அக்கரைப்பற்று -ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைப்பு

Tuesday, November 30, 2021

 


வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும்   முன்னாள் வைத்திய அத்தியட்சகர்  தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில்   தொழிற்சங்க போராட்டம்  ஒன்றினை தொடர்ச்சியாக  முன்னெடுக்கவுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய உறுப்பினர் வைத்தியர் ஏ.எம் சுஹைல் தெரிவித்தார்.



அரச வைத்திய சங்கத்தின் அக்கரைப்பற்று கிளை ஏற்பாட்டில் திங்கட்கிழமை(29) மாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்  ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது


நாங்கள்  இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்தும் நோக்கம்  கடந்த நான்கு மாதங்களாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கின்ற நிர்வாக சீர்கேட்டு  தளம்பல் நிலை ஆகும்.எனவே இந்த நிர்வாக சீர்கேட்டு  தளம்பல் நிலைமைக்கு முன்னாள் வைத்திய அத்தியட்சகரே பொறுப்பாளியாவார்.இந்த விடயத்தை  கருதிக்கொண்டு  ஒரு தீர்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக  நாங்கள் ஒரு தொழிற்சங்க போராட்டத்தை நடாத்த முடிவு செய்தோம் .ஆனால் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சும் பொலிசாரும் தந்த எமக்கு உறுதிமொழியை அடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தோம்.


ஆனால் இன்று இவ் வைத்தியசாலையில்   பல நிர்வாக ரீதியான முறைகேடுகளும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை முகம் கொடுத்துள்ளன. இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும்  எங்களது சங்க அங்கத்தவர்கள்  பல சந்தர்ப்பங்களில் எங்களுக்கு முறைப்பாடுகளை செய்திருந்தனர்.அதன் பிற்பாடு நாங்கள் இவ்வருடம்  கடந்த மே மாதம்  ஜூன் மாதமளவில் அந்த காலத்தில் தற்காலிக வைத்திய அத்தியட்சகர் கடமை புரிந்த  ஐ.எம். ஜவாஹிர் என்பவரிடம் பேசுவதற்காக   முயற்சி மேற்கொண்டிருந்தோம்.எனினும்  அவர் எம்மை புறக்கணித்ததுடன் எமது பிரச்சினைகளை  ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலத்தில்  இவர்  விடாப்பிடியாக இருந்ததன் காரணமாக வைத்தியர்களாகிய நாங்கள்  ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு   செல்வதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தோம்.

எமது இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை    அடுத்து சுகாதார அமைச்சு உடனடியாக அவரை உடனடியாக அவரை கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு  வைத்தியராக கடமையை ஏற்குமாறு  சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.இருப்பினும் அவர் அங்கு  தனது கடமையை பொறுப்பேற்காமல் நான்கு வாரகாலம் சுகயீன விடுமுறையின்  பின்னரே கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை பொறுப்பேற்றிருந்தார். இருப்பினும் அவர் அங்கு சென்ற பிற்பாடு  தான் முன்பு கடமையாற்றிய  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சில ஊழியர்களையும் அங்கு கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் சிலரையும் தன் வசப்படுத்தி வைத்தியசாலையில் நிர்வாகத்துக்கு குழப்பத்தை   ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்.

எனவே தான்  வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள்  ஒன்றிணைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவரின் தூண்டுதலினால்  இடம்பெறுகின்ற  நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்யுமாறு சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும்  தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்துவதற்கும்  இந்த ஊடக சந்திப்பில் தீர்மானித்துள்ளோம்.

எனினும் தற்போது  சுகாதார அமைச்சும் பொலிசாரும் குறித்த வைத்தியரின் விடயம் தொடர்பில்  உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்   கடமை புரியும் ஒரு சில ஊழியர்கள் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை இடமாற்றம் செய்வதற்கும்  தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்வரும்   வாரமளவில்  சுகாதார அமைச்சு அதிகாரிகளை அனுப்பி குறித்த வைத்தியசாலையில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை  விசாரணை செய்ய உள்ளதாகவும் சுகாதார அமைச்சு   எமக்கு அறிவித்துள்ளனர்.இதற்கமைய எமது போராட்டத்தை பிற்போடுவதுடன் அவ்வாறு  இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் குறித்த வைத்தியரின் செயற்பாட்டை கண்டித்து    தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்படும் என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் இங்கு கடமை புரியும் வைத்தியர்களை அடக்கு முறைகளை கையாளும் முகமாக கடந்த காலங்களில் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் செயல்பட்டிருக்கிறார் அதற்கான ஆதாரங்களும் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் அரசாங்க வைத்திய சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர்  லியனகே நிரோஷன்உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த யூலை மாதம் அளவில் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுஇ சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான மேற்படி கடிதங்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்! - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

 


நாட்டில் கோவிட் பரவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

எந்த நேரத்திலும் முடக்கம் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இருப்பினும், முடக்கலை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் பலரும் எதிர்பார்க்காத வகையில் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், முடக்கம் தேவையா இல்லையா என்பதை இறுதியில் பொது நடத்தை தீர்மானிக்கும் என்று ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

READ MORE | comments

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு

 


இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.

இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி இதுவரை இல்லாத பின்னணியில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.

"புத்தர் காலத்திலேயே இருந்த தொழில்"

பாலியல் தொழில் என்ற விடயம் புத்த பெருமானின் காலத்திலிருந்து காணப்படுவதாக ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவிக்கின்றார்.

அரச தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

கோகிலா குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பு ஆதரவு வழங்கிய வருகின்ற நிலையில், மற்றுமொரு தரப்பு எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளது.

பாலியல் தொழில் என்பது, உலகிலேயே மிக பழமை வாய்ந்த தொழில் என கோகிலா குணவர்தன கூறுகின்றார்.

தான் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிடுகின்ற போதிலும், இந்த கருத்தினை தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகள், இடை த்தரகர்கள் என அனைத்து தரப்பினரும் மோசடி செய்து வருகின்றனர்.

இதைவிட, தனது உடலை விற்பனை செய்து, வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, பாலியல் தொழிலை சட்டமாக்கிக் கொடுக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இதைச் சட்டமாக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள், சிறைச்சாலைகளுக்கு செல்லாது, தமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என அவர் கூறுகின்றார்.

எனினும், இது தனது தனிப்பட்ட கருத்து எனவும், இது அரசாங்கத்தின் கருத்து கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் இறுதி வரை இவ்வாறான தீர்மானமொன்றை எடுக்க மாட்டார்கள் என்பதனை தான் நன்கறிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேகிலா குணவர்தன கூறுகின்றார்.
எனினும், பெண் என்ற விதத்தில், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் மோசடி செயற்பாடுகளுக்குள் இட்டு செல்வதற்கு தான் எதிர்ப்பு என்ற விதத்திலேயே இதனை தான் கூறுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பாலியல் மோசடிகளிலிருந்து 100 வீதம் பெண்கள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தான் இதனைக் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

"பெண்களுக்கான முடிவை பெண்களே எடுக்க வேண்டும்"

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவும், பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து கருத்து வெளியிட்டார்.

பெண்ணொருவரின் உடல் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டியது, குறித்த பெண்ணே தவிர, வேறொருவரும் கிடையாது என அவர் கூறுகின்றார்.

எந்தவொரு பெண்ணும் பாலியல் தொழிலில் விருப்பத்துடன் இணைவதில்லை என கூறிய அவர், பெண்களை மோசடி செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படாத பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாலியல் தொழில் என்ற ஒன்று உள்ளமையினால், அந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற இடத்திலிருந்து, தான் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

பெண்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது அவர் என்ற போதிலும், இன்றைய உலகில் பெண்கள் தொடர்பில் வேறு நபர்களே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.



"தமிழ்ப் பெண்களே பாதிக்கப்படுவார்கள்"

பாலியல் தொழிலை சட்டமாக்கும் பட்சத்தில், கட்டாயமாக தமிழ் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பெண் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள யுவதிகள் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஏனைய சமூகங்களை விடவும், பின்தங்கிய நிலையில் பெரும்பாலும் தமிழ் சமூகம் உள்ளமையினால், அந்த பெண்கள் விபசார தொழிலுக்கு ஈடுபடுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பொருளாதார ரீதியில் தம்மையும், தமது குடும்பத்தையும் வலுப்படுத்த அந்த பெண்கள், இவ்வாறான தொழில்களில் ஈடுபடக்கூடும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

அதுமாத்திரமன்றி, குறிப்பிட்ட காலப் பகுதியில் தமது அழகு மற்றும் உடல் எடை மாறுபடும் பட்சத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அந்த தொழிலிலிருந்து தவிர்க்கப்படும் நிலை ஏற்படும் என கூறிய அவர், அதன் பின்னரான காலத்தில் அவர்களின் வாழ்க்கை முழுமையாகவே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், பல்வேறு நோய்கள் ஏற்படும்
சாத்தியம் காணப்படுவதுடன், சட்டவிரோத குழந்தைகளை ஈன்றெடுக்கும் நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

பாலியல் தொழில் சட்டமாக்கப்படும் பட்சத்தில், திருமண பதிவுகளின் போது தொழில் என்ற இடத்தில் 'விபசாரம் ' என்பதனை குறிப்பிட்டு, அதனை ஆண் ஏற்றுக்கொள்வாராயின், அது சாத்தியமானது என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

அதைவிடுத்து, பாலியல் தொழிலை சட்டமாக்கும் கருத்தானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பெண் சமூக செயற்பாட்டாளர் உமா சந்திரா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.


READ MORE | comments

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

 


மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கு நேற்று (29) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். கிரிசுதனின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தலைமையில் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது,

குறித்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து பரீட்சையொன்றிற்குத் தோற்றவுள்ள 125 ஆசிரிய மாணவர்களுக்கு இவ் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


Gallery Gallery
READ MORE | comments

ஒமிக்ரோன் புதிய வைரஸ்

 


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.


ஒமிக்ரோன் தெடர்பாப உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு அமைவாக இவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு, தற்போது உலகம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் 7 முக்கிய கூறுகள் பின்வருமாறு:

1. பரவும் முறை : ஒமிக்ரோன் திரிபின் பரவும் திறன் டெல்டா உட்பட மற்ற வகைகளை விட வேகமாக பரவும் (உ+ம் - ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும்).

2. நோயின் தீவிரம் : டெல்டா உள்ளிட்ட பிற பிறழ்வுகளுடனான நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் வைரஸ் மிகவும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

3. முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் பிறழ்வுகளின்படி நோய்த்தொற்றின் விளைவு : ஏனைய கொவிட் வகைகளுடன் ஒப்பிடும்போது, இதற்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் என்பதாக ஆரம்ப பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4. தடுப்பூசிகளின் செயல்திறன் : டெல்டா உட்பட கடுமையான நோய் மற்றும் இறப்புக்களைக் குறைப்பதில் தடுப்பூசி முக்கியமானது. தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயற்படும். (மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன)

5. தற்போதைய பரிசோதனைகளின் அமைவாக நோய்பாதிப்பு : பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக, ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகள் உட்பட, தொற்றுநோய்களைக் கண்டறிவது தொடருவோம்.

6. தற்போதைய சிகிச்சையின் செயல்திறன் : COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகளை நிர்வகிப்பதில் Corticosteroids மற்றும் IL6 Receptor Blockers இன்னும் பயனுள்ளதாக இருக்கும். ஒமிக்ரோன் திரிபில் உள்ள வைரஸின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, அவை இன்னும் பயன் உள்ளதா என்பதை பார்க்க ஏனைய சிகிச்சைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

7. ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : புதிய கொவிட் பிறழ்வுகளை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு ஆராய்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த 7 விடயங்களுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேராசிரியர் சந்திம ஜிவந்தர கவனம் செலுத்தியுள்ளார்.

அதன்படி, 2 நபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை முன்னெடுத்தல், தரமான முகக்கவசம் அணிதல், நல்ல காற்றோட்டத்திற்காக ஜன்னல் போன்றவற்றை திறந்து வைத்தல், காற்றோட்டம் அற்ற அல்லது ஜன நெரிசலான இடங்களைத் தவிர்த்தல், கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல், தும்மல் அல்லது இருமல் வரும்போது முழங்கையைப் பயன்படுத்தல், அல்லது சுத்தமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளல், மற்றும் கொவிட் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்வது குறிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
READ MORE | comments

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது

 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவ பகுதியில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


நேற்று(29) மாலை நீர்கொழும்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் விடுதியின் முகாமையாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைது

செய்யப்பட்டுள்ளனர்.


30, 31 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று(30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
READ MORE | comments

மீண்டும் இலங்கை முடக்கப்படுகிறதா? சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

 


இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை இணை பேச்சாளரும், பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றார்.

READ MORE | comments

மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை

Monday, November 29, 2021

 


மகளிடம் சேட்டை விட்டவரின் காதை தந்தை ஒருவர் அறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.


கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் (28) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத போது 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வெட்டப்பட்ட வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடரபாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்!

 


தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெருக்கடிமிக்க காலமாக இன்றைய நிலைமை இருக்கின்றது.

இங்கு பேசிய எல்லோருடைய பேச்சுக்களும் நாங்கள் இன்னும் சரியான இடத்திற்கு வந்து இருக்கவில்லை என்பதையும், இன்னும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டிலே நாங்கள் பயணிக்கவில்லை என்பதையும் மிகமிக தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன.அதற்காக நானும் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது.

ஏனென்றால் இந்த இனத்துக்காக மிக நீண்டகாலமாக உழைத்தவன் என்கிற ரீதியிலும் மிகப்பெரிய பாரம்பரிய முறைய கட்சி ஒன்றினது தலைவர் என்கிற ரீதியிலும் நானும் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்றுபட்ட தரப்பாக ஒற்றுமை பட்ட தரப்பாக நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் இன்று நேற்றல்ல மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லை.

அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

அன்றைய நாட்களில், அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழினத்தினுடைய தந்தை செல்வாவினுடைய தளபதியாக, தலைவர் அமிர்தலிங்கம் அவருடைய தளபதியாக இங்கே இருக்கின்ற சித்தார்த்தனுடைய தந்தையார் தர்மலிங்கம் அவர்கள் அந்த நாட்களில் செயற்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

கட்சியிலே அல்லது கட்சிக்கு உள்ளேயோ ஒரு பிரச்சினை வருகிறது என்றாலும் சரி கட்சிக்கு வெளியிலே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றாலும் சரி முதலில் சமாதானம் பேசுகிற ஒரு தூதராக இருந்தவர் தர்மலிங்கம் தான். அன்றைக்கு பெரிய தலைவர்களோடு விவாதிக்கும் விடயங்களை அவர்களோடு விவாதித்து விட்டு அதை இளைஞர்களாகிய எங்களோடு அன்றைய நாட்களிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரிடம் நாங்கள் கேள்விகளை எழுப்பும் பொழுது மிகவும் கவனமாக அதை உண்மையாக அவர் எங்களுக்கு விளக்கமளித்து இருப்பதை நான் இன்றைக்கும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.

அவருடைய வழித்தோன்றலாக இங்கே இருக்கக்கூடிய சித்தார்த்தன் அவர்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடியான கால சூழ்நிலையில் நான் அவரிடம் வேண்டுகோளாக என்று கூட வைக்கலாம் உரிமையோடு நான் சொல்லுவேன் தமிழ் தேசிய இனத்தினுடைய நன்மை கருதி சிதறிப் போயிருக்கக் கூடிய தமிழர் தரப்புக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டிய தேவை கருதி அதனுடைய முக்கியத்துவம் கருதி இன்றைக்கு சகல தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் அவரிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஏனென்றால் எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும், பொறுப்பாகவும் செயற்படுத்தி எல்லோரோடும் நட்போடு பழகக் கூடிய தன்மையும் இருக்கக்கூடிய சித்தார்த்தன் ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் மிகவும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன். அதை அவர் நிறைவேற்ற வேண்டும்.

அதுதான் அவர் தமிழினத்திற்கு செய்யக் கூடிய ஒரு மாபெரும் கடமையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன் என தெரிவத்துள்ளார்.

READ MORE | comments

விபத்தில் இளம் யுவதி பலி

 


முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முந்தல் விலபத்த பகுதியைச் சேர்ந்த எம்.எம்.அஞ்சலி ருவந்திகா பிமந்தி (வயது 24) எனும் இளம் யுவதியே உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற நேற்றிவு 11 மணியளவில் கீரியங்கள்ளி - ஆண்டிகம பிரதான வீதியின் அங்குனவில் பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் இருந்த வேப்பமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களில் 24 வயதுடைய இளம் யுவதி விபத்து நடத்த சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.

அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையிலும், சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முச்சக்கர வண்டியில் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

ஒமக்ரோன் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து!

 


கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமக்ரோன் வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் என்கிற கொரோனா வைரஸ் புதிய திரிபொன்று பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. டெல்டா வைரஸைவிட 500 மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவும் எனவும், இந்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இது இலங்கைக்கு மாத்திரமல்லாது உலக நாடுகள் அனைத்தும் தற்போது முகங்கொடுக்கிற பாரிய சவால் எனவும் கூறினார்.

READ MORE | comments

எரிவாயு வெடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் - தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்

 




வெலிகந்த பிரதேசத்தில் அண்மையில் தீ பற்றி எரிந்தமையினால் உயிரிந்ததாக கூறப்படும் பெண்ணின் தந்தை பல விடயங்களை ஊடகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

திம்புலாகல, பெலட்டிய பகுதியை சேர்ந்த 51 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் தந்தை, மகளின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் வெலிகந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தை கருத்து வெளியிடுகையில், “மகள் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். எனினும் அடுப்பு பற்றாமையினால் தீப்பெட்டியை தேடி தீப்பற்றற வைத்துள்ளார். அதன் பின்னர் வீடு தீப்பற்றியுள்ளது. அவ்வளவே எனக்கு தெரியும்.

முதலில் வெலிகந்த வைத்தியசாலைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அதற்கு பின்னர்  பொலன்னறுவைக்கு  அனுப்பி வைத்தார்கள். பொலன்னறுவை வைத்தியசாலையிலேயே மகளை பார்த்தேன். கேஸ் அடுப்பில் தீப்பற்றிவிட்டது அப்பா என்று மாத்திரமே மகள் கூறினார்.

எனது மகளின் முகம் முழுவதுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு அடுப்பு எரியாமையினால் தீக்குச்சியில் பற்ற வைக்க முயற்சித்து சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்று பொலிஸ் அதிகாரியிடம் வினவிய போது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.

எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது உடலில் தீ வைத்துக் கொண்டமையினாலேயே மரணம் ஏற்பட்டதாகவும், எரிவாயு கசிவினால் இந்த மரணம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியை கைப்பிடிப்பது உறுதி : கனடாவில் சாணக்கியன்

 


கூட்டமைப்பு ஒற்றுமையாகத்தான் உள்ளது, இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பிடிப்பது உறுதி எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய சட்ட நிபுணத்துவ குழுதான் அமெரிக்காவுக்குப் போனது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரியும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஊடகங்கள் தான் இதனை பரவலாக பேசிக்கொண்டிருக்கிறதே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகத்தான் உள்ளது. இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பிடிப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார். 

READ MORE | comments

சுற்றுலா ஹோட்டலின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு


நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்து வந்த முகாமையாளர் ஒருவர் ஹோட்டலின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை நுவரெலியாவில் உள்ள பிரதான சுற்றுலா ஹோட்டலின் (Green Araliya)5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த ஹோட்டலில் முகாமையாளராக தொழில் புரிந்து வந்த கம்பளை தொலஸ்பாகே வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதான தரங்க பிரியந்த ஹெட்டியாராச்சி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் நேற்று இரவு விருந்தொன்றை நடத்தியுள்ளனர்.

விருந்தின் பின்னர், அதில் கலந்துக்கொண்ட ஊழியர்கள், முகாமையாளரை அழைத்துச் சென்று 5 வது மாடியில் உள்ள அவரது அறையில் விட்டுள்ளனர். அறையின் ஜன்னல் அருகில் நின்றுக்கொண்டிருந்த முகாமையாளர் இன்று அதிகாலை 1.45 அளவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த முகாமையாளரின் சடலம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து நுவரெலியா காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Gallery Gallery Gallery Gallery
READ MORE | comments

மேலும்மொரு சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம்

 


கிண்ணியா, ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (28) பகல் சமைக்கும் போது சமையல் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது.


இதனால் வீட்டிலிருந்தோர் வெளியில் ஓடி வந்து அயலவரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இதனால் அவ் வீட்டின் சமையலறையிவ் இருந்த அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் தீப்பற்றியுள்ளதுடன், ஜன்னலும் சேதமாகியுள்ளது.

எனினும், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.
READ MORE | comments

சிலிண்டர், அடுப்பை இணைக்கும் குழாயும் வெடித்தது ஹோட்டலொன்றில் நிகழ்ந்துள்ளது

 


ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை சமையல் எரிவாயு வெடித்ததாக அதன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக தெரிவித்தனர்.

எனினும் இதன் போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
READ MORE | comments

சமையலறையில் கேஸ் அடுப்பும் வெடித்தது - ஏறாவூரில் சம்பவம்

 


ஏறாவூரில் சமையலறையில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்து நொறுங்கியுள்ளது. எனினும், தெய்வாதீனமாக எவருக்கும் காயங்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என்று வீட்டுரிமையாளர்கள் தெரிவித்தனர்.


ஏறாவூர், மிச்நகர் பகுதியில் இந்தச் சம்பவம், இன்று (29) நண்பகல் 12.15க்கு இடம்பெற்றுள்ளது.

மௌலவி மஹ்மூதுலெப்பை நயீம் என்பவரின் வீட்டில் அவரது மனைவி சமையல் வேலைகளில் ஈடுபட்டு முடிந்ததும் கேஸ் சிலிண்டரை நிறுத்திவிட்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்தபோது கேஸ் அடுப்பு வெடித்துள்ளது.

கேஸ் அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளபோதிலும் தீ பற்றிக் கொள்ளவில்லை என்றும் அதனால் பொருள் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் வீட்டார் தெரிவித்தனர்
READ MORE | comments

திடீர் திடீரென வெடித்து சிதறும் எரிவாயு சிலிண்டர்கள்! பீதியில் உறைந்துள்ள மக்கள்

 


கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

இதன் காரணமாக நாட்டு மக்கள் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவது குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

READ MORE | comments

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

Sunday, November 28, 2021

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு 7.44 மணியளவில் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல்.

இவர் ‘சூர்யவம்சம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘மகதீரா’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு  படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர் 'மகதீரா' படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இலங்கையர்களுக்கு பேரிடியான செய்தி

 


ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் ஒரு கிலோக்கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்தே பாண் உட்பட மேலும் சில வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிறு உணவுப் பண்டங்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,

கொத்து ரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும் சிறிய உணவுகளுக்கான விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

READ MORE | comments

நீதியைப் பெற்றுக் கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் பின்வாங்கக்கூடாது : கிழக்கு ஊடக மன்றம்

 


அண்மையில் திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் பின்வாங்கக்கூடாது என கிழக்கு ஊடக மன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (25) திருகோணமலையிலும், சனிக்கிழமை (27) முல்லைத்தீவிலும் ஊடவியலாளர்கள் மிகமோசமாகத் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக மன்றம் கண்டனம் தெரிவித்து இன்று (28) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுபவர்கள், அவர்களை யாரும் தாங்கள் விரும்பும் விதத்திற்கு ஏற்ப செயற்படுத்த முடியாது.

மக்களுக்கான நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அவற்றை, தான் சார்ந்த ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களுக்கு பூரண உரிமையும், சுதந்திரமும் உண்டு.

சுதந்திரமாகச் செயற்படும் ஊடகவியலாளர்களை ஆயுதங்களைக் கொண்டும், அச்சுறுத்தல் போன்ற ஏனைய விடையங்களைக் கொண்டும் அடித்து அடக்க முற்படும் செயலானது பேனா முனையுடன் நேரடியாகப் போராடும் திறனற்றவர்கள் என்பதையே சுட்டி நிற்கின்றது.

கருத்துக்களைக் கருத்துக்களால் தான் வெல்ல வேண்டும். மாறாக பேனா முனைப் போராளிகளை ஆயுதம் கொண்டு அடக்கலாம் என நினைத்திருப்பவர்கள், அந்த சிந்தனையிலிருந்து முற்றாக விடுபட வேண்டும்.

இலங்கை ஜனநாயக ரீதியாக செயற்படும் நாடாகும் என்ற வகையில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் தரப்பினர், ஊடகவியலாளர்களை தாங்கள் நினைப்பதை அல்லது சொல்வதை மாத்திரம்தான் அறிக்கையிட வேண்டும் என அடக்கிவைக்க முயல்வதும் நினைப்பதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

ஊடகவியலாளர்கள் உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளிக்காட்டுபவர்கள் அதனை தடுக்க முற்படுபவர்களை ஊடகத்துறை அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் பின்வாங்கக்கூடாது.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை குறி வைத்து நசுக்க முற்படும் சந்தர்ப்பங்களை அரசு தடுக்க வேண்டும் என்பதுடன், அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது வேலியே பயிரை மேயும் எனும் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

READ MORE | comments

மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி கவன ஈர்ப்பு கண்டனப் போராட்டம்

 


இன்று  28/11/2021 மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில்.!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் 27/11/2021 இராணுவத்திரனால் தாக்கப்பட்ட் ஊடகவியலாளருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு கண்டனபோராட்டம் இடம்பெற்றது.




ஊடகவியலாளர்கள்.அரசியல் தலைவர்கள்.சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

READ MORE | comments

எட்டுவயது சிறுமியின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்ட காஸ் சிலிண்டர் வெடிப்பு!

 


எட்டுவயதான சிறுமியின் சமயோசிதத்தால் ஏற்படவிருந்த காஸ் சிலிண்டர் வெடிப்பு, தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.


வீட்டின் மற்றுமோர் அறையில் வைக்கப்பட்டிருந்த மேலதிக காஸ் சிலிண்டரில் இருந்து குமிழ் வருவதை அவதானித்த, எட்டுவயதான சிறுமி அலரியடித்துக்கொண்டு, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட பெற்றோர், காஸ் சிலிண்டரை வீட்டுக்குள்ளிருந்து வெளியே உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், ஏற்படவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
READ MORE | comments

காஸ் அடுப்புகளும் வெடித்து சிதறுகின்றன

 


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை, சாய்ந்தமருது பகுதியிலும் பதிவாகியிருந்தது. அசம்பவத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (28) புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்திருந்தது. சிலிண்டரை நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு நேற்று (27) வெடித்து சிதறியிருந்தது , யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு இன்றைய தினம் வெடித்து சிதறியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது
READ MORE | comments

சிறிலங்காவில் 218 பேருக்கு ஆப்பு! தயாராகும் அரசாங்கம்

 


சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய போது பதிவு செய்யப்பட்ட 75 வழக்குகளில் இந்த நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதை பொருள் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி நிலம், வாகனங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சொத்துக்களை பணமோசடி சட்டத்தின் கீழ் கைப்பற்றும் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு போதைப்பொருள் விற்பனை மூலம் வரம்பற்ற பணம் மற்றும் சொத்துக்களை குவித்த தெமட்டகொடை ருவனுக்கு சொந்தமான தங்கம், 8 வாகனங்கள் மற்றும் பணம், சட்டவிரோத சொத்துக்கள் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

READ MORE | comments

இலங்கையை அதிர வைத்த கோரம்!! மற்றுமோர் பிஞ்சும் பலி

 


கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரது எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் உள்ள குறிஞ்சாக்கேணிப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக பலியானதுடன், அவ்விபத்து இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

அமைச்சர்களாக மூவர் இருந்தும் பயனில்லை!

Saturday, November 27, 2021

 


அரசாங்கத்தில் அமைச்சர்களாக இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது. இதுதான் இந்த நாட்டின் நிலைமையும் கூட என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது. இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதிகளை வழங்கி இருந்தாலும் அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய காலங்களில் விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் போதிய அளவில் உரம் காணப்பட்டது.

தற்போது இலவச உரமும் இல்லாமலும் நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கு சந்தைகளில் உரம் இல்லாமலும் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்த போதும் அரிசி இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது.

அதற்கிணங்க வெளிநாடுகளில் இரசாயன உரம் பாவிக்கப்பட்டு நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட அரிசியே நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

இரசாயன உரப் பாவனையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தால் அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் முடிவு காரணமாக விவசாய சமூகம் பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் எதிர்நோக்கி உள்ளது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் தமது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். விவசாயிகள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இரு தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இந்த அரசில் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது.

இதுதான் இந்த நாட்டின் நிலை. அதேபோன்று இலங்கையில் தமிழர் ஒருவர் சட்டமா அதிபராக இருந்தாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றவர்கள் அதிகரித்துதான் செல்கின்றார்களே தவிர அது குறைந்த பாடில்லை. அவரால் கூட அதனை தடுக்க முடியவில்லை.

பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்து அரசு இலங்கை பொலிஸுக்கு 2022 மார்ச் மாதம் வரை மட்டும்தான் பயிற்சி வழங்குவதாகவும் அதற்கு பின்னர் இலங்கை பொலிஸு க்கு பயிற்சி வழங்க முடியாது என்று கூறியுள்ளார்கள். இலங்கையில் மனித உரிமைகளை பொலிஸ் திணைக்களம் கடைப்பிடிப்பதில்லை என்பதனாலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அமைச்சர்கள் தமது வாக்குகள் சார்ந்து செயற்படும் போது அது இலங்கையில் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கும். பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் தீர்த்தால் மட்டுமே இணக்கப்பாடு வரும். நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

அந்தவகையில் இனங்களுக்கிடையிலான பிளவுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் பெரும் பிரச்சனைகள் ஏற்படவே வழிவகுக்கும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

READ MORE | comments

பிரித்தானிய அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு!

 


பிரித்தானியாவின், தென்னாசிய மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த 25ம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரம் வரையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தாரிக் அஹமட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில் “சுமந்திரனை சந்தித்ததில் மகிழ்வடைகிறேன். மனித உரிமைகளை பேணுவது, பிரச்சினைகளின் பின்னரான பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகிவற்றோடு அனைத்து சிறுப்பான்மையினரதும் உரிமைகளை மதிப்பதன் முக்கத்துவம் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

READ MORE | comments

அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்

 


வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் திரண்டுள்ள நிலையில், இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம், வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் இவ்வாறு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இராணுவ வாகனங்களும் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்று குவிந்துவரும் நிலையில், அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

எரிபொருள் விலை அதிகரிக்கும்?

 


எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.


எனினும், எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை தற்போது எழுந்துள்ளதாக கூட்டுதாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில ஆரம்பித்துள்ளார்.

இந்த விடயத்தை கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில உறுதிப்படுத்தினார்.
READ MORE | comments

நாடு திரும்புமா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி?

 


தற்போது சிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் நாடு திரும்புவதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சிம்பாவே உட்பட சில ஆபிரிக்க நாடுகளின் பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.

இந்த நிலைமையில், இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, அங்கோலா, போஸ்வானா, மொசாம்பிக், லசதோ, சிம்பாவே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |