Saturday, July 31, 2021
மட்டக்களப்பு மாவட்டத்திலும் படுகொலை செய்யப்பட்ட பல சிறுமிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சாந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கூட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் ஒரு சகோதரர் கொலை செய்யப்பட்ட அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. மட்டக்களப்பில் இந்த கொலைக்கு யாராவது அரசியல்வாதிகள் குரல் கொடுத்திருக்கின்றார்களா?
தீர்வினை பெற்று கொடுக்க வேண்டியவர்கள் வீதியில் நின்று போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கின்றது. அரசாங்க அமைச்சர்களும் போராட்டம் நடத்துகின்றனர். ரிஷாட் பதியுதீன் வீட்டில் மரணமடைந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
முதலாவதாக அந்த சிறுமிக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான். இரு சமூகங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இந்த ஒட்டு குழுவினர் ஏன் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்படட இன்னும் பல சிறுமிகள் இருக்கின்றனர் அவற்றுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன் .
உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் ஊடகங்களுக்கு அதிகமான இறுக்கமான சூழல் காணப்படுகின்றது. அபிவிருத்திக் குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை ஊடகங்கள் இதில் உன்னிப்பாக இருக்க வேண்டும். 4 மணித்தியாலம் நடைபெறுகின்ற கூட்டத்தில் நாலு நிமிட ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்த முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதிமன்ற கட்டளையை மீறி மாதவனை மயிலைத்த மடு பகுதியில் அடுத்த போக விவசாயத்துக்கான ஏற்பாடுகளை ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை நாங்கள் கேள்வி எழுப்பினால் குழப்பவாதிகள் என சித்தரிக்கப்பட்டு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று தெரிவிக்கின்றார்கள்.
பல எல்லை காணிகள் திட்டமிட்டு கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு சிங்கள பிரதிநிதித்துவத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது .
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றோம் ஐ.நா சபை வரைக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இன்று வடக்கு கிழக்கில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக காஸின் விலை மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபட்ட விலை காணப்படுகின்றது.
ஆகவே வடக்கு கிழக்குக்கு மட்டும் ஏன் இப்படியான அநீதி இடம் பெறுகின்றது என்பது தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.