Advertisement

Responsive Advertisement

யுத்தப் பாதிப்புக்களைப் பற்றியே தொடர்ந்தும் பேசி நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது

இனியும் கடந்த கால யுத்தப் பாதிப்புக்களைப் பற்றியே தொடர்ந்தும் பேசி நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடுவாமடுக் கிராமத்தில் வறுமை நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் ஐந்து குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ஒரு குடும்பத்திற்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்  வளர்ப்பு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
கடந்த கால யுத்தப் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஒவ்வொரு குடும்பமும் மிக வேகமாகச் சிந்திக்க வேண்டும். அதற்காகவே முஸ்லிம் எயிட் நிறுவனமும் இன மத பேதமில்லாது நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது.
தற்போது ஆடு மாடுகளுக்கு நோய்  ஏற்படுவதன் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்க முடியாத நிலையில், சிறந்த ஆரோக்கியமான ஆடுகளை உங்களுக்கு வாங்கித் தந்திருக்கின்றது முஸ்லிம் எயிட் நிறுவனம்.இந்தப் பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப் பொருத்தமான மிருக வளர்ப்பு ஆடுகள்தான்.
இந்த உதவிகளைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேறும் வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் இன்னும் பலர் உங்களின் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கண்டு இன்னுமின்னும் உதவ முன்வருவார்கள்.முன்னேறுபவர்களுக்கு உதவ அரசாங்கமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எந்நேரமும் தயாராகவே இருந்து கொண்டிருக்கின்றன.
மேலும், வாழ்வின் எழுச்சித் திட்டத்தினூடாக வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்கள் தமது வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்காக உதவும் நோக்கில் தான் முஸ்லிம் எயிட் நிறுவனத்தையும் எமது ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசத்திற்கு நாம் கொண்டு வந்தோம்.
எனவே, அந்த வகையில் எமது பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வின் எழுச்சிக்காக பல திட்டங்களை முன்னெடுத்து வரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்  என தெரிவித்தார்

Post a Comment

0 Comments