தனுசு
மூலம் 68% பூராடம் 72% உத்திராடம் 1ம் பாதம் 77%
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம்! ஓரளவு நன்மையே உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். என்றாலும் குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு. குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கவுரவப் பதவி தேடி வரும். ஆனால் குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டா கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும்.
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இந்த குருமாற்றம் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
மகரம்
உத்திராடம் 2,3,4-பாதம் 80% திருவோணம் 90% அவிட்டம் 1,2-ம் பாதம் 85%
பெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 9-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல உத்யோகம் அமையும். இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். குருபகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
குருபகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு சில நாட்களில் குடிப்புகுவீர்கள். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வீண் பழிச் சொல் வரக்கூடும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
0 comments: