Home » » கிழக்கு மாகாண அதிபர் வெற்றிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை

கிழக்கு மாகாண அதிபர் வெற்றிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படவில்லை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது உரியகாலத்தில் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுவதில்லை என கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது விடயமாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா ஞாயிறன்று 29.05.2016 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அதிபர்கள் நியமனத்தின்போது தொழிற் சங்கங்களின் அழுத்தங்கள் ஏற்படுகின்ற வேளையில் மட்டும் கண்துடைப்பிற்காக விண்ணப்பம் கோரப்படுகின்றது. ஆனால் விண்ணப்பித்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
இதற்கு சான்றாக திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டு வருடங்கள் பல கழிந்தும் நேர்முகத்தேர்வு இடம்பெறவில்லை.
மேலும் சமகாலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 10 இற்குமேற்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட போதும் திருகோணமலை வலயத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளுக்கு மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஆனால், திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பின்வரும் பாடசாலைகளான கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம், கும்புறுபிட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம், வெள்ளைமணல் அல்அஸார் முஸ்லிம் மகா வித்தியாலம், நாமகள் வித்தியாலயம், துவரங்காடு பாரதி வித்தியாலயம் இவற்றுடன் மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரி, ஆலங்கேணி வினாயகர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிக அதிபர்களினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஏன் இப்பாடசாலைகளிலுள்ள அதிபர் வெற்றிடங்களுக்கும் விண்ணப்பம் கோரமுடியாதா? அவ்வாறு விண்ணப்பம் கோரமுடியாமைக்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என்பதும் தெரியவில்லை.
ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது, கோட்டக்கல்வி அதிகாரி, வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு ஆகியோரின் செல்வாக்கிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரப்படுவதில்லை,
உரிய முறையில் அதிபர் நியமனங்களை வழங்காமல் காலம் தாழ்த்துவது,
தற்கால அதிபர்களின் சேவைக் காலத்தை அதிகரித்து சேவையில் நிரந்தரமாக அமர்த்த முயற்சித்தல்,
அதிகாரிகளின் உறவினர்களை குறித்த பாடசாலையில் வைத்திருப்பதற்காகவும் தற்காலிக அதிபர்களை பயன்படுத்துதல்
இவ்வாறான செயற்பாடுகளும் அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் தலையீடு போன்ற காரணங்களால் கிழக்கு மாகாணத்தில் செயற்திறன் மிக்க சிறந்த அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனாலேயே இப்பொழுது கிழக்கு மாகாணம் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் 9வது இடத்தை தக்கவைக்க நேர்ந்துள்ளது.
இது வேதனைக்குரிய விடயமாகும் எனவே இவ்வாறான செயற்பாடுகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |