Home » » இந்தியாவுடனான உறவில், அரசாங்கத்தைவிட கூட்டமைப்பு வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது

இந்தியாவுடனான உறவில், அரசாங்கத்தைவிட கூட்டமைப்பு வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது

கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான தயான் ஜயதிலக சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் இலங்கை இந்தியாவின் சவாலுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.  தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தாம் பேசுவதில்லையென இலங்கை அரசாங்கம் கூறியது. அவர்கள் எம்மிடம் முழங்கால் மடித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவார்கள் என்ற அகம்பாவத்துடன் அரசாங்கம் இருந்தது.
தென் ஆபிரிக்க பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோஷ யாழ்ப்பாணத்துக்குச்  சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார். இதன்பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சர் முதலில் கூட்டமைப்புடன் சந்திப்பை மேற்கொண்டு விட்டு அடுத்து இந்திய பிரதமரைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் புகைப்படத்தைப் பார்க்கும் போது இரு நாடுகளுக்கிடையில் மேற்கெள்ளப்பட்ட பேச்சுவார்த்தை போன்றுதான் தோன்றியது. இந்தியாவிடமிருந்த வரவேற்பும் இதற்கேற்றாற் போல் தான் அமைந்திருந்தது.
இந்த இடத்தில் தான் இலங்கை அரசாங்கத்தின் தலக்கணம் பிடித்த தலைக்கு பிரதமர் மோடி ஐஸ் தண்ணீர் ஊற்றினார். இலங்கையில் தமிழர்கள் சம உரிமை, நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் வாழ்வதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு உள்ளிட்ட அங்குள்ள அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமான தீர்வு காணவேண்டும்.  இவையெல்லாம் இலங்கை அரசியல் சாசனத்தின் 13–வது  திருத்தச் சட்டத்தின்படி நடைபெற வேண்டும் என பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் மோடி விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசாங்கத்திடம் இவ்வளவு தூரம் வரவேற்புக் காணப்படுவதற்கு அரசாங்கத்தின் தவறுதான் காரணம்.
மோடி பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மோடியிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வந்தார்.
அக்கால கட்டத்தில் கூட்டமைப்பு இந்தியாவினால் கணக்கிலெடுக்கப்படாது இருந்தது. அது எமக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக காணப்பட்டது. இந்த நேரத்தில் ஜனாதிபதியிடம் மோடி 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றியும் நினைவுபடுத்தியிருந்தார். இருப்பினும், 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றி இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த உத்தியோகபுர்வ அறிக்கையில்,  பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தமை பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அன்றிலிருந்து இலங்கையுடன் கசப்புணர்வொன்று இந்தியாவுக்கு உருவாகியதைக் காணலாம். இதன்பின்னர், அமைச்சுப் பதவியொன்றாவது வழங்கப்படாத, தமக்கு விசுவாசமான சுப்பிரமணியம் ஸ்வாமி என்பவரை அழைத்துவந்து பாதுகாப்பு மாநாட்டில் பேசவிட்டது அரசாங்கம். இவர் பேசிய விடயங்களை இந்தியாவின் நிலைப்பாடாக நம்ப ஆரம்பித்தது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது அந்நாட்டுப் பிரதமரின் நிலைப்பாடாகும். அது சுப்பிரமணியம் ஸ்வாமியின் நிலைப்பாடு அல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட இவ்வாறான வெளியுறவுக் கொள்கையினால் இலங்கை அரசாங்கம் செல்ல முடியாத தூரத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னேறிச் சென்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மோடியை மாத்திரமல்ல அவர்களின் விஜயத்தின் போது சந்தித்துள்ளனர். அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரையும்தான். இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு நபரும் பாதுகாப்பு அதிகாரியை இதுவரையில் சந்திக்க வில்லை. அயல் நாட்டுடன் தொடர்புகளைப் பேணுவதில் உள்ள அசமந்தப் போக்கையே இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |