போனி பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்! கடும் கொந்தளிப்புடன் கடல்

Tuesday, April 30, 2019

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான 'FANI' ('போனி') திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோமீற்றருக்கு அப்பால் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும், இந்த போனி சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பானி புயல் இன்றைய தினம் பிற்பகல் 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோமீற்றருக்கு அப்பால் நகரும்.
இந்த கட்டமைப்பு மேலும் விருத்தியடைந்து வடக்கு திசைக்கு அழுத்தத்தை கொடுத்த வகையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையோரத்தை சென்றடையும்.
நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் வானம் முகில் கூட்டத்துடன் காணப்படுவதுடன் கடும் காற்று மற்றும் கடும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மத்திய மலை பிரதேசத்திலும், வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர்க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.
ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம். இந்த சூறாவளி கட்டமைப்பு அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதிலும் குறிப்பாக இன்றைய தினம் தொடக்கம் மே மாதம் மூன்றாம் திகதி வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் வடமேற்கு திசையை நோக்கி மணித்தியாலத்துக்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம் காணப்படுகிறது.
இதேவேளை காற்றின் வேகம் 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும்.
வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் மணித்தியாலத்துக்கு 120 - 130 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும். அடிக்கடி காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 145 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்த பிரதேசத்தில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு பொது மக்கள், மற்றும் கடற் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
READ MORE | comments

வெடி பொருட்கள் உள்ளதாக தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது!

தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
EP - PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழு நியமனம்

அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு, பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பாடசாலைகள் அனைத்து இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்புக் கருதி அதிபர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஷால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
READ MORE | comments

தீவிரவாத தாக்குதலுக்கு மைத்திரியே முழு பொறுப்பு! ஐ.எஸ் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவிப்பதற்கு தயங்காதவர்கள்!


இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் ஜனாதிபதி தம்வசம் எடுத்துக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதால், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும். ஏனைய அதிகாரிகளைப் பதவி விலகுங்கள் என்று கூறி அவர் தப்பிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தான் நாட்டில் இல்லாத நேரம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதால் அதற்குப் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், பதில் பாதுகாப்பு அமைச்சரையும், பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சரையும் நியமிக்காது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றமை முதல் தவறாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் 2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின் பாதுகாப்புத் துறையும், சட்டத்துறையும் பின்னடைவைச் சந்தித்தன. அதுவே இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்துணிவு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. தற்போது நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கட்டிக்காத்துவந்த அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதைத்தார். அதேவேளை, இனங்களுக்கு இடையிலான மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கடந்த மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிதைத்துவிட்டார்கள்.

நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்று நான் கூற வரவில்லை. அவர்கள் தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தரப்பில் மகா தவறு நடந்துள்ளது என தெிரிவித்தார்.

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதற்கும் அஞ்சாதவர்கள் மக்களைக் கொன்று குவிப்பதற்கு சிறிது கூட தயங்கமாட்டார்கள். அவர்களுக்கு இரக்க குணம் இல்லை. எனவே, அவர்களை இலங்கையில் முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம்! மஹிந்த தேசப்பிரியஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளை காரணம்காட்டி தேர்தல்களை ஒத்திவைப்பதானது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் படுகொலைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டும், பதவிநாட்களை நீடிப்பு செய்தும் வருகின்ற தேர்தல்களை உடன் நடத்தியாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகின்ற அனித்தா என்கிற தேசிய சிங்கள வாரப் பத்திரிகையின் ஒருவருடப் பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் தம்பர அமிலதேரர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பல மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற படுகொலைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்று வினவினர்.
இந்த நேரத்தில் காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் தேர்தலுக்கு செல்வோம் என்று கூறுவதானது பொருத்தமானதாக அமையாது. எனினும் எந்த நிலைமையிலும் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற தாக்கமாகும்.
எந்தவொரு பிரிவினரும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு இந்த சூழ்நிலையை பயன்படுத்த மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் தீவிரவாதத்திலும் சரி, தேர்தல்களை ஒத்திவைப்பதிலும்சரி ஜனநாயகமே பறிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல்களானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இருந்த போதிலும் இந்த நாட்டில் குண்டுகள் வெடிக்கின்ற நிலையிலும், படுகொலைகள் இடம்பெற்ற போதிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த சூழ்நிலையை காரணம்காட்டி மேலும் தேர்தலை தாமதப்படுத்தி, பதவிநாட்களை நீடிப்பதானது ஜனநாயகத்திற்கு ஏற்படுத்துகின்ற இழுக்காகும். ஜனநாயக நாட்டில் தேர்தல்களை ஒத்திவைப்பது இப்படியான குண்டுகளை வைத்து படுகொலை செய்வதற்கு சமமாகும்”
READ MORE | comments

ஆபத்திலிருந்து தப்பிக்க பெருந்தொகை பணத்தை மக்கள் மீது வீசிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்!


சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பெருந்தொகை பணத்தை பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் வீசியுள்ளனர்.
கடந்த 26ம் திகதி கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு முற்றுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பயங்கரவாதிகளை ஒழிக்கும் சிறப்பு நடவடிக்கை சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதிரடி படையினர் மற்றும் குண்டுத்தாரிகளுக்கு இடையில் பாரிய துப்பாக்கி பிரயோகம் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.
எனினும் சிறப்பு அதிரடி படையினரின் முற்றுகைக்கு முன்னர் 5000 ரூபாய் நாணயத்தாள்களை அந்த பகுதி மக்களை நோக்கி குண்டுத்தாரிகள் வீசியுள்ளனர்.
நிந்தவூர் பிரதேசத்தில் இருந்த இந்த கும்பல், அந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டவுடன் அங்கிருந்து தப்பி சாய்ந்தமருது பகுதிக்கு வந்துள்ளனர்.
இதன்போது 10 - 15 பேர் அவ்விடத்திற்கு வந்துள்ளதாக சந்தேகித்த பிரதேச மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மற்றும் கிராம சேவகரிடம் அறிவித்துள்ளனர்.
உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் கிராம சேவர் மீது குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
எனினும் பொலிஸ் அதிகாரி காயமின்றி தப்பியுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் போது குறித்த வீட்டில் இருந்த தீவிரவாதிகள் 5000 ரூபாய் நாணயத்தாள்களை அந்த பகுதி வீடுகள் மீது வீசியுள்ளனர். “நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம் நீங்கள் காட்டி கொடுக்கின்றீர்களா?” என கூச்சலிட்டுள்ளனர்.
ஆனாலும் குறுகிய நேரத்திற்குள் பயங்கரவாதிகள் ஒழிந்திருந்த வீட்டினை அதிரடி படையினர் சுற்றிவளைத்து அழித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சமூக ஊடகங்கள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள உத்தரவு!இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஒரே நாளில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கிளினால் நாட்டில் சமூக ஊடகங்கள் மீது கடந்த 21ஆம் திகதியிலிருந்து அரசு தடைவிதித்திருந்தது.
மீண்டும் கடந்த வாரம் சமூக ஊடகங்கள் தடை நீக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், மீண்டும் சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றதால் தடை நெீக்கப்படாது தொடர்ந்தது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்க இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பொறுப்புடன் அவற்றை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அலுவலகம் பயனாளர்களை கேட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி! சூடு பிடிக்கவுள்ள அமைச்சரவை கூட்டம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்குமாறு இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபரிடம், ஐதேக கோரிக்கை விடுக்கவுள்ளது என தெரிவிக்கபப்டுகினறது.
இதற்கான கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இந்த யோசனையை கவிந்த ஜெயவர்த்தன முன்வைத்திருந்தார். அதனை ஹெக்டர் அப்புகாமி வழிமொழிந்தார்.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், சரத் பொன்சேகாவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கும் வகையில், அமைச்சர் பதவியில் இருந்து விலக அர்ஜூன ரணதுங்க முன்வந்துள்ளார்.
தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சிறிலங்கா அதிபரிடம் உள்ளது. அவர், ஏற்கனவே சரத் பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்குமாறு இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபரிடம், ஐதேக கோரிக்கை விடுக்கவுள்ளது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி

சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.
கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி 18 நிமிடங்களை கொண்டுள்ளது.
இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அவர், எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில், தங்கள் வசமிருந்து பாகூஸ் பிர​தேசம், அமெரிக்க மற்றும் சிரிய படையினரின் கூட்டுப் படை நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்து கடந்த ஒரு மாத்துக்கு முன்னர் பறிக்கப்பட்டது.
இதற்கு பலி தீர்ப்பதற்காகவே, இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் என்றும் அதை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

READ MORE | comments

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்துள்ள நூற்றுக்கணக்கான அதிரடி படையினர், இராணுவத்தினர்!

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினருக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலையடுத்து இன்று மாலை 3:45 மணியளவில், அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் தேடுதலில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன், கனகர வாகனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் நூற்றுக் கணக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும், பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நாளை காலை விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாகச் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்ததனால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு!

பொதுபல சேனா மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் எதிர்வுகூறல்களை உதாசீனம் செய்தபடியினால்தான் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய அழிவு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள பொதுபல சேனா, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் பயன்படுத்திய ஆயுதங்கள் மாயமாகியிருப்பதாகவும், அவை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகல்கந்தே சுதத்த தேரர், தமது அமைப்பும், முன்னாள் போராளிகளும் விடுத்த முன்னெச்சரிக்கையை ஸ்ரீலங்கா அரசு உதாசீனம் செய்தபடியினால்தான் பாரிய அழிவை எதிர்கொண்டதாகவும் அதனால் இப்போதாவது தங்களுடைய கோரிக்கையின்படி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாகல்கந்தே சுதத்த தேரர் - பொதுபல சேனா அமைப்பு, ‘சில மாதங்களுக்கு முன்னர் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் சிலர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெளிவான விடயமொன்றை முன்வைத்திருந்தார்கள். கருணா அம்மான் தலைமையிலான ஆயுததாரிகள் கிழக்கு மாகாணத்தில் கைவிட்டுச்சென்ற 5000-ற்றும் அதிகமான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை இப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் அமைப்புக்களிடமும் இருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
ஆனால் இதனை ஆட்சியாளர்களும், பாதுகாப்பு பிரிவும் அதனை கணக்கில் எடுக்காததினால் இப்படியான விளைவுகள் ஏற்பட்டுள்ன, அதேபோல கோவில்களை உடைத்து பள்ளிகளை அமைப்பதாக ஹிஸ்புல்லா கூறியிருந்தார். ஆகவே ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு கிழக்கில் பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியுமா? தீவிரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம் மக்களை தள்ளிவிட வேண்டுமென மேல் மாகாணத்தில் ஆளுநர் அசாத் சாலி இந்தியாவிற்கு சென்றிருந்தபோது கூறியிருந்தார். அவரை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு மேல் மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? தீவிரவாதிகளுக்கு தொழிற்சாலை வழங்கி வெற்றுத் தோட்டாக்களையும் வழங்கிய ரிஷாட் பதியூதீனை வர்த்தக அமைச்சராக தொடர்ந்தும் பதவிவகிக்கச் செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? ஆகவே அந்த ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களின் சி.சி.ரி.வி கமராக்களை பரிசோதனை செய்து வந்துசென்ற அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். அவர்களுடைய தொலைபேசி அழைப்புக்களையும் விசாரிக்க வேண்டும். கிழக்கில் முஸ்லிம் இனவாதிகள் இருப்பதாக ஞானசார தேரர் கூறியபோதிலும் அவரை சிறைதள்ளினார்கள். எனவே குறைந்தபட்சம் பெயர் குறிப்பிட்டவர்களை கைது செய்யாவிட்டாலும் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு விசாரணை செய்யும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

5 வருடங்களுக்குப்பின்னர் உயிருடன் ஐ.எஸ் தலைவர்! இலங்கை தாக்குதல்கள் குறித்தும் பேசிய அல் பக்தாதி!இஸ்லாமிய அரசாங்கம் அல்லது ஐ.எஸ் எனப்படும் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதியிடமிருந்து 5 வருடங்களுக்குப்பின்னர் இன்று முதன் முறையாக வெளியிடப்பட்டதாக கூறப்படும் பரப்புரை காணொளி ஒன்று இன்று பகிரங்கமானது.
இந்த காணொளியில் அவர் இலங்கையில் அண்மையில் தமது அமைப்பு நடத்திய குருரமான தாக்குதல்கள் குறித்தும் பக்தாதி பேசியுள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் அல் பர்ஹான் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்ட இந்த காணொளி 18 நிமிடங்களுக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது இந்த காணொளியில் தமது அமைப்பு உறுப்பினர்களின் கொலைக்கு அல்லது சிறையிடலுக்கு பழி தீர்க்கப்படுமென பக்தாதியால் குறிப்பிட்டப்பட்டுள்ளதாக கூறுப்பட்டுள்ளது
கறுத்த உடையணிந்தவாறு கால்களை மடித்தபடி இருந்த அபு பக்ர் அல் பக்தாதி ஐ.எஸ்ஸின் ஏனைய உறுப்பினர்களுடன் பேசியபோது இலங்கைத்தாக்குதல் குறித்தும் பேசியுள்ளதான சைற் புலனாய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் நடத்தப்பட்ட தமது விமானத்தாக்குதலின்போது அல்பக்கதாதி கொல்லபட்டதாக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஏற்கனவே அறிவித்திருந்தன.
அவ்வாறான அறிவிப்பின் பின்னர் பக்தாதியும் பகிரங்கமாக தோன்றாத நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவே பரவலாக நம்பப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஈராக்கின் அல் நூரி மசூதியில் இருந்து ஐ.எஸ்ஸின் இஸ்லாமிய அரசாங்கம் (கலிபா) குறித்த பிரகடனத்தை செய்த பின்னர் தற்போது தான் அல் பக்தாதி பகிரங்கமாக தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காணொளி எடுக்கபட்ட காலம் தெரியாவிடினும் அவர் இலங்கைத்தாக்குதல்கள் குறித்து பேசியிருப்பதால் இது அண்மையில் வெளியிட்ப்பட்ட காணொளி என நம்பப்படுகிறது
READ MORE | comments

நீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் பாக்கிஸ்தானிய குடும்பங்கள்! மனதை உருக்கும் காட்சி!!

ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் தஞ்சம் கோரிய முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மக்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பதற்கு பொலிஸார் முற்பட்ட போது அப்பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை அடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தலை அடுத்து கடந்த 24 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அவர்கள் பாதுகாப்புத் தேடி தஞ்சம் கோரியிருந்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 60 கத்தோலிக்கர்களும் 38 முஸ்லிம்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 57 பேருமாக ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 155 பேர் இவர்களில் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 24 அம் திகதி கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அடுத்த நாள் கடுவெல அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள நிலையம் ஒன்றுக்கு ஆண்களும் மொரட்டுவ சர்வோதய நிலையத்திற்கு பெண்கள் மற்றும் சிறுவர்களும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதற்கு நேற்று ஞயிற்றுக்கிழமை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
பிரதேச கத்தோலிக்க மக்களுடன் முரண்பட முடியாதென தெரிவித்து, வெளிநாட்டு அகதிகளை அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தங்க வைப்பதற்கு அப் பிரதேச முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த மக்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு திருப்பி அழைத்துச்செல்லப்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
தாம் தொடர்ந்தும் பல இடங்களுக்கு சென்ற போதிலும் யாரும் தமக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டனர்.
ஷஹரியா - பாக்கிஸ்தானிய கத்தோலிக்கர்,
என்னுடைய பெயர் ஷஹரியா. நான் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இங்கு நாங்கள் எங்கு செல்தென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த கிழமை நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்டி சென்றோம், நுவரெலியா சென்றோம், மொறட்டுவ சென்றோம் ஆனால் இரவில் பொலிஸ் நிலையத்தில் உள்ளோம். இன்று பெரியமுல்லையிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அங்கு நாங்கள் சென்றோம். ஆனால் அங்குள்ளவர்கள் அனைவரும் எங்களை எதிர்ததால் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பியுள்ளோம்.
எங்களுடைய வீட்டு உரிமையாளர் வீட்டிலிருந்து எங்களை அனுப்பிவிட்டார். இப்போது எங்களுக்கு எங்கும் செல்வதற்கு வழியில்லை. நாங்கள் இப்போது பொலிஸ் நிலையத்தில் தங்கியுள்ளோம். இது மிகவும் கடினமான சூழ்நிலையாக எங்களுக்கு இருக்கின்றது. 6 நாட்கள் நாங்கள் இங்கு இருக்கின்றோம். நாங்கள் இங்கு பல பிரச்சனைகளை சந்தித்துள்ளோம்.
எனது பெயர் ஜொசுவா. நான் ஒரு கத்தோலிக்கர். எங்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. நாங்கள் பல இடங்களுக்கு சென்றோம். யாரும் எங்களை அனுமதிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீலங்காவில் தாம் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த மக்கள், தமக்கு உணவோ ஏனைய உதவிகளோ தேவையில்லை எனவும் மனிதாபிமானத்துடன் தாம் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

நீர்கொழும்பில் மீட்கப்பட்ட நவீன துப்பாக்கி இதுதான்!!நீர்கொழும்பு தெல்வத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமை நவீன துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
அத்தோடு, நீர்கொழும்பு துணை மேயர் முகமது அன்சார் செயூர் ஃபரேசும் வாள்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன:
READ MORE | comments

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள் உட்பட 139 உறுப்பினர்கள்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Monday, April 29, 2019

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக, சிறிலங்கா படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
புனித குரானைப் பின்பற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கீழ், 45 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த அமைப்பில் தற்போது, 139 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்த பள்ளிவாசல்களுக்குள் பெண்களும் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்று படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த அமைப்பின் முதல் தலைவர் நிசாம். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
இவர் 2012ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்றார். அங்கு ஐ.எஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற பின்னர், சிறிலங்கா திரும்பினார்.
மீண்டும் அவர், 45 பேரை அழைத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்றார். அங்கு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எனினும், அங்கு நிசாம் கொல்லப்பட்டார்.
பயிற்சிகளை முடித்துக் கொண்ட 45 பேரும், சிறிலங்கா திரும்பி, இந்த அமைப்பை வலுப்படுத்தினர். இதில் தற்போது 139 பேர் உள்ளனர்.
அவர்கள், குண்டுகளை தயாரிப்பதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்த 6 பேரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை மாத்தறை- டிக்வெல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யொனகபுர என்ற பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் இருந்தே, இவர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டனர்.
இந்த வீட்டில் இருந்து நான்கு வாள்கள், ஒரு குத்துவாள், கைத்துப்பாக்கிக்கான 107 ரவைகள், அரபு இராணுவ சீருடை, இரவுப் பார்வை தொலைநோக்கி, வெற்று ரவைப் பெட்டி, உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வீட்டில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய உள்ளூர் ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய நபர், ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், மேற்காசிய நாடு ஒன்றில் பயிற்சி பெற்றுள்ளார்.
READ MORE | comments

இராணுவச் சீருடையுடன் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் பயங்கரவாதிகள்! புதிதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை! சர்வதேச ஊடகம்


இராணுவ சீருடை அணிந்து கொண்டு, வான் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனம் (Dailymail) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பாதுகாப்புத் துறையின் இந்த புதிய எச்சரிக்கைகளை இரண்டு அமைச்சர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில், குறைந்தது ஐந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு அலையாக தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்று அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இராணுவ சீருடை அணிந்து கொண்டு, வான் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையின் இந்த புதிய எச்சரிக்கைகளை இரண்டு அமைச்சர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி தமக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை எந்த தாக்குதலும் நடக்கவில்லை. அதேவேளை, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல்களும் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு பல்கலைகக்கழக விவகாரம்! தேசபற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை

மதத்தை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் மதவாதிகள் உருவாக கூடிய வாய்ப்புகள் ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மதமோதல்கள் ஏற்படவும் இது வழிவகுக்கும் என தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
மட்டகளப்பு - புனானை , இஸ்புல்லா சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மட்டகளப்பு பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் தொழிற் பயிற்சி நிலையமாகவே உருவாக்கப்பட்டது.
இந்நிலையம் காலத்திற்கு காலம் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது இலங்கை மட்க்களப்பு பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் பெற்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த பல்கலைக்கழக கல்வி பீடங்கள் முக்கியமாக இஸ்லாமிய மதத்தை அடிப்படையாக கொண்டு போதிக்கப்பட்டு வருவதுடன், சட்டம் தொடர்பான பாடத்திட்டங்கள் ஷறியா நீதிமுறைகளை போதிப்பவையாகவே காணப்படுகின்றது. மற்றும் இதன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும் சவூதி அரேபியா , மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் காணப்படும்.
அறபு பல்கலைக்கழகங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதுடன் இதில் இலங்கையைச் சேர்ந்த எந்த பேராசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதத்தை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் இதனை முன்னுதாரணமாக கொண்டு மேலும் நாட்டிற்குள் இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளினால் குறிப்பிட்ட மதவாதிகள் உருவாக கூடிய வாய்ப்புகள் ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய மதமோதல்கள் ஏற்படவும் இது வழிவகுக்கும்.
அதனை கருத்திற் கொண்டு உடனடியாக அரசு இந்த பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்று சகல மதத்தவரும் இணைந்து கல்விகற்க கூடிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
READ MORE | comments

அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை நாய்! நட்சத்திர ஹோட்டலுக்குள் சிக்கிய வெடிபொருள்


இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பெரும் பீதியில் மூழ்கியுள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பல இடங்களில் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான குண்டுகளை இராணுவத்தின் K-9 விசேட பிரிவின் மோப்ப நாயான 'பிராங்க்' மோப்பம் பிடித்து கண்டுபிடித்துள்ளது.
இலங்கை பொலிஸாருடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த நாயின் செயற்பாடு குறித்து வியப்பு அடைந்துள்ளனர்.
மனிதர்களை விடவும் மிகவும் அபாரமான முறையில் குண்டுகளை இனங்கண்டுபிடித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் பொதியில் வெடிபொருள் இருந்தமை குறித்து மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் அறையை மோப்பநாயான 'பிராங்க்' மோப்பம் பிடித்துள்ளது.
குண்டுவெடிப்பு விசாரணைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க நிபுணர் வந்திருந்தார். அவரது அறையில் இருந்த இயந்திரம் ஒன்றில் சிறிதளவு வெடிபொருள் இருந்தமையினால், அதை மோப்பம் பிடித்தே பிராங்க் குறித்த அறையை அடையாளம் காட்டியுள்ளது.
இதன்போது குறித்த அமெரிக்க நிபுணர் வெளியில் சென்றிருந்ததால் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குறித்த அதிகாரி வரவழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் சிறிதளவு வெடிபொருள் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மோப்ப நாயின் அபார திறமை குறித்து அமெரிக்க அதிகாிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

தெமட்டகொட வீட்டில் மற்றுமொரு தற்கொலைதாரி உயிரிழப்பு?

தெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றுமொரு தற்கொலை குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணு சோதனை நடத்தப்படவுள்ளது.
கடந்த 21ஆம் நாள், விடுதிகள், தேவாலயங்களில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையாரான வர்த்தகர் இப்ராகிமுக்கு சொந்தமான தெமட்டகொட வீடு முற்றுகையிடப்பட்டது.
அன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், அங்கு இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
சிறப்பு அதிரடிப்படையினர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்த போது, ஷங்ரிலா குண்டுவெடிப்பை நிகழ்த்திய இல்ஹாம் இப்ராகிமின் மனைவி, மேல் மாடிக்கு ஓடிச் சென்று குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார்.
கர்ப்பிணியாக இருந்த அவரும், அவரது 3 குழந்தைகளும், 3 காவல்துறையினரும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் முதல் மாடியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தக் குண்டுவெடிப்பை அடுத்து, சிதறிப்போன மனித உடல் பாகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது, ஒரு ஆண் தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மரபணு சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்கொலைக் குண்டுதாரிகளில் பலரையும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
READ MORE | comments

மட்டு.சீயோன் தேவாலய தற்கொலைத்தாக்குதல் -கண்டுபிடிக்கப்பட்டது மோட்டார் சைக்கிள்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ, திஹாரிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

இலங்கைக்கு விரைகின்றது கறுப்பு பூனை அணி! வேண்டாம் என்கின்றார் மஹிந்த

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தனது விசேட படையான என்.எஸ்.ஜி. எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன.
இந்தநிலையில், இலங்கைக்கு உதவி தேவைப்பட்டால், விசேட படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரச அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஜனாதிபதியால் இன்று வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்!சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும் மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராகவும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
READ MORE | comments

சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்

நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் எம்.கே.இளங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகியதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதில் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, கணக்காய்வாளர் நாயகமாக சூளனந்த விக்ரமரட்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
READ MORE | comments

தற்கொலைதாரிகள், மனைவியர் உள்ளிட்டோரின் பெயர்களில் 18 வாகனங்கள்

உயிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலைதாரிகள் சுமார் 18 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் 6 வான்கள், 9 மோட்டார்சைக்கிகள், 2 கார்கள் மற்றும் ஒரு கெப் வாகனம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்கொலைதாரிகள் மற்றும் அவர்களது மனைவியர், உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
மேலும் குறித்த 18 வாகனங்களில் ஆறு வாகனங்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

புத்தளத்தில் சிக்கிய மற்றுமொரு ஆயுத கிடங்கு


இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் புத்தளத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வனாத்தவில்லு, கரடிப்பூவல், லக்ரோ தோட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி65 துப்பாக்கி ஒன்றும், பல 9 மி.மீ கைத்துப்பாக்கிகள் பலவும், உள்ளூர் தயாரிப்பு கல்கட்டாஸ் துப்பாக்கிகளும் உள்ளடங்குகின்றன.
குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் சாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி வனாத்தவில்லு பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. அவையும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

சாய்ந்தமருது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் யார்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

ஈஸ்டர் ஞாயிறுக்கிழமை நடந்த தொடர் தாக்குதலில் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் தந்தை, இரண்டு சகோதரர்களே, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சஹ்ரான் ஹசீமின் மனைவியின் சகோதரரான நியாஸ் ஷரீப் இது குறித்து செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சாய்ந்தமருது துப்பாக்கிச் சண்டைக்கு முன்னர் சந்தேக நபர்கள் வெளியிட்ட வீடியோவில் இருக்கும் மூன்று பேர் சஹ்ரான் ஹசீமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் எனவும் இவர் கூறியுள்ளார்.
சஹினி ஹசீம், ரில்வான் ஹசீம் ஆகியோர் சஹ்ரான் ஹசீமின் சகோதரர்கள். அவரது தந்தையான மொஹமட் ஹசீமும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாக நியாஸ் ஷரீப் கூறியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயற்சித்த போது, இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி சண்டடை நடைபெற்றதுடன் வீட்டுக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இந்த சம்பவத்தில் 6 ஆண்கள், மூன்று பெண்கள், 6 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மற்றும் பெண்ணை பாதுகாப்பு தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். இவர்கள் சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
அப்துல் காதர் பாத்திமா சாதியா என்ற பெண்ணும் அவரது மகளான 5 வயதான மொஹமட் சஹ்ரான் ருசெய்னா ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல்களில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மத ஸ்தலங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த தயார்படுத்தப்பட்ட பெண்கள்? ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

நாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்களின் 9 வெள்ளை ஆடைகள் மற்றும் மேலும் சில ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 29000 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆடை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது வீட்டில் இருந்து தற்போது 5 ஆடைகள் கிடைத்துள்ளன. ஏனைய 4 ஆடைகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவு இதுவரையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. இந்த ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று சென்று மத ஸ்தலங்களுக்கு தாக்குதல் மேற்கொள்வதற்காக ஆடை கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |