BATTICALOA TAMIL JOURNALIST ASSOSIATION ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டி நாளை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

Tuesday, May 31, 2016


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை புதன்கிழமை காலை 9.00மணியளவில் நடாத்தவுள்ளது.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்ககோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அரசியல் பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய நடேசன் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயலாளர்
வா.கிருஸ்ணகுமார்,
0774369759
READ MORE | comments

வைத்தியர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வைத்தியர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00மணி முதல் நண்பகல் 12.00மணி வரை வைத்தியர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் காரணமாக வைத்திய நடவடிக்கைகள் காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்கள் இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியர்கள் நியமனங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தே இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
இதன்காரணமாக காலைமுதல் கிளினிக்சேவை மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.IMG_0084IMG_0085
READ MORE | comments

களனி பல்கலைக்கழகம் மீண்டும் நாளை திறப்பு

உணவு ஒவ்வாமையினால் மூடப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாணவர்கள் அனைவரும் 12 மணிக்கு முன்பதாக பல்கலை  கழகத்திற்கு சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது  .
READ MORE | comments

5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மஸ்கெலியா காட்மோட் தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
READ MORE | comments

இடி – மின்னல் தாக்கத்தால் மின்பாவனைப் பொருட்கள் சேதம்

மலையகத்தில் இடி – மின்னலுடன் கூடிய கடும் மழை   பெய்து வருகின்றது. இதனால் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் உள்ள பல வீடுகளின் மீது இடி – மின்னல் தாக்கியதன் காரணமாக அவ்வீட்டிலிருந்த மின்பாவனைப் பொருட்கள் பல சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் வேலை செய்துக்கொண்டிருந்த வேளையில் இவ்வீடுகளின் மீது இடி மின்னல் தாக்கியதாகவும் இதன்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

அவசர கூட்டத்துக்கு கிழக்கு முதலமைச்சர் அழைப்பு

Monday, May 30, 2016

இன்று   மாலை அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர்   நசீர் அகமட், அம் மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
READ MORE | comments

2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்குமா…?

தமிழர் தரப்புக்கு 2016 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பிறந்திருந்தது. தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமை, அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமை என்பன அதுவரை இருந்த அடக்கு முறையை குறைத்து அரசாங்கத்தின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு மேலாக 2009 மே முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் தரப்பின் அரசியல் தலைமையாக கருதப்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் ’2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும்’ என்ற செய்தி கூட 60 வருடமாக பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் சந்தித்து உரிமைக்காக போராடிய தமிழினத்திற்கு ஒரு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்திருந்தது. இதனால் 2016 ஆம் ஆண்டு எதிர்ப்பு நிறைந்த ஆண்டாக மாறியிருந்தது. ஆனால் இன்று அந்த ஆண்டின் அரைவாசிக் காலம் கூட உருண்டோடிவிட்ட நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் கூட பலரிடமும் எழத் தொடங்கியுள்ளது. நியாயமான தீர்வுக்கான நகர்வுகளை கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா என்ற கேள்வி கூட எழுந்துள்ளது.
tpf--012015 பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற போது புலம்பெயர் தேசத்திலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி தமிழர் தரப்பு இரண்டு பட்டு செயற்பட்டிருந்தது. தீவிர தமிழ் தேசியக் கொள்கையுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமலையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு சார்பான அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான அணி என்ற கடும் போட்டி நிலை இருந்தது. இது யாழ்ப்பாணத்தில் உச்சநிலையும் பெற்றிருந்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முறை இரு ஆசனங்களை யாழில் பெறும் என்ற எதிர்பர்ப்புக்கூட கூட்டமைப்பிடம் இருந்தது. இந்த இரட்டைப் போட்டி நிலையில் தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ’2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும். அதனை குழப்ப வேண்டாம்’ என கூறியிருந்தார். தீர்வுக்காக 60 வருடமாக போராடிய தமிழினம் அதனை தட்டிக் கழிக்க விரும்பாது. தீர்வுக்காக மக்கள் அலை ஏற்பட்டது. போட்டியாக கருதப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாத நிலைக்கு செல்ல கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கிய மக்கள் 16 உறுப்பினர்களை வடக்கு, கிழக்கில் தெரிவு செய்து பாராளுமன்றத்தின் மூன்றாவது சக்தி என்ற நிலையையும் அடைய வைத்தனர். இதனால் சம்மந்தன் தரப்பு அமோக வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் பதவியைக் கூட பெற்றுக் கொண்டார். ஆகவே 2016 தீர்வு என்ற விடயம் ஒரு தேர்தல் இராஜதந்திரம் தானா என்ற கேள்வியும் உண்டு.
download (63)ஏனெனில் இந்த ஆண்டின் ஆறாம் மாதம் நெருங்கும் நிலையில் கூட தீர்வுக்கான நல்லெண்ண முயற்சிகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க போவதாக தெரிவித்து அதற்கான மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளை கூட நாடு பூராகவும் மேற்கொண்டிருந்தது. ஆனால் இதில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்த அளவு ஓப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணமும் உண்டு. கடந்த காலங்களைப் போன்று இதுவும் ஒரு கண்துடைப்பு என தமிழ் மக்கள் கருதியிருந்தனர். மற்றொன்று தமிழ் மக்களை இதில் கலந்து கொண்டு கருத்துக்களை கூற வைக்க தமிழ் தலைமைகள் தவறியிருந்தன. அதனால் அவர்களால் பெறப்பட்ட கருத்துக்களில் கூட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்த கருத்துக்கள் குறைவாகவே பதிவாகிய நிலையில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அரசிலமைப்பு சபையாக 225 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை பராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் அரசிலமைப்பு தொடர்பில் 21 பேர் கொண்ட குழுவையும் அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அமைத்துள்ளது. இதில் பல இனவாதிகளும் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அங்கத்துவம் வகித்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகிய வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி ஆட்சி என்பவற்றை தமிழர் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்ட ஒருசிலர் அங்கத்துவம் வகிக்கும் இந்த அரசியலமைப்பு குழுவில் எடுத்துக் கூறுகின்ற போது அதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற பெரிய கேள்வி உள்ளது. அதனை கூட்டமைப்பின் சார்பில் உள்ளவர்களால் அங்கு செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.
Wigneswaran-with-Sambanthan-1தீர்வு ஒரு இரவில் கிடைத்து விடக்கூடிய விடயமல்ல. ஆனால் அதற்கான சமிக்ஞைகளாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற சிறிய சிறிய பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாது இந்த அரசாங்கம் தடுமாறி வரும் நிலையில் இந்த அரசிலமைப்பு சபை மூலம் தீர்வைப் பெறலாம் என்ற நம்பிக்கை எப்படி வரும். ஆகவே இந்த விடயத்தில் தமிழர் தரப்பு உசாராக இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதனை கூட்டமைப்பின் தலைமை தட்டிக் கழித்து விடவும் முடியாது. ஏனெனில் இது சம்பந்தனது பிரச்சனையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினது பிரச்சனையோ இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை. அதனால் இந்த அரசிலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றை உள்ளடக்கிய அரசாங்க தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இதனையே பங்காளிக் கட்சிகளும் கடந்த இரு மாதத்திற்கு மேலாக எதிர்கட்சித் தலைவரிடம் கோரியும் வருகின்றனர். ஆனால் அது நடைபெறுவதாக இல்லை. அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற போது தமிழர் தரப்பின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் கூட்டமைப்பு பிரதான இரு கட்சிகளிடமும் முன்வைத்து பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலும் தற்போதைய அரசியல் களநிலை தொடர்பில் வடக்கு முதலமைச்சர் தம்மை சந்திக்கும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடமாகாண சபை ஊடாக ஒரு சமஸ்டி தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழர் தரப்பு எதிர்பார்ப்புக்களை கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திடம் விபரிக்க முடியும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடக்கு முதலமைச்சரின் அழுத்தங்களை ஒரு இராஜ தந்திரமாக கையாண்டு அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் குழு ஒரு அழுத்தைத் பிரயோகிக்க முடியும். ஆனால் அது நடைபெறுவதாக தெரியவில்லை. மாறாக மௌன அரசியலை கூட்டமைப்பு தலைமை செய்து வருகிறது.
download (64)கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட இந்த ஆண்டு தீர்வு கிடைக்கும் என்ற இரா.சம்பந்தன் அவர்களின் கருத்தை புறந்தள்ளத் தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே தீர்வைப் பெற முடியும். ஒரு இருதரப்புக் பேச்சுக்கான ஆயத்தத்தை மேற்கொள்ளுமாறு சம்மந்தன் அவர்களிடம் வலியுறுத்தி உள்ள அதேவேளை, அழுத்தங்களைக் கொடுக்காது 2016 தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் மக்கள் சந்திப்புக்களில் தெரிவித்துள்ளது. இதே கருத்தை தான் பங்காளிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பும் கொண்டுள்ளது. அண்மையில் புளொட் அமைப்பின் 8வது தேசிய மாநாடு வவுனியாவில் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த புளொட் தலைவர் த.சிதார்த்தன் புதிய அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு எமது கூட்டமைப்பின் தலைவர் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என தெரிவித்திருந்தார். பங்காளிகள் என்ற வகையில் அதற்காக நாமும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில் 2016 தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவ்வாறு தீர்வு கிடைக்காது விட்டால் ஜனநாயக ரீதியாக நாம் போராட நிர்ப்பந்திக்கப்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
mulliஆகமொத்தில் அரசாங்கத்திற்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்காது, பேச்சுக்கள் நடத்தாது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என நினைப்பது வெறுப் பகல் கனவே. நாம் மாறியுள்ள இந்த சர்வதேச சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தீர்வுக்கான அழுத்தங்களையும், பேச்சுக்களையும் செய்ய வேண்டும். இதனை தமிழ் மக்களும் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். மௌனமாக இருப்பதும், கொடுப்பதை ஏற்றுக் கொள்வதும் 60 வருட போராட்டத்திற்கும் உயிரிழப்புக்களுக்கும் செய்யும் ஒரு துரோகமே. இதனை தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாத வரைக்கும் 2016 தீர்வு என்ற சம்பந்தனின் கருத்து வெறும் தேர்தல் இராஜதந்திரமாக மட்டுமே இருக்கப் போகிறது.
READ MORE | comments

லிந்துலை ரோயல் கல்லூரியில் மண்சரிவு அபாயத்திற்கான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின்   கனிஷ்ட பிரிவான ரோயல் கல்லூரியின் கட்டிடத்தில் ஒன்று மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பான கட்டிடமொன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின் அங்கு நிலைமையை அவதானிக்க நேரடியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சென்றிருந்தார். அவரோடு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன், பாராளுமன்ற ஆராய்ச்சி உதவியாளர் பெ. ஜெட்ரூட் ஆகியோர் சென்றிருந்தனர்.
 நிலைமையை அவதானித்த மாகாண சபை உறுப்பினர் பாடசாலை அதிபர் ஜேசுதாசனோடு  நிலைமை தொடர்பாக கலந்துரையாடி உடனடியாக மத்திய மாகாண சபை முதலமைச்சரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு பாடசாலை அதிபரோடும் முதலமைச்சரை தொலைபேசியில் உரையாடவைத்தார்.
பின் இது தொடர்பில் நுவரெலிய கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு பாடசாலை அதிபரூடாக நிலைமை தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து நுவரெலிய கல்விப்பணிப்பாளருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இவ்வனர்த்தம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுமெனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார். df
READ MORE | comments

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் நாளை பணிப் பகிஸ்கரிப்பு

வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இதன்படி, குறிப்பிட்ட வைத்தியசாலைகள் தவிர்த்து ஏனைய மருத்துவமனைகள் அனைத்திலும் நாளை காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை இவ்வாறு அடையாளப் பணிப் பகிஸ்கரிப்
READ MORE | comments

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

2017ஆம் ஆண்டில்  அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்றுநிருபம்  கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கவுள்ள பெற்றோர் சுற்றுநிருபத்தில் உள்ளவாறு முறையாக விண்ணப்பங்களை பூரணப்படுத்தி ஜுன் 30ஆம் திகதிக்கு முன்னர் தாம் பிள்ளையை அனுமதிக்க விரும்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு   அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
READ MORE | comments

நீங்கியது தடை

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் நசீர் அஹமட் அனுமதிக்கப்பட கூடாது எனவும் மேற்கொண்ட தீர்மானத்தை நீக்கிக் கொள்ள முப்படையினர் தீர்மானித்துள்ளனர்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்ககோரி இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் சங்கங்கள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த கவன ஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு புதுப்பாலம் ஊடாக திருமலை வீதியை அடைந்து திருமலை வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு பேரணியின்போது கால்நடை பண்ணையாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான், வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின்கீழ் உள்ள மகாவலிஅபிவிருத்தி சபை,வனவிலங்கு திணைக்களம்,வனவிலங்கு திணைக்களம்,வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான எல்லைப்பகுதிகளில் உள்ள அரச காணிகளில் சுமார் 175,000 கால்நடைகள் நீண்டகாலமாக இப்பகுதியை மேய்ச்சல் தரையாக பயன்படுத்திவந்த நிலையில் இந்த நிலப்பகுதியில் கடந்த காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிவந்ததாகவும் ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் எதுவித தீர்வும் காணப்படவில்லையெனவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் சுமார் 27ஆயிரம் ஹெக்டயர் காணிகளை மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்துமாறு மத்திய காணி ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் இதுவரையில் இது நிறைவேற்றப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சல் தரையாக இனங்காணப்பட்ட பகுதிகள் சிலவற்றை மகாவலி அபிவிருத்தி சபையும் வன இலாகாவும் தங்கள் அபிவிருத்தி பணிகளுக்காக வனவளர்ப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது இனங்காணப்பட்ட பகுதிகளை மேயச்சல் தரையாக பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்,மட்டக்களப்பு மாவட்ட இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு நல்லின காளைகளையும் பசுக்களையும் பண்ணையாளர்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்,போக்குவரத்து பாதைகள் சீர்படுத்தவேண்டும்போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த பேரணியின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம்,மா.நடராஜா ஆகியோரும் கலந்துகொண்டதுடன் மகஜர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்த கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.IMG_0035IMG_0058IMG_0067IMG_0069IMG_0072
READ MORE | comments

மட்டக்களப்பு ஏறாவூரில் விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

Sunday, May 29, 2016

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் விவசாயிகள் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் அந்த அலுவலகம் சனிக்கிழமை 28.05.2016 கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் ஏறாவூர் விவசாயிகள் தமது விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவல்களை முடித்துக் கொள்வதற்காக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மட்டக்களப்பு-பதுளைவீதிப் பகுதி கூமாச்சோலையில் அமைந்துள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஏறாவூர் – மீராகேணியிலுள்ள ஒரு விவசாயி கூமாச்சோலையிலுள்ள கமநல சேவைகள் அலுவலகத்திற்குச் செல்வதாயின் சுமார் 10 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியிருந்தது.
அதேவேளை போக்கு வரத்து வசதி இல்லாததால் கிராமப் புறங்களிலுள்ள விவசாயிகள் ஏறாவூர் நகரப் புறம் வரை கால்நடையாகவே நடந்து வந்து கூமாச்சோலைக்குச் சென்று வந்தார்கள்.
ஒரு விவசாயியின் நேர விரயம், பொருளாதார இழப்பு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு விவசாய விரிவாக்கற் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குரிய விவசாய விரிவாக்கல் நிலையத்தை ஏறாவூர் நகரில் அமைக்குமாறு ஏறாவூர் விவசாயிகள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்த நிலையில் அந்த விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் ஏறாவூர் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுஸைன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் உள்ளிட்டோரும் விவசாய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

DSC04963
DSC04959
READ MORE | comments

கிழக்கு மாகாண அதிபர் வெற்றிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது உரியகாலத்தில் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுவதில்லை என கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது விடயமாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா ஞாயிறன்று 29.05.2016 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அதிபர்கள் நியமனத்தின்போது தொழிற் சங்கங்களின் அழுத்தங்கள் ஏற்படுகின்ற வேளையில் மட்டும் கண்துடைப்பிற்காக விண்ணப்பம் கோரப்படுகின்றது. ஆனால் விண்ணப்பித்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
இதற்கு சான்றாக திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டு வருடங்கள் பல கழிந்தும் நேர்முகத்தேர்வு இடம்பெறவில்லை.
மேலும் சமகாலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 10 இற்குமேற்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட போதும் திருகோணமலை வலயத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளுக்கு மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஆனால், திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பின்வரும் பாடசாலைகளான கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம், கும்புறுபிட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம், வெள்ளைமணல் அல்அஸார் முஸ்லிம் மகா வித்தியாலம், நாமகள் வித்தியாலயம், துவரங்காடு பாரதி வித்தியாலயம் இவற்றுடன் மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரி, ஆலங்கேணி வினாயகர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிக அதிபர்களினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஏன் இப்பாடசாலைகளிலுள்ள அதிபர் வெற்றிடங்களுக்கும் விண்ணப்பம் கோரமுடியாதா? அவ்வாறு விண்ணப்பம் கோரமுடியாமைக்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என்பதும் தெரியவில்லை.
ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது, கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு ஆகியோரின் செல்வாக்கிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரப்படுவதில்லை,
உரிய முறையில் அதிபர் நியமனங்களை வழங்காமல் காலம் தாழ்த்துவது,
தற்கால அதிபர்களின் சேவைக் காலத்தை அதிகரித்து சேவையில் நிரந்தரமாக அமர்த்த முயற்சித்தல்,
அதிகாரிகளின் உறவினர்களை குறித்த பாடசாலையில் வைத்திருப்பதற்காகவும் தற்காலிக அதிபர்களை பயன்படுத்துதல்
இவ்வாறான செயற்பாடுகளும் அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் தலையீடு போன்ற காரணங்களால் கிழக்கு மாகாணத்தில் செயற்திறன் மிக்க சிறந்த அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனாலேயே இப்பொழுது கிழக்கு மாகாணம் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் 9வது இடத்தை தக்கவைக்க நேர்ந்துள்ளது.
இது வேதனைக்குரிய விடயமாகும் எனவே இவ்வாறான செயற்பாடுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
READ MORE | comments

படுகொலைசெய்யப்பட்ட நடேசனின் 12வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இனந்தெரியாதேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடி மன்றேசா வீதியிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கக்கட்டத்தில்இந் நிகழ்வு நடைபெறவுபுள்ளதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்றது.
ஜு.நடேசன், நெல்லை நடேசன், என பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்பு நண்பர்கள், புத்திஜீவிகள் உரையாற்றினர்.
2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய நடேசன் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியரும் தமிழ்தந்தியின் பிரதம ஆசிரியருமான வி.தேவராஜன் சிறப்புரையாற்றியதுடன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நடேசனின் படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
IMG_0084IMG_0090IMG_0092jh
READ MORE | comments

38 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 38 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடரந்தும் மாகாணத்திலுள்ள 23 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலைக் காரணமாக மாகாணத்திலுள்ள சுமார் 10,000 மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழைக் காரணமாக 12 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 மாணவர்கள் காணாமற்போயுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வட, கிழக்கு மாகாணங்களுக்கான அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களை அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதற்கும் அரசாங்கம் அதியுயர் பெறுபேறுகளைக்கொண்ட மீள்குடியேற்ற கருத்திட்டங்களை இம்மாகாணங்களில் அமுல்படுத்துவதற்காக ரூபா 14 பில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
இக்கருத்திட்டங்களானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் துரிதகதியில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அலுமுல்படுத்தப்படுகின்றன.
நிரந்தர வீடுகள்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சினால் 9,000 நிரந்தர வீடுகள் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும், 630 வீடுகள் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதி குடும்பங்களுக்கும், 400 வீடுகள் முன்பு அச்சுறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லைக்கிராமங்களுக்கும் மொத்தமாக 10,000 மேற்பட்ட நிரந்தர வீடுகளை அமைக்கும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கென ரூபா 8,024 மில்லியன் நிதி வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அலுமுல்படுத்தப்படுகின்றன.
இவற்றில் 3,140 வீடுகள் யாழ் மாவட்டத்திலும் 1,035 வீடுகள் கிளிநொச்சியிலும், 1,035 வீடுகள் முல்லைத்தீவிலும், 1,140 வீடுகள் மன்னாரிலும், 910 வீடுகள் வவுனியாவிலும் 1,120 வீடுகள் திருகோணமலையிலும், 1,000 வீடுகள் மட்டகளப்பிலும் 165 வீடுகள் அம்பாறையிலும் 80 வீடுகள் புத்தளத்திலும் 240 வீடுகள் பொலன்நறுவையிலும் 65 வீடுகள் அனுராதபுரத்திலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பகுதியாக சேதமடைந்த வீடுகளை புனரமைத்தல்
மேலும் பகுதியாக சேதமடைந்த 2,400 வீடுகளை புனரமைப்பதற்காக ஒரு வீட்டுக்கு தலா 200,000 ரூபா வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் 720 பகுதியாக சேதமடைந்த வீடுகள் யாழ் மாவட்டத்திலும் 120 வீடுகள் கிளிநொச்சியிலும், 170 வீடுகள் முல்லைத்தீவிலும், 200 வீடுகள் மன்னாரிலும், 50 வீடுகள் வவுனியாவிலும் 100 வீடுகள் திருகோணமலையிலும், 1,000 வீடுகள் மட்டகளப்பிலும் 100 வீடுகள் அம்பாறையிலும் புனரமைக்கப்படுகின்றன. இதற்காக ரூபா 480 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டள்ளது.
நீர் விநியோகம் மற்றும் சுகாதாரக் கருத்திட்டங்கள்
உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதி குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 7,600 கழிப்பறை (மலசலகூடங்கள்) வசதிகள் ரூபா 418 மில்லியன் நிதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் 1,200 கழிப்பறை அலகுகள் யாழ். மாவட்டத்திலும் 1,000 அலகுகள் கிளிநொச்சியிலும், 1,000 அலகுகள் முல்லைத்தீவிலும், 1,000 அலகுகள் மன்னாரிலும், 1,000 அலகுகள் வவுனியாவிலும் 1,000 அலகுகள்; திருகோணமலையிலும், 1,000 அலகுகள் மட்டகளப்பிலும் 400 அலகுகள் அம்பாறையிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
நீர் விநியோக கருத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 39 கிணறுகளை அமைத்தல், 108 கிணறுகளை புனரமைத்தல், 5 விவசாயக் கிணறுகளை அமைத்தல், 77 விவசாய கிணறுகளை புனரமைத்தல் மற்றும் 12 நீர்விநியோகத் தொகுதிகளை அமைத்தல் ஆகியவை அமுல்படுத்தப்படுகின்றன.
முல்லைத்தீவில் 101 கிணறுகள், 26 குழாய்க்கிணறுகள், 15 விவசாயக் கிணறுகள் மற்றும் 402 நீர்விநியோக இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீர்விநியோக திட்டங்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டு அவை தொடர்பான கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏனைய மாவட்டங்களில் இதற்கென ரூபா 50 - 75மில்லியன் ரூபா வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதி குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொது பயன்பாட்டு கிணறுகள் மற்றும் அதிக பங்குடைய கிணறுகளை விவசாய கிணறுகளையும் புனரமைப்பதன் மூலம் நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார அபிவிருத்தி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்கள், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதி குடும்பங்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தடன் மீள ஒருங்கிணைக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுவலுவுள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதியுயர் தொகையாக ரூபா 100,000 வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்திக் கீழ் 12,050 குடும்பங்கள் பயன்பெறுவர். இதற்கென ரூபா 1,205 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார உதவிகள் கோழிவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, மாடு வளர்ப்பு, மீன்பிடி, குடிசைக் கைத்தொழில், விவசாயம் மற்றும் ஏனைய வருமானம் ஈட்டும் தொழில்களை உள்ளடக்கும்.
யாழ் மாவட்டத்தில் 3,000 குடும்பங்களுக்கும் கிளிநொச்சியில் 1,600 குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் 1,500 குடும்பங்களுக்கும், மன்னாரில் 1,600 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 1,500 குடும்பங்களுக்கும் திருகோணமலையில் 1,300 குடும்பங்களுக்கும் மட்டக்களப்பில் 1,000 குடும்பங்களுக்கும் அம்பாறையில் 550 குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உட்கட்டமைப்பு அபிவிருத்தி
மேலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளான உள்ளக வீதிகள், வீடுகளுக்கான இலவச மின்சார விநியோக இணைப்புகள், பாடசாலைகளைப் புனரமைத்தல், வைத்தியசாலைகளை புனரமைத்தல், முன்பள்ளிகள் மற்றும் ஏனைய உட்கட்டடைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபா 630 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் யாவும் துரிதகதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.அரசாங்கம் நிரந்தர வீடுகள், பகுதியாக சேதமடைந்த வீடுகள், நிர்விநியோகம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் ஆகிய நிரந்தரமான தீர்வுகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதிகூடிய முன்னுரிமை வழங்கியுள்ளது.
இம்முன்னெடுப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்க மாகாணங்களில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற கருத்திட்டங்களுக்காக 2016 ம் ஆண்டு ரூபா 14 பில்லியன் ஒதுக்கீடு என்பன சமாதானம் மற்றும் நல்லினக்கத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றன.
இவை தவிர மேலம் பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவ்வமைச்சின் செயலாளர் வெளியிட்டு ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

தமிழரின் அரசியல் தலைமை?

பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வழியாகவே பார்க்கப்பட்டது. அந்த வகையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரபாகரன் என்னும் நாமமே தமிழ் தேசியத்தின் குறியீடாக இருந்தது. அன்றைய சூழலில் பிரபாகரனை அவரது பலம் பலவீனங்களோடு ஏற்றுக் கொள்வதை தவிர தமிழ் சூழலில் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. அனைவருக்குமே பிரபாகரனின் வெற்றி தேவைப்பட்டது. பிரபாகரனை விமர்சித்தவர்கள் கூட பிரபாகரனிடமிருந்து வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதன் விளைவாகத்தான் அனைவருமே பிரபாகரனின் பக்கமாக நகர வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. பிரபாகரனை தவிர்த்து தமிழர் அரசியலில் இயக்க முடியாது என்னும் யதார்த்தத்தின் விளைவுதான் அதுவரை அவருடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த ஏனைய பிராதான அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் அவரது தலைமையின் கீழ் ஒன்றுபட முன்வந்தன. இதன் விளைவாக தோற்றம் பெற்றதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. இன்று கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா.சம்பந்தன் கூட அன்று பிரபாகரனையும் அவரது ஆளுமையையும் ஏற்றுக் கொண்டிருந்தார். 2009இற்கு பின்னர் சம்பந்தன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்த ஒருவர் ஏன் விடுதலைப் புலிகளை ஏற்க வேண்டிவந்தது? இப்பத்தியாளர் மேலே குறிப்பிட்ட விடயங்கள்தான் இதற்கான பதில்.
2009இற்கு பின்னரான அரசியல் சூழல் அடிப்படையிலேயே வேறுபட்டதாக இருப்பினும் கூட, ஒரு சில ஒற்றுமைகளை இங்கும் காணலாம். 2009இற்கு பின்னரான சூழலில் சம்பந்தன் ஒரு தவிர்த்துச் செல்ல முடியாதவொரு ஆளுமையாக வெளித்தெரிந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில அங்கம் வகித்துவரும் கட்சிகளுக்குள் சம்பந்தன் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், அவை அவ்வப்போது வெளிப்பட்டிருப்பினும் கூட, சம்பந்தனின் ஆளுமையை தாண்டி எவராலும் முன்நோக்கி செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு 2009இற்கு பின்னரான அரசியல் சூழலை சம்பந்தன் தனது தனிப்பட்ட ஆளுமையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார். எவர் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்த போதும் அவர் தன்னுடைய அரசியல் இயங்குநிலையிலிருந்து பின்வாங்கவில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் 2009இற்கு பிற்பட்ட சூழலில் அவருடன் முரண்பட்டவர்கள் அனைவருமே அவரின் முன்னால் தங்களை ஒரு அரசியல் சக்தியாக நிறுவுவதில் தோல்வியடைந்திருக்கின்றனர். இதனை சம்பந்தனின் வெற்றி என்பதை விடவும் அவரை எதிர்த்தவர்களின் அரசியல் அணுகுமுறையில் உள்ள குறைபாடுகளாகவே இப்பத்தி காண்கிறது. ஆனால் அவரை எதிர்த்தவர்கள் அல்லது முரண்பட்டவர்களின் இயலாமை சம்பந்தனின் ஆளுமையை மேலும் பலப்படுத்துவதற்கே பயன்பட்டது. இந்த வகையில் நோக்கினால் பிரபாகரனின் மறைவுக்கு பின்னரான கடந்த 7 வருடங்கள் என்பது சம்பந்தன் என்னும் தனிமனிதரின் ஆளுகைக்குள் தமிழ் அரசியல் கட்டுப்பட்டுக் கிடந்த காலம்தான்.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலில் குறிப்பாக சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், சம்பந்தன் என்னும் ஆளுமை ஒரு தனி ஆளுமையாக தொடர்வதில் சில நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன. சம்பந்தன் கொழும்புடன் அதிகம் நெருங்கிச் செல்லும் தன்மையும், வடக்கு மாகாணத்தில் அதிலிருந்து விலகிச் செல்லும் தன்மையும் தமிழ் தேசியவாத அரசியலில் ஒரு விரிசலாக வெளித்தெரிகிறது. இந்த விரிசலுக்கு ஊடாகத்தான் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனித்து தெரியத் தொடங்கினார்.
நீதியரசர் விக்கினேஸ்வரனை தமிழ் அரசியல் களத்துக்குள் இழுத்து வந்தவர் சம்பந்தன்தான். ஆரம்பத்தில் ஏனைய கட்சிகள் முக்கியமாக இலங்கை தமிழரசு கட்சி விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட போது, அந்த எதிர்ப்புக்களை தன்னுடைய ஆளுமையால் சாதாரணமாக ஓரங்கட்டியவரும் சம்பந்தன்தான். அன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பியவர்களிடம் சம்பந்தன் ஒரு விடயத்தையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். அதாவது, எங்களுக்கு ஒரு படித்தவர் தேவை, அவர் உலகவங்கியுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும். சர்வதேசம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியான ஒருவர்தான் விக்கினேஸ்வரன். இதன் மூலம், மாவை சோனாதியை அவ்வாறான தகுதிகள் இல்லாத ஒருவர் என்றே சம்பந்தன் நிராகரித்திருந்தார். பெருந்தன்மைமிக்க மாவை வழமைபோலவே பெருந்தன்மையாகவே ஒதுங்கிக் கொண்டது. ஒரு வேளை விரைவில் தமிழரசு கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு கூட அவர் தகுதியற்றவர் என்று ஓரங்கட்டப்படலாம். கிடைக்கும் தகவல்களின் படி மூவர் தமிழரசு கட்டசியின் தலைவர் பதவிக்காக முன்வரிசையில் இடித்துக்கொண்டு நிற்கின்றனராம். அன்று சம்பந்தன் தகுதி அடிப்படையிலேயே விக்கினேஸ்வரனை முதன்மைப்படுத்துவதாக கூறினாலும் கூட அது மட்டும்தானா காரணம் என்னும் கேள்வி இப்பத்திடம் உண்டு.
விடயங்களை சற்று ஆழமாகப் பார்த்தால், தமிழ் அரசியல் சம்பந்தனின் முழுமையான ஆளுகைக்குள் வந்ததன் பின்னர் முதலில் ஒரு உடைவே நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளால் தமிழ் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உண்மையில் சம்பந்தனின் இலக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அல்ல மாறாக ஏனைவர்களே! கூட்டமைப்பிலிருந்து ஒருவரை வெளியேற்றுதல் என்பது மிகவும் இலகுவானது அதாவது ஒருவருக்கு தேர்தலில் ஆசனத்தை வழங்காது விடுவது. முன்னர் துப்பாக்கி இருந்த இடத்தில் தற்போது வேட்பாளர் பட்டியல் இருக்கிறது. கஜேந்திர குமாரின் வெளியேற்றத்தின் பின்னரேயே சுமந்திரனின் அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. சுமந்திரன் தமிழ் தேசிய அரசியல் பரப்புடன் எவ்விதமான தொடர்புமற்ற ஒருவர். ஆனால் சம்பந்தன் சுமந்திரனுக்கு முக்கியமான இடத்தை வழங்கியிருந்தார். இன்றைய சூழலில் சம்பந்தனுக்கு அடுத்து கொழும்பிற்கும் கூட்டமைப்பிற்குமான தொடர்பாடல் புள்ளியாக இருப்பவர் சுமந்திரன் என்பது அனைவரும் அறிந்த சங்கதி. சம்பந்தனது எதிர்பார்ப்பிற்கு அமைவாகவே சுமந்திரனும் இயங்கி வருகின்றார். இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கின் முதலமைச்சராக விக்கினேஸ்வரனை கொண்டுவருவதில் சம்பந்தன் தனிப்பட்ட ஆர்வம் எடுத்துக் கொண்டார். இப்பத்தியாளரின் கணிப்பின் படி, சம்பந்தன் போட்ட அரசியல் கணக்கு வேறு. அதாவது, தமிழர் அரசியல் தனது பூரண ஆளுமைக்குள் இருக்கின்ற போதே, வடக்கு கிழக்கின் அரசியல் தலைமையை வடக்கு கிழக்கிற்கு வெளியில் கொண்டு போவது. இதன் மூலம் வடகிழக்கை அடிப்படையாக் கொண்ட தமிழ் தேசியவாத அசியலை கருத்தியல் ரீPதியில் பலம்குன்றச் செய்வது. ஆனால் சுமந்திரன் விடயத்தில் கைகொடுத்த மேற்படி அரசியல் கணக்கு விக்கினேஸ்வரன் விடயத்தில் பிழைத்துப் போனது. விக்கினேஸ்வரனை வடக்கின் முதலமைச்சராக்கிவிட்டு தன்னுடை ஆளுகைக்குள் கட்டுப்படுத்தி, கையாள முடியுமென்றே சம்பந்தன் எண்ணியிருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. ஆரம்பத்தில் சில விடயங்களில் குழப்பமான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் கூட, நாளடைவில் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த விடயங்களில் உறுதியான நிலைப்பாடுள்ள ஒருவராகவே தன்னை நிரூபித்திருந்தார். இதன் காரணமாக வடக்கிலும் புலம்பெயர் சூழலிலும் அவரது நன்மதிப்பு உயர்ந்தது. உண்மையில் வடக்கின் மத்தியதர வர்க்கம் அவ்வளவு இலகுவாக அடிப்படைகளை கைகழுவிவிட்டு, கொழும்புடன் இணைந்து செல்லும் அரசியலை ஆதரிக்காது. இதற்கு மாவை சோதிராஜாவின் கருத்துக்களே சிறந்த சான்று. உண்மையில் சம்பந்தனும் மாவையும் ஒரே கட்சியில் இருந்தாலும் கூட, வடக்கின் சூழலில் இயங்கும் மாவை எப்போதும் வடக்கின் நிலைமைகளுக்கு ஏற்பவே பேசிவருவதை காணலாம்.
வடக்கு கிழக்கின் அரசியல் வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருப்பவர்களால் கையாளப்படும் போது அதன் அரசியல் உறுதிப்பாடு இயல்பாகவே வீழ்ச்சியடைந்துவிடும் என்பதே சம்பந்தனின் கணிப்பாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு சூழலில் தனது எண்ணங்களை எதிர்ப்பின்றி அரங்கேற்றலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்தார் என்பதை விடவும், இங்கு எதுவும் சரிவராது ஏதோ கிடைப்பதை பெற்றுக் கொள்ளும் ஒரு அணுகுமுறைதான் சரியென்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் விக்கினேஸ்வரன் வடக்கில் நிலைகொண்டு இயங்கத் தொடங்கிய பின்னர் அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் முற்றாகவே மாற்றமடைந்தன. தமிழரின் அரசியல் கோரிக்கைகள் சாகாமல் இருக்க வேண்டுமென்பதில் விக்கினேஸ்வரனிடம் காணப்படும் உறுதிப்பாடு சம்பந்தனிடம் காணப்படவில்லை. தலைமை என்பது சூழலை கையாளுவது மட்டுமல்ல தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை சாகாமல் பேணிப்பாதுகாப்பதற்கான அரசியல் ஒழுங்கையும் கொண்டிருக்க வேண்டும். அந்த ஒழுங்கு என்பது அந்த கோரிக்கைளில் உறுதியாக நின்று கொண்டு, குறிப்பிட்ட சூழலை கையாளுவதில்தான் தங்கியிருக்கிறது. சூழலை கையாளுவது என்பது நெகிழ்வாக பயணிப்பதுதான் ஆனால் எந்த இடத்தில் நெகிழ்ந்து கொடுப்பது? – எந்த இடத்தில் இறுக்கிப் பிடிப்பது? என்பதில்தான் அந்த கையாளுகையின் வெற்றி தங்கியிருக்கிறது.
ஒரு உரிமைசார் அரசியலை கையாளும் தலைமை என்பதை நாம் இரண்டு விதமாக நோக்கலாம். ஒன்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையால் உருப்பெறும் தனிப்பட்ட ஆளுமையின் விளைவான தலைமை மற்றையது, ஒரு குறிப்பிட்ட சூழலின் தேவை கருதி ஏற்படுத்திக் கொள்ளப்படும் ஜக்கிய முன்னணியின் ஊடான தலைமை. பிரபாகரனின் தலைமைத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட ஆளுமையாகவே இருந்தது. அவரது விருப்பு வெறுப்புக்களின் விளைவாவே அரசியல் பார்க்கப்பட்டது. அதன் வீழ்ச்சிக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட சம்பந்தனும் தன்னுடைய தனிப்பட்ட ஆளுமைக்குள்ளேயே தமிழ் அரசியலை சிறைப்படுத்தியிருக்கின்றார். உண்மையில் தனிப்பட்ட ஆளுமைகளில் ஒரு மக்களுக்கான அரசியல் இயங்குநிலை தங்கியிருப்பதானது மிகவும் ஆபத்தானது. அது பேராளுமைகளாக இருந்தாலும் கூட, அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தான் எதிர்கொள்ளவுள்ள வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் அதுவே ஒரு ஜக்கிய முன்னணியாக இருப்பின் அதன் இயங்குநிலை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமாகும். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவரால் தமிழர் கோரிக்கைகளில் உறுதியாக நிற்க முடியாது. அந்த வகையில் உறுதியானதொரு தலைமைத்துவத்தின் கீழ் ஜக்கிய முன்னணி ஒன்றிற்கான தேவை முன்னர் எப்போதுமில்லாதவாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியின் பின்னர் அவ்வாறானதொரு ஜக்கிய முன்னணியின் தேவைப்பாட்டை உணரும் நிலைமை நிச்சயம் ஏற்படலாம். அது சாத்தியப்படாது போகும் போது, தமிழர் அரசியல் கோரிக்கைகள் ஒன்றில் சிதைவுறும் அல்லது மலினப்படுத்தப்படும்.
READ MORE | comments

காரைதீவில் பொறியியலாளர் மரணம் !

Saturday, May 28, 2016

சுமார் பத்து வருடங்கள் வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் தன்னந்தனியனாக வாழ்ந்துவந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த பவளன் என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம்(வயது 57) எனும் பொறியியலாளரே இவ்விதம் மரணமானவர்.
இவர் இருவாரங்களுக்கு முன்பு மரணித்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஏனெனில் சடலம் உருக்குலைந்தநிலையில் காணப்பட்டது.


இவரது சடலம் நேற்று வியாழனன்று சம்மாந்துறைப் பொலிசாரின் விசாரணையின் பின்பு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.நசீலின் பிரசன்னத்தின்போது அவரது உத்தரவிற்கமைய பிரேத பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரியின் பார்வைக்கு அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அவர் பற்றி அவரது உறவினர்கள் கூறியதிலிருந்து தெரியவருவதாவது:
காரைதீவைச்சேர்ந்த செல்லத்துரை நடேசானந்தம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றவர். பட்டப்பின்படிப்பின்பின்பு சீறா நிறுவனத்தில் பணியாற்றிருந்தார் .திருமணமாகவில்லை.
பின்பு காயத்திரி மந்திரத்தில் பற்றுப்பிடித்த அவர் அவரது சகோதரியின் வீட்டின் வெளிச்சமின்றிய அறையில் தனிமையாக தியானத்தில் வாழ்ந்துவந்தார். சிலவேளை மெழுகுதிரி மட்டும் எரியுமாம்.
சூரியஒளி புகாவண்ணம் கும்மிருட்டிலே நிருவாணமாக தியானத்திலிருந்துவந்தார் என்றும் கூறப்படுகிறது..அவருக்கான உணவு ஒரு வழியால் அனுப்பட்டுவந்தது.


விசித்திரமான கிணறு வடிவ வீடு!
சுனாமியின்பின்பு அவர் தனக்கென பிரத்தியேகமாக அவரால் வடிவமைக்கப்பட்ட கிணறு வடிவமான பெரிய வீடொன்றை காரைதீவு பொது நூலகத்திற்கருகாமையில் காத்திரமாக நிருமாணித்தார். அவ் விசித்திரமான வீடு மூன்று படைகளை அதாவது 3 சுவர்களை கொண்டு கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
குழாய்நீர் வசதி மின்சார வசதி சகலதும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வீட்டினுள் அவர் 2007 அளவில் குடியேறி இறக்கும்வரை சூரியவெளிச்சமின்றி தன்னந்தனியனாக வெளியுலகத்தொடர்பின்றி வாழந்துவந்திருக்கின்றார். அவருக்குத் தேவையான உணவுகள் அவர்தம் உறவினரால் ஆனால் ஒருவரால் மட்டும் குறிப்பிட்ட வழியால் வழங்கப்பட்டுவந்தது.   வங்கியில் பணம்கொடுக்கல் வாங்கலுக்காக ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இறக்கும் வரை யாருமே உட்செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு தடவை விசேட அதிரப்படையினர் தேடுதலின்போது சென்றுவந்ததாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது.
இறுதிக்காலகட்டத்தில் அவர் தானே சமைத்து உண்பதாக தெரிவித்தமையினால் உணவுப்பொருட்கள் கொள்வனவின் நிமித்தம் கடைக்காரரொருவருக்கும் இவருக்கும் தொடர்பிருந்துள்ளது.இதுதவிர உறவினரொருவரிடமும் செல்போனில் பேசுவாராம்.

மரண சந்தேகங்கங்களுக்கான காரணங்கள்!
இத்தொடர்புகள் கடைசி ஒருவாரம் தடைபட்டிருந்ததாகவும் அவருக்கு செல்லும் குழாய்நீர் மானி (இது வீட்டிற்கு வெளியிலிருக்கிறது)வேலைசெய்யாமலிருந்ததாகவும் வழமையாக வெளியில் எரியும் மின்குமிழ்கள் எரியாமலிருந்ததாகவும் வீட்டைச்சுற்றி ஒருவித துர்நாற்றம் வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வியாழனன்று காலை அவரது உறவினரொருவர் இவர் வாழ்ந்துவந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றபோதுஅவர் பிணமாக கட்டிலின் குறுக்காக கிடந்தாராம்.ஆனால் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசியநிலையில் கிடந்தார். பொதுமக்கள் பலரும் சென்று பார்த்துள்ளனர்.

அம்பாறைக்கு அனுப்பிவைப்பு!
சம்மாந்துறைப்பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் வந்து பார்வையிட்டு மாலை  நீதிவான் வரும்வரை பாதுகாப்பாக இருந்து நீதிவானின் உத்தரவிற்கமைய சடலத்தை மேலதிக சட்டவைத்தியஅதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாறைக்கு அனுப்பிவைக்கத் தயாரானார்கள்.
பெருந்திரளான பொதுமக்கள் இச்சம்பவத்தை கேள்வியுற்று இவ்விடத்தில் கூடியிருந்தனர். மரணித்தவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் கூடியிருந்தனர்.வெண்ணிற பொலிதீனினால் சுற்றப்பட்ட சடலத்தை கொண்டுசெல்லும்போது கவலையுடன் கதறியழுதனர்.
மாலை 6.20மணியளவில் படி ரக சிறிய லொறியில் சடலம் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.தனிமையிலிருந்த செல்வந்தரான இவர் சிலவேளை கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்பதால் சகல விசாரணைகளும் பரிசோதனைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புரியாதபுதிர்!
57வயதுடைய பொறியியலாளரான இவர் ஏன் இவ்வாறு 10வருட காலம் வெளியுலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்துவந்தார் என்பது இன்றும் இன்னும்  மக்கள் மத்தியில் புரியாத புதிராகவுள்ளது.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |