இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பியோடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்த ஜே.கே. பாய் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சூத்திரதாரியென சந்தேகிக்கப்படுகின்றது. இவருக்கு நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
எனவே, இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினர்கள், வடக்கு கடல் பகுதி ஊடாக வெளிநாடுகளுக்கு படகில் தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளை இவரே செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அந்த கோணத்திலும் தற்போது விசாரணை இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுபாயில் உள்ள நபரொருவர் ஊடாகவே முதலில் ஜே.கே பாய்க்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை பிடித்தால்தான் செவ்வந்தி பற்றிய தகவல்கள் தெரியவரும் என்பதை பொலிஸார் அறிந்திருந்தனர்.
இதற்கமைய ஜே.கே. பாய் கைது செய்யப்பட்டிருந்தாலும் செவ்வந்தியின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை ஆரம்பத்தில் அவர் பொலிஸாருக்கு வழங்கவில்லை. அப்போதுதான் இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பொன்று பறந்துள்ளது.
இலங்கையிலுள்ள ஜே.கே. பாயின் குடும்ப விவரம் மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி தொலைபேசியில் பாடமெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை செவிமடுத்து, நெடுநேரம் மௌனம் காத்த ஜே.கே பாய், இஷாராவை தான் ஒப்படைத்த முகவர் பற்றிய தகவலை வழங்கியுள்ளார்.
அந்த முகவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் ஊடாக நேபாளத்தில் செவ்வந்தி பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் பெறப்பட்டுள்ளது. பின்னர் ஜே.கே. பாய் ஊடாக அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, செலவுக்கு பணம் வந்துள்ளது, இந்த இடத்துக்கு வா என இடம்பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய செவ்வந்தி மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.
ஜே.கே. பாய் தற்போது சிஐடி விசாரணைப் பொறிக்குள் உள்ளார். எனவே, அவரின் ஆட்கடத்தல் வலையமைப்பு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டுவருகின்றது.
அதேவேளை, கொலைச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2 மாதங்கள்வரை செவ்வந்தி மத்துகம மற்றும் மித்தெனிய பகுதிகளில் தலைமறைவாகி இருந்துள்ளார். அதன்பின்னரே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடந்த மே மாதம் காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments