Sunday, July 31, 2016
துலாம்
சித்திரை 3,4-ம் பாதம் 75% சுவாதி 80% விசாகம் 1,2,3-ம் பாதம் 77%
விறுவிறுப்பையும், உண்மையையும் நேசிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கவுரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரயஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பங்குவர்த்தகம் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள்.
பிள்ளைகளை அன்பால் வழி நடத்துங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசுக்காரியங்கள் தாமதமாகி முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும்.
குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதாக அமையும்.
விருச்சிகம்
விசாகம் 4-ம் பாதம் 85% அனுஷம் 90% கேட்டை 91%
விசாகம் 4-ம் பாதம் 85% அனுஷம் 90% கேட்டை 91%
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும்.
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும்.
வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள்.