Home » » இலங்கையின் கனிய வளங்கள்

இலங்கையின் கனிய வளங்கள்


இலங்கையின் கனிய வளங்கள் 

இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நமது நாட்டின் ஏற்றுமதிகளில் கனியங்கள் மூன்று சதவீதப் பங்கினை வகித்து வருகின்றன. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றின் கைத்தொழில் விருத்தி கனிய வளங்களைப் பொறுத்ததாகவே அமையும்.

இலங்கையில் கனிய வளங்கள் மிகப் பண்டைக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரத்தினக் கற்கள் மிகப் புராதன காலத்திலிருந்து அராபிய, சீன வர்த்தகர்களால் வாங்கப்பட்டுள்ளது. செங்கல் (களிமண்), சுண்ணாம்புக் கல் என்பவற்றின் பயன்பாட்டை மக்கள் தெரிந்திருந்தனர். இரும்புத்தாதைப் பிரித்தெடுத்து ஆயதங்கள் செய்வதற்கு மக்கள் அறிந்திருந்தனர். நீண்ட காலமாக உலக நாடுகளுக்கு இலங்கை தனித்துக் காரீயம் வழங்கி வந்துள்ளது.

இன்று இலங்கையில் இரத்தினக்கற்கள், காரீயம், சுண்ணாம்புக்கல், களிமண் வகைகள், கனிய மணல் வகைகள், இரும்புத்தாது, மைக்கா, அபதைற்று, உப்பு முதலியன கனிய வளங்களாக விளங்குகின்றன.

 இரத்தினக் கற்கள்
இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் கனியம் இரத்தினக் கற்களாகும். 1991 இல் இரத்தினக் கற்களின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 5 165 மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.

மிகப் பண்டைக் காலத்தில் இலங்கை இரத்தினக் கற்களுக்குப் புகழ் வாய்ந்ததாக இருந்துள்ளது. கிரேக்க, அராபிய, ரோம வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயரைப் பெற்றது.

இலங்கையில் இரத்தினபுரியே இரத்தினக் கற்களுக்கு முக்கியமான பகுதியாகும். அதனது பெயரே அந்த உண்மையைப் புலப்படுத்தும். இரத்தினபுரி சப்பிரகமூவா மாகாணத்தில் அமைந்துள்ளது. அண்மைக்காலத்தில் ஒக்க்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றுள்ளன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, றக்குவாணை என்பன இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக உள்ளன.

இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலும் காணப்படுகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினக் கற்கள் நரம்புப் படை அல்லது நாளப்படை எனும் சரளைக் கற்படையில்தான் காணப்படுகின்றன. நாளப்படை அழுத்தமான வட்டக் கற்களைக் கொண்டிருக்கும்.

இரத்தினக் கற்கள் பெறுவதற்குப் பூமியின் சுரங்கங்கள் தோன்றப்படுகின்றன. இதனை ‘இரத்தினக்கற் சுரங்கம்’ என்பர். நாளப்படை வரை தோண்டப்படும். நாளப்படை வந்ததும் துலாவின் உதவி கொண்டு சில தொழிலாளர் நீரை வெளியேற்ற, வேறு சிலர் இரத்தினக்கற்கள் உள்ள நாளப்படை மண்ணை வெளியேற்றுவர். இந்த மண் ‘இரத்தினக்கற் படலம்’ எனப்படும். மேலே கொண்டுவரப்பட்ட இம்மண் அரிதட்டில் இடப்பட்டு கழுவப்படும். கழுவப்பட்டபின் மதிப்புள்ள இரத்தினக் கற்களை, அழுத்தமான வட்டக் கற்களில் இருந்து பிரித்து எடுப்பர். தொழிலாளர்கள் கூலிக்கு வேலைசெய்வது கிடையாது. இரத்தினக்கற்களால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இரத்தினக்கற்களுக்கும் ஏனைய விலையுயர்ந்த கற்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. இரத்தினக் கல் நன்க வைரித்த கல்லாகும். இது துலக்கமானதும் பிரகாசம் பொருந்தியதுமாக விளங்கும். இரத்தினக் கற்களைச் செதுக்கி அழுத்தம் செய்யப்படு முன் அவை சாதாரண கற்களைப் போலவே இருக்கும். இரத்தினக்கற்கள் மழையினாலும் வெய்யிலினாலும் பாதிக்கப்படுவனவல்ல. அதனாற்றான் இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆற்றுப்படுக்கைகளில் சேதமுறாது கிடக்கின்றன.

நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் செதுக்கி அழுத்தம் செய்யப்பட்ட பின்பே உபயோகிக்க ஏற்றனவாகின்றன. செதுக்கி அழுத்தம் செய்தலைப் ‘பட்டை தீட்டுதல்’ என்பர். முஸ்லீம்களே பட்டை தீட்டுதலில் திறமையானவர்கள். பட்டை தீட்டுதலில் பழைய முறைகளே இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. இலங்கையில் இன்று காணப்படும் இரத்தினக்கற்களில் சபைர் என்ற நீலக்கல், ரூபி என்ற சிவப்புக்கல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். வைடூரியம் என்ற இரத்தினக்கல் றக்குவாணைப் பகுதியில் காணப்படுகின்றது. புஷ்பராகம், தொறாம்த என்ற வெண்ணீலக் கற்களும் காணப்படுகின்றன. அத்துடன் பதுமராகம், துதிமல், செவ்வந்திக் கல் எனும் இரத்தினக்கற்களுமுள்ளன.

இரத்தினக் கற்களை அகழ்தல், பட்டை தீட்டுதல், மினுக்குதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றிற்கு இலங்கையின் அரச இரத்தினக்கற் கூட்டுத்தாபனம் பொறுப்பாக இருந்து வருகின்றது.பட்டை தீட்டும் பயிற்சி நெறிகள் இரத்தினபுரியிலும் அகலிய கொடையிலும் இக்கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து ஆகிய மூன்று நாடுகள் முதன்மை வகிக்கின்றன. அத்தோடு குவைத், டூபாய், சவுதிஅரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் வாங்கி வருகின்றன.

உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிறேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது.

காரீயம்
இலங்கையின் கனிப்பொருட்களுள் மிக முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்கது காரீயமாகும். காரீயம் என்பது களித்தன்மை வாய்ந்த இறுகிய ஒரு பொருள். பென்சில், வர்ணம் (பெயின்ற்), உலர்மின்கலம், காபன், சப்பாத்து மினுக்கி என்பவை செய்ய காரீயமே தேவைப்படுகின்றது. இரும்புத்தாதை உருக்கவதற்கும் காரீயம் பயன்படுகிறது. பாத்திரங்கள் எரிவதைத் தவிர்க்க அவற்றின் உட்பகுதிகளுக்கும் காரீயம் பூசப்படுகிறது. இலங்கையில் காணப்படும் காரீயம் மிகவும் உயர்ந்த தரமானது. அதனால், உலகில் இலங்கைக்குக் காரீயத்திற்கு நல்ல மதிப்புண்டு.

இலங்கையின் பல பகுதிகளில் காரீயம் காணப்படுகின்றது. வவுனியா, ஹொரவுப் பொத்தானை, நிக்கவரட்டியா, தம்புளை என்னும் இடங்களை இணைக்கும் நாற்கோணப் பிரதேசத்தில் காரீயப்படிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. றுவான்வெல, குருநாகல், களுத்துறை, அக்குரச ஆகிய இடங்களிலும் காரீயம் காணப்படுகிறது. இன்று மூன்று பிரதான சுரங்கங்களிலே காரீயம் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றது. அவை : கஹட்டகஹச் சுரங்கம், கொலன்னாவைச் சுரங்கம், போகலைச் சுரங்கம் என்பனவாம். இவற்றில் முதலிரு காரீயச் சுரங்கங்களும் குரநபகல் மாவட்டத்திலும் மூன்றாவது கேகாலை மாவட்டத்திலுமுள்ளன.

காரீயம், உருமாறிய பாறைப்படைகளிடையே படிகம் போன்று சிதைவுறாது காணப்படும். இன்று 450 மீற்றர் வரை ஆழமான சுரங்கங்களில் தான் காரீயம் கிடைக்கின்றது. காரீயத்தைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய கைத்தொழில்கள் இலங்கையில் அதிகம் விருத்தியடையவில்லை. அதனால், அகழப்படும் காரீயத்தில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐக்கியஅமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான் ஆகிய கைத்தொழில் நாடுகளே இலங்கைக் காரீயத்தை அதிகளவில் வாங்கிக் கொள்கின்றன.

சுண்ணாம்புக்கல்
இலங்கையில் நல்ல முறையில் பயன்கொள்ளப்படும் கனிய வளமாகச் சுண்ணாம்புக்கல் விளங்குகின்றது. நமது நாட்டில் மூன்று வகையான சுண்ணாம்புக்கற் கனியங்களுள்ளன. அவை : அடையற் சுண்ணாம்புக்கல், பளிங்குருச் சுண்ணாம்புக்கல், முருகைக்கல் என்பனவாம். 
 i. அடையற் சுண்ணாம்புக்கல்
புத்தளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கின்ற கோட்டிற்கு வடக்கே அடையற் சுண்ணாம்புக்கல் காணப்படுகின்றது. இது மயோசீன் காலத்தில் கடலிலிருந்து மேல் உயர்த்தப்பட்ட சேதனவுறுப்பு அடையற் பாறையாகும். யாழ்ப்பாணக் குடாநாடு முழவதும் சுண்ணாம்புக்கற் பாறையாலானது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக்கல் வெளியரும்புகளைக் காண முடியும்.  காங்கேசன் துறையில் இயங்கிய சீமெந்து ஆலை இச்சுண்ணாம்புக் கல்லை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. புத்தளத்திலுள்ள சீமெந்து ஆலை அருகிலுள்ள அரவக்காடு என்ற இடத்திலிருந்து சுண்ணாம்புக் கல்லைப் பெற்றுக் கொள்கின்றது.

ii. பளிங்குருச் சுண்ணாம்புக்கல்
இலங்கையின் கொண்டலைற் பாறைகளிடையே பளிங்குருச் சுண்ணக்கல் நாளங்கள் அமைந்துள்ளன. அநுராதபுரம், கண்டி, பலாங்கொடை, பதுளை, வெலிமடை முதலான பிரதேசங்களில் பளிங்குருச் சுண்ணக்கல் பிறவகைப் பாறைகளிடையே நாளங்களாகக் காணப்படுகின்றன. பளிங்குருச் சுண்ணக்கல் சூளைகளில் சுடப்பட்டு கட்டடத் தேவைகளுக்குரிய சுண்ணாம்பு பெறப்படுகிறது. இவ்வகை சுண்ணக்கல் மங்கனீசைக் கூடுதலாகக் கொண்டவை. தொலமைற்றாகக் காணப்படுகின்றன.

iii. முருகைக்கல்
முருகைப் பல்லடியம் எனப்படும் கடல்வாழ் நுண்ணுயிர்களின் சுண்ணாம்புச்சத்து நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகவதால் முருகைக் கற்பார்கள் தோன்றுகின்றன. இவ்வகைப் பார்களை இலங்கையின் தென்மேல் கரையோரத்தில் அம்பலாங்கொடையிலிருந்து தெவிநுவரை வரை காணமுடியும்.

அத்துடன் குச்சவெளி, கல்குடா, நெடுந்தீவு, யாழ்ப்பாணக்குடாநாட்டுக் கரையோரங்கள் என்பவற்றிலும் முருகைக் கற்பார்களைக் காணமுடியும். சின்னப்பாசு, பெரியபாசு தீவுகளிலும் முருகைக் கற்பார்களுள்ளன. இவற்றையும் அகழ்ந்தெடுத்துச் சுட்டுச் சுண்ணாம்பாக்கி வருகின்றனர். முருகைக்கற்களை அகழ்ந்தெடுப்பதால், தென்மேல் கடற்கரையோரம் கூடுதலாக இருப்பதற்குள்ளாகி வருகிறது. அதனால் முருகைக் கற்கள் அகழ்வதைச் சட்டத்தின் மூலம் 1990 இலிருந்து நிறுத்தியுள்ளனர்.

களிமண் வகைகள்
இலங்கையில் காணப்படும் களிமண் வகைகளில் களிமண், வெண்களி என்பன முக்கியமானவை.
i. களிமண்
இலங்கையில் களிமண் பாத்திரங்களை வனைவதற்குப் பண்டை நாளிலிருந்து களிமண் பயன்படுத்தப்படுகின்றது. பானை சட்டிகள், செங்கற்கள், ஓடுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குக் களிமண் உபயோகமாகின்றது. மகாஓயா, களுகங்கை, களனிகங்கைப் பள்ளத்தாக்குகளிலும் குளங்களின் படுக்கைகளிலும் களிமண் காணப்படுகின்றது. ஒட்டுசுட்டான், அநுராதபுரம், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, அலுத்நுவர, களனி, அம்பாறை, யட்டியானை முதலான பகுதிகளில் செங்கற்கள், ஓடுகள் என்பவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுள்ளன. முருங்கனில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் களிமண்ணும் எலுவங்குளத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் களிமண்ணும் எலுவங்குளத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் களிமண்ணும் சீமெந்து உற்பத்திக்கு உதவும் ஒரு மூலப்பொருளாக உள்ளது.

ii. வெண்களி
பீங்கான் பொருட்கள் செய்வதற்கும் காகிதங்களை வழுவழுப்பாக்குவதற்கும் உதவுகின்ற வெண்களி இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகின்றது. கலுபோவில பெரஸ்கமுவ எனுமிடத்தில் ஏறத்தாழ ஒரு மில்லியன் தொன் களி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீற்றியகொடை பிரதேசத்திலும் வெண்களி காணப்படுகின்றது. வெண்களி சுத்திகரிப்பு ஆலை பெரலஸ்கமுவில் இயங்கி வருகின்றது. பொல்கொடை, தெதியாவளை ஆகிய இடங்களில் கடுஞ்சாம்பல் நிறங்கொண்டதும் படைத்தன்மை உடையதுமான ஒரு வகைக் களிமண் காணப்படுகின்றது. இதுவும் பீங்கான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் தெதியாவளையிலுள்ள களியைப் பயன்படுத்தி வருகின்றது.

கனிய மணல் வகைகள்
இலங்கையில் படிக மணல் (சிலிக்கா மணல்), இல்மனைட், மொனசைற், தோரியனைற் முதலான கனிய மணல் வகைகள் காணப்படுகின்றன. இவை பரும்படியாக்கத்திற்குப் பயன்படக் கூடியனவாக உள்ளன.
i.  படிக மணல்
கண்ணாடி உற்பத்திக்கு மூலப் பொருளாக அமையக்கூடிய சிலிக்கா மணற்படிவுகளை இலங்கையின் கரையோரங்களில் காணலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் பருத்தித்துறை, வல்லிபுரம், அம்பனை, நாகர்கோயில் பகுதியில் வடகீழ்ப் பருவக்காற்றினால் படிக மணல் குவிக்கப்பட்டிருக்கின்றது. கால ஓயா, களனி கங்கை, களுகங்கை போன்ற நதிகளின் முகத்துவாரங்களில் படிகமணல் காணப்படுகின்றது. மாறவலை - நாத்தாண்டியாப் பகுதியிலுள்ள படிக மணல் கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ii. இல்மனையிட்
இல்மனைற் படிவுகளும் படிக மணல் போன்று இலங்கையின் கரையோரங்களில் காணப்படுகின்றன. திருகோணமலைக்கு வடக்கேயுள்ள புல்மோட்டையிலும் மட்டக்களப்பிற்குத் தெற்கேயுள்ள திருக்கோயிலிலும் இல்மனையிட் படிவுகளுள்ளன. இல்மனையிட் கடற்கரையில் குவிக்கப்படும் ஒருவகை மணலிலிருந்து பெறப்படுகின்றது. புல்மோட்டையில் இல்மனைட் தொழிற்சாலை அமைந்துள்ளது. புல்மோட்டையில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் போதுமான இல்மனையிட் உள்ளதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் சுமார் 60 000 தொன்கள் வரையில் இல்மனையிட் யப்பானுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. இல்மனையிட் உயர்ந்த ரகத் தீந்தையின் மூலப் பொருளாகவும் உருக்குக் கலப்புப் பொருளாகவும் பயன்படுகிறது. இலங்கைக் கனிப்பொருட் கூட்டுத்தாபனம் இல்மனையிட் மணலைத் துப்பரவாக்கி ஏற்றுமதி செய்து வருகின்றது.

இரும்புத்தாது 
இலங்கையின் தென்மேல் பாகத்திலுள்ள பல இடங்களில் இரும்புத் தாது காணப்படுகின்றது. இரத்தினபுரி தொடக்கம் பலாங்கொடை வரை, மாத்தறை தொடக்கம் அக்குறசா வரை இரும்புத் தாதுப் படிவுகள் உள்ளன. சிறியளவில் (ரூவென்வெல) கண்டி, மாத்தளை, சிலாபம் ஆகிய இடங்களில் கிடைக்கின்றது. சிலாபத்தில் மாதம்பைக்கு அண்மையில் பன்னிரண்டாவை டினுமிடத்தில் மக்னதைற் இரும்புத்தாதுப் படிவொன்று, அதிக இரும்புத் தாது வீதத்தைக் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து மில்லியன் தொன்னுக்கு மேல் படிவு இருப்பதாக மதிப்பிட்பட்டுள்ளது. அத்துடன் தேலா, கஹவத்தை, அக்குரசை, கலவாணை ஆகிய பிரதேசங்களிலும் இரும்புத்தாது படிவுகள் உள்ளன. அண்மை ஆய்வுகள் பல புதிய இடங்களிலும் இரும்புத் தாதுப்படிவுகள் இருப்பதை அறியத் தருகின்றன. இலங்கையிலுள்ள இரும்புத் தாதைப் பயன்படுத்த நிலக்கரி இன்மை தடையாக உள்ளது. 

 உப்பு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரதான கனிப்பொருள் உப்பு ஆகும். உப்பு உற்பத்தியைப் பொறுத்தளவில் இலங்கை பூரண விருத்தியடைந்துள்ளது. கடல் நீரிலிருந்து பலவகைக் கனியங்களைப் பெறமுடியுமெனினும் உப்பு ஒன்றே இன்று நாம் உற்பத்தி செய்து வரும் கனியமாகும். அளங்களில் கடல் நீரைத் தேக்கி ஆவியாக விடுவதன் மூலம் உப்பு பெறப்படுகின்றது. இலங்கையில் ஆனையிறவு, அம்பாந்தோட்டை, நிலாவெளி, புத்தளம், கல்லுண்டாய், செம்மணி ஆகழய பகுதிகளில் உப்பளங்களுள்ளன. இவற்றில் ஆனையிறவு, கல்லுண்டாய் உப்பளங்கள் இன்றைய உண்ணாட்டுக் கலவரங்கள் காரணமாக இயங்குவதில்லை.

உப்புச் செய்கையை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றே நடாத்தி வருகின்றது. தனிப்பட்டவர்கள் உப்பை விளைவிக்க முடியாது. இலங்கையில் வருடாவருடம் 15 இலட்சம் மெட்றிக் தொன் உப்பு உற்பத்தியாகின்றது.

உப்பிலிருந்து வேறுபல உபபொருட்கள் பெறப்படுகின்றன. விவசாயத்திற்கு உரம் பெறப்படுகின்றது. சீமெந்து செய்வதற்கு சிலா சத்து உற்பத்தி செய்யப்படுகின்றது. நீரைச் சுத்திகரிப்பதற்குக் குளோரின் பெறப்படுகின்றது. வேறுபல இரசாயனப் பொருட்களும் பெறப்படுகின்றன.

 ஏனைய கனியங்கள்
மின் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் மைக்கா, இலங்கையின் பல பகுதிகளில் காணப்படுகின்றது. துட்டுவவ, இரத்தோட்டை, மாத்தளை, உடுமுல்லை, உல்விட்ட, அப்புத்தளை முதலான பிரதேசங்களில் மைக்கா கிடைக்கின்றது. முத்துராஜவெலப் பகுதியில் முற்றா நிலக்கரி காணப்படுகின்றது. வளமாக்கிகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் கனிய வளமான அபதைற்று, எப்பாவெல எனுமிடத்தில் கிடைக்கின்றது. துலாகொடை, கைக்காவலை, நாமல்ஓயா முதலிய பகுதிகளில் பெல்ஸ்பார் காணப்படுகின்றது. இவற்றோடு மாபிள் (சலவைக்கல்), கருங்கல் படிகம், கபுக்கல், மொனசைற் ஆகியனவும் இலங்கையிற் கண்டறியப்பட்டுள்ள கனிய வளங்களாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |