மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை குழுவுடனான கலந்துரையாடலில் தான் தெரிவித்த கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கவலையடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், மனித உரிமையாளரால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பங்கேற்க வந்திருந்த இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் தான் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலக அறிக்கை ஒன்று தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை அரசின் ஒரு முக்கிய அதிகாரி செவ்வாய்கிழமையன்று பத்திரிகை ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் தவறான விதத்தில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழவின் ஒரு அங்கத்தவராக ஜெனீவாவில் பங்கேற்ற வட மாகாண ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ. நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது’ என ஐ. நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன் பிறகு ‘அதிக பொறுப்புணர்ச்சி மற்றும் எச்சரிக்கையுடன்’ செயல்படுமாறு ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாக ஆளுநர் ராகவன் கூறியதாக பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வட மாகாண ஆளுனரின் மேற்படி கூற்றுக்களை முற்றாக மறுக்கும் ஐ. நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் பேஷிலெட், ‘இந்த இரு கருத்துக்களில் எதுவும் உண்மையானதல்ல’ என வலியுறுத்தியுள்ளார்.
‘ஒன்றில், ஆளுநர் கூறியதை பத்திரிகைகள் தவறாக புரிந்திருக்கவேண்டும். அல்லது நான் கூறியதை ஆளுநர் தவறாக விளங்கியிருக்க வேண்டும், அல்லது தவறாக என்னை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும்’ என உயர் ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் பேஷிலேட், மனித உரிமை பேரவைக்கு தான் சமர்ப்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் தான் ஸ்திரமாக இருப்பதாகவும், அக்கூற்றுக்கள் இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிப்பதாக தான் நம்புவதாகவும் கூறினார்.
‘இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் நான் கூறிய கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது’ எனக் கூறிய உயர் ஸ்தானிகர், ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கூறப்படும் விடயங்களை பாரிய விதத்தில் தவறாக எடுத்துரை செய்யும் போக்கை இலங்கை பத்திரிகைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
சாதாரண வழமையின் பிரகாரம் ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் பிரதிகளை, அது பிரசுரிக்கப்படுவதற்கு முன் பேரவையின் 47 அங்கத்தவ நாடுகளினதும் வேண்டுகோளினடிப்படையில் இலங்கை அரசிற்கும் பகிரப்பட்டுள்ளது.
அறிக்கையை இறுதி மாற்றங்களுடன் பிரசுரிக்கப்படுவதற்கு முன் இலங்கை அரசின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கை அரசின் பல உயர் அதிகாரிகளை சந்தித்து அறிக்கையின் விடயங்கள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் பேஷிலேட், ஐ. நா மனித உரிமை பேரவையின் 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களை செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க தானும் தனது அதிகாரிகளும் முற்றாக அர்ப்பணமாகியிருப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின் (40/1) போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு வாக்களித்த சில விடயங்களை பூர்த்தியாக செயற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் பெஷிலேட் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 2009 ஆண்டு முடிவுக்கு வந்த மோதல்களின்போது நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கன பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் வழங்குதல் தொடர்பான தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதால் சம்பந்தப்பட்ட முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு மீள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், என்ன நடந்தது என்ற விடயம் தொடர்பான உண்மைகளை நிலை நிறுத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் தேவையான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் பெஷிலேட் வலியுறுத்தினார்.
|