அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம்,துறைமுகம்,நீர்வழங்கள், வங்கிச் சேவை உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். கண்ணீர் புகை பிரயோகத்தின் ஊடாக அரசாங்கம் போராட்டத்தை கலைக்கிறதே தவிர முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என துறைமுக ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கையினால் அனைத்து சேவைத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மின்கட்டணம் அதிகரிப்பு ஊடாக மக்களின் வாழ்க்கை சுமை தற்போது பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நடுத்தர மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை விட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட வரபிரசாதங்களை குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணலாம்,பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.
புதிய வரி கொள்கையினால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே புதிய வரி கொள்கை,கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலியம், மின்சாரம், வங்கிச்சேவை, மருத்துவ துறை, டெலிகொம், துறைமுகம், தபால்சேவை, ஆசிரிய சங்கம் உட்பட 40 இற்கும் அதிகமாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை அரசாங்கம் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் கொண்டு கலைக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது,எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் மார்ச் மாதம் 01 ஆம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.