Saturday, May 31, 2014
இலங்கையில் பெண் பொலிஸாருக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தற்பொழுது பெண் பொலிஸார் பயன்படுத்தும் சீருடைக்கு மேலதிகமாக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சீருடை தற்பொழுது பயன்படுத்தும் காக்கி நிறத்தைக் கொண்டதாகவே அமையும்.
அத்தோடு, பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவியிலுள்ள பெண்களுக்கு நெடுங்காற்சட்டையுடன் கூடியதாக புதிய சீருடை இருக்கும். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் தரம் உள்ள பெண் பொலிஸாருக்கும் நெடுங்காற்சட்டையுடன் புஷ் கோட்டும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண் பொலிஸாரின் அலுவலக உத்தியோகபூர்வ கடமைகளையும் மற்றும் வசதிகளையும் கருத்திற்கொண்டு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தவிர பொலிஸ் சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.