Home » » சிங்கள மக்கள் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? மகிந்தவின் கூத்தை

சிங்கள மக்கள் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? மகிந்தவின் கூத்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு என்றுமே வெளியேறாதவன் என்றும் கட்சி நெருக்கடிக்குள்ளான காலகட்டங்களில் எல்லாம் தலைமைத்துவத்துக்கு உறுதுணையாக இருந்து கட்சியை கட்டி வளர்க்கப் பாடுபட்டவன் என்றும் உரிமை கோரிக் கொள்வதில் எப்போதுமே பெருமைப்படுபவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
பண்டாரநாயக்கவின் பிள்ளைகளுக்கே இல்லாத கட்சி விசுவாசம் தன்னிடம் இருந்ததாக அவர் கூறியதையும் நாம் கண்டிக்கிறோம். ஆனால், இப்போது அவர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். முன்னைய விசுவாசம் இப்போது எங்கே போய்விட்டது?
சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறாமல் இருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அக் கட்சியின் ஊடாக ஆட்சியதிகாரத்திற்கு வரமுடியுமென்பதை நன்குணர்ந்து மிகுந்த சாதுரியத்துடன் தனது வியூகங்களை வகுத்துச் செயற்பட்டார் மஹிந்த என்பதில் சந்தேகமில்லை. பண்டாரநாயக்கவின் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பலவீனங்களையும் நன்கு புரிந்துகொண்டு தைரியமாக செயற்பட்டார்.
இப்போது ஆட்சியதிகாரம் கைவிட்டுப் போன நிலையில் சுதந்திரக் கட்சியை மீண்டும் தனது நலன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இனிமேல் இருக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்த நிலையிலேயே அவர் புதிய கட்சி பற்றிப் பேசுகிறார்.
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு இனிமேல் தன்னால் பயன்படுத்த முடியாத சுதந்திரக் கட்சி மீது விசுவாசத்தை வைத்திருந்து என்ன பயன் வரப்போகிறது? அதிகாரத்தைத் தரமுடியாத விசுவாசத்துக்கு அரசியலில் ஏது பெறுமதி? நாட்டு மக்களுக்குத்தான் புதிய கட்சியொன்று அவசரமாகத் தேவைப்படுகிறது என்று வேறு ராஜபக்ச கூறிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனது தலைமையில்.
அவரது நிலைமை இவ்வாறிருக்கையில், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமாக்கி ஒருவருடம் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் சேர்ந்து நிற்கின்ற சுதந்திரக்கட்சியின் மூத்த முக்கியஸ்தர்களும் கூட அமைச்சர் பதவிகளை அனுபவித்துக் கொண்டே மஹிந்தவின் புகழ்பாடத் தவறவில்லை. அதை சிறிசேனவினால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் கூட அமைச்சர் ஜோன் செனவிரத்ன ராஜபக்சவே போரை முடிவுக்கு கொண்டுவந்த யுகபுருஷர் என்று வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
கட்சிக்குள் ராஜபக்சவின் செல்வாக்கை இல்லாமல் செய்யக் கூடிய வலிமையை அண்மைய எதிர்காலத்தில் சிறிசேனவினால் வரவழைக்கக் கூடியதாக இருக்குமென்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ராஜபக்ச தனிக்கட்சி அமைத்துக் கொண்டு வெளியேறினால் சுதந்திரக் கட்சி பலவீனப்படக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு உறுதுணையாக நிற்கின்றார். எனினும் கட்சியை வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு அரசியல் செல்வாக்குத் தகுநிலையில் அவர் இருப்பதாகக் கூறமுடியாது.
ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக விளங்குவதற்கு முக்கிய காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையும் அவர் கடைப்பிடித்து வருகின்ற சிங்கள பௌத்த மேலாதிக்கவாத அரசியல் அணுகுமுறையுமேயாகும்.
போர் வெற்றிக்கு ராஜபக்ச ஏகபோக உரிமை கொண்டாடுகின்ற அபத்தத்தை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மஹிந்தவுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் சகலருமே புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார்கள். சிலர் சமாதான முயற்சிகள் என்ற பெயரில் முன்னெடுத்ததும் வேறு வழிகளிலான போர் நடவடிக்கைகள்தான்.
ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ) அரசியல்பிரிவிலான சின் பீனின் தலைவர் ஜெறி அடம்ஸ் சமாதான முயற்சிகள் எனப்படுபவை வேறுமார்க்கங்களிலான போர் (Peace process is wair by other means) என்று ஒரு தடவை கூறியிருந்தார்.
சிங்கள அரசியல் அதிகாரத்தை ஆயுதமேந்தி சவாலுக்கு உட்படுத்திய பிரபாகரனுடனோ அவரது இயக்கத்துடனோ அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு எந்த சிங்களத் தலைவரும் விரும்பியதில்லை. அவர்கள் சகலருமே இராணுவத் தீர்வொன்றையே மனதிற்கொண்டு செயற்பட்டார்கள் என்பதே உண்மை.
போரின் முன்னைய கட்டங்களை முன்னைய ஆட்சியாளர்கள் தங்களால் இயன்றவரை கையாண்ட பிறகு இறுதிக் கட்டமே ராஜபக்சவின் கையில் வந்து வீழ்ந்தது. இந்த இறுதிக் கட்டப் போரைத்தான் நான்கு வருடங்களாக ராஜபக்ச ஆட்சி அப்பாவித் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் நேரக் கூடிய அழிவுகளைப் பொருட்படுத்தாமல் முழுமூச்சாக முன்னெடுத்து வெற்றி கண்டது.
அதில் கண்ட வெற்றிக்கு ராஜபக்ச ஏகபோக உரிமை கொண்டாடுவது என்பது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்திய விளையாட்டு வீரர் தானே போட்டியை வென்றதாகவும் தானே ஆட்ட நாயகன் என்றும் களத்தில் இறங்கி அட்டகாசம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
சிங்கள மக்கள் எப்போது தான் இந்தக் கூத்தை புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |