இந்தியத் தேர்தலுக்கு முன் மீண்டும் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கை இருக்குமோ என தான் அச்சப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய துணை பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத இயக்கமே பொறுப்பு என்றும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப் படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பால்கோட் பகுதியில் அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிபிசி, ராய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று இதனை மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பின் இந்திய மிக் விமானம் பாகிஸ்தானில் வீழ்ந்ததில் விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். அவர் இரு நாட்களுக்குப் பின் இந்தியாவிடம் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைந்தாலும் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நீடித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் ‘ஃபைனான்சியல் டைம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இந்தியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், “எனது ஆட்சிக்காலத்தில் ‘புதிய பாகிஸ்தான்’ பிறந்திருக்கிறது. புதிய பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்கியுள்ளோம்.
ஆனாலும், இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன் இந்திய தரப்பிலிருந்து மீண்டும் ஏதோ ஒரு ராணுவப் பகை நடவடிக்கை இருக்குமோ என்று நான் பயப்படுகிறேன். ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறிகளை நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
0 Comments