Home » » கல்லடி பிரதேசமும்; சுவாமி விபுலானந்தரும், சிவானந்தா தேசிய பாடசாலையும் ஓர் கண்ணோட்டம்

கல்லடி பிரதேசமும்; சுவாமி விபுலானந்தரும், சிவானந்தா தேசிய பாடசாலையும் ஓர் கண்ணோட்டம்

திரு. கந்தசாமி நடராஜா (சிரேஸ்ட பிரஜை, கல்லடி உப்போடை நொச்சிமுனை )
"ஒரு சமூகத்தின் வரலாறும், அடையாளங்களும், பண்பாடுகளுமே அந்த சமூகத்தை மேலோங்க வைப்பவை"
ஆரம்ப வரலாறு என்பது பாதுகாக்கப்பட்டு அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டும். நாம் இவ் விடயத்தில் பாரிய தவறுகளை இழைத்து வருவது மாற்றப்பட வேண்டிய ஒன்றே. வரலாற்றுத் தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் சுவாமி விபுலானந்தரின் சமாதி தினமான இன்று இக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
சிவானந்தா தேசிய பாடசாலை ஸ்தாபிப்பதற்கான எண்ணக்கருவும், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆசியும்
1925ஆம் ஆண்டு காலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். வசதி படைத்தவர்கள் மாத்திரமே மட்டக்களப்பு வாவியை படகுத்துறை மூலம் கடந்து நகர்ப்புறம் சென்று ஆங்கிலக்கல்வியை பெற்று வந்தார்கள். நமது பிரதேசத்தின் பெரும்பாலானோர் ஆங்கிலக்கல்வியை பெற முடியாத நிலையே காணப்பட்டது. 

இக் கல்வியை பெற்றால்தான் எமது பிரதேச மக்கள் பொருளாதார ரீதியில் நிமிர்ந்து எதிர்காலத்தில் கௌரவத்துடன் வாழ முடியும் என்பதை உணர்ந்த அமரர் K.O.வேலுப்பிள்ளையின் மனதில் ஆங்கிலப்பாடசாலையை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருப்பெற்றது. இவ் எண்ணத்தை ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பஞ்சாயத்து சபைக்கு K.O.வேலுப்பிள்ளை வெளிப்படுத்தினார். 

பஞ்சாயத்து சபை கல்லடி உப்போடை, நொச்சிமுனை மக்களுக்கு இந் நல்ல செய்தியை தெரிவித்தனர். மக்கள் பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர். ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான், பேச்சித்தாயாரின் ஆசியுடன் முத்தமிழ் வித்தகரை சந்தித்து ஆங்கிலப்பாடசாலை அமைப்பது என்ற எண்ணத்தை சுவாமியிடம் வெளிப்படுத்துவது என்று ஆலயத்தில் வைத்து முடிவெடுக்கப்பட்டது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருடனான சந்திப்பு
1925 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் அவர்கள் துறவறம் பெற்று மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த காலம். K.O.வேலுப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆலய பஞ்சாயத்து சபை, தமிழ் கலவன் பாடசாலை நிர்வாக சபை, கல்லடி உப்போடை நொச்சிமுனை மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் சுவாமியை சந்தித்தனர். ஆங்கிலப்பாடசாலை ஒன்றை ஸ்தாபிக்கும் எண்ணத்தை சுவாமியிடம் K.O.வேலுப்பிள்ளை வெளிப்படுத்தி, கல்லடி பிரதேசத்திற்கு வருகை தருமாறு அழைப்பையும் விடுத்தார்.
கல்லடி பிரதேசத்திற்கு சுவாமியின் வருகை
அமரர் K.O.வேலுப்பிள்ளை அவர்கள் தலைமையில் கல்லடி, கல்லடி உப்போடை நொச்சிமுனை மக்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட வரவேற்பை வழங்கினர். K.O.வேலுப்பிள்ளைக்கு சொந்தமான இரட்டை குதிரைகள் பூட்டிய வண்டியில் கல்லடி துறையிலிருந்து ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பின்புற மைதானத்திற்கு சுவாமி அழைத்து வரப்பட்டு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் கோரிக்கை
ஆங்கிலப்பாடசாலை ஸ்தாபிப்பது பற்றி கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுவாமி விபுலானந்தர் சகல வசதிகளுடன் பாடசாலையை ஸ்தாபித்து ஒப்படைக்கும் பட்சத்தில் தன்னால் பாடசாலையை நிர்வகிக்க முடியுமென்ற கோரிக்கையை சுவாமி வெளிப்படுத்தினார்.

பாடசாலையை ஸ்தாபித்து வழங்குவதற்கான K.O.வேலுப்பிள்ளையின் உறுதிமொழி
அமரர். கதிர்காமத்தம்பி உடையாரும் அமரர். சபாபதிப்பிள்ளை உடையாரும் இணைந்து 1909ஆம் ஆண்டு கல்லடி உப்போடையில் சுவாமி விவேகானந்தரின் சீடர்களில் ஒருவரான சகோதரி அவபாமியா அம்மையாரை அடிக்கல் நட வைத்து ஒரு தமிழ் கலவன் பாடசாலையினை நிறுவினர். இவர்களின் உள்ளத்தில் பிரதேச மக்களின் நலன் கருதி ஆங்கிலப்பாடசாலை ஒன்றை எதிர்காலத்தில் நிறுவ வேண்டுமென்ற எண்ணத்தில் 1910ஆம் ஆண்டு K.C.V.K  கம்பனியில் 5000 ரூபாய்களை வைப்புச்செய்திருந்தனர். 

இந் நிதியையும் சேர்த்து தனது சொந்த நிதியுடனும் பாடசாலையை ஸ்தாபித்து தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தையும் வழங்குவதாக K.O.வேலுப்பிள்ளை அவர்கள் இக் கூட்டத்தில் உறுதி மொழி வழங்கினார். சுவாமி அவர்கள் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற உணர்வுடன் இருந்தமையால் இவ் உறுதி மொழியை பெரு மனதுடன் ஏற்றுக்கொண்டார்.
சிவானந்தா தேசிய பாடசாலைக்கு அடிக்கல்
26.11.1925 அன்று சுவாமி விபுலானந்தர் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது. அதன் பின் K.O.வேலுப்பிள்ளையினால் பாடசாலை ஆரம்பக்கட்டடம் கட்டப்பட்டது. ஆலய பஞ்சாயத்து சபை, கல்லடி உப்போடை நொச்சிமுனை பிரதேச மக்கள் ஆதரவை நல்கினர்.

பாடசாலை ஆரம்பம்
15.04.1929 அன்று சமய அனுட்டானப்படி சுவாமி விபுலானந்தர் பாடசாலையை ஆரம்பித்தார். 22.04.1929 அன்று அக்கால மாகாண அரசாங்க அதிபராக கடைமையாற்றிய திரு. ஹரிஷன் ஜோன்ஷன் அவர்களால் அதிகார பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 
ஸ்தாபிக்கப்பட்ட கட்டடம், நிலம், தளபாட வசதிகள் சுவாமியிடம் K.O.வேலுப்பிள்ளையால் கையளிப்பு
24.04.1929 அன்று மு.ழு வேலுப்பிள்ளை அவர்கள் பாடசாலை ஆரம்ப கட்டடம் 15 ஏக்கர் நிலம் (பாடசாலை, சிவபுரி சுவாமி விபுலானந்தர் சமாதி, மணிமண்டபம் பாலர் பாடசாலை, சிவானந்த வித்தியாலய மாணவர் விடுதி, சிவானந்தா விளையாட்டு மைதானம் என்பன அமைந்துள்ள காணி) பாடசாலை நடத்துவதற்கான 18000 ரூபாய் பெறுமதியான வளங்களை 2809 இலக்க சாசனம் மூலம் கையளித்தார். இச் சாசனத்தில் சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் கல்லூரி, முறக்கொட்டாஞ்சேனை வித்தியாலயம் (K.O.வேலுப்பிள்ளையால் ஸ்தாபிக்கப்பட்டது) என்பன அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
சிவானந்தா தேசிய பாடசாலை நடத்துவதற்கான குழு
பாடசாலை சுவாமி விபுலானந்தரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் இதனை நிர்வகிக்கும் பொறுப்பு கல்லடி உப்போடை நெச்சிமுனை மக்களிடமே விடப்பட்டது. திரு. க.உ வேலுப்பிள்ளை, நொ.சீ.செல்லத்துரை, நா. சின்னத்தம்பி, நு.க.நல்லதம்பி, தோ.சந்திரசேகரம், ச.உ.ரத்தினசிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. க.உ.வேலுப்பிள்ளை பொருளாளராக கடமையாற்றினார். 

இவர்கள் பாடசாலை வளர்ச்சிக்கு தாரளமான நிதியுதவி அளித்ததுடன் மாணவர்களை ஊக்கப்படுத்தி பாடசாலையில் இணைப்பதில் பெரும் பங்காற்றினர். மேற்படி சம்பவங்கள் சிவானந்தா தேசிய பாடசாலையின் வளர்ச்சியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று அடையாளமாகும். 

1931ஆம் ஆண்டு அரசாங்க உதவி பெறும் பாடசாலையாக மாற்றப்படும் வரை மேற்படி குழுவினர் பாடசாலையை பராமரிப்பு செய்து வந்தனர். 1931இற்கு பின்பு குறிப்பிட்ட காலம் வரை கல்லடி உப்போடை நொச்சிமுனை வாழ் மக்களிடம் நிதியுதவி பெறப்பட்டு பாடசாலை நடத்தப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இராமகிருஸ்ண மிஷன் மாணவர் இல்லம் கல்லடி உப்போடையில் அமைவதற்கு வித்திட்ட நிகழ்வு
சுவாமி விபுலானந்தருக்கு கல்லடி பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு போல் வேறு எந்த பகுதியிலும் கிடைக்கவில்லையென்றே கூற வேண்டும். 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீ ராம கிருஸ்ண மிஷனால் வண்ணார் பண்ணை வெள்ளிக்கிழமை மடத்திலிருந்து வைத்தீஸ்வரர் வித்தியாலத்தில் கல்வி கற்ற 7 மாணவர்கள் அழைத்துவரப்பட்டு சிவானந்தா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டனர். 

இம் மாணவர்கள் தங்குவதற்காக திரு. K.O.வேலுப்பிள்ளை அவர்கள் தமக்கு சொந்தமான ராஜ்மஹால் இல்லத்தை தங்குவதற்கான விடுதியாக கொடுத்தார். சுவாமி விபுலானந்தர் அவர்களும் இங்கேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவபுரி அமைந்துள்ள இடத்தில் மாணவர் இல்லம் அமைக்கப்படும் வரை (1931 வரை) இவர்கள் அனைவரும் ராஜ்மஹால் இல்லத்தில் தங்கிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாமி விபுலானந்தரின் கல்லடி பிரதேசத்தின்பால் கொண்டுள்ள நல்லெண்ணமும் நன்றியும் கௌரவமும்
சுவாமியை சந்திப்பதற்கு ஒரு நாள் K.O.வேலுப்பிள்ளையுடன் சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா ஆகியோர் சென்றிருந்தனர். அச் சந்திப்பில் சுவாமிஜி அவர்கள் கல்லடி பிரதேசத்தில் தனக்கு கிடைத்த அன்பு ஆதரவு ஒத்துழைப்பு என்பன வேறு எந்தவொரு இடத்திலும் கிடைக்கவில்லையென்றும் தனக்கு இப்பிரதேச மக்களுடன் இரண்டற கலந்து வாழ வேண்டுமென்ற ஆசைதான் இறையடி சேர்ந்த பின் தனது உடலை தகனம் செய்யாமல் சிவபுரி அமைந்துள்ள இவ் வளாகத்தில் சமாதி வைக்க வேண்டுமென்றும் இதுவே தனது இறுதி ஆசை என்றும் தெரிவித்தார்.
சுவாமி விபுலானந்தரின் மறைவும் சமாதியும்
1947ஆம் ஆண்டு சுவாமி இறைபதம் எய்தினார். சுவாமியின் விருப்பப்படி K.O.வேலுப்பிள்ளை தலைமையிலான பிரதேச மக்கள் சிவபுரி வளாகத்தில் சுவாமியை சமாதி வைத்தனர். இந் நிகழ்வுக்கு சாண்டோர் சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா போன்றோர் அர்ப்பணிப்புடன் பிரதேச மக்களுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது . அன்று தூர நோக்க சிந்தனையுடன் பாரம்பரிய முறைகளை தவிர்த்து இவர்கள் செய்த துணிச்சலான செயற்பாடு முத்தமிழ் வித்தகரை தினமும் அவ் வழியால் செல்லும்போது மனதால் வணங்கி செல்ல முடிகின்றது.

1931ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின் 26 பாடசாலைகள் ஊர் வள்ளல்களால் ஸ்தாபிக்கப்பட்டு சுவாமிகளிடம் நிர்வகிக்க கையளிக்கப்பட்டது. அந்தப் பாடசாலைகளில் கல்வி பயின்ற மாணவர்களை ஆங்கிலக் கல்விக்காக சிவானந்த பாடசாலைக்கு அழைத்து வந்து ஆங்கிலப் புலமையை விருத்தி செய்தனர். 

மொத்தத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் நல்லாசிரியர்களும், பேராசிரியர்களும், கலாநிதிகளும், வைத்திய திலகங்களும், பொறியியலாளர்களும், சட்டத்தரணிகளும், அரச அதிகாரிகளும் உருவாக அத்திவாரம் இட்டது கல்லடி பிரதேசத்தின் தூர நோக்கான சிந்தனை என்பது மறுக்க முடியாத உண்மை . 

ஒரு ஊரினதும், சமூகத்தினதும் வளர்ச்சிக்கு சான்றாக இருப்பது அந்த ஊரினது வரலாறும் அவ்வூரின் கல்வி, கலாசார, சமய விழுமியங்களினதும் வரலாறுமாகும். ஒரு கிராமம் வளர்ச்சியடைந்து பட்டினமாக, நகரமாக காலவோட்டத்தில் மாறினாலும் அதன் படிப்படியான வளர்ச்சியும்,வரலாறும் அதனோடு ஒட்டிய மக்களின் நிலைப்பாடும் கர்ண பரம்பரைக் கதையாக மாத்திரம் இருந்து விடாது எழுதப்பட்ட ஓர் ஆவணமாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

கல்லடி உப்போடை நொச்சிமுனை மக்களின் அர்ப்பணிப்புள்ள சேவைகள், கல்வி, கலாசார, சமய விழுமியங்களின் நிலைப்பாடுகள் எழுத்தில் இருப்பது பிற்கால சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சற்றேனும் ஜயமில்லை. 

மொத்தத்தில் சுவாமி விபுலானந்தரை கல்லடி பிரதேசத்திற்கு அழைத்து வந்து அவர் சமாதி அடையும் வரை அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் கல்வி, கலாசார சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர்களே. 

உசாத்துணை நூல்கள்
1. ராமகிருஸ்ண மிஷன் வெள்ளி விழா மலர்
2. ராமகிருஷ்ண மிஷன் பவள விழா மலர்
3. சிவானந்தா தேசிய பாடசாலை பொன் விழா மலர்
4. சிவானந்தா தேசிய பாடசாலை பவள விழா மலர்
5. விவேகானந்தா மகளீர் கல்லூரி 90ஆம் ஆண்டு மலர்
6. விவேகானந்தா மகளீர் கல்லூரி நூற்றாண்டு மலர்
7. மட்டக்களப்பின் பண்பாட்டியல் - திரு. காசுபதி நடராஜா, 2000.12.28 (தினக்கதிர்)
8. 1928.04.25 அன்று ராமகிருஷ்ண மிஷனுக்கு சுவாமி விபுலானந்தர் ஊடாக வழங்கப்பட்ட சாசனம் - (இலக்கம்-2809).
9. அமரர்களான வை.க விநாயகமூர்த்தி, திருமதி. செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை,திரு.K.O.V.கதிர்காமதம்பி ஆகியோர் நேரடியாக தெரிவித்த கருத்துக்கள்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |