அண்மையில் திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் பின்வாங்கக்கூடாது என கிழக்கு ஊடக மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25) திருகோணமலையிலும், சனிக்கிழமை (27) முல்லைத்தீவிலும் ஊடவியலாளர்கள் மிகமோசமாகத் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக மன்றம் கண்டனம் தெரிவித்து இன்று (28) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுபவர்கள், அவர்களை யாரும் தாங்கள் விரும்பும் விதத்திற்கு ஏற்ப செயற்படுத்த முடியாது.
மக்களுக்கான நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அவற்றை, தான் சார்ந்த ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களுக்கு பூரண உரிமையும், சுதந்திரமும் உண்டு.
சுதந்திரமாகச் செயற்படும் ஊடகவியலாளர்களை ஆயுதங்களைக் கொண்டும், அச்சுறுத்தல் போன்ற ஏனைய விடையங்களைக் கொண்டும் அடித்து அடக்க முற்படும் செயலானது பேனா முனையுடன் நேரடியாகப் போராடும் திறனற்றவர்கள் என்பதையே சுட்டி நிற்கின்றது.
கருத்துக்களைக் கருத்துக்களால் தான் வெல்ல வேண்டும். மாறாக பேனா முனைப் போராளிகளை ஆயுதம் கொண்டு அடக்கலாம் என நினைத்திருப்பவர்கள், அந்த சிந்தனையிலிருந்து முற்றாக விடுபட வேண்டும்.
இலங்கை ஜனநாயக ரீதியாக செயற்படும் நாடாகும் என்ற வகையில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் தரப்பினர், ஊடகவியலாளர்களை தாங்கள் நினைப்பதை அல்லது சொல்வதை மாத்திரம்தான் அறிக்கையிட வேண்டும் என அடக்கிவைக்க முயல்வதும் நினைப்பதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
ஊடகவியலாளர்கள் உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளிக்காட்டுபவர்கள் அதனை தடுக்க முற்படுபவர்களை ஊடகத்துறை அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில் திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் பின்வாங்கக்கூடாது.
குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை குறி வைத்து நசுக்க முற்படும் சந்தர்ப்பங்களை அரசு தடுக்க வேண்டும் என்பதுடன், அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது வேலியே பயிரை மேயும் எனும் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: