தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு வரவேண்டுமாயின் தமிழகத்திலுள்ள மக்களும் தலைவர்களும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட முறையில் ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறு ஆதரவு கிடைக்குமாயின் இலங்கைத் தமிழ் மக்களுக்கு விரை வில் தீர்வு கிடைத்துவிடு மென நாம் தமிழக தலைவர்களிடம் கூறியுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியா சென்ற கூட்டமைப்பினர் டில்லி விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு வந்துபா.ஜ.கட்சியின் தமிழக தலைவர்களை சந்தித்து உரையாடினர்.
இது குறித்த கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
நானும் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழகத்திலுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்களான டாக்டர் சௌந்தராஜன், முன்னாள் தலவைர் கணேசன் மற்றும் பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் முக்கியமான தலைவர்களை சந்தித்து உரையாடினோம். இவர்களிடம் நாம் கூறிய முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழ் மக்களுக்குப் பெறுமதிமிக்க தீர்வைப் பெறுவதற்கு கூட்டமைப்பு இந்தியா வந்துள்ளது. எமது முடிவை இந்திய மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வொன்றைக் காண வேண்டுமென்பதே கூட்டமைப்பின் எதிர்பார்ப்பென நாம் இந்திய பிரதமர் உட்பட்ட அனைவருக்கும் எடுத்துக் கூறியுள்ளோம். எமது கருத்தை இந்திய மத்தியரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான நல்லதொரு சூழ்நிலையில் எமது நியாயமான நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ.கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டுமென்பது தான் எங்கள் எதிர்பார்ப்பாகும்.
வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலுவான ஆணையொன்றை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும். தமிழ் நாட்டு மக்கள், அங்குள்ள கட்சிகள், தலைவர்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் தமிழகத்தின் ஆதரவு பயனுறுதியுள்ளதாக இருக்குமென நம்புகின்றோம். அதற்கு ஏற்ற வகையில் நாம் உரையாடி வந்துள்ளோம்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
இந்தியப் பிரதமரை சந்திப்பதற்குரிய கோரிக்கையை விடுத்த அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் சந்திப்பதற்குரிய வாய்ப்பொன்றைக் கோரியிருந்தோம். இன்னும் எமக்கு அழைப்பு கிடைக்கவில்லை. கிடைக்கும் பட்சத்தில் வட கிழக்கு மக்கள் எவ்வகை அபிலாஷைகளை கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட ஆணையை கூட்டமைப்புக்கு தந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறக் காத்திருக்கிறோம். மக்கள் எந்தவகை ஆணையை வழங்கியிருக்கின்றார்களோ அந்த நிலைப்பாட்டிலிருந்து கூட்டமைப்பு எக் காலத்திலும் விலகப் போவதில்லையென்பதே உண்மை.
கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்றமை பற்றி இலங்கை அரசு கடும் சினம் கொண்டிருக்கிறது என்பது பற்றி நாம் நன்றாக அறிவோம். இலங்கை அரசு அடிக்கடி இந்தியாவுக்கு ஓடிப்போய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது பற்றி உலகம் அறியும். இந்தியாவுக்கு சென்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு வாருங்கள் என்று இலங்கை அரசுக்கு கூட்டமைப்பு ஒரு போதும் கூறவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நாம் சந்திப்பதற்கு முன்பே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சந்தித்து உரையாடினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்ததன் பின்பே நாம் போய் சந்தித்து வந்துள்ளோம். அரசு ஓடியோடிப் போய் இந்திய தலைவர்களை சந்தித்து விவகாரங்களை விளக்குகிறது. ஆனால், பொய்யாகவே சொல்லிவிட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது நாங்கள் போய் உண்மை நிலைமைகளை விளக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லையென்று நினைக்கிறேன்.
0 Comments