உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் லுக்மன் தலிப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று அவர் அனுப்பிய மின்னஞ்சலில்
தனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மாலைதீவில் நான்கு மத தீவிரவாதிகளை சந்திக்க லுக்மான் தாலிப் மற்றும் அவரது மகன் லுக்மான் தாலிப் அகமது ஆகியோர் வசதி செய்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
லுக்மான் தாலிப்பும் அவரது மகனும் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில்நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பான CAGE குறித்த ஆங்கில் ஊடகத்துக்கு தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர்,நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நான் கட்டார் பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.