முற்போக்குத் தமிழர் அமைப்பின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்தக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தவர்கள் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டதனையடுத்து அவர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுவந்த முற்போக்குத் தமிழர் அமைப்பின் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்திக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
தமது சத்தியாக்கிரகத்தின் 8 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (24) பகல் அதனை முடித்துவைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எதிர்வரும் 30 நாட்களுக்குள் தரமுயர்த்தப்பட வேண்டும். தரமுயர்த்தப்படுவதற்கு நாங்களும் அதற்கான தொடர் அழுத்தத்தினைக் கொடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தக் கொண்டு அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்த அரசாங்கம் செல்வதற்கு தேவைப்படும் பட்சத்தில் வாக்குகளை வழங்கிக் கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு பாரிய பங்கிருக்கிறது.
காரணம் இது தரமுயர்த்தப்படுவதென்றால் பிரதமருக்கு கீழ் இருக்கின்ற அவருடைய கட்சியைச் சேர்ந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்கை எடுத்து அழுத்தத்தைக் கொடுத்து 30 நாட்களுக்குள் தரமுயர்த்த வேண்டும்.
இன்னொரு சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கோ, இன்னொரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்த்துக்கோ வழிவகுக்கக் கூடாது, அவ்வாறு 30 நாட்களுக்குள் இடம்பெறாவிட்டால் நாங்கள் எங்களுடைய போராட்டத்தை இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுப்போம். என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்றார்.
0 Comments