நியூசிலாந்து பிரதமர் இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று பாராட்டிய 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை ஏற்பட்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில், இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ புகழ்ந்திருந்தார்.
நேற்று நியூசிலாந்து பிரதமர் கண்டியில் பயணம் மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இலங்கை முழுவதும், மின்சாரத் தடை ஏற்பட்டது.
அந்த வேளையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில், ஆசிய பசுபிக் அனைத்துலக ஜனநாயக ஒன்றியத்தின் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
மின்சார விநியோகத்தை படிப்படியாக ஆரம்பிக்க குறைந்தது மூன்று மணிநேரம் ஆனதால், நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.
மின்சாரம் இல்லாததால், வர்த்தக நிலையங்களும், அரச, தனியார் பணியகங்களும் நேரகாலத்துடனேயே மூடப்பட்டன.
வழக்கமாகவே கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் நிலையில், மின்சார விநியோகம் தடைப்பட்டதால், வீதி சமிக்ஞை விளக்குகளும் ஒளிரவில்லை.
இதனால், வீதிகளி்ல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைச் சீர்படுத்த காவல்துறையினர் போராட வேண்டியிருந்தது.
இந்த திடீர் மின்சாரத் தடைக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதான மின் விநியோகப் பாதையில் மின்னல் தாக்கி, இந்த தடை ஏற்பட்டிருக்கலாம் என்ற மின்சாரசபை வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன