மீன்பாடும் தேநாடாம் மட்டு மாநகரானது பல்வேறு வகையிலும் சிறப்புற்று விளங்குவதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடமம் பேரூர் பல்வேறு வழிகளிலும் சிறப்புற்று விளங்குகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள், கல்வெட்டுக்கள், சிலைகள் மற்றும் இன்னோரன்ன தடயங்கள் என்பன சான்றுபகர்கின்றன. இவ்வாரங்களில் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் பின்புறமுள்ள பிண்டமும், வேதப்பிட்டியில் கண்டெடுக்கப்பட்ட உலோகச் சிலையும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. அத்தோடு இங்குள்ள நெய்தல் நிலம், மருத நிலம் போன்றனவும் இவ்வூருக்கு அழகு சேர்க்கின்றது. முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தரின் நல்லாசியைப் பெற்றதால் இவ்வூர் மேலும் சிறப்புப்பெறுகின்றது.





ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயமானது கைலாயச் செட்டியாரின் மறைவிற்குப் பிறகு இவரது சிரேஸ்ட புத்திரது செட்டிப்போடியாரினதும் மற்றும் கிராம மக்களினதும் அயராத உழைப்பினால் 1842ம் ஆண்டு ஆவணி 14ல் ஆரம்பமான கற்கோயில் நிர்மான வேலைகள் இனிதே நிறைவு பெற்றது. இதனைப் பரிபாலிக்கும் வண்ணம் குடி வகுப்பினரான கிராம மக்களையும் சேர்த்து நிருவாகப் பரவலாக்கம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு செட்டிப்போடியாரின் சகோதரர் தன்மன் செட்டியாரும் பக்கபலமாயிருந்தனர்.


1848 ம் அண்டு ஆவணி மாதம் 25ம் திகதி தெய்வானை அம்மனும் வள்ளி அம்மனும் ஒருங்கே வீற்றிருக்கும் முருகப் பெருமான் பிரதிஸ்டை செய்யப்பட்டார். இதன் பின் செட்டிப்போடியார் தலைமையில் மக்களிடையே வழக்கிலுள்ள குடி வகுப்புக்கள் ஆலய மண்டபங்களைத் தனித்தனியே அமைத்துதவியுள்ளனர். கோயில் பூசகர்களாக இந்தியாவில் இருந்து வருகை தந்த குருமார்களும் கெருடாவில்லில் இருந்து வருகைதந்த குருமார்களும் பணி புரிந்து வந்தனர். மேலும் இக்கோயிலின் பக்கத்தில் நந்தவனத்தையும் அவர்களே பேணிப்பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில் கெருடாவில்லைச் சேர்ந்த இளையசாமிக் குருக்கள் பொன்னுச்சாமிக் குருக்கள் நடராசக் குருக்கள் போன்றோர் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்.

கைலாயச்செட்டி - செட்டிப்போடியார் அவர்கள் பிரசித்த நொத்தாரிசு திரு. றொபட் முண்டப்போடி அவர்களைக் கொண்டு 1848ம் அண்டு 25ம் திகதி 2403 ம் இலக்கமும் கொண்ட நன்கொடைச் சாசனம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இந்தச் சாசனத்தில் தான் மறைந்த பின்பு இக்கோயிலை திறம்பட நடாத்துவதற்குத் தமது மகளான வள்ளியம்மை கண்ணம்மை சிவகாமி ஆகியோரும் தத்தம் பங்குகளை வழங்கியுள்ளார்களெனக் குறிப்பிட்டுள்ளார். இத்தரும நன்கொடையில் கரவாகுப்பற்று நடுப்பத்துவெளி தேற்றாத்தீவு பறையன் முன்மாரி கிண்ணையடிமடு போன்ற நெல் வயல்கள் அடங்குகின்றன. இக்காலங்களில் திரு.ரி.கதிரேசபிள்ளை வன்னியனார் (கவுத்தன்குடி) திரு.என்.ரி. குமரப்பெருமாள் உடையார் (செட்டிக்குடி) திரு.ஏ.ரி. கந்தப்பெருமாள் தோம்புதோர் (தன்மன்செட்டிகுடி) திரு.கணபதிப்பிள்ளை பொலிஸ் தலைமை (வச்சினாகுடி) திரு.எஸ் தம்பிமுந்து வாத்தியார் (அத்தியாகுடி) முதலியோர் இக்கிராமத்தினதும் ஆலயத்தினதும் நெறியாளர்களாக இருந்து நல்ல முறையில் வழிநடத்தி வந்துள்ளமையையும் அறியமுடிகின்றது.

இக்காலகட்டத்தில் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றுக் காணப்பட்டது. இப்பகுதி மக்களை கவர்ந்திழுக்கும் சக்தியுடையதாக மிளிர்ந்தது. இந்த ஆலயத்தில் அம்பிளாந்துறை, பண்டாரியாவெளி, செட்டிபாளையம், கிரான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அன்பர்கள் தாங்களாகவே முன்வந்து திருவிழாக்களைச் செய்து இறையருள் பெற்றாகவும் அறிய முடிகின்றது. இக்காலப்பகுதியில் அதாவது 1890 க்கு முற்பட்ட காலத்தில் திரு.ரி.விஸ்வநாதர் திரு.என்.ரி. குமரப்பெருமாள் ஆகியோர் வண்ணக்கர்களாக கடமையாற்றியுள்ளனர். அக்காலத்தில் மக்களுடைய வாழ்வில் இடம்பெறும் திருமணங்கள், குடிமனைபுகுதல், ருதுசாந்தி போன்ற மங்களகர வைபவங்களுக்கும் மரணச் சடங்குகளுக்கும் உரிய சமயக் கிரியைகள் யாவும் இவ்வாலயத்துடன் தொடர்புபட்டதாகவே இருந்தது. அத்துடன் மக்களின் வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்தும் பஞ்சாயக் குழுவினரின் மேற்பார்வையும் இடம்பெற்றமைக்கு சான்றுகள் உள்ளன. அதுமட்டுமன்றி அயல்க் கிராமங்களில் காணப்பட்ட பண்பாட்டு ஒழுக்க நடைமுறைகளுக்கும் பொறுப்பாக இருந்து சேவையாற்றியதாக வரலாறு கூறுகின்றது.

ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் அருளொளி நல்கும் சக்தியே குருக்கள்மடம் வாழ் மக்களின் வாழ்வு பெருக்கமெலாம் சேவல் கூவ விழித்தெழுந்து செய்கடன் முடித்து செல்லக் கதிரோனைச் சிந்தையில் நிறுத்தி இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் தொழில் முயற்சியினை மேற்கொள்வர். இவ்வூரின் மக்கள் ஆலயத்தை மையமாகக் கொண்டே தெருக்ககளை அமைத்துள்ளனர். அக்காலப் பகுதியில் கற்பக்கிரகம் அர்த்த மண்டபம் மகாமண்டபம் தம்பமண்டபம் பிள்ளையார் கோயில் என்பன் அமைந்திருந்தன. 1920ம் ஆண்டு காலப்பகுதியில் சிவசரணம் என்னும் நாமத்தினை உடைய குருக்கள் ஒருவர் இக்கோயிலில் தங்கியிருந்து சாஸ்திரம் சொல்லி சம்பாதித்த பணம் முழுவதையும் ஆலயப்பணிக்கு செலவிட்டதாகக் கூறப்படுகின்றது. இக்காலத்தில் ஆசிரியப்பணி செய்வதற்காக யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து திரு. சதாசிவ ஐயர் மட்டுநகருக்கு வந்து பின்னர் குருக்கள்மடத்துக்கு வந்து இல்லறத்தில் இணைந்து கொண்டதாகவும் வரலாறு கூறுகின்றது.
ஸ்ரீலஸ்ரீ செல்லக்க கதிர்காம சுமாமி ஆலயத்துக்குரிய ஆதனங்கள்
1. தேற்றாத்தீவு பறையன் முன்மாரி நெல்வயல் - 18 ஏன்னர்
2. நற்பட்டிமுனை நெல் வயல் - 6 ஏக்கர்
3. செட்டிபாளையம் குடாப்பத்துக் காணி - 6 ஏக்கர்
4. செட்டிபாளையம் பிள்ளையார் கோயில் வளவு - 1/4 ஏக்கர்
5. குருக்கள்மடம் கிண்ணையடிமடு நெல்வயல் - 3 ஏக்கர்
6. குருக்கள்மடம் வாழையடி வயல் - 3 ஏக்கர்
7. நந்தவனம் தென்னைமர வளவு - 1 ஏக்கர்
8. குருக்கள்மடம் கொக்கு மந்தார வளவு - 1/4 ஏக்கர்
9. குருக்கள்மடம் பிராமண வளவு - 1/4 ஏக்கர்
10. குருக்கள்மடம் குருக்கள் வளவு - 1/4 ஏக்கர்
11. குருக்கள்மடம் கூடத்து வளவு - 1/4 ஏக்கர்
9. குருக்கள்மடம் பிராமண வளவு - 1/4 ஏக்கர்
12. குருக்கள்மடம் கன்று வளவு - 1/4 ஏக்கர்
13. நந்தவனம் பனையடி வளவு - 1/4 ஏக்கர்
1978 - 2014 காலப் பகுதியில் ஆலய கட்டிட நிர்மாணப்பணிக்கு உதவியோர்
1. கர்ப்பக்கிரகம் - திரு.க.சீனித்தம்பி தலைமையில் - அத்தியாகுடி மக்கள்
2. அர்த்தமண்டபம் - அமரர்.த.வடிவேல் தலைமையில் குருக்கள் அத்தியாகுடி மக்கள்
3. மகா மண்டபம் - டாக்டர் .வே.சீனித்தம்பி - வச்சினா குடி மக்கள்
4. தம்ப மண்டபம் கொடிமரம் தேர் - திரு. க.மயில்வாகனம் தலைமையில் தன்மன் செட்டி குடி மக்கள்
5. பிள்ளையார் கோயில் வெளிக்கிணறு - திரு.க. முத்துலிங்கம் தலைமையில் சின்னக்கவுத்தங்குடி மக்கள்
6. மணிக்கோபுரம் - அமர் சா.அழகரெத்தினம்
7. ஆதி வைரவர் கோயில் - திரு.க. பரமேஸ்வரன் குடும்பம் குருக்கள் குடி மக்கள் சார்பாக
8. வசந்த மண்டபம் திரு. ம. கலாகரன் குடும்பம்
9. சண்டேஸ்வரர் கோயில் - திரு.நா.கருணாநிதி குடும்பம்
10. யாகசாலை தீர்த்தக் கிணறு - திரு.மா. சாமித்தம்பி குடும்பம்
11. மாரியம்மன் கோயில் - திரு.சா. கந்தப்பன் குடும்பம்
12. மாரியம்மன் மண்டபம் - திரு.ஆ.சிவசம்பு தலைமையில் சிங்களக்குடி மக்கள்
13. கொடிமரம் அழகுபடுத்தி மெருகூட்டியது திரு.க. முருகேசு குடும்பம்
14. தண்ணீர்த் தாங்கி - திரு.செ.கிருஸ்ணபிள்ளை குடும்பம்
15. கலை அரங்கு சுற்றுமதில் - சிவனெறிமன்றம்
16. சுற்றுமண்டபம் மற்றும் தொடர் பணி - திரு.வி.மகேஸ்வரன் தலைமையில் தர்மகர்த்தாக்கள்
17. புதிய மாரியம்மன் கோயில் - தர்ம கர்த்தாக்கள் சபை மற்றும் நலன் விரும்பிகள்
18. சித்திரத்தேர் திருப்பணி மற்றம் தம்பமண்டப அலங்கார வேலைப்பாடுகள் திரு.த.கோணேஸ்வரன் தலைமையில் தன்மன்செட்டிகுடி மக்கள்
19. புதிய சித்திரத் தேர். அழகரெத்தினம் கங்காகரன்
20. எல்லைச் சுற்றுமதில் - தர்மகர்த்தாக்கள் சபை
21. இன்று ஆலயம் புதுப்பொலிவு பெற - ஊர் மக்கள், வெளிநாட்டில் உள்ள அன்பர்கள், நிர்வாக சபை, நலன் விரும்பிகள் , பலதரப்பட்டவர்கள்
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அங்கிகரிக்கப்பட்ட குடி வகுப்புக்களாக
1. அத்தியாகுடி 2. செட்டி குடி 3. தன்மன் செட்டி குடி 4. கவுத்தன்குடி 5. பெரிய கவுத்தன்குடி 6. வச்சினாகுடி 7. குருக்கள் அத்தியாகுடி 8. தெய்வேந்திரன் குடி 9. சிங்களக் குடி 10. குருக்கள் குடி பொன்றன காணப்படுகின்றன. வருடாவருடம் இடம்பெறுகின்ற ஆலய மகோற்சவத் திருவிழாக் காலங்களில் 10 நாளும் மேற்குறிப்பிட்ட குடியினர் திருவிழாக்களை சிறப்பாக செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலத்தில் இக்கோயில் உடைக்கப்பட்டு கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது. அத்துடன் பிள்ளையார் கோயில் வாகனம் மோதியதால் சேதமடைந்தது. இந்நிகழ்வுகள் துரதிஸ்டமான நிகழ்வுகளாக உணரப்படுகின்றது. இருந்தாலும் குருக்கள்மடம் கிராம மக்கள் வெளிநாட்டிலுள்ள அன்பர்கள் மற்றும் இன்னோரன்ன உதவிகள் மூலம் இவ்வாலயம் புதுப்பொலிவுடன் கும்பாவிஷேக நிகழ்வுடன் ஆகம முறைப்படி இவ்வாண்டு 7ம் மாதம் முதல் செயற்படத்தொடங்கியது. இவ்வருட வருடாந்த மகோற்சவமானது 30.08.2014 தொடங்கி 08.09.2014 சமூத்திர தீர்த்தத்துடன் நிறைவுபெறவுள்ளது.







இம் முறை வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்க புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டத்துடன் 07.09.2014 அன்று முதன்முறையாக ஒன்றுகூடி தேர் இழுக்கப்படவிருக்கின்றது. இது இவ்வாலயத்தை மேலும் புகழ்பெறச்செய்யும் நிகழ்வாக கருதப்படுகின்றது. இத்தேரினை அமரர் அழகரெத்தினத்தின் (தன்மன் செட்டிகுடி) ஞாபகார்த்தமாக அவரது புதல்வன் வைத்திய கலாநிதி கங்காதரன் அவர்கள் தன்மன்செட்டிகுடி சாகியத்துக்காக அன்பளிப்புச் செய்துள்ளார். இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வாக அமையப்போவதென்பது சிறப்பான அம்சமாகும். இந்தவகையில் தோரோட்டத்தில் கலந்து கொண்டு முருகனின் அருளைப்பெறுவோமாக. உலக குருநாதர் முதல் பின்வந்த சகல தர்மகர்த்தாக்களையும் வள்ளல்களையும் நினைவுகூர்வதோடு இன்றும் பல்வழிகளிலும் உதவிகளைப் புரிந்து செயன்படுகின்ற அன்பர்களையும் நாம் மறந்து விடக்கூடாது.
- ஆக்கம் - பு.லோஷிதரன் -