நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பல சுகாதார பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அதி வெப்பமான காலநிலை கடந்த ஒரு மாத காலமாக நிலவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய் தொற்றுக்குள்ளாகி அரச மற்றும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விவசாயச் செய்கைக்கு அதிகளவான நீர் கடந்த சிறுபோகத்திற்கு திறந்து விடப்பட்டதாலும் இருமாத காலமாக மழைவீழ்ச்சி இப் பகுதிகளில் கிடைக்காததாலும் நீர் நிலைகள் வற்றி வறண்டு வருவதுடன், புழுதிப்படலம் மனித சுவாசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அவ்வப்போது ஏற்படுகின்ற சுழல் காற்றினால் புழுதிப்படலம் மிக மோசமான சுற்றாடல் தாக்கத்தினை உண்டாக்கியும் வருகின்றது.
தற்போது சூழலில் வெப்பம் அதிகரித்து வருவதினால் மனித உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறுகின்றது இதன் காரணமாக வியர்க்குரு, கொப்பளங்கள் தோலில் ஏற்பட்டு அவதிக்குள்ளாவதுடன் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள கீரைவகைகள், வெள்ளரி, தர்பூசனி, இளநீர் போன்ற பல பொருட்களை அதிகளவில் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இவ் வகையான உணவுகளை கூடுதலாக கொள்வனவு செய்வதனால் இவற்றின் விலைகள் சந்தையில் சடுதியாக அதிகரித்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments