Advertisement

Responsive Advertisement

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள அல் ஹூசைன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின் போது உரையாற்றவுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
செய்ட் அல் ஹூசைன் தனது நீண்ட உரையில் இலங்கை தொடர்பாக ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார் எனவும் அதனூடாக இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.
எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும் போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகின்றது.
இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள், முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31வது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள முதலாவது அமர்வில் மனித உரிமைப் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங், ஐ.நா பொதுச் சபை தலைவர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அதன் பின்னர் பல்வேறு உறுப்பு நாடுகள் உரையாற்றவுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியும் முதலாம் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments