கும்பம்
அவிட்டம் 3,4 பாதம் 72% சதயம் 85% பூரட்டாதி 1,2,3-ம் பாதம் 77%
மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு பகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். குருபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் குரு அமர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடிப் பெற வேண்டி வரும்.
இந்த குருப்பெயர்ச்சி ஒரு பக்கம் பணவரவையும், மறுபக்கம் கூடுதல் செலவுகளையும் தருவதாக அமையும்.
மீனம்
பூரட்டாதி 4ம் பாதம் 80% உத்திரட்டாதி 85% ரேவதி 83%
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வெளியில் சொல்ல முடியாதபடி பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும், வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும்.

உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
புதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.
மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும் ஆர்வமின்மை, காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புத் தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தையும், பணம், பதவியையும் தந்து உயர்த்தும்.
0 Comments