பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்-சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

Friday, June 28, 2019

பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்திய கருத்தாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் 

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் திளைத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார். 

அது மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சி காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற  எண்ணம் ஏற்பட்டிருந்தது. சர்வதேசத்திற்கும் மகிந்த தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக அவரைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டிய தேவை இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்துதான் ஆட்சி மாற்றத்திற்கு  வித்திட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆட்சி மாற்றத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பினால் புதிய அரசாங்கத்தின் ஊடாக எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மைத்திரி அரியணை ஏறியவுடன் அவசர அவசரமாக ரணிலைப் பிரதமராக நியமித்து நூறுநாள் வேலைத்திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்திலேயே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பின்னர் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நூறுநாட்களில் தீர்வை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு வழிசமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரால் உறுதியளிக்கப்பட்டது. 

இதற்காகவே தமிழ் மக்களும் தமது ஏகோபித்த ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி 2010ஆம் ஆண்டைவிடவும் கூடுதலாக இரண்டு ஆசனங்களுடன் பதினாறு ஆசனங்களைப் பெறுவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர்.

இத்தகைய வலுவான பேரம் சக்தியைக் கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்தை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியை மேற்கொள்வதை நோக்கி நகர்த்துவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் தவறிவிட்டார் என்பதே உண்மை. 

அரசியல் தீர்வை துருப்புச் சீட்டாக வைத்து, கடந்த அரசாங்கம் இழைத்திருந்ததாக நம்பப்படும் போர்க்குற்றங்கள்,  மனித உரிமைகள் மீறல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பின்தள்ளி ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் கூட்டமைப்பின் தலைமை முன்னின்று பணியாற்றியது. அன்று இது குறித்து நாம் எமது கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தோம் என்பதை எமது மக்களுக்குத் தெரியும்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் புதிய அரசியல் யாப்பிற்காக உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவினரின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எத்தகைய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படவில்லை என்று பிரசித்திபெற்ற சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

ஆகவே 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் மற்றும் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலை தாக்குதல் சம்பவங்களால் அரசியல் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்தும் கருத்துக்களாகும். இதற்கு முன்னர் இடைக்கால அறிக்கையில் சமஸ்டி ஒளிந்திருக்கிறது. வெளியில் கூறினால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்பொழுது இப்படிச் சொல்வதிலிருந்தே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் தீர்விற்கு இவர்கள் இதய சுத்தியுடன் தீவிரமாக முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

நூறுநாள் வேலைத்திட்டத்திலிருந்தே அரசியல் தீர்விற்கான முயற்சிகளை ஆரம்பிக்கப்போவதாகக் கூறியவர்கள் நான்காண்டுகள் கழிந்தபின்னர் காரணத்தைத் தேடுவது வேதனையான விடயம். இதனால்தான் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது என்றும் இனியும் அவர்களின் மக்கள் விரோதப் போக்கிற்குத் துணைபோக முடியாது என்றும் தெரிவித்து அதிலிருந்து வெளியேறினோம்என்றார்.
READ MORE | comments

கல்முனை விகாராதிபதி தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கான உண்ணாவிரத போராட்டம்

Thursday, June 27, 2019


ஆர்.சயனொளிபவன் & TEAM

  • 5 நாட்கள் வரை நீடித்த உண்ணாவிரத போராட்டம் -  அடைந்த வெற்றிகள் 
  • தமிழ் மக்களின் பாதுகாவலராக தோற்றமளிக்கின்ற தேரர்  
  • பிரதேச செயலக உருவாக்கத்திற்கு தடையாகவுள்ள காரணிகள்
  • உயிர்த்த ஞாயிறு   தாக்குதலால் கள நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 
  • தமிழ் சிங்கள -  முஸ்லீம் சமூகங்களிற்கு இடையே உள்ள உறவுமுறையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் 
  • தமிழ் தலைமையின் அமைதியான போக்கு 
  • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாகுவதற்குரிய சாத்தியப்பாடுகள்


எமது நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே 1989 இல்  இருந்து நீண்டகாலமாக கிடப்பில் வைக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உருவாக்கத்திற்கான கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்  தலைமயில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கல்முனை பகுதியில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியது.


கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் ,  கிறிஸ்­தவ போதகர் அருட்­தந்தை கிரு­பை­ராஜா, கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அ.விஜ­ய­ரெத்­தினம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டம்
  • முதல் நாளில் இருந்து பெரும்தொகையான மக்களின் ஆதரவை பெற்ற ஒரு போராட்டமாகவும்
  • 3 வது நாளில் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர் வருகை தந்து கல்முனை தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைக்கு தமது முழு ஆதரவை தெரிவித்ததையும்
  • 4 வது நாளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அமைச்சர்கள் தயா கமகே, மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பின்னர் M A சுமந்திரன் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட செய்தி உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு தெரியபடுத்தப்பட்டதும் . ஆனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்ததையும்
  • 5ஆவது நாளான கடந்த சனியன்று ஞானதேரர் குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்து உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அளித்த 30 நாட்கள் வாக்குறுதிக்கு இணங்கி அவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமா கைவிடுவது என்ற முடிவிற்கும் வந்ததும்
மேலும் இவ் உன்னாவிரத போராட்டமானது தமிழ் சிங்கள மக்களின் ஆதரவை பெற்றது மட்டுமல்லாது இரு இனங்களிடையேயும் உறுதியான புரிந்துணர்வை வளர்க்கும் போராட்டமாகவும் முடிவிற்கு வந்துள்ளது.

5 நாட்கள் வரை நீடித்த உண்ணாவிரத போர்ராட்டம் அடைந்த வெற்றிகள் 

கல்முனை வடக்கு செயலகம் உருவாக்கத்திற்கான முயற்சி 30 வருடகாலத்தை கடந்தும் இன்று வரை ஒரு உப பிரதேச செயலகமாக இயங்கிக்கொண்டு இருப்பது யாவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக இப் பிரதேச செயலக  உருவாக்கத்திற்கான 30 வருடகால முயற்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை அளிக்காத இத் தருணத்தில் ரன்முத்து சங்கரட்ன தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் உடனடி வெற்றிகளை கொடுக்காவிட்டாலும் பல நன்மைகளை விளைவித்துள்ளது

கல்முனை விகாராதிபதியான ரன்முத்து சங்கரட்ன தேரர் பலராலும் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு தமது உயிரையே இப் பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களுக்காக தியாகம் செய்ய முன்வந்தது பெரும்பாலான மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற 18% தமிழ் மக்களுக்கும் தேரரின் முயற்சி புது தென்பை கொடுத்துள்ளது .மேலும் இப் பகுதியில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் மனதிலும் தேரர் தமது நலனில் தூய்மையான அக்கறை கொண்டுள்ளார் என்ற ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

30 வருடகாலமாக முடிவே இன்றி தொடர்ந்த கோரிக்கைக்கு குறைந்த பட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு பெற்றுத்தருவேன் என அழுத்தம் திருத்தமாக ஞான தேரர் வழங்கிய வாக்குறுதியும். மேலும் ஞான தேரர் வழங்கிய வாக்குறுதி அரசிற்கு பெரும் அழுத்தத்தையும் கொடுத்துள்ளது.

வட கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கான முயற்சி கல்முனை குடியை சேர்ந்த ஒரு சிறு குழுவினரை தவிர இலங்கையில் உள்ள சகல தரப்பு மக்களாலும் நியாயபூர்வமான கோரிக்கையாக பார்க்கப்பட்டுள்ளது


தமிழ் சிங்கள மக்களிற்கிடையேயான உறவில் ஒரு புரிந்துணர்வையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது பெரும்பாலான சிங்கள மக்களின் அனுதாபத்தையும் கல்முனை தமிழ் மக்கள் பக்கம் சாய வைத்துள்ளது
  • பல சமூகம் வாழும் கிழக்கில் போரின் தாக்கம் எவ்வாறான விளைவுகளை கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை இவ் நிகழ்வு அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்துள்ளது. குறிப்பாக வடமாகாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் தெளிவாக தென்படுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழர்கள் நாளாந்தம் அனுபவிக்கின்ற பிரதிகூலங்களை   தமிழ் தலைமைகளுக்கு எந்த அளவிற்கு தெரிகின்றதோ தெரியாது ஆனால் சாதாரண தமிழ் மக்களுக்கு தெளிவாக தென்படுத்தியுள்ளது


இவ் விடயம் நாட்டில் உள்ள பெரும்பாலான மத தலைவர்களுக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் தெளிவாக தென்படுத்துவது மட்டுமல்லாது மேலும் குறிப்பாக ரணில் அரசின் ஸ்திரத்தன்மையையும் மீண்டும் ஒரு முறை சோதனைக்கு உள்ளாக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.




தமிழ் மக்களின் பாதுகாவலராக தோற்றமளிக்கின்ற தேரர்

15 வருடங்களுக்கு  முன்பு அதாவது  2004ஆம் ஆண்டு கல்முனை விகாரைக்கு  விகாரதிபதியாக பொறுப்பேற்று வந்த ரன்முத்து சங்கரட்ன தேரர் தனது
  • முதல் முயற்சியாக தமிழை சரளமாக பேசக்கூடிய தேர்ச்சியுடைய ஒரு துறவியாகவும் குறிப்பாக தமிழில் ஒரு சொல்லு கூட பேசமுடியாத நிலையில் இப் பகுதியிற்கு விகாரதிபதியாக பொறுப்பேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்
  • சகல மதங்களையும்  மதிப்பவராகவும் மேலும் அதனை வாய் சொல்லால் மட்டும் காட்டாமல் நடைமுறையில் காட்டும் ஒரு பெரிய மனிதரும் ஆவார் 
  • அமைதி சாந்தம் நியாயம் போன்ற நட் தன்மைகளை மதிக்கும் பௌத்த துறவியாகவும்
  • ஒரு சமூகம் அநியாயமான முறையில் ஒடுக்கப்படும் போது அல்லது மற்றைய சமுகம்களுக்கு உள்ள உரிமைகள் இன்னொரு சமூகத்திற்கு மறுக்கப்படும் போது தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு போராட தயார் என்பதனை கடந்த வாரம் இவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரத முயற்சியும் எடுத்துக்காட்டுகின்றது 
பிரதேச செயலக உருவாக்கத்திற்கு தடையாகவுள்ள காரணிகள்

தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த ஒரு பகுதியில் தமக்கென ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க முற்படுகின்ற வேளையில் குறிப்பாக கல்முனைகுடிப்பகுதியில் வாழ்கின்ற முஸ்லீம் சமூகத்தில் ஒரு சிறு பகுதி தொடர்ச்சியாக நியாயபூர்வமற்ற காரணங்களை  காட்டி வந்த வேளையில் அவர்களுடைய வாதம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து நலிவுத்தன்மையை அடைந்துள்ளது
  • முஸ்லீம் அரசியல் தலைவர்களை பொறுத்த அளவில் தமது சமூகம் நாடளாவிய ரீதியில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டியுள்ளதாலும் மற்றும் அவர்களுடைய அரசியல் பலம் கேள்விக்குறியாகியதாலும் மேலும் இவ்வாறன நியாயபூர்வமான கோரிக்கைக்கு எதிர்ப்புநடவடிக்கையில் ஈடுபடுவதனால் தமது சமூகத்திற்கு மேலும் அவப்பெயரை சிங்கள தமிழ் சமுகங்களுக்குள் ஏற்படுத்தும் என்ற எண்ணப்பட்டாலும் அமைதியான அணுகுமுறையை கையாளுகின்றனர்
  • கூடுதலான முஸ்லீம் மக்களை பொறுத்த அளவில் தற்போதைய நாட்டின் நிலமையில் தமிழ் மக்களின் நியாயமான பிரதேச செயலக உருவாக்கத்திற்காண கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம் மேலும் நெருக்குவாரத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பம்  உருவாகலாம் என்ற எண்ணப்படும்
இக் காரணங்களால் எதிர்ப்பு போராட்டம் ஒரு மிக குறுகிய வட்டமாக மாற்றம் கண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது



மேலும் இவர்களுடைய வாதம் என்னவெனில்
  • தற்போது 90% மேற்பட்ட தமது சமூகத்தை சார்ந்தவர்களின் வியாபார ஸ்தாபனம்கள் தமிழர் பகுதிகளில் இருப்பதனால் இப் பிரதேசம் தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றும் 



  • கல்முனை என்ற பகுதி முஸ்லிம்களுக்கு உரித்தான பகுதி எனவும் இதனால் இப் பிரதேசம் முழுவதும் முஸ்லீம் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் எனவும் 
  • 33,000 மேற்பட்ட தமிழர்கள் வாழுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குள் சில பகுதிகளுக்குள் 3,215 முஸ்லீம் மக்களும் வாழ்வதனாலும்  மற்றும் தமது சமூகத்தைசேர்ந்த அம் மக்களின் நன்மைகருதி முழு கல்முனை தமிழ் பகுதியும் தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் எனவும்
நியாய பூர்வமற்ற காரணங்களை  காட்டுகின்றனர் மேலும் இக் காரணங்கள்  எவ் வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பதை நன்கு அறிந்துள்ள ரண்முத்து சங்கரட்ன தேரர் வேறு வழிகள் இன்றி அதேவேளை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் இவ் அநீதி இணை காட்டவேண்டும் என்ற நோக்குடனும் சாகும் வரையான உண்ணாவிரத முயற்சியையும் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முஸ்லீம் சமூகதிற்கும் ஏனைய சமூகம்களுக்கும் இடையே உள்ள உறவுமுறையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்

தமிழ் முஸ்லீம் சமூகங்களிற்கு  இடையேயான உறவு முறை 1980 களில் இருந்து காலத்திற்கு காலம் முறுகல் நிலையை அடைவதும் தெரிந்த விடயமாகும். ஆனால் போர் முடிவிற்கு வந்த காலப்பகுதியில் இருந்து ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆளுநராக நியமிக்கும் வரை ஓர் அளவிற்கு சுமுகமான உறவே நிலவியது. ஆனால் அதேவேளை கல்முனை வடக்கு உப செயலகம் தரமுயர்த்தலுக்கான முயற்சி , ஹிஸ்புல்லா அவர்களின் ஆளுநர் நியமனம் மேலும் உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதல்கள் இதனை தொடர்ந்து தமிழ் சமூகம் மட்டும் இன்றி சிங்கள சமூகமும் பலவிடயம்களில் முஸ்லீம் சமூகத்தோடு அதிருப்தி அடைய தொடங்கியது  இதன் ஒரு விளைவே அண்மையில் கல்முனையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமும் மேலும் இவையாவற்றிற்கும் முக்கிய காரணிகளாக கிழக்கில் முஸ்லீம் சமூகம் கூடுதலாக வாழும் பகுதிகளில் 1989ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளின் அளவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அவற்றுள் சில 
  • 1980களில் நாட்டில் உள்ள சில மாகாணங்களில் மாகாண ரீதியாக பல்கலைக்கழகம்கள் உருவாக்கப்பட்டன அந்த வகையில் கிழக்கிலும் மட்டக்களப்பை மையமாக கொண்டு கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அதேவேளை இப் பல்கலைக்கழகம் முழு நிலமையில் இயங்க முன்பே நாட்டின் மற்றைய பகுதிகளில் இல்லாதவகையில் முஸ்லீம் அரசியல் வாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் அதாவது 1988 யிலிருந்து நாட்டின் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லீம் அரசியல் தோற்றம் பெற்றதிலிருந்து அன்றைய  அரசிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக ஒலுவிலில்  தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும். எமது நாட்டை பொறுத்தளவில் அக் காலப்பகுதியில் இது ஒரு சாதனையாகவும் அமைந்தது . ஒப்பிட்டு அளவில் நாட்டின் மற்றைய பகுதிகளை போல் கூடிய கல்வியாளர்களை கொண்ட வடக்கில் இன்று வரை யாழ் பல்கலைக்கழகம் ஒன்றே வவுனியா வரையில் கிளைகளை அமைத்து இயங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் அவ் வேளையில் கிழக்கில் மேலும் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தேவையே இருக்கவில்லை.



  • ஹிஸ்புல்லா அவர்களின் மத போதனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பாரிய நில மற்றும் கட்டிட தொகுதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
  • எமது நாட்டின் சனத்தொகையோ 2 கோடி 20 இலட்சம் (2,20,00,000) அதேவேளை நாடளாவிய ரீதியில் 23 மாநகர சபைகளையும் அதாவது அண்ணளவாக 10,00,000 பேருக்கு ஒரு மாநகர சபை என்ற ரீதியில் அமைந்துள்ளது. ஆனால் இவற்றுள் 3 மாநகர சபைகள் கிழக்கிலும் அவற்றுள் 2 அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதியை மையப்படுத்தி முறையே கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக வாழுகின்ற 3,20,000 முஸ்லீம் சமூகத்திற்கு 2 மாநகர சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் 1,60,000 பேருக்கு 1 மாநகர சபை என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது.
  • நாட்டில் உள்ள 2,20,00,000 மக்களுக்கு 43 நகர சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 5,00,000 பேருக்கு 1 நகரசபை என்ற ரீதியில் நகரசபைகள் அமைந்துள்ளது . இவற்றுள் 5 நகரசபையில் கிழக்கில் உள்ள திருகோணமலை, கிண்ணியா, ஏறாவூர், காத்தான்குடி, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் இச் நகரசபைகளில் 3 முஸ்லீம் மக்களை மையப்படுத்தியும் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அண்ணளவாக வாழுகின்ற 6,90,000 முஸ்லீம் மக்களுக்கு 3 நகரசபைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் . 2,30,000 முஸ்லீம் மக்களுக்கு 1 நகரசபை என்ற ரீதியில் அமைந்துள்ளது
  • குறிப்பாகக் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை பார்ப்போமாயின் கல்முனை பகுதியில் ஒரு ஆதார வைத்திய சாலை இருக்கும் போது 2 கிலோ மைல்கல் தொலைவில் கல்முனை குடியில் மற்றுமொரு வைத்திய சாலை உருவாக்கப்பட்டதும்
  • கடந்த தேர்தலில் கிழக்கில் இருந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 7 முஸ்லீம் பாராளுமன்ற உறுபின்னர்களில் 5 பேர் ராஜாங்க அமைச்சர்களா அல்லது துணை அமைச்சர்களாக இருந்ததும்.
  • அரசியல் அழுத்தம்கள் காரணமாக  பொருத்தமற்ற இடத்தில் உருவாக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் காணப்படும் ஒலுவில் துறைமுகம்
இவ்வாறு 1989ஆம் ஆண்டிலிருந்து கிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகம் நாட்டில் உள்ள ஏனைய சமூகங்களை  விட சாதிக்கும் சமூகமாகவும் அரசியலில் சக்தி வாய்ந்த சமூகமாகவும் விளங்கியதால் இச் சமூகம் பெற்றுக்கொண்ட நன்மைகள் அடுக்கி கொண்டே போகலாம். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தால் சாதிக்கப்பட்டவைகளில் மேலே குறிப்பிடப்பட்டவை சிலவே. மேலும் முஸ்லீம் அரசியல் வாதிகள் சிலர் தாங்கள் நினைத்தால்  எதையும் செய்யலல்லாம் என்ற தோற்றப்பாட்டையும் அதற்கு நல்ல உதாரணமாக வட கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கு தடையாக இருப்பதையும் குறிப்பிடலாம்.


கல்முனை விடயத்தை பொறுத்த அளவில் முஸ்லீம் அரசியல் மற்றுமொரு சமூகத்தின் தலைவிதியையும் நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருந்திருப்பதை உப செயலாளர் பிரிவு தரமுயர்த்தல் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இவ் வகையான யுக்தியை குறிப்பாக முஸ்லீம் அரசியலின் ஒரு பகுதி கடந்த உயிர்த்த ஞாயிறு வரையும் வெற்றியளிக்கக்கூடிய வகையில் பயன்படுத்தியதை இவ் விடயம் தெளிவாக எடுத்துக்க்காட்டுகின்றது.


இவ் வகையான செயற்பாட்டின் அதிதிருப்தியே கல்முனை பகுதியில் ரண்முத்து தேரரின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டமும் மேலும் இப் போராட்டத்திர்க்கு சிங்கள தமிழ் சமூகத்தால் பாரிய அளவில் வழங்கப்பட்ட ஆதரவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.


தமிழ் தலைமையின் அமைதியான போக்கு

தமிழ் தலைமையை பொறுத்தளவில் அரசியலில் முஸ்லீம் தலைமைகள் மற்றும் முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இன்றும் கடைபிடிப்பதை உணரக்கூடியதாகவுள்ளது. மேலும் இவர்கள் கடந்த 70 வருடகாலமாக தமிழ் மக்களுக்குறிய அரசியல் தீர்விலேயே மாத்திரம் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் இருக்க முற்படுகின்றனர். ஆனால் கிழக்கில் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கள நிலமை வடமாகாணத்தை போல் அல்லாமல் முற்று முழுதாக மாற்றம் கண்டுள்ளது இவற்றுள் முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும் . அதே வேளை கடந்த 70 வருடகாலமாக தமிழ் தலைமையோ வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரே அரசியல் கொள்கையையே பின்பற்ற முற்படுகின்றனர் . அத்தோடு முஸ்லீம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணக்க அரசியல் கொள்கையை பின்பற்றமுற்படுகின்றனர் . ஆனால் முஸ்லீம் மக்களோ 1980களில் இருந்து அரசியல் தீர்வில் நம்பிக்கை அற்றவர்களாகவும் மற்றும் அவர்கள் தமது சமூகத்தின் அபிவிருத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்டவர்களாகவும் மேலும் எமது நாட்டின் அரசியலை பொறுத்தளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் சகித்தியாகவும் வளர்ச்சியடைந்துள்ளனர். 


கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை பொறுத்தளவில் நடந்து முடிந்த போரை தொடர்ந்து அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையே போராட்டமாக மாற்றம்கண்டுள்ளது. ஆனால் இன்று வரை தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் கொள்கையில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் மாற்றம்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை இப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உருவாக்க ஆரம்பித்துள்ளது . இதன் தொடர்ச்சியில் ஒன்று தான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கான முயற்சியுமாகும். இந்த விடயத்தை பொறுத்த அளவில் தமிழ் தலைமை கல்முனை பகுதியில் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகளை பகைக்ககூடாதென்பதில் தான் அவர்களுடைய முழுக்கவனமும் இருந்தது. இக் கொள்கையால் தமிழ் சமூகமோ இவர்களை நம்பி பயனில்லை என்று தேரரின்  வழிகாட்டலில் புறப்பட ஆரம்பித்து விட்டனர். ஒப்பீட்டளவில் ஒரு சிறிய விடயமான பிரதேச செயலக தரமுயர்த்தலை பெற தடுமாறும் தமிழர் தலைமை எவ்வாறு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெறமுடியும் என்ற கேள்வியை இப் பகுதியில் வாழும் தமிழ் சமூகம் எழுப்புகின்றது .
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாகுவதற்குரிய சாத்தியப்பாடுகள்

கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கல்முனை விகாராதிபதி ரன்முத்து சங்கரட்ன தேரர் தலைமயிலான உண்ணாவிரத போராட்டம் உடனடியாக வெற்றியளிக்கவிட்டாலும் இப் போராட்டமானது ஒரு சிறிது காலப்பகுதிக்குள் வடக்கு கல்முனை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்  அதிகமாவே காணப்படுகின்றது. மேலும் பார்ப்போமேயானால்


  • கல்முனையில் சகல பகுதி மக்களாலும் மதிக்கப்படுவரும்  மற்றும் சமாதான விரும்பியுமான  ரண்முத்து சங்கரட்ன தேரரின் தூய்மையான சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் தரமுயர்த்தலுக்கான நியாய தன்மையை நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தெளிவாக காட்டியுள்ளது 


  • மேலும் தமிழ் மக்களின் நியாய பூர்வமான இக் கோரிக்கைக்கு பாரிய அளவிலான  அளவிலான தேரர்கள் மற்றும் சிங்கள மக்களின் பெரும் ஆதரவு 
  • ஞானதேரர்  30 நாட்களுக்குள் தரமுயர்த்துவதற்கான முழு முயற்சியும் எடுப்பதாக வழங்கியதாக கூறப்படும் வாக்குறுதியும் மற்றும் அவ்வாறு தரமுயர்த்த படாத பட்சத்தில் தானும் களமிறங்குவதாக வழங்கிய வாக்குறுதி 
  • பிரதமர் ரணிலினால்  உண்ணாவிரதகாரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தி அதாவது பிரதேச செயலகமாக தரமுயர்த்தலில் உள்ள நிர்வாக எல்லைநிர்ணயம் சம்பந்தமான விடயம்கள் முடிவிற்கு வந்ததும் தரமுயர்த்தல் மேற்கொள்ளப்படும் எனவும் 
  • உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் அடிப்படைவாத தாக்குதலை தொடர்ந்து பலவீனமான நிலைக்கு  முஸ்லீம் அரசியல் தள்ளப்பட்டுள்ளதால்  தரமுயர்த்தலுக்கு எதிர்க்கும் குழு மேலும் பலவீனம் அடைந்த நிலை 
  • மேலும் தமிழ் மக்களின் நியாய பூர்வமான இக் கோரிக்கைக்கு பாரிய அளவிலான   தேரர்கள் மற்றும் சிங்கள மக்களின் பெரும் ஆதரவு
இவை யாவும் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு விரைவில் முழு அளவிலான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை தெளிவாக காட்டுகின்றது.

போர் நடைபெற்ற காலம்களில் 
  • குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாய்பேசத   மனிதர்களாக மாற்றப்பட்டதும் மேலும் உரிமைப்போராட்டம்களை மேற்கொள்கின்ற போது பயங்கரவாதிகளாக மாற்றப்பட்ட காரணம்களினாலும்
  • 1989 இல் இருந்து முஸ்லீம் அரசியல்   நாட்டின் ஆட்சியை  உருவாக்கும் சக்தியாக இருந்ததாலும் 
  •  கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 100% சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்ததாலும் மேலும் இவர்கள் தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளில் நாட்டம் இல்லாதவர்களாகவும் அதேவேளை தமிழ்மக்களின் அரசியல் தீர்வில் அக்கறைசெலுத்தியதாலும்


30 வருடங்கள் சென்றும் விடையில்லாத தொடராக கல்முனை செயலகம் தரமுயர்தல் சென்றுகொண்டு இருந்த இவ் வேளையில் . இவை யாவற்றிற்கும் முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் எங்கோ இருந்து இப் பகுதியிற்கு 2004ஆம் ஆண்டு விகாரதிபதியாக வந்த ரன்முத்து சங்கரட்ன தேரரின் தலைமையிலானா குழுவினர் கல்முனை தமிழ் மக்களுக்கு மூன்று சகாப்தமாக இழைக்கப்பட்டு வந்த அநியாயத்திற்கு விடை காணும் வகையில் தமது உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட தூய்மையான உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக கல்முனை வடக்கு பிரதேச செயலகமாகும் செய்தியாக கொண்டுவரும் நாட்கள் தொலைவில் இல்லை


ஆர்.சயனொளிபவன் & TEAM

READ MORE | comments

வெளிவந்தது அதிவிசேட வர்த்தமானி!

இன்று நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் சங்கம் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் வேலைநிறுத்தம் காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி செயலகம் அதிவிசேட வர்த்தமானியாக வெளியிட்டுள்ளது.

READ MORE | comments

காத்தான்குடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெடிபொருட்கள் மீட்பு

காத்தான்குடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள்மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒல்லிகுளத்தில் இன்று மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத் துவரப்பட்ட மில்ஹான் வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு மில்ஹான் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி 300 ஜெலக்நைட் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்கள் என்பன மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவராக மொஹமட் மிலான் என்ற பயங்கரவாதி செயற்பட்டதாக குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

READ MORE | comments

கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் சஹ்ரானின் மனைவி

Wednesday, June 26, 2019



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும்  தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மனைவி  கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்பான் முன்னிலையில் இன்று காலை  ஆஜர்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருதில் சஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும் அவர்களை அடையாளம் கட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்தே சஹ்ரானின் மனைவியை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

READ MORE | comments

மீண்டும் கொழும்பை பரபரப்பில் ஆழ்த்திய மைத்திரி!

ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் 19ஆவது திருத்த சட்டமானது முழுமையாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடக பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் 19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் எனவும் அதிரடியாக தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நடைமுறையில் இருக்கும் 19 ஆவது திருத்தினை ஒழித்தால் 2020 ஆம் ஆண்டு செழிமையான நாடாக இலங்கை மாறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அரசியலமைப்பினால் தான் நாட்டில் அரசியல் ஸ்திரம் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும், 19 ஆவது அரசியலமைப்பினை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சுதந்திர கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவையும் நான் பின்பற்றுவேன் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடிக் கருத்தினால் கொழும்பு அரசியலில் சற்று பரபரப்பு நிலை தோன்றியுள்ளதாக நோக்கர்கள் கூறியிருக்கின்றனர்.
நாட்டின் முக்கியமான சட்டத்தை சாபக்கேடு என கூறிய அவரது கருத்து அரசியலில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தப்போகின்றது என்பதை அடுத்துவரும் நாட்களில் காணலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
READ MORE | comments

ஆபத்தான நிலையில் இலங்கை! புரட்சியை ஏற்படுத்தப் போவதாக ஞானசார தேரர் சூளுரை

நாடு பாரிய ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. அதனை மீட்டெடுக்க அனைவரும் உதவ வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக நாட்டு மக்கள் சிறு நிதியுதவியை செய்ய முன்வருமாறு பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஆரம்பிக்கப்படும் தேசிய நடவடிக்கைக்காக 100 ரூபாய் என்ற கணக்கில் பண உதவி செய்யுமாறு தேரர் மக்களிடம் கோரியுள்ளார்.
கண்டியில் தேசிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு ஆபத்தான நிலைமையில் காணப்படுவதாகவும், ஜுலை மாதம் 7ஆம் திகதி மாநாட்டில் முக்கிய விடயங்கள் தொடர்பில் தகவல் வெளியிடுவதாகவும் தேரர் கூறியுள்ளார்.

உண்மையை வெளிப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளுக்கு ஊடக உதவியை பெற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக உதவுமாறும் ஞானசார தேரர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
READ MORE | comments

இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை! மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்

கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இராணுவ சீருடைகள், சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாகொல பாத்திமா என்ற பிரதேசத்தில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரையிலான 6 மணித்தியாலங்களாக இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அந்தப் பகுதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மௌவி ஒருவர் தங்கியிருந்த அறையில் பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேற்பகுதிகள், இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகள், பல்வேறு கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் 29 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பின் போது குறித்த மௌலவி அந்த அறையில் இருக்கவில்லை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியுள்ளனர்.
READ MORE | comments

தென்னிலங்கையில் மர்மநபர்கள் அட்டகாசம்! துறைமுகத்துக்குள் நடந்த கொடுமை


தென்னிலங்கையிலுள்ள துறைமுகம் ஒன்றில் மர்மநபர்களால் வைக்கப்பட்ட தீயினால் பெருமளவு படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டதால், 20 இற்கும் அதிகமான படகுகள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மர்ம குழுவொன்று இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.



READ MORE | comments

தீவிரவாத தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்க பிரதமர் விருப்பம்? கொழும்பு ஊடகம் தகவல்

Tuesday, June 25, 2019

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க விரும்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்ற தெரிவுகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பலரிடம் சாட்சி மூலங்களைப் பெற்றுள்ளது.
பிரதானமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி உள்ளிட்ட பலர் சாட்சியமளித்துள்ளனர்.
அமைச்சரான றிசாட் பதியுதீனிடம் மாத்திரம் இன்னமும் சாட்சியம் பெறப்படவில்லை. இந்நிலையில், அவரும் எதிர்வரும் 26ம் திகதி தெரிவு குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் உள்ளிட்ட சாட்சியம் வழங்க விருப்பம் வெளியிட்டுள்ளவர்களை தெரிவுக்குழுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை” குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கனடாவில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள்! பொலிஸாரை மிரள வைத்த சிறுவர்கள்

கனடா, ரொரன்டோ பகுதியில் துப்பாக்கி மற்றும் மடிக்கணினியை திருடிய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல ஒன்லைன் இணையத்தளத்தில் 23 வயதான யுவதி ஒருவர் தனது மடிக்கணினியை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். இதனை கொள்வனவு செய்வதற்கு ஆண் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய அடுத்த நாள் அதனை கொள்வனவு செய்வதற்காக இருவர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணிடம் இருந்த மடிக்கணினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இதன்போது இருவரில் ஒருவரின் இடுப்பில் இருந்த துப்பாக்கி ஒன்று கீழே விழுந்துள்ளது.

அண்மையில் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றில் குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அடுத்த நாள் நபர், திருடிய மடிக்கணியை இணையம் ஊடாக விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விற்பனை செய்ய தயாராகிய நபருடன் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடம் மடிக்கணினி ஒன்றும், பெரிய கத்தி, துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குழுவாக செயற்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அந்த குழுவில் இயங்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குழுவாக செயற்படும் இந்த குழுவில் சிறுவர்கள் உள்ளமை குறித்து ரொரன்டோ பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவினரால் திருடப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்நிலையில் டொரொன்டோவை சேர்ந்த 18 வயதான தாஜீன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஸன் லக்ஷ்மிகாந்தன் ஆகிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் தம்மை அழைப்புக்கொண்டு தகவல் வழங்குமாறு டொரொன்டோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரொன்டோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்



ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகை திட்டமொன்றை அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் பிலிப் ஒன்டார்ச்சி முன்மொழிந்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கிரேக், தனது இலங்கை பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் அடைகிறார். தற்போது விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இலங்கையின் பிரதிநிதியாக உள்ளார்.
அவர் இலங்கை பாரம்பரியத்தை கொண்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர், லிபரல் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மற்றும் லிபரல் கட்சியில் ஒரு பதவியை வகித்த முதல் இலங்கையர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது..
READ MORE | comments

ரணிலின் இரகசிய ஒப்பந்தங்கள் அம்பலம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இரகசியமான ஒப்பந்தங்களை செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்காவுடன் இரகசியமாக ஒப்பந்தம் செய்வது ஒன்றும் சாதாரண விடயமல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசிய சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறையினரை அமெரிக்காவுக்கு அடிபணிய வைக்கும் ஒப்பந்தங்களை எதிர்க்கும் அனைத்து தரப்பினருக்கும் அரசியல் பேதங்களை துறந்து முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார்
அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை மறைப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை. நாடாளுமன்றத்துக்கு பகிரங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவதை ஒருபோதும் நம்ப முடியாது
நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தங்களை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சோபா உள்ளிட்ட அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினருக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் தெரிவித்தார்
READ MORE | comments

வெள்ளியன்று வேலைநிறுத்தம் -அச்சுறுத்தும் முக்கிய தொழிற்சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்காவிடின் மீளவும் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்
எமது கோரிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றாவிடின் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றாப்படின் எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுமுதல் 28 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து ரயில்வே தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சருடன் தமது சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்து கடந்த வியாழக்கிழமை ரயில்வே தொழிற்சங்ககங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பில் கடும் வறட்சி: பொதுமக்கள் பாதிப்பு

Monday, June 24, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயிலுடன் கூடிய உஸ்னமான காலநிலையினால் கடும் வறட்சி நிலவி வருகின்றது.
அந்த வகையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெறுகாமம் எனும் இடத்தில் அமைந்துள்ள குளம் வற்றிவருகின்ற நிலையில், அப்பகுதி மக்கள் கரப்பு, அத்தாங்கு மற்றும் சிறிய வலைகள் போன்ற பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு அக்குளத்திலுள்ள மீன்களை இன்று பிடித்துள்ளனர்.

இவற்றுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளிகுளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் நீரின்றி வற்றிப்போயுள்ள நிலையில், கிணறுகளும் வற்றிப்போயுள்ளன. இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கு வவுச்சர்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


























READ MORE | comments

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தை உச்சரிக்காத தயாகமகே மற்றும் மனோ

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற தயாகமகே மற்றும் அமைச்சர் மனோகணேசன் இருவரும் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும் கதைக்கவில்லை என்பதே உண்மை என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அங்கு பேசிய அவர்,
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற தயாகமகே இதுவரை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஒருநாள் கூட நாடாளுமன்றத்திலே அவர் குரலை எழுப்பியதில்லை.


அதேபோல் நாடாளுமன்றதில் எந்த ஒரு இடத்திலும், வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயம் தொடர்பில் இதுவரையிலே அமைச்சர் மனோகணேசனும் எந்த குரலையும் எழுப்பியதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற எந்த உறுப்பினர்களும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்த சரித்திரமில்லை என்பது தான் எனது கருத்து என கூறியுள்ளார்.
READ MORE | comments

இன்னொரு உண்ணாவிரத போராட்டத்திற்கு வழிவகுக்க வேண்டாம்! எச்சரிக்கை விடுக்கும் வியாழேந்திரன்!

முற்போக்குத் தமிழர் அமைப்பின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்தக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தவர்கள் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டதனையடுத்து அவர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுவந்த முற்போக்குத் தமிழர் அமைப்பின் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்திக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
தமது சத்தியாக்கிரகத்தின் 8 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (24) பகல் அதனை முடித்துவைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எதிர்வரும் 30 நாட்களுக்குள் தரமுயர்த்தப்பட வேண்டும். தரமுயர்த்தப்படுவதற்கு நாங்களும் அதற்கான தொடர் அழுத்தத்தினைக் கொடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தக் கொண்டு அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்த அரசாங்கம் செல்வதற்கு தேவைப்படும் பட்சத்தில் வாக்குகளை வழங்கிக் கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு பாரிய பங்கிருக்கிறது.
காரணம் இது தரமுயர்த்தப்படுவதென்றால் பிரதமருக்கு கீழ் இருக்கின்ற அவருடைய கட்சியைச் சேர்ந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்கை எடுத்து அழுத்தத்தைக் கொடுத்து 30 நாட்களுக்குள் தரமுயர்த்த வேண்டும்.
இன்னொரு சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கோ, இன்னொரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்த்துக்கோ வழிவகுக்கக் கூடாது, அவ்வாறு 30 நாட்களுக்குள் இடம்பெறாவிட்டால் நாங்கள் எங்களுடைய போராட்டத்தை இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுப்போம். என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்றார்.
READ MORE | comments

கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை



கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவ்விடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோர் சென்று போராட்டக்கார்களான கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் கல்முனை தமிழ் வர்த்தக சங்க தலைவர் லிங்கராஜா ஆகியோரை சந்தித்து போராட்டம் இடம் பெற்ற பகுதியில் உள்ள பொதுப்போக்குவரத்திற்கு தடையாக உள்ள கொட்டகைகளை அகற்றி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த இளைஞன் போராட்டகாரர்களிடம் அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயகவினால் கடிதம் ஒன்றை தற்போது ஒருவரிடம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த கடிதம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் போராட்டகார்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகவே அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதனை பெற்றுக்கொண்டால் மாத்திரமே போராட்டத்தை நிறைவு செய்ய முடியும் என பொலிஸாரிடம் கூறுமாறு போராட்டகார்களை கேட்டுக்கொண்டார்.
ஆனால் போராட்டத்தில் இருந்த இருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கடிதம் தற்போது தேவையில்லை போராட்டத்தை நாம் ஞானசார தேரர் தலைமையில் வந்திருந்த பௌத்த தேரர்களின் வேண்டுகோளை ஏற்றே நிறைவு செய்தாக கூறி அவ்விடத்தில் இருந்து போராட்டகாரர்களில் ஒருவரான கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு அவ்விடத்தில் இருந்து எழுந்து செல்ல முற்பட்டார்.
இந்நிலையில் குறித்த போராட்ட குழுக்குள் ஏதோ சச்சரவு இடம்பெறுகின்றது என்பதை ஊகித்த கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பீ.ஹேரத் அவ்விளைஞனிடம் என்ன விடயம் சம்பந்தமாக போராட்டகாரர்களிடம் தெரிவித்தீர்கள் என வினவினார். இதன் போது போராட்டகாரர்களுக்கு ஒரு கடிதம் ஒன்று அரசாங்க அரசாங்க அதிபரான டீ.எம்.எல்.பண்டாரநாயகவினால் வழங்கப்படும் என்பதை தான் வலியுறுத்தியதாகவும் அக்கடிதம் கிடைத்ததும் குறித்த அப்போராட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்பதை கூறியதாக தெரிவித்தேன் என பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறினார்.
உடனடியாக தனக்கு அவ்வாறு எந்தவித உத்தரவோ வேண்டுகோளோ சொல்லப்படவில்லை என கூறி அவ்விடத்தில் இருந்து அரசாங்க அதிபரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் குறித்த கடிதம் தொடர்பாக வினவியுள்ளார். இந்நிலையில் அரசாங்க அதிபரும் அந்த கடிதம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது அழுத்தமாக அவ்விடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலை கோபத்துடன் நிறுத்திய பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்தில் இருந்து நழுவி கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை நோக்கி வேகமாக சென்ற குறித்த இளைஞனை கைது செய்யுமாறு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
உத்தரவிற்கு அமைய செயற்பட்ட பொறுப்பதிகாரி குறித்த இளைஞனை பின்தொடர்ந்து கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த இளைஞனை கைது செய்த போது சம்பவ இடத்தில் ஒளிப்படம் எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர்களை மிரட்டும் தொனியில் அவ்விடத்தில் நின்றவர்கள் எச்சரிக்கை செய்ததுடன் ஊடக கடமைக்கும் இடையூறு செயய முற்பட்டனர்.
எனினும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரின் கடமையைக்கு இடையூறு செய்ய வந்தவர்களை எச்சரிக்கை செய்யும் முகமாக தனது செயற்பாட்டை முன்னெடுத்தார்.
இறுதியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்தேக நபராக இளைஞனை போராட்டக்கார்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
READ MORE | comments

இன்று நீதிமன்றில் முன்னிலையான உண்ணாவிரதிகள்! வழக்கு தொடர்பில் நீதவானின் அறிவிப்பு!



கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 17ஆம் திகதி உண்ணாவிரப்போராட்டம் ஆரப்பிக்கப்பட்டு ஞாசாரதேரரின் வருகையின் பின் நிறைவுக்கு வந்தது.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலம் கடந்த 21 ம் திகதி பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தியமை தொடர்பாக மாநகரசபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்னம், விகாராதிபதி ரண்முத்துகல சங்க ரத்னதேரர், கல்முனை க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் உட்பட நால்வரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாமையால் இன்று முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஐ.என். றிஸ்பான் உண்ணாவிரதிகளின் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் கோரினார். இதன்போது பிரதிவாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றபின் மீண்டும் செப்ரெம்பர் மாதம் o2 திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாருக், ரீ.மதிவதனன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் தமிழர் தரப்பு சார்பாக முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |