18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நிலக்கரி கைத்தொழிலுடன் தொடர்புடைய தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து துறையும் வளர்ச்சியடைந்தது. இன்று இயந்திரமயமாக்கப்பட்ட சூழலில் நிலக்கரியுடன் தொடர்புடைய எண்ணெய்வளப் பயன்பாட்டின் தேவை என்பது மனித வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அத்தியாவசியமானதொரு பொருளாக மாறிவிட்டது. இதில் போக்குவரத்து துறையின் இயக்கத்திற்கு பெற்றோலியம் மற்றும் டீசல் என்பவற்றின் தேவை என்பது அளவிடமுடியாதவை.
இந்நிலையில் இலங்கையில் கடந்த திங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சாரதிகள் பலரும் முகம்கொடுக்க நேரிட்டதுடன், பலர் தமது வேலைக்களைக் கூட ஒழுங்காக செய்யமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலைக்கு எரிபொருள் கூட்டுத்தாபனத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையே காரணம். இலங்கையின் திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கொடுப்பதை எதிர்த்தும், அம்பாந்தோட்டையில் உள்ள எண்ணெய் குதங்களை சீனாவிற்கு கொடுப்பதை எதிர்த்தும், உள்நாட்டு வளங்களை உள்நாட்டு அமைப்புக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட அந்த போராட்டம் ஒரு நாள் முழுவதும் முழு இலங்கையையும் ஆட்டம் காண வைத்திருந்தது. நாட்டு வளங்களை அந்நிய நாட்டிற்கு விற்பனை செய்வதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இவர்களது போராட்டம் நியாயமானதாக இருந்தாலும், உரிய கால அவகாசம் வழங்கப்படாது அந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்மை ஏற்புடையதல்ல். அது முழு இலங்கையின் பொருளாதாரத்திற்கும், மக்களது இயல்பு நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமையை மறுத்து விடவும் முடியாது.
இலங்கையின் தென்பகுதியைக் காட்டிலும் வடபகுதியில் இதன் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருநி;த நிலையில் இது தொடர்பில் எந்தவித ஒப்பந்தமும் செய்யப்படமாட்டாது என உறுதி மொழி வழங்கியிருந்தார். அதனால் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. இருப்பினும் அந்த ஒரு நாள் பொழுது என்பது பலரும் நெருக்கடிகள் ஏற்படுத்திய நாளாகவே அமைந்திருந்தது. நள்ளிரவு முதல் எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போகின்றார்கள் என்ற செய்தி வடக்கைப் பொறுத்தவரை ஆரம்பித்தில் சூடு பிடிக்கவில்லை. நள்ளிரவு அவர்களின் போராட்டம் ஆரம்பித்தவுடனேயே அது தொடர்பான செய்திகள் பரவலடைய வடக்கிலும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. காலையில் இருந்து வடக்கின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டத்திற்கு அளவே இல்லாது நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. நாளாந்தம் 100 ரூபாய் காசுக்கு பெற்றோல் அடித்து கூலி வேலைக்கு செல்பவர்கள் தொடக்கம் அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்தனர். பல உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் தமது வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
யுத்தப் பாதிப்புக்களை எதிர்கொண்டு தற்போது மீள்குடியேறியுள்ள பலர் நாளாந்தம் கூலி வேலை செய்து தமது வயிற்றுப் பசியைப் போக்கும் குடும்பங்கள் பலவற்றுக்கும் அன்றைய நாள் என்பது மிகவும் ஏக்கம் நிறைந்த நாளாகவே அமைந்திருந்தது. எரிபொருள் பெறுவதற்காக மணித்தியாலக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்றதால் தமது கூலி வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையே இருந்தது. வடக்கில் போக்குவரத்து துறையில் மோட்டர் சைக்கிள் பாவனை என்பது அதிகமாகவே இருக்கிறது. தென்பகுதியில் பலரும் வசதி படைத்தவர்களாகவும், நான்கு சில்லு வாகனங்களை உடையவர்களாகவும் இருப்பதுடன் எரிபொருளை பெருமளவில் சேமித்து வைக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். ஆனால் வடக்கின் நிலை அப்படியல்ல. அன்றாடம் எரிபொருள் நிரப்பி சீவியம் நடத்தும் மக்களே அதிகம். அதனால் இந்தப் போராட்டம் அம் மக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
யுத்த வடுக்களை சுமந்து வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்காக மக்கள் தினமும் 100 ரூபாக்கு பெற்றோல் அடித்து அதன் மூலம் தமது போக்குவரத்தை மேற்கொள்பவர்களும், பேரூந்துகளில் பயணம் செய்பவர்களும் அதிகம். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பேரூந்துகள் கூட டீசலை பெற முடியாது சில பகுதிக்கான போக்குவரத்துக்கள் சீராக இடம்பெறாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
இங்கு ஒரு நாளில் வடக்கில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் முடிந்து விடவில்லை. ஏன் எனில் வடக்கின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உடனுக்குடன் எரிபொருள் கொள்கலன்களில் வருவதில்லை. அவை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை, மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்றே வருகின்றது. அப்படி இருக்கையில் ஒருநாளில் வடக்கில் பெற்றோல் முடிந்து விட்டது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அதனை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தான் அதிகம். தமக்கு தெரிந்தவர்களுக்கு வழங்குதல், தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்றல் என்பவற்ரைற அடிப்படையாகக் கொண்டு இந்த பதுக்கல்கள் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சியில் சில தனியார் கடைகளில் ஒரு லீற்றர் பெற்றோல் 300 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மணித்தியாலயக்கணக்கில் நின்ற பலர் பெற்றோல் இல்லை என்றதும் ஏமாற்றதுடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
ஆக, இந்தப் போராட்டம் என்பது ஒரு நாட்டின் வளத்தை வேறு நாட்டிற்கு விற்பனை செய்வதற்கு எதிரானது. அது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சனையும் கூட. ஆனால் ஒரு தொழிற்சங்கப் போராட்டத்துடன் அந்த போராட்டம் முடிந்து விட்டது. தொழிற்சங்கப் போராட்டம் ஒரு நாள் நடைபெற்ற நிலையிலேயே பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை இன்னும் சில நாட்பகள் நீடித்து இருந்தால் முழு நாடும் முடங்கியிருக்கும் என்பதே உண்மை. இந்த நிலையில் அரசாங்கம் எமது நாட்டையும், இங்குள்ள வளங்களையும் கவனம் செலுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்மும். அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான தொழிற்சங்க போராட்டங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.