Home » » மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும். முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும். முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நான் ஏற்படுத்தித் தருவேன். மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் கல்வியை ஒரு பிரசாரமாக முன்னெடுத்து தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும். என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
.
20 கோவில்கள், 15 விளையாட்டுக்கழங்கள், 14 பாடசாலைகள், 02 பிரதேச சபைகள் ஆகியவற்றின் அபிவிருத்திக்களுக்காக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 300 இலட்சம் ரூபாய் நிதிக் கையளிப்பு  மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 
‘எதிர்த்தரப்பு அரசியல் செய்வதால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே  அபிவிருத்திகளைச்  செய்யமுடியும்.
இன்று வடக்கு, கிழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானுமே தமிழ் அமைச்சர்களாக இருக்கின்றோம். இன்னும் பல தமிழ் அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

இன்னும் 10 வருடங்களில் படுவான்கரைப் பிரதேசத்தை மட்டக்களப்பு நகர் போன்று மாற்றியமைப்பேன். அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். படுவான்கரைப் பிரதேசத்தில் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.  அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு வழங்கப்படுகின்றது.
மேலும், படுவான்கரை மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி வருகின்றேன். அம்பாறையிலுள்ள 02 குளங்களை புனரமைத்து அந்தக் குளங்களினூடாக இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தனிக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவியையும் நான் வழங்கியுள்ளேன்.
இவற்றையெல்லாம் அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே செய்ய முடியும். எதிர்த்தரப்பிலிருந்து அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நான் ஏற்படுத்தித் தருவேன். மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் கல்வியை ஒரு பிரசாரமாக முன்னெடுத்து தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும்.
மாணவர்களின் கல்விக்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வாகரையில் விஞ்ஞான தொழில்நுட்பப் பாடசாலையொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், பொது நிறுவனங்கள் அனைத்தும் கல்வியை முன்னேற்றப் பாடுபடுவதுடன், அதற்கான பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
அபிவிருத்திகள் 02 வகைப்படும். கட்டுமான அபிவிருத்தி. மற்றையது தனி நபர் அபிவிருத்தியாகும். இதில் போதியளவு உட்கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட குடும்பங்களின் மாத வருமானத்தை அதிகரித்து தனி நபர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.
அந்த வகையில், ‘வாழ்வின் எழுச்சி’ திட்டத்தினூடாக தனி நபர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யத் தேவையான வசதி வாய்ப்புக்கள் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உட்கட்டுமான அபிவிருத்தியும் தனி நபர் அபிவிருத்தியும் ஒன்றாக முன்னேற்றமடையும்போதே, நாடு செழிப்படையும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்களுக்கு 262 இலட்சம் ரூபாய் வழங்கினேன். அதனூடாக பெண்களின் வாழ்வாதரம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் இழந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்’ என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |