காதலனின் பாலியல் தொல்லையால் பொலிஸ் நிலையம் சென்ற சிறுமிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபிள்!

Wednesday, June 30, 2021

 


முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி ஒருவரை குறித்த பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


முத்தமிட்ட குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தாயுடன் நேற்றைய தினம் (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

விசாரணைகளுக்காக தன்னையும் தனது மகளையும் இரவு வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று (30) காலை கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து தனது மகளை முத்தமிட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ள சிறுமி இளைஞன் ஒருவனை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை சந்திக்க சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இளைஞன் சிறுமியின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி குறித்த இளைஞன் சிறுமியை பல முறை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்ட பின்னர் இளைஞனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று பொலிஸ் நிலையம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
READ MORE | comments

நாளை இரவு 10 மணி முதல் மருதமுனை பிரதேசம் முழுமையாக தனிமைப்படுத்தலில்...!!


 சர்ஜுன் லாபீர்)

தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை(1) திகதி முதல் முழுமையாக Lockdown செய்ய இன்று(30) நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர் மட்டக்.கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 01ம் திகதி இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்

இவ் உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன்,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் ரகுமான்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர், எம்.எஸ் உமர் அலி,எம்.சிபான்,கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், உட்பட வைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
READ MORE | comments

நாளையதினம் தாதியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பு

 


நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் நாளையும் நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள கொவிட் தொற்று நிலைமை்கு மத்தியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ரயில்சாரதிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

கிழக்கில் கொரோனா அலை உச்சம் தொடுகிறது : உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களப்பணியில்.

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் களப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களின் சுகாதார நலன்கருதி சந்தைகள், பொது இடங்கள் மற்றும் பொது வீதிகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு  மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டு களச் செயற்பாடுகள் நாளந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்களப்பணிக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி குழுவும் கலந்து கொண்டு சுகாதார வழிமுறைகளை கண்காணித்து வருகின்றனர்.
READ MORE | comments

20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை...!!


நாட்டின் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

கல்வி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

 


நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர்கள், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என உபவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய விரைவாக பல்கலைக்கழக கல்வியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது முன்னெடுக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பரீட்சைகளை சுகாதார முறையில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

READ MORE | comments

மட்டக்களப்பு- ஐயன்கேணி கிராமத்தில் வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு...!!

Tuesday, June 29, 2021


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயன்கேணி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து முதியவரான ஆணொருவரின் சடலத்தைத் தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை 29.06.2021 மீட்கப்பட்ட சடலம் ஐயன்கேணி கிராமம் கிருஷ்ணன் கோயில் வீதியை அண்டி வசித்து வந்த காளிக்குட்டி நாகராசா (வயது 60) என்பவருடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவியும் இவரும் வசித்து வந்த நிலையில் இந்த முதியவர் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இறந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என பரிசோதனையின்போது தெரிவந்துள்ளாக பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கூலித் தொழில் செய்து சீவியம் நடத்திய இவருக்கு நீண்ட நாட்பட்ட ஆறாத காயம் இருந்தது என உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments

பயண தடை விதிப்பது குறித்து இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்


நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறையில்: கொலை குற்றவாளிகளுக்கு 5 வருடங்களே தண்டனை- சாணக்கியன்

 


இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை போதுமானது என்பது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் சிலரின் விடுதலை வரவேற்ககத்தக்கதோர் விடயமாகும்.

ஆனாலும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலையாகும் வரை எங்கள் அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம்.

மேலும் வடக்கு- கிழக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து முகநூல்களில் பதிவுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலைக்காவும் குரல் கொடுக்க வேண்டும்.

இதேவேளை துமிந்த சில்வா போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர், 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால், போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறை தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் குசல் ஜனித் !

 


இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா மன்னிப்பு கோரியுள்ளார்.


இன்று (29) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மன்னிப்பு கோரினார்.

சரித் அசலங்க தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிக புதிய வீரர்களை ஒருநாள் தொடரில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இருபதுக்கு இருபது தொடரில் தோல்வியடைந்த விதத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம், எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்றே எதிர்பார்க்கிறோம். வீரர்களும் திறமையை வௌிப்படுத்த வேண்டும். பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நிலை காணப்படுகிறது. 

துடுப்பாட்ட வீரர்கள் என்ற வகையில் போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நாம் தோல்வியடைந்த விதம் தொடர்பில் ரசிகர்கள் கவலையாகவுள்ளதை ஏற்கிறேன். 

அவ்வாறிருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வாழ்த்துகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களின் எதிர்பார்ப்பை நாம் ஓரளவு இல்லாமல் செய்துள்ளோம். அணித் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோருகின்றேன். இந்தச் சந்தர்ப்பத்திலுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், இவ்வாறான ரசிகர்கள் உள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்

என குசல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, 20 க்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி நேற்று  கொழும்பை வந்தடைந்தது.

விசேட விமானத்தில் வருகை தந்த 47 பேரில் 32 வீரர்களும் அடங்குவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு- ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.


ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ள மீனவர்கள், இவ் விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அதன் பின்னர் இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்த உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
READ MORE | comments

சாய்ந்தமருது மீனவர்கள் வலையில் சிக்கிய 270 கிலோ எடை கொண்ட மீன்!

 


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (29) சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றை பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு உள்ளிட்ட 05 மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!

 


நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(29) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கங்ஹிந்தசெவன தொடர்மாடி குடியிருப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தின் களனி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 ஆம் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொல்தொடுவ கிராமம், அம்பாறை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
READ MORE | comments

திருகோணமலையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய பாரிய சுறா

 


திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் அரிய வகை சுறா மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லராவ மீன் பிடிகிராமத்தில் வசித்து வந்தவர்கள் கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது, குறித்த வகை மீனானது பல தடவைகள் அவர்களது வலையில் சிக்குண்டதுண்டு. அதனை குறித்த மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்த சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், குறித்த மீனானது இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

தெற்குக் கரையில் பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிவருகின்ற இக் காலப்பகுதியில், திருகோணமலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சுறா மீனானது குறித்த மீன் இன குடும்பத்தின் மிகப்பெரிய இனமாகும். சுமார் 9000 கிலோ எடையும், 9மீற்றர் நீளமும் கொண்ட மீனானது பொதுவாக ஆழ் கடலில் வசிப்பவை என்று கருதப்படுகிறது.

அவை பொதுவாக 70-100 ஆண்டுகள் வாழும் ஒரு வகை சுறா இனம் எனவும் தெரிவிக்கப்படும் இந் நிலையில், உலகில் அருகிவரும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் குறித்த சுறா மீனும் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அதனை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தை அறிவித்தது கல்வி அமைச்சு

 


கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில், உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதேவேளை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்ட குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, குணத்திலக்க

Monday, June 28, 2021

 


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூவரையும் உடனடியாக நாடு திரும்புமாறு கட்டளை விதிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு டர்ஹம் பிராந்தியத்தில் பொது மக்களிடையே உலாவும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருந்தது.

இலங்கை வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் சந்தர்ப்பமொன்றில் இந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையினை எழுப்பியதனால் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோஹன் டி சில்வா ThePapare.com இடம் குறிப்பிட்டிருந்தார். 


தற்போது விசாரணைகள் நிறைவுக்கு வந்து, மூன்று வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியே சென்றமை இனம்காணப்பட்ட நிலையில் குறித்த  மூன்று கிரிக்கெட் வீரர்களையும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேற்றி அவர்களை இலங்கை கிரிக்கெட் சபை உடனடியாக நாட்டுக்கு அழைத்திருக்கின.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், விக்கெட் காப்பு தடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூன்று வீரர்களினையும் உடனடியாக நாடு திரும்புமாறு கட்டளையிட்டுள்ளது.” என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னரே, இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் வீரர்கள் மூவரையும் நாட்டிற்கு உடனடியாக திருப்பி அழைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த வீரர்கள் தொடர்பிலான விசரணைகள் முழுமையாக நிறைவடையும் வரையில் அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்து முடிந்த T20 தொடரை இலங்கை அணி 3-0 என முழுமையாக இழந்துள்ள நிலையில், அடுத்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், இலங்கை அணி இந்திய அணியுடன் சொந்த நாட்டில் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறிருப்பினும் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய வீரர்கள் இந்திய அணியுடனான தொடருக்கு இலங்கை அணியில் இணைக்கப்பட மாட்டார்கள் என்றே நம்பப்படுகின்றது. 

READ MORE | comments

நிவாரண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கடுமையாகத் தாக்கிய பொதுமக்கள்! மேலும் சிலருக்கு எச்சரிக்கை


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை சிதைத்து கட்சி அரசியலுக்குள் முடக்கி கட்சி லாபம் தேடிவந்துள்ளார் என குற்றம்சாட்டி பெண் ஒருவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி மீதே  நேற்றைய தினம் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் நிவாரண மோசடியில் ஈடுபட்ட குறித்த பெண்மணி மீது அப்பகுதி மக்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது நாட்டிலுள்ள கொரோனா தொற்றினால்  வடமராட்சி கிழக்கில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புலம்பெயர் மக்களை ஏமாற்றி தமது கட்சி முகவர்களுக்கு திரும்ப திரும்ப நிவாரணம் வழங்கி வந்துள்ளார் என என கூறியே அவர் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்தும் மோசடியில் ஈடுபடும் இன்னும் ஒரு நபர் மீதும் தாக்குதல் நடத்த இருப்பதாக அப்பகு சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் எமது  பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இங்கிலாந்தில் வீதியில் புகைபிடிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்கள் -வெடித்தது புதிய சர்ச்சை


இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்கு சென்ற ஸ்ரீலங்கா அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமுக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி உப தலைவர் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளது.

அத்துடன் தனுஸ்க குணதிலகவும் இவர்களுடன் இருப்பது தெரிகிறது. கொரோனா பாதுகாப்புக்கு உட்பட்டு சுற்றுலா சென்றுள்ள வீரர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளார்களா எனவும் வீடியோவில் உள்ள விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

READ MORE | comments

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய நடைமுறைகள்!

 


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்களுக்கும் வர்த்தக மாலுமிகளுக்கும் கடற்படை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இரட்டை பிரஜாவுரிமை உடையோருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இவை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின் கீழ் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட அனைவரும் நாட்டிற்கு வருகை தரும் போது, PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அல்லது ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

11 தொடக்கம் 14 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையெனின், 14 ஆவது நாள் நிறைவில் மத்திய நிலையத்திலிருந்து அவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த PCR பரிசோதனைகளில் COVID நோயாளராக அடையாளம் காணப்படுமிடத்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட இலங்கையர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் நாட்டிற்கு வருகைதரும் போது PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது, COVID தொற்று உறுதி செய்யப்படாதவிடத்து, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14 நாளின் நிறைவில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின், அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனுமதி பெற்று இராஜதந்திர மட்டத்தில் நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் அனுமதிக்கப்படும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாதவிடத்து, 11 முதல் 14 நாட்களுக்குள் இரண்டாவது PCR பரிசோதனையை மேற்கொண்டு அதிலும் தொற்று உறுதிப்படுத்தப்படாதவிடத்து 14 ஆம் நாள் நிறைவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வௌிநாட்டவர்களையும் அவர்கள் ஏற்றிக்கொண்ட தடுப்பூசி தொடர்பில் ஆராய்ந்து, முதலாவது PCR பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

READ MORE | comments

ஒரே நேரத்தில் இரு தடுப்பூசிகள்: செவிலியரின் அலட்சியத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

 


மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 2 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், விதிஷாவில் கஞ்ச் பசோதா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 33 வயது பெண் அர்ச்சனா அஹிர்வார், தடுப்பூசி மையத்தில் வேறொருவருடன் பேசியபடி முதல் டோஸை பெற்றுள்ளார். அவர் தனது இருக்கையிலிருந்து எழுவதற்குள், அதே செவிலியர் அப்பெண்ணுக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

முதல் ஊசி செலுத்தப்பட்ட இடத்திலேயே மீண்டும் வலி ஏற்பட்டதால், அர்ச்சனா திரும்பி பார்க்கும் நேரத்தில் இரண்டாவ்து ஊசியும் முழுமையாக போடப்பட்டுவிட்டது. ஒரு நிமிட இடைவெளிக்குள் இது நடந்து முடிந்துவிட்டது.

பயத்தில் அர்ச்சனா கத்த ஆரம்பித்துள்ளார். அவரிடம் விவரத்தைக் கேட்டு அறிந்த கும்பத்தினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டு, தடுப்பூசி மையத்தை ரணகளப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு அர்ச்சனாவின் குடும்பத்தினர், மருத்துவமனை பொறுப்பாளர்களிடமும், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேத்திடமும் எழுத்துப் பூர்வாமாக புகார் கொடுத்தனர்.

இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையைக் கண்ட மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி, சம்பவம் நடத்த தடுப்பூசி மையத்துக்கு சென்றார். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையை தெரிந்துகொள்ள அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.

READ MORE | comments

10 நாட்களில் 531 பேர் கொரோனாவுக்குப் பலி!

 


கடந்த 10 நாட்களில் இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 531 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியல் இந்த மரணங்கள் சம்பவித்ததாக சுகாதார பணிப்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த காலப்பகுதியினுள் 229 பெண்களும் 302 ஆண்களும் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

READ MORE | comments

தடுப்பூசிகள் போடப்பட்டால் ஜூலையில் பாடசாலைகள் திறப்பு!



மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 7 லட்சம் தடுப்பூசிகளை, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அவ்வாறான ஊழியர்கள் 279000 பேர் வரையில் உள்ளனர்.

வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும். எப்படியிருப்பினும் திகதியை தற்போது கூற முடியாத நிலைமைகள் உள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க முடியாதென்றாலும் ஒரு தடுப்பூசி வழங்கியாவது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். தற்போது திகதி குறிப்பிடப்பட்டுள்ள புலமைபரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரபரீட்சைகளை பிற்போடுவதற்கு எந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை...!!

 


நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். பலப்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: பலப்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
READ MORE | comments

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு


 தங்களது நிரந்தர பணி இடத்திலிருந்து தற்காலிகமாக, வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு, இணைப்புக் காலம் முடிவடைந்த ஆசிரியர்கள், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் நிரந்தரப் பணி இடங்களுக்கு, மீள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா; நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுச் சூழல் காரணமாக, நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நிரந்தரப் பணி இடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், இணைப்புக் காலம் முடிவடைந்தப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பித்ததும், நிரந்தரப் பணி இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.

மேலும், மீண்டும் இணைப்பை நீட்டிக்க விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தரப் பணி இடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப் பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் இடமாற்றம்) அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேருக்கு கொரோனா

 


கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று : கழிவகற்றலுக்கு மக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் கல்முனை முதல்வர் ஏ.எம். றக்கீப்.


நூருல் ஹுதா உமர்  

கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மக்களுக்கு வழங்கும் சேவையில் சில தொய்வு நிலைகள் உள்ளது. மக்களும் இந்த காலகட்டத்தின் சூழ்நிலையை பொருந்திக்கொண்டு சில விட்டுக்கொடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 150 பேர் தேவையான ஆளணியில் 104 பேர் மட்டுமே கல்முனை மாநகர சபையில் ஊழியர்களாக உள்ளார்கள் அதில் 52 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் மீதி 52 பேர் நிரந்தரமான ஊழியர்களாகவும் உள்ளனர் என கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை முதல்வர் அலுவலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் ஆகியோர் இணைந்து கலந்துகொண்டு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள 11 ஊழியர்களும் , சவளக்கடை பிரதேசத்தில் உள்ள 05 ஊழியர்களும் அடங்களாக மொத்தம் 29 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கும், கல்முனை மாநகர சபைக்கும் உள்ளது. கல்முனை மாநகர 120000 மக்களும் கல்முனை மாநகர பிரதேசங்களுக்கு தினமும் வந்து செல்லும் 30000 மக்களும் அடங்களாக மொத்தம் ஒன்றரை லட்சம் மக்களும் சேர்ந்து சராசரியாக 120 தொன் திண்மக்கழிவுகள் தினமும் வெளியாகிறது. இதனை முறையாக முகாமைத்துவம் செய்ய இந்த நாட்டில் இப்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் பல இடர்பாடுகள் உள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் கல்முனை மாநகர சபையானது கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடையடைப்புக்கள், வர்த்தக நிலையங்களின் நிலைகள் தொடர்பில் வரிப்பணம் அறவிட முடியாமல் போனது. இதனால் வெளியில் கடன் வாங்கியே ஊழியர்களின் 32 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தை வழங்கும் நிலை இப்போது உள்ளது. இந்த மாநகர மக்களின் சுகாதார நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழு சிறப்பாக இயங்குகிறது. இருந்தாலும் மக்களின் சுகாதார நிலைகளில் நாங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கிறோம். மக்களின் உயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதனாலும் கொரோனா தொற்று மற்றும் பல காரணங்களினால் சில தொய்வு நிலைகள் உள்ளது. இதனை வெற்றிகரமாக கடந்து வர மக்கள் சில விட்டுக்கொடுப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
 
READ MORE | comments

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

 


திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவரும், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியும் கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கி  பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அம்பியூலன்ஸ் சாரதிக்கும் லொறியின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

READ MORE | comments

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்

 


இலாபமடையாத, நட்டத்தில் அரச நிறுவனங்களில் பணியாற்றும், ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடாதென, நிதி அமைச்சு அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மின்சார சபையின் கடன்கள், ஆயிரம் பில்லியனைத் தாண்டியுள்ளது. நட்டத்தில் இயங்கிவரும் இந்நிறுவனத்தை இலாபமடையச் செய்ய எந்தவிதமானத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கிவரும் மின்சார சபை, நீர் வழங்கல் அதிகார சபை ஆகியன தொடர்பில் நிதி அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
READ MORE | comments

ஆசிரியர் ஆலோசகர் சேவை உள்ளீர்ப்புக்கான ஆசிரியர்களின் தகவல்கள் கல்வி அமைச்சால் கோரப்பட்டது...!!

 


நாட்டில் ஆசிரியர் ஆலோசகர் சேவை உள்ளீர்ப்புக்கான ஆசிரியர்களின் தகவல்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

2020.08.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 21/2020 ஆம் இலக்க ஆசிரியர் ஆலோசர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான சுற்றுநிருபத்திற்கு ஏற்ப, ஆசிரியர் ஆலோசகர் பதவிக்கான உள்ளீர்ப்பு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இச்சேவைக்கான பிரமாணக் குறிப்பின் 7 ஆம் சர்த்தின் படி ஆசிரியர் ஆலோசகர் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்த்து, கல்வி அமைச்சு வலயங்கள் மற்றும் மாகாணங்கள் ஊடாக பொருத்தமான ஆசிரியர்களின் பெயர் பட்டியலைக் கோரியுள்ளது.

50 ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்த பட்டியலைத் தயாரித்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

கொழும்பு புறநகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா தொற்றாளர்

 


கொழும்பு கஹதுடுவ − ஜயலியகம பகுதியில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவலை கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ தெரிவித்துள்ளார்.

47 வயதான குறித்த நபர், கொழும்பு − கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பிரதான நிர்மாணத்துறை அலுவலகமொன்றில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலனறுவை கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் , நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்- அசேல சம்பத்

Sunday, June 27, 2021

 


வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட பின்னர் விடுதலையான சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச் சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன

நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை.

அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச் சென்றனர்.

பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,

இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச்சென்றார்கள்

ரிசாட் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார்,

பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார்,

சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

READ MORE | comments

எமது இணையவழிக் கல்வி உயிரோட்டமானதா ? ஓர் பார்வை - கட்டுரை...!!


 சவால்கள் மிகுந்த இன்றைய காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பல சவால்களை எதிர்கொள்ளுகின்றனர் என்பது கண்கூடு. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எதிர்பாராத நிலையில் அவசரமாக அறிமுகம் செய்யப்பட்ட இணையவழிக் கல்வி முறையில் தொழிநுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது? அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது? எவ்வாறு செயற்படுத்துவது? அதில் எவ்வாறு கலந்து கொள்வது? போன்றவை தொடர்பில் இன்றுவரையில் மாணவர்கள்> பெற்றோர்கள்> ஆசிரியர்கள் ஆகியோர் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


எமது ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுவாகவே வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கே பழக்கப்பட்டவர்களாவர். இதுவரை காலமும் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை பிள்ளை நேயமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவே ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. மேலும் புதிய தொழிநுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவை நேரடி வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தப்பாடுடையதாகவே அமைந்திருந்தன.

கல்விப் புலத்திலே புதிய முறைமையோ அல்லது விடயங்களோ அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கான முறையான பயிற்சிகளும்> வசதி வாய்ப்புக்களும் முன்னதாகவே உரிய தரப்பினருக்கு வழங்கப்படுவது வழமையாகும். ஆனால் இணையவழி மூலமாக புதிய கற்றல் கற்பித்தல் முறையை மேற்கொள்ளும்போது அது தொடர்பாக முறையான செயன்முறைப் பயிற்சிகள் எதுவும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது கணினி> அறிதிறன்பேசி (Smart Phone) சாதனங்கள் மற்றும் இணையதள சமிக்ஞை போன்ற வசதி வாய்ப்புக்கள் எதுவும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தாத நிலையில் காலத்தின் தேவை கருதி அவசர அவசரமாக இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தமை காரணமாக மாணவர்கள்> பெற்றோர்கள்> ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பட்ட தரப்பினரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளமையை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

'இணையவழிக் கற்றல் கற்பித்தல்' என்பது 'வகுப்பறைக் கற்றல் கற்பித்தல்' செயற்பாடுகளுகளிலிருந்து வேறுபட்டதாகும். இணையவழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளோ அனுபவங்களோ இல்லாத நிலையில் சூம் (Zoom) போன்ற செயலிகளை வினைத்திறனுடன் பயன்படுத்துதில் பல சவால்களை பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இணையவழிக் கற்பித்தலின்போதும் நேரடி வகுப்பறைக் கற்பித்தல் உத்திகளே பெரும்பாலான ஆசிரியர்களிடம் பிரதிபலிக்கூடியதாக இருக்கின்றது. இதனால் மாணவர்கள் பாட விடயங்களைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

ஆரம்பப் பிரிவு> இடைநிலைப் பிரிவு வகுப்புக்களைப் பொறுத்தமட்டில் ஒரு பாடவேளை 40 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே. ஏனெனில் குறித்ததொரு பிள்ளையால் ஒரு விடயத்தை 40 நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து கிரகிக்க முடியாது என்பதனாலாகும். இதனை கல்வியலாளர்கள்> உளவியலாளர்கள் போன்ற துறைசார் நிபுணர்களால் நீண்டகாலமாக பிள்ளைகள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகும். இது நேரடியான வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கே உரியதாகும்.

ஆனால் இணையவழிக் கற்றல் கற்பித்தலுக்கும் 40 நிமிடங்களுக்குமேல் நேரத்தை எடுத்துக்கொள்வது நடைமுறைக்குச் சாத்தியமானதா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஒரு சிறிய தொழிநுட்ப சாதனத்தை நீண்டநேரம் உற்றுநோக்குவதென்பது உடல்> உள ரீதியான அழுத்தங்களைப் பிள்ளைகளிடத்து அதிகரிக்கச் செய்யலாம். ஆகவே ஒரு பாடவேளைக்கான நேரத்தை நடைமுறைக்கேற்றவாறு மட்டுப்படுத்தி உயிரோட்டமான கற்பித்தல் செயற்பாட்டை திட்டமிட்டு ஆசிரியர் மேற்கொள்ளும்போது பிள்ளையினது கற்றலானது நிச்சயம் வினைத்திறன் மிக்கதான அமையும்.

தினமும் தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்குமேல் தொலைக்காட்சியைப் பார்ப்பதனால் சிறார்களுக்கு நீண்டகால உடல்> உள ரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விஷேட மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுவர்கள் தொழிநுட்பம் தொடர்பான புதிய விடயங்களை அறிய முயல்பவர்கள் என்பதால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படும் ஆபத்தும் காணப்படுகின்றது. ஆகவே கணினி> கைபேசி போன்ற சாதனங்கள் குறித்தும் பெற்றோர் கூடிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் இவ்விஷேட மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சாதாரணமான பாடசாலை நாட்களில் பாடத்திட்டத்திற்கு அமைவாக குறித்த தவணைக்குரிய வாராந்த> நாளாந்த வகுப்பறைக் கற்பித்தலைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவது போன்று இணையவழிக் கற்பித்தலை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செயற்படுவது பிள்ளைகளிடத்து பாடவிடயத்தைத் திணிப்பதாகவே அமையும்.                                                            
இணையவழிக் கல்வி தொடர்பாக மாணவர் எதிர்கொள்ளும் சவால்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

· நேரடி வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் போன்று அடுத்தடுத்து 3-4 மணித்தியாலங்கள் பாடங்கள் தொடர்ந்து இடம்பெறுதல்.

· கணினி> கைபேசி போன்றவற்றின் திரைகளை நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பார்ப்பதனால் தலையிடி> கண்நோ> கழுத்து வலி> கழுத்துப் பிடிப்பு போன்ற உடல் உபாதைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாதல்.

· முழுமையாக விரிவுரை முறையில் கற்பித்தல்.

· வேகமாக பாடவிடயத்தை கற்பித்து முடித்தல்.

· காண்பிக்கப்படும் படங்கள் தெளிவின்றிக் காணப்படுதல்.

· வெண்பலகையில் எழுதப்படும் விடயங்கள் தெளிவாகத் தெரியாமை.

· ஆசிரியர் போதிய வெளிச்சமில்லாத இடங்களில் இருந்து கற்பித்தல்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அதிகளவு பாடக்குறிப்புக்களை ஆசிரியர்கள் வழங்குவதனால் கைபேசியைப் பார்த்து குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதில் சிரமப்படல்.

· கற்பித்துக் கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ஆசிரியர் அமைதியாக இருத்தல்.

· மாணவர் வரவு பதிதலுக்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுதல்;.

இவ்வாறான காரணங்களால் இணையவழிக் கற்றலில் வெறுப்படைந்துள்ளதாகவும் பலர் இணையவழிக் கற்றலைத் தவிர்ப்பதாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களில் பெரும்பாலானோர் கணினி> கைபேசி ஆகியவற்றின் ஒலியை காதொலிக்கருவி (Earphone) சாதனம் மூலமே கேட்கின்றனர். எமது காதுகளால் 65 டெசிபெல் (Decibel) வரையிலேயே ஒரு ஒலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் காதொலிக்கருவியின் (Earphone) ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். காதொலிக்கருவியை (Earphone) அதிக நேரம் பயன்படுத்துவதனால் நமது காதில் உள்ள கலங்கள் சிதைவடைவதுடன் பக்டீரியா தொற்றுக்களும் ஏற்படலாம். இதன் காரணமாக கேட்கும் திறனும் அற்றுப்போகலாம். மேலும் சிந்திக்கும் திறன்> ஞாபக சக்தி போன்றனவும் குறைவடையலாம். காதொலிக்கருவிக்கு (Earphone) அடிமையானால் காதொலிக்கருவியைக் Earphone) காதிலிருந்து அகற்றிய பின்பும் பாடல்கள் ஒலிப்பது போலவும் யாராவது பேசுவது போலவும் இருக்கும். எனவே காதொலிக்கருவி (Earphone) சாதனம் மூலம் கேட்பதைத் தவிர்த்து Out Speaker இல் கேட்பதே பாதுகாப்பானதாகும்.

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின்போது மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள உதவும் சில உத்திகளையும் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

· தொடர்ச்சியாக நீண்டநேரம் இணையவழிக் கற்றலில் ஈடுபடும்போது உடல் உபாதைகளும் அதன் காரணமாக மன அழுத்தமும் ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் உடன் ஓய்வெடுப்பதே சிறந்தது.

· உடல் பாதிப்புக்களையோ> மன அழுத்தத்தையோ உணரும்போது அவற்றிலிருந்து விடுபட கீழ்க்குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மேற்கொள்ளலாம்.

o குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல்.

o பிடித்தமானவருடன் சற்றுநேரம் பேசுதல்.

o பிடித்தமான பாடலைக் கேட்டு இரசித்தல் அல்லது பாடுதல்.

o நகைச்சுவைக் காட்சிகளை இரசித்தல்.

o வீட்டிலுள்ள செல்லப் பிராணியுடன் சிறிது பொழுதைக் கழித்தல்.

o குட்டித்தூக்கம் போட்டு எழுதல்.

o உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு செயற்பாட்டில் ஈடுபடுதல்.

· தொடர்ந்து கற்றலில் ஈடுபடமுடியாத சந்தர்ப்பங்களில் கைபேசியிலுள்ள Screen Recorder எனும் செயலியைப் பயன்படுத்தி கானொலி காட்சிப் பதிவு (Video Recording) செய்து பின்னர் அதனைப் பார்வையிடுதல்.

· கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்தும்போது பிள்ளையின் கண் மட்டத்திற்குச் சமமான உயரத்தில் அவற்றை வைத்துக் கொள்ளவேண்டும். கணினிக்கும் பிள்ளைக்குமான இடைவெளியை 20' அங்குலமாகப் பேணுவது நலம்.

· கணினி> கைபேசி ஆகியவற்றின் ஒலியை காதொலிக்கருவி (Earphone) மூலம் கேட்பதைத் தவிர்த்து Out Speaker இல் கேட்டல்.

· சூம் (Zoom) போன்ற மென்பொருள்களுடாகக் கற்கும்போது முக்கியமான விடயங்களை Screen Shot எடுத்து வையுங்கள். கணினியிலும் Snipping Tool இன் உதவியினுடன் இதனைச் செய்யமுடியும். கணினியிலுள்ள தேடுதலில் (Search) Snipping Tool என தட்டச்சு (Type) செய்வதனூடாக இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அதிகளவு பாடக்குறிப்புக்கள் ஆசிரியர்களினால் தட்டச்சுப் பிரதியாகவோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ வழங்கப்படுமிடத்து மாணவர்கள் தங்களது பெற்றோர்> சகோதரர் அல்லது மற்றொருவரின் உதவியைப் பெறலாம். அவர் கைபேசியிலுள்ள குறிப்புக்களை பார்த்து வாசிக்க பிள்ளை அக்குறிப்புக்களைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொள்ளுதல்.

· நாளாந்தம் சராசரி 7 மணி நேரம் நன்கு தூங்கி எழுதல்.

· இணையவழிக் கற்றலை விருப்புடன் மேற்கொள்ளவும் இலகுபடுத்தவும் நாளாந்த நேரசூசி ஒன்றை ஒழுங்கமைத்துக் கொள்ளுதல் சிறந்தது. காலையில் பிள்ளை தூக்கத்திலிருந்து எழுவது முதல் அன்றிரவு படுக்கைக்குச் செல்லும்வரையில் அவர்களது அனைத்துச் செயற்பாடுகளையும் நேரத்தின் அடிப்படையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். . இதன்போது விளையாட்டு> உடற்பயிற்சி> பயன்தரு பொழுதுபோக்கு போன்றவற்றிற்கான நேரங்களையும் ஒதுக்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது உயிரோட்டமானதும், வினைத்திறன்மிக்கதும், பிள்ளை நேயமானதுமாக அமையும் பட்சத்திலேயே மாணவர்களது முழுமையான பங்குபற்றுதலையும் அவர்களது அடைவு மட்டத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்தவகையில் ஆசிரியர்கள் இணையவழிக் கற்பித்தல் செயற்பாட்டைத் திட்டமிடும்போது பின்வரும் உத்திகளைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள்.

· மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் விடயத்தை எளிமையாகப் புரிந்தகொள்ளும் வகையிலும் கற்பித்தலானது அமைய வேண்டும்.

· அவ்வப்போது மாணவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல். இதன் மூலம் மாணவருக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் அவர்களது பங்களிப்பு> ஈடுபாடு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்து கொள்ளவும் மதிப்பீட்டினை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

· கலந்துரையாடல்களின்போது மாணவர் பெயர்களைக் கூறி அழைப்பதனூடாக அவர்களது கவனத்தையும் ஈர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்களது அநாவசியமான செயற்பாடுகளையும் வெளியேறுதலையும் தடுக்க முடியும்.

· இணையவழிக் கற்றல் கற்பித்தலுக்கான நேரசூசியை தயாரிக்கும்போது தொடர்ச்சியாக அல்லாது குறைந்தது 15 நிமிட இடைவேளையாவது ஒவ்வொரு பாடத்திற்குமிடையே இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம். அல்லது பிள்ளைகளுடன் கலந்துரையாடி இவ் இடைவேளையை அமைத்துக்கொள்வது மிகச்சிறந்தது.

· இணையவழிக் கற்றல் கற்பித்தலின்போது தேவையான இடங்களில் அசையும் படங்கள் (Animation Pictures)> புகைப்படங்கள்> வீடியோக்கள்> பவர்பொயின்ட் (PowerPoint)> சூம் வெண்பலகை போன்ற சாதனங்களைப் பயன்படுத்துதல்.

· சில பாடங்களைப் பொறுத்தமட்டில் செயல்முறை பிரதானமானது. ஆகவே அவ்வப்போது அவற்றை ஆசிரியர்கள் செய்து காட்டுவதுடன் முடியுமானால் முன்னறிவித்தலுடன் செயல்முறைக்குத் தேவையான பொருட்களை கொணரச் செய்து மாணவர்களையும் செயல்முறையில் ஈடுபடுத்துதல்.

· ஆசிரியர்கள் தங்கள் வீடியோவை நிறுத்தி (Off) வைக்காது முழுநேரமும் இயங்க (On) வைத்தே கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

· குறித்த பாட அலகு நிறைவுபெற்றதும் அடுத்த வகுப்பில் மாணவர்களைக் குழுக்களாக்கி வினா விடைப் போட்டிகளை நடாத்தி அவர்களுக்குப் புள்ளிகளை வழங்கலாம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இணையவழிக் கற்றலுக்கான மாணவர்களது ஆர்வத்தைத் தூண்டமுடியும்.

· முழுமையான விரிவுரை முறைக் கற்பித்தலைத் தவிர்த்தல்.

· வேகமாக அன்றி நிதானமாகவும் தெளிவாகவும் பாடவிடயத்தைக் கற்பித்தல்.

· பெரிய அளவிலான தெளிவான படங்களைப் பயன்படுத்துதல்.

· வெண்பலகையில் தெளிவாகத் தெரியக்கூடியவாறு எழுதுதல்.

· போதிய வெளிச்சமுள்ள இடங்களில் இருந்து கற்பித்தல்.

· வட்ஸ்அப் (WhatsApp) மென்பொருளுடாக அளவிற்கதிகமான பாடக்குறிப்புக்கள் வழங்குவதைத் தவிர்த்தல்

· மாணவர் மன்றம் போன்ற இணைபாடவிதானச் செயற்பாடுகளையும் இணையவழி ஊடாக முன்னெடுத்தல். இதனால் மாணவர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மன அழுத்தங்களிலிருந்து அவர்கள் விடுபடவும் வழியேற்படும்.

· நிறைவுபெற்ற இணையவழி வகுப்புக்களை வீடியோ வடிவில் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் புரியாதவற்றைத் திரும்பப் பார்த்துப் புரிந்துகொள்ள அது உதவும்.

வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலரிடம் கணினி> அறிதிறன்பேசி (Smart phone) போன்ற சாதனங்கள் இல்லாமையினால் இணையவழிக் கற்றலை மேற்கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர். மேலும் தொழிநுட்ப சாதனங்கள் இருந்தும் இணையதள சமிக்ஞை கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனை நிவர்த்திசெய்யும் வகையில் கல்வி அமைச்சு தரவுக் (Data) கட்டணமின்றி வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி வசதியை வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும் இணையதள சமிக்ஞை கிடைக்காத இடங்களில் இணைய மத்திய நிலையங்களை கிராம மட்டத்தில் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
                                                    

இன்றைய அசாதாரண சூழலில் இணையவழிக் கல்வி அவசியமானதாகும். இணையவழியில் பல்வேறு தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாட விடயங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வினைத்திறனுடன் புரியவைக்க முடியும். எனினும் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்புக் கல்விக்கு இணையாகக் கொள்ளமுடியாது. இது ஒரு தற்காலிகத் தீர்வேயாகும். கிராமப்புற ஏழை மாணவர்கள் இணையவழியில் கற்க முடியாத நிலையுள்ளதால் கல்வியில் ஏற்றத்தாழ்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே இணையவழிக் கல்வியானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நாம் வழிசமைக்க வேண்டும். இதுவே எமது கடமையுமாகும்.
சிந்திப்போம்! செயற்படுவோம்!

முத்துராஜா புவிராஜா
(முதன்மை உளவளத்துணையாளர்)
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |