில் எதுவும் சொல்லாத நிலையில், குறித்த அறையில் இருந்து சில நிமிடங்களின் பின்னர் சமையலறைப் பகுதிக்கு திருடன் சென்றுள்ளார்.


இந்நிலையில், படுக்கையில் இருந்து எழும்பிய வீட்டு உரிமையாளரின் மனைவி, மின்விளக்கைப் போட்டபோது சமையலறைப் பகுதிக் கதவினை திறந்துகொண்டு திருடன் போவதைக் கண்டுள்ளார்.

அதன்பின்னர், வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது கணவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளார். இதையடுத்து வீட்டு அறையின் அலுமாரியின் மேல் வைக்கபட்டிருந்த கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ஏழரைப் பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

இதையடுத்து, இந்தத் திருட்டுத் தொடர்பாக, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |