Home » » 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்குமா…?

2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்குமா…?

தமிழர் தரப்புக்கு 2016 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பிறந்திருந்தது. தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமை, அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமை என்பன அதுவரை இருந்த அடக்கு முறையை குறைத்து அரசாங்கத்தின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு மேலாக 2009 மே முள்ளியவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் தரப்பின் அரசியல் தலைமையாக கருதப்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் ’2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும்’ என்ற செய்தி கூட 60 வருடமாக பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் சந்தித்து உரிமைக்காக போராடிய தமிழினத்திற்கு ஒரு நிம்மதி பெருமூச்சைக் கொடுத்திருந்தது. இதனால் 2016 ஆம் ஆண்டு எதிர்ப்பு நிறைந்த ஆண்டாக மாறியிருந்தது. ஆனால் இன்று அந்த ஆண்டின் அரைவாசிக் காலம் கூட உருண்டோடிவிட்ட நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் கூட பலரிடமும் எழத் தொடங்கியுள்ளது. நியாயமான தீர்வுக்கான நகர்வுகளை கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா என்ற கேள்வி கூட எழுந்துள்ளது.
tpf--012015 பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற போது புலம்பெயர் தேசத்திலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி தமிழர் தரப்பு இரண்டு பட்டு செயற்பட்டிருந்தது. தீவிர தமிழ் தேசியக் கொள்கையுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமலையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு சார்பான அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான அணி என்ற கடும் போட்டி நிலை இருந்தது. இது யாழ்ப்பாணத்தில் உச்சநிலையும் பெற்றிருந்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முறை இரு ஆசனங்களை யாழில் பெறும் என்ற எதிர்பர்ப்புக்கூட கூட்டமைப்பிடம் இருந்தது. இந்த இரட்டைப் போட்டி நிலையில் தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ’2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும். அதனை குழப்ப வேண்டாம்’ என கூறியிருந்தார். தீர்வுக்காக 60 வருடமாக போராடிய தமிழினம் அதனை தட்டிக் கழிக்க விரும்பாது. தீர்வுக்காக மக்கள் அலை ஏற்பட்டது. போட்டியாக கருதப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாத நிலைக்கு செல்ல கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கிய மக்கள் 16 உறுப்பினர்களை வடக்கு, கிழக்கில் தெரிவு செய்து பாராளுமன்றத்தின் மூன்றாவது சக்தி என்ற நிலையையும் அடைய வைத்தனர். இதனால் சம்மந்தன் தரப்பு அமோக வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் பதவியைக் கூட பெற்றுக் கொண்டார். ஆகவே 2016 தீர்வு என்ற விடயம் ஒரு தேர்தல் இராஜதந்திரம் தானா என்ற கேள்வியும் உண்டு.
download (63)ஏனெனில் இந்த ஆண்டின் ஆறாம் மாதம் நெருங்கும் நிலையில் கூட தீர்வுக்கான நல்லெண்ண முயற்சிகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க போவதாக தெரிவித்து அதற்கான மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளை கூட நாடு பூராகவும் மேற்கொண்டிருந்தது. ஆனால் இதில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்த அளவு ஓப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணமும் உண்டு. கடந்த காலங்களைப் போன்று இதுவும் ஒரு கண்துடைப்பு என தமிழ் மக்கள் கருதியிருந்தனர். மற்றொன்று தமிழ் மக்களை இதில் கலந்து கொண்டு கருத்துக்களை கூற வைக்க தமிழ் தலைமைகள் தவறியிருந்தன. அதனால் அவர்களால் பெறப்பட்ட கருத்துக்களில் கூட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்த கருத்துக்கள் குறைவாகவே பதிவாகிய நிலையில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அரசிலமைப்பு சபையாக 225 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை பராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் அரசிலமைப்பு தொடர்பில் 21 பேர் கொண்ட குழுவையும் அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அமைத்துள்ளது. இதில் பல இனவாதிகளும் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அங்கத்துவம் வகித்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகிய வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி ஆட்சி என்பவற்றை தமிழர் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்ட ஒருசிலர் அங்கத்துவம் வகிக்கும் இந்த அரசியலமைப்பு குழுவில் எடுத்துக் கூறுகின்ற போது அதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற பெரிய கேள்வி உள்ளது. அதனை கூட்டமைப்பின் சார்பில் உள்ளவர்களால் அங்கு செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது.
Wigneswaran-with-Sambanthan-1தீர்வு ஒரு இரவில் கிடைத்து விடக்கூடிய விடயமல்ல. ஆனால் அதற்கான சமிக்ஞைகளாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற சிறிய சிறிய பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாது இந்த அரசாங்கம் தடுமாறி வரும் நிலையில் இந்த அரசிலமைப்பு சபை மூலம் தீர்வைப் பெறலாம் என்ற நம்பிக்கை எப்படி வரும். ஆகவே இந்த விடயத்தில் தமிழர் தரப்பு உசாராக இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதனை கூட்டமைப்பின் தலைமை தட்டிக் கழித்து விடவும் முடியாது. ஏனெனில் இது சம்பந்தனது பிரச்சனையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினது பிரச்சனையோ இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை. அதனால் இந்த அரசிலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றை உள்ளடக்கிய அரசாங்க தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இதனையே பங்காளிக் கட்சிகளும் கடந்த இரு மாதத்திற்கு மேலாக எதிர்கட்சித் தலைவரிடம் கோரியும் வருகின்றனர். ஆனால் அது நடைபெறுவதாக இல்லை. அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற போது தமிழர் தரப்பின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் கூட்டமைப்பு பிரதான இரு கட்சிகளிடமும் முன்வைத்து பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலும் தற்போதைய அரசியல் களநிலை தொடர்பில் வடக்கு முதலமைச்சர் தம்மை சந்திக்கும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடமாகாண சபை ஊடாக ஒரு சமஸ்டி தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழர் தரப்பு எதிர்பார்ப்புக்களை கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திடம் விபரிக்க முடியும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடக்கு முதலமைச்சரின் அழுத்தங்களை ஒரு இராஜ தந்திரமாக கையாண்டு அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் குழு ஒரு அழுத்தைத் பிரயோகிக்க முடியும். ஆனால் அது நடைபெறுவதாக தெரியவில்லை. மாறாக மௌன அரசியலை கூட்டமைப்பு தலைமை செய்து வருகிறது.
download (64)கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட இந்த ஆண்டு தீர்வு கிடைக்கும் என்ற இரா.சம்பந்தன் அவர்களின் கருத்தை புறந்தள்ளத் தொடங்கியுள்ளனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே தீர்வைப் பெற முடியும். ஒரு இருதரப்புக் பேச்சுக்கான ஆயத்தத்தை மேற்கொள்ளுமாறு சம்மந்தன் அவர்களிடம் வலியுறுத்தி உள்ள அதேவேளை, அழுத்தங்களைக் கொடுக்காது 2016 தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் மக்கள் சந்திப்புக்களில் தெரிவித்துள்ளது. இதே கருத்தை தான் பங்காளிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பும் கொண்டுள்ளது. அண்மையில் புளொட் அமைப்பின் 8வது தேசிய மாநாடு வவுனியாவில் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த புளொட் தலைவர் த.சிதார்த்தன் புதிய அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு எமது கூட்டமைப்பின் தலைவர் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என தெரிவித்திருந்தார். பங்காளிகள் என்ற வகையில் அதற்காக நாமும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில் 2016 தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவ்வாறு தீர்வு கிடைக்காது விட்டால் ஜனநாயக ரீதியாக நாம் போராட நிர்ப்பந்திக்கப்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
mulliஆகமொத்தில் அரசாங்கத்திற்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்காது, பேச்சுக்கள் நடத்தாது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என நினைப்பது வெறுப் பகல் கனவே. நாம் மாறியுள்ள இந்த சர்வதேச சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தீர்வுக்கான அழுத்தங்களையும், பேச்சுக்களையும் செய்ய வேண்டும். இதனை தமிழ் மக்களும் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். மௌனமாக இருப்பதும், கொடுப்பதை ஏற்றுக் கொள்வதும் 60 வருட போராட்டத்திற்கும் உயிரிழப்புக்களுக்கும் செய்யும் ஒரு துரோகமே. இதனை தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாத வரைக்கும் 2016 தீர்வு என்ற சம்பந்தனின் கருத்து வெறும் தேர்தல் இராஜதந்திரமாக மட்டுமே இருக்கப் போகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |