Home » » மகாவம்சம் உண்மைகளும் கற்பனைகளும். - நக்கீரன்

மகாவம்சம் உண்மைகளும் கற்பனைகளும். - நக்கீரன்

தேவநம்பிய தீசன் (கிமு 247 - 207) ஆட்சிக் காலம் தொடக்கம் பவுத்தம் இலங்கைத் தீவில் பெரும்பான்மை மக்களது மதமாக இருந்து வருகிறது. சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். அது சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் கை கோர்த்து நிற்கின்றன எனலாம்.
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த - சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.
ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது தெரிந்திருக்கவில்லை. 1837 இல் யோர்ஜ் ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் (Ceylon Civil Service) இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1912 இல் வில்ஹெம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை Mabel Hay ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார்.
அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே அப்படி ஒரு நூல் ஒன்று இருப்பது பெரும்பாலான சிங்களவர்க்குத் தெரியவந்தது.
இலங்கையில் பவுத்த மதம் பரவியிருந்த காலத்தில் பவுத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த தேரர்கள் சமய மரபுகள் குறித்தும் மன்னர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் வெட்டிய குளங்கள், கட்டிய விகாரைகள் குறித்தும் ஏடுகளில் எழுதி வைத்ததோடு அவற்றை வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இப்படிக் காலம் தோறும் சேகரிக்கப்பட்ட குறிப்புக்கள் “அட்டகதா” என்று அழைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இவை ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா - மகாவம்சம்’ என்று அழைக்கப்பட்டது.
அட்டகதா - மகாவம்சத்தைத் தழுவி கிபி 4 ஆம் நூற்றாண்டளவில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. தீபவம்சத்தை எழுதிய ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. காலத்திற்குக் காலம் பல பவுத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ செம்மைப் படுத்தி முழுமை பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலை முதல் நூலாகக் கொண்டுதான் மகாநாம தேரர் 5 ஆம் நூற்றாண்டளவில் பாளிமொழியில் செய்யுள் வடிவில் மகாவம்சம் என்ற நூலை எழுதினார்.
இது வங்காளத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கையின் தாமிரபரணியை (தம்பபாணி) அடைந்த விஜயனது வருகையோடு (கிமு 483 -445) தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 - 362) முடிவுறுகிறது. இதன் இரண்டாவது பாகம் சூளவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பவுத்ததேரரால் எழுதப்பட்டது.
இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 - 77) வருணிக்கப்படுகிறான். மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம் துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க மகாவம்சம் அதே கதையை 12 அத்தியாயங்கள் (21-32) மகாநாம தேரர் பாடி முடிக்கிறார். அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் "(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது" எனக் கூறுவார்.
எனவே மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல். பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.
இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. இலங்கை வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள மகாவம்சம் ஒரு கால அளவு நூலாக விளங்குகிறது.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வாழந்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.
மகாவம்சம் இலங்கைத் தீவுக்கு புத்தர் (ததாகதர்) மும்முறை வந்ததாக முதல் அத்தியாயம் குறிப்பிடுகிறது.
இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.
புத்தர் இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் - குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் பயப்பீதி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் - தர்மம் - சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.
இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார். கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார்.
கவுதம புத்தர் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி என்ற ஊரில் கிமு 566 இல் சாக்கிய குலத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர், தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய நினைவுத் தூண் சின்னத்தால் புகழ் பெற்று விளங்குகிறது.
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிருவாணம்" அல்லது "நிருவாண நிலை" என்று அழைக்கப்படுகிறது.
ஞானம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் இராகுல், மகா பிரஜாபதி ஆகியோரைத் தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பவுத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பவுத்தத்தை தழுவிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார்.
புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் வரவில்லை.
இயக்கர்களை பயமுறுத்தி அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் தென்மேற்கு கல்யாணி என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளைப் பேரளவு மகாவம்சம் உறுதிசெய்கிறது.
(1) கல்லாடநாகன் (கிமு 50 - 44) (2) சோரநாகன் (கிமு 3 - 9) (3) இளநாகன் (கிபி 96 - 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 - 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 - 248) (6) குட்டநாகன் (கிபி 248 - 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 - 269) (8) அபயநாகன் (291 - 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 - 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன். (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85)
துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் இருசாராருக்கும் இடையிலான போரல்ல. அது பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த சமயப் போர். இரண்டு அரசர்களது படைகளிலும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும்.
வங்கம், கலிங்கம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் காலத்துக்குக் காலம் குடியேறிய வந்தேறுகுடிகள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், வேடர், பவுத்த தமிழர் ஆகியவர்களோடு கலந்து சிங்களவர் எனத் தோற்றம் பெற்றனர்.
மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் (வேடர்) இவர்களைக் குறிப்பிடுகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனான இராவணன் ஆண்டான் என்ற இராமாயண இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. மகாவம்ச ஆசிரியர் ஆதிக் குடிகளைக் குறிப்பிடும் போது தமிழர்களை வேண்டும் என்றே விட்டுவிட்டார்.
மகாவம்சத்தின் ஆறாவது அத்தியாயம் விஜயன் முடிசூட்டிக் கொண்டதைக் கூறுகிறது. ஏழாவது அத்தியாயம் விஜயன் புனிதனாக்கப்படுவது பற்றிக் கூறுகிறது. விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள் தவறானது.
இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் (கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது. கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி இல்லாததால் தீபவம்சம், மகாவம்சம் என்ற பவுத்த புராணங்களை பாளிமொழியில் எழுதினார்கள். இலங்கையைச் சுட்ட சிங்களத்தில் சொல் இல்லை. லங்கா என்பது சமற்கிருதச் சொல்லாகும்.
பவுத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் போன்றோரால் பேசப்பட்ட எலு மொழியுடன் இணைந்து பவுத்த மதத்தினைப் பின்பற்றுவோருக்கு மொழி அடிப்படையில் ஒரு அடையாளத்தை வழங்க 8 ஆம் நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள்.
தமிழில் உள்ள உறவுப் பெயர்கள் சிங்களத்தில் புகுந்துள்ளன. தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா, அம்மே (மலையாளத்திலும் அம்மேதான்!)) - அம்மா ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா, சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா, அய்யா - அண்ணா, அக்கா - அக்கா, மல்லி - தம்பி, நங்கி - தங்கை, சகோதரயா - சகோதரன், புத்தா - மகன் துவ - மகள், பேனா - மருமகன், மல்லி கே புத்தா - தம்பியின் மகன், அக்கா கே துவ - அக்காவின் மகள், லொக்கு அம்மா - பெரியம்மா, லொக்கு தாத்தா - பெரியப்பா, மாமா - மாமா மசினா - மச்சான்,
பவுத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த மொழி வடிவத்தினைப் பின்பற்ற பவுத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர். அதனால் பவுத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பவுத்தர் - பவுத்தர் அல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது.
பல்லவர் காலத்தில் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டளவில்) தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்து சமய எழுச்சியின் தாக்கம் காரணமாக அங்கு வாழ்ந்த தமிழ் பவுத்தர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள். இதனால் இலங்கையில் பவுத்தர் - பவுத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும் அதிகரித்தது.
தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை அழைத்து "லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக" எனக் கட்டளை இட்டார். (மகாவம்சம் - அத்தியாயம் V11)
(Buddha, seated on a throne on which nibbana was achieved the great divine sage, addressed this celebrated injunction to Sakka, the king of gods and the divine protector of the sasana (the dhamma doctrine as taught by Buddha) and instructed him "One Vijaya, son of Sinhabahu, king of the land of Lala together with his 700 officers of state has landed on Lanka. O Lord of devas! My religion will be established in Lanka. On that account thoroughly protect together with his retinue, him and Lanka." (Mahavamsa –Ch.V11)
இந்தப் புனைந்துரை பின்னர் எழுதப்பட்ட மதசார்பு சிங்கள வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பவுத்த சடங்குகளிலும் (சூளவம்சம், புஜவாலியா, தூபவம்சா, இராஜவாலியா....) மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு வருகின்றன. இதனால் அவை இன்றைய சிங்கள - பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன. சிங்கள அறிஞர்கள் இந்தக் கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் இலங்கையின் தொன்மை வரலாறாகச் சித்திரிதுள்ளனர்.
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும்.
முன்னர் குறிப்பிட்ட நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் (வேடர்) ஆகியோர் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தவர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.
விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள அய்ந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில தொண்டீசுவரமும் இருந்தன என யாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகிறது. தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை அவ்விடத்தைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர்.
திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களாகும்.
மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய கோயில்களும் நடுவில் சிவனொளிபாத மலையும் இருந்தன.
பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன்.
சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் இந்தச் சொல் இரண்டு முறை குறிக்கப்படுகிறது.
மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோத்தபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவண்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்ட கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்ட’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது.
எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். எனவே அவனும் எல்லாளனும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பவுத்த சமயத்தவன்.
தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் "புன்னெறி" (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் - கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட கைமுனு நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் - துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் எல்லாளன் - துட்ட கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – தமிழர் அல்லாதா பவுத்தர் இடையிலான போராக வேண்டுமென்றே சித்திரித்து இருக்கிறார். துட்ட கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கடவுளின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது.
இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு 'இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்' என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் - அதிகாரம் 25)
ஆனால் மகாவம்சத்தின் முதல் நூலான தீபவம்சத்தில் எல்லாளன் - துட்டகைமுனு போர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தீபவம்சம் எல்லாளனை "ஷத்ரிய வம்ச இளவரசன்" எனக் குறிக்கிறது. மகாவம்சம் எல்லாளன் உயர்குலத்தில் பிறந்தவன் என்றும் சோழ நாட்டில் இருந்து வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், இவன் நீதி தவறாது ஆட்சி செய்தான் என்றும் கூறுகிறது. ஆனால், பூஜாவலி என்னும் வரலாற்று நூலின் ஆசிரியர் மயூரதேரர் எல்லாளனை மிகவும் கொடூரமானவனாகவும் அநீதியான ஆட்சியாளனாகவும் மடங்களையும் பெளத்த நிறுவனங்களை அழித்தவனாகவும் கூறுகிறார்.
தீபவம்சத்தில் துட்ட கைமுனு பற்றிப் பத்துப் பாடல்களே காணப்படுகின்றன. பிக்குணி சங்கமித்தை வெள்ளரசோடு இலங்கை வந்த கதையும் தீபவம்சத்தில் காணப்படவில்லை. எனவே எல்லாளன் - துட்ட கைமுனு இடையிலான போர் பற்றிய கதை தமிழகத்தில் எழுச்சிபெற்ற பக்தி இயக்கத்திற்கு எதிராக புனையப்பட்ட கதையாக இருக்கலாம்.
அந்தக் கதையை உண்மையென்று எடுத்துக் கொண்டால் துட்ட கைமுனு எல்லாளன் மீது படையெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
(1) எல்லாளன்தான் அசேலனைக் கொன்று அனராதபுரத்தைக் கைப்பற்றி ஆண்டான். இந்த அசேலன் மூத்தசிவனின் மகனாவான். எனவே தந்தை வழியில் அவன் துட்ட கைமுனுவின் பாட்டன் ஆவான்.
(2) அனுராதபுரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் முழு இலங்கைக்கும் மன்னன் ஆகவேண்டும் என்ற ஆசை.
துட்ட கைமுனு – எல்லாளன் போரில் பவுத்தத்தை தழுவிய தமிழர்கள் துட்ட கைமுனுவின் படையில் இருந்தார்கள். அதே போல் பவுத்தத்தைத் தழுவிய தமிழர்கள் எல்லாளன் படையிலும் இருந்தார்கள். எல்லாளனது படைத்தலைவன் நந்தமித்தன் என்பவனின் உடன்பிறப்பின் மகனான மித்தன் ஆவான். ஆனால் இன்றைய சிங்கள - பவுத்தர்கள் எல்லாளன் - துட்டகைமுனு போரை தமிழர்களுக்கு எதிரான இனப் போர் என்று காட்டி தமிழர்களைத் தமது எதிரிகளாகவும் பார்க்கிறார்கள்.
இன்று மகாவம்ச சிந்தனையே சிங்கள ஆட்சியாளர்களை வழி நடத்துகிறது. கைமுனுவின் தந்தை பவுத்தபிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து உருண்டையாக்கி துட்ட கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று. அந்த உணவினைத் தூக்கி வீசிய துட்ட கைமுனு வேகமாகப் போய் படுக்கையில் குறண்டிக் கொண்டு படுக்கிறான்.
துட்ட கைமுனுவின் தாயார் அவனிடத்தில் "மகனே, கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே?" என்கிறாள். அதற்குத் துட்ட கைமுனு பின்வருமாறு பதில் அளிக்கிறான்:
“மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழர்களும் மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?”
துட்ட கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப் போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான காகவண்ணதீசன் "மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதுமானது" ("Let Tamils rule that side of the Maha Ganga (now Mahaweli Ganga) and the districts this side of the Maha Ganga are more than enough for us to rule.") எனப் பதில் இறுத்தது கவனிக்கத்தக்கது.
இப்போது மகாவம்சம் ஒரு மீளாய்வு மற்றும் Mahavamsa A Review என்ற நூலை திரு தம்பு கனகசபை இரு மொழிகளிலும் ஒரு நூலாக எழுதயுள்ளார். இதற்கு முனனர் அவர் "ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூல் மகாவம்சத்தில் காணப்படும் உண்மைகளையும் கற்பனைகளையும் ஆராய்கிறது. மகாநாப தேரர் எழுதிய மகாவம்சத்தை ஒரு மாறுநிலைக் கோணத்தில் இருந்து நூலாசிரியர் திறனாய்வு செய்கிறார். இந்த நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய வட மாகாணசபை முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"திரு தம்பு கனகசபை எழுதிய "மகாவம்சம் ஒரு மீளாய்வு" என்ற நூல் தகுந்த நேரத்தில் வெளிவந்துள்ளது. பல சிங்கள பவுத்தர்கள் மகாவம்சம் உண்மையான வரலாறு என நம்புகிறார்கள். அதனால் அவர்களது பழைய வரலாறும் இன்றைய வரலாறும் இயற்கையாகவே பிழையானதாகும். வரலாற்றாசிரியர்கள் மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் எனக் கருதவில்லை.
நூலாசிரியர் திரு கனகசபை மகாவம்ச ஆசிரியரின் பவுத்தமதப் பற்றையும் இனப் பற்றையும் (மகாவம்ச ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் 'பவுத்தர்களது மன எழுச்சிக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்துக்குமாக எழுதப்பட்டது எனச் சொல்கிறது) விளங்கப்படுத்துகிறார். நூலின் உள்ளடக்கம் உண்மையல்லாத கற்பனைகளைக் கொண்டது. இருப்பினும் மகாவம்சத்தில் சில வரலாற்று உண்மைகளும் தரவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் மகாநாம தேரர் தனது அதீத கற்பனைகளை அதில் கலந்துள்ளார்.
எடுத்துக்காட்டாக 'சிவ' 'பிராமணன்' 'பிராமண கோயில்' போன்ற சொற்கள் மகாவம்சத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட மக்களது பின்னணி பற்றியோ, சமூகத்தில் அவர்களது வகுபாகம் பற்றியோ, அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டு பற்றியோ, அவர்களது சமயம் பற்றியோ, அவர்களது மொழிபற்றியோ எந்தத் தரவும் நூலில் இல்லை. மேலும் மகாவம்சத்தில் அரசர்கள் பேசிய மொழி பற்றியோ அல்லது அவர்களது இனம் பற்றியோ எவ்வித குறிப்புகளும் இல்லை. தமிழர்கள் மட்டும் விதிவிலக்கு. மகாவம்ச ஆசிரியர் குறிப்பிடும் 'சிவ' 'பிராமணன்' 'பிராமண கோயில்' போன்ற சொற்கள் இலங்கையில் தமிழர்கள், பிராமணர்கள் ஆதிதொட்டு வாழ்ந்ததையும் சைவம் நிலவியதையும் உறுதிப்படுத்துகிறது.
மகாவம்சத்தில் காணப்படும் இவ்வாறான வரலாற்றுச் செய்திகள் இந்த சிறு நூலில் விளக்கப்பட்டுள்ளன. அதற்காகவே இந்த நூலை ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் வைத்திருப்பது விரும்பத்தக்கது. அது புத்திசாலித்தனமும் கூட என்பது எனது எண்ணமாகும். நூலாசிரியர் திரு கனகசபை நீண்டகாலம் நோய்நொடியின்றித் தனது பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்."
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்தும் இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்தெம்பர் 19 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு 150 Borough Drive. Scarborough இல் உள்ள நகர நடுவத்தில் (Scarborough Civic Centre Chambers) நடைபெற இருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், தேசியப் பற்றாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். நூலினைப் பெற்று பயன் அடைய வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |