நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவான ரோயல் கல்லூரியின் கட்டிடத்தில் ஒன்று மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பான கட்டிடமொன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின் அங்கு நிலைமையை அவதானிக்க நேரடியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சென்றிருந்தார். அவரோடு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன், பாராளுமன்ற ஆராய்ச்சி உதவியாளர் பெ. ஜெட்ரூட் ஆகியோர் சென்றிருந்தனர்.
நிலைமையை அவதானித்த மாகாண சபை உறுப்பினர் பாடசாலை அதிபர் ஜேசுதாசனோடு நிலைமை தொடர்பாக கலந்துரையாடி உடனடியாக மத்திய மாகாண சபை முதலமைச்சரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு பாடசாலை அதிபரோடும் முதலமைச்சரை தொலைபேசியில் உரையாடவைத்தார்.
பின் இது தொடர்பில் நுவரெலிய கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு பாடசாலை அதிபரூடாக நிலைமை தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்து நுவரெலிய கல்விப்பணிப்பாளருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இவ்வனர்த்தம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுமெனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார். 

0 Comments