இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணம்

Thursday, December 31, 2020


இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

தர்கா பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 05 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

READ MORE | comments

மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்!

 


தனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே இவ்வாறுபலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வழமைபோன்று இவர் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக தற்செயலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

அதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் திருமணமாகாத இந்தப் பெண் தனதும் தாயினதும் வாழ்வாதாரத் தொழிலாக இவ்வாறு மா அரைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேர பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

புத்தாண்டு காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரச அதிபர் வேண்டுகோள்


 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் கருத்து தெரிவித்தார்.

புத்தாண்டு அதன்பின் பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதனால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செயற்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படும்படி அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.

எனவே மக்கள் இவ் விசேட பண்டிகை காலங்களில் ஆலயங்கள் தேவாலயங்களுக்குச் செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்லலாம் எனவும் அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந் நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பண்டிகைக்காலங்களில் இவ்வாறான வீணான சட்ட நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக மக்கள் பூரணமான ஒத்துழைப்பை தந்துதவுமாறும் கேட்டுக்கொண்டார். பண்டிகை காலங்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் இதன்போது குறிப்பிட்டார். இம்முறை எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவது தான் கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.
READ MORE | comments

ஜனாதிபதி கோட்டாபயவின் வழிகாட்டலில் 1000 தேசிய பாடசாலைகள்

 


இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் தலைமையில், கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகளுக்கு இந்த அனைத்து வசதிகளையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும்.

வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றார்.

READ MORE | comments

கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஆசிரியர் சங்கம்!

 


தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியரிடம் காரணம் கோரி கடிதம் அனுப்புவது சட்டபூர்வமான விடயமல்லவென, இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா புவனேகபாஹு வித்தியாலயத்தில் பணியாற்றும், இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி W.G.R சுபாஷினி சூலரத்னவிற்கு, டிசம்பர் 2ஆம் திகதி, ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவின் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகத்தின் கடமைகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகம் ஊடாக விமர்சித்ததமை” என்ற தலைப்பில் பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், 'நீங்கள் பேஸ்புக் ஊடாக வலைய கல்வி அலுவலகத்தின் கடமைகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்தாபனக் குறியீட்டின் விதிமுறைகளுக்கு இணங்காமைக்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால், கடிதம் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் தமது காரணங்களை சமர்ப்பிக்குமாறும் ஆசிரியருக்கு பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முறையில் சமூக ஊடகங்களில் தனது மனக்குறையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு காரணம் கேட்டு கடிதம் அனுப்புவது சட்டபூர்வமானது அல்லவெனவும், அந்தக் கடிதத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஒரு ஆசிரியருக்கு இதுபோன்ற கடிதத்தை அனுப்பியமைக்காக நாம் எதிர்ப்பினை அதிருப்தியையும் தெரிவிக்கிறோம். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும், அவருடைய பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கியிருக்க வேண்டும்.

அதனைவிடுத்து விளக்கம் கேட்டு ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பின் மஹாநாம கல்லூரியின் ஆசிரியர் சமந்தி பெலகெடிய, தாம் கடமையில் இருந்தபோது எதிர்கொண்ட பிரச்சினைக் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தை அடுத்து, அவருக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த விடயத்தில், இலங்கை ஆசிரியர் சங்கம் தலையீடு செய்த விடயத்தையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, 2012 இல் இந்த விடயத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததோடு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் மூலம், அரச ஊழியர்கள் தங்கள் குறைகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 11ஆம் திகதி, ஸ்ரீ ஜயவர்தனபுர வலய கல்வி அலுவலகத்திற்கு வருகைத்தந்த ஆசிரியை சுபாஷினி சூலரத்னவினால், ஒப்படைக்கப்பட்ட கோப்புகள், 25ஆம் திகதி அவர் மீண்டும் வருகைத்தந்தபோது, அந்த கோப்புகள் வாயிலுக்கு அருகிலுள்ள கட்டடத்தின் மேசையில் இருப்பதை கண்டதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டார்.

மேலும், இதுத் தொடர்பில் அந்தப் பதிவின் ஊடாகவே வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கும் அறிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகம் ஆசிரியர்களுக்கு உள்நுழைய முடியாதவாறு மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின், நாடு முழுவதும் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலய அலுவலகம் உள்ளிட்ட பல கல்வி அலுவலகங்கள் இவ்வாறு செயற்படுவது கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினை வழங்கி, கல்வி அலுவலகத்தை ஆசிரியர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் விடயத்தை நிறுத்துமாறும், ஆசிரியர் சுபாஷினி சூலரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர வலய கல்வி அலுவலகப் பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவிடம் கேட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாவிடின் ஏற்கனவே வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஆசிரியர் சுபாஷினிக்கு ஆதரவாக நீதிமன்றத்தை நாடப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

READ MORE | comments

சம்மாந்துறையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை.

 


ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணத்தில் உருவான  "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (31) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம் வாஜித் அலி ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நேர்முக தேர்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் , பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல் மஜீட், சம்மாந்துறை சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம்.சலீம், மல்வத்தை 24 ஆவது பிரிவின் இராணுவ அதிகாரி அனஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை மேற்கொண்டனர்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நேர்முக தேர்வுகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் "பல்நோக்கு அபிவிருத்தி பணி உதவியாளர்களாக" நியமனம் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
READ MORE | comments

மட்டு மாநகர எல்லைக்குள் அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு!!


 மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தற்போது அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அறிவித்துள்ளார்.


இன்று (31) மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாக சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளமையினால். தற்போது அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களின் அத்தியவசிய சேவைகளான மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், வெதுப்பகங்கள், கோழி இறைச்சி கடைகள், மரக்கறி மற்றும் பழக் கடைகளை மாத்திரம் திறப்பதற்கு அனுமதியளிப்பதாகவும், ஏனைய வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் மூடி சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை அத்தியவசிய தேவை கருதி திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சமுக இடைவெளியினை பேணி, கைகளைக் கழுவும் வசதிகள் செய்யப்பட்டு, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக அவசியமானதாகும்.

குறித்த பணிப்புரைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமையவும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களும் கொரொனா அச்சத்திலிருந்து எமது பிரதேசத்தினை மீட்டெடுக்க பூரண ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாளை பிறக்கவுள்ள புதுவருடத்தினை வீட்டிலிருந்து நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறும், ஆலய வழிபாடுகளில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்வாலயம் சிறிய ஆலயம் ஆயின் 25 பேரும் பெரிய ஆலயம் ஆயின் 50பேரும் மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களை மூடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை மீறி பல வியாபார நிலையங்கள் இரகசியமான முறையில் திறக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்ததாகவும், அவர்களுக்கு இறுதி அறிவித்தல்கள் வழங்கப்பட்டு மூடப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறு அவதானிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்தார்
READ MORE | comments

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் "இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும்.



நூருல் ஹுதா உமர் & ஐ.எல்.எம். நாஸீம்

சம்மாந்துறைப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும்  இணைந்து நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும்  நிகழ்வும் "இலக்கியம்” எனும் நினைவு மலர் வெளியீடும் கடந்த புதன்கிழமை (30) சம்மாந்துறை காலாசார மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எம்.எம் ஆசிக், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தகர் ரி.எம் றிம்சான், சம்மாந்துறை  கலாசார அதிகார சபை உப தலைவர் இலக்கியவாதி வைத்தியர் எம்.எம் நெளசாத், சம்மாந்துறை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.வை நெளஸானா  என பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் நடாத்தப்பட் போட்டியிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை  பெற்ற மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி- 36 பொலிஸார் தனிமைப்படுத்தலில்...!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதை அடுத்து அங்கு கடமையில் இருந்த 36 பொலிஸார் தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அங்கு புதன்கிழமை 30.12.2020 இடம்பெற்ற ரபிட் அன்ரிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து அப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் ஐவரும் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேவேளை தொற்றுக்குள்ளாகிய பொலிஸாருடன் கடமையிலிருந்த 36 பொலிஸாரும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

READ MORE | comments

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்

 


ரீ.எல்.ஜவ்பர்கான்)

இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் தெரிவித்தார். இந்த தனிமைப்படுத்தல் முடக்கம் தொடர்ந்து 5 நாட்களுக்கு அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முழுநாளும் மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைவாக இத்தொற்றாளர்களும், இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் இனங்கண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு எச்சரிக்கை கடிதம்....!

 


இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்விய்ற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் வழங்கக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார் மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களாக .


இணங்கியபடி 216/18 கல்வியாண்டிற்கான கல்வியற் கல்லூரிகளில் கல்வி கற்ற 3772 டிப்ளோமாதாரிகளுக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தவறியதற்கு எதிராக அந்த டிப்ளோமாதாரிகளின் பங்களிப்புடன் எங்கள் சங்கம் ஜனவரி 4 ஆம் தேதி கல்வி அமைச்சின் முன் ஒரு போராட்டத்தை நடத்தும் என்பதை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம்.

2014 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர சித்தி பெற்றவர்களின் மாவட்ட தகுதி மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் கல்வியற்கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளோமா பாடநெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த டிப்ளோமாதாரிகள் தங்கள் படிப்பை நிறைவுசெய்ய ஆறு ஆண்டுகள் கடந்தன.பாடநெறியின் இறுதி முடிவுகள் வெளியாகி இப்போது 9 மாதங்கள் ஆகின்றன.

​​இந்த டிப்ளோமாதாரிகள் உயிர்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், மேலும் கல்வி அமைச்சகம் இந்த நியமனங்கள் தாமதப்படுத்துவதால் அவர்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப் படுகின்ற மாணவர்களுக்கும் செய்கின்ற பாரிய அநீதியாகும்.

நியமனங்கள் வழங்குவது தொடர்பாக டிசம்பர் 10 ஆம் தேதி ஆன்லைனில் அவர்களின் நியமனங்களை பெற கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அச்செயற்பாட்டில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்பதை நன்கு அறிந்த விடயமாகும். அதே நேரத்தில் டிசம்பர் 11 ம் தேதி, , எங்கள் சங்கம் அவர்களுக்கு இந்த நியமனங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்தது, மேலும் டிசம்பர் 14 அன்று அந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பையும் கோரியது ஆனால், இதைக் கேட்காத கல்வி அமைச்சு இந்த நிலைமைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, கல்வி அமைச்சு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு அடிப்படையில் மேலும் தாமதமின்றி மற்றும் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இந்த நியமனங்களை வழங்குமாறு பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம் என சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

S. Pradeep
0713280729
0773080729
READ MORE | comments

மட்டக்களப்பில் வாவியில் நீராடிக்கொண்டிருந்த வேளை குடும்பஸ்த்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்...!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.



பழுகாமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஞானசேகரம் என்பவர் புதன்கிழமை(30) மாலை பழுகாமத்தில் மட்டக்களப்பு வாவியை ஊடறுக்கும் ஆற்றுக்கட்டுப் பாலத்தின் கீழ் நீராடியுள்ளார். இன்போதே அவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிக்கலாமோ எனவும் ஆற்றுக்கட்டுப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றில் காணாமல்போன குறித்த நபர் வியாழக்கிழமை(31) காலை வரை கிடைக்காத இந்நிலையில் படகுமூலம் தேடி வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க தற்போது மாரி மழை காலம் ஆகையால் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நன்நீர் மீன்பிடியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தவாரம் இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பழுகாமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் முதலையின் பிடிக்கு உள்ளாகி கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தயிசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் வியாபாரிகளுக்கு அன்டிஜன் பி.சி.ஆர் பரிசோதனை


செ.துஜியந்தன்


மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் இன்று(31) களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எழுமாற்றாக கொரோனா தொற்றைக் கண்டறியும் அன்டிஜன் பரிசோதனைகள் பொதுச்சந்தைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களில் கல்முனை பொதுச்சந்தை, மட்டக்களப்பு நகர்ப்பகுதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கல்முனையின் சில பகுதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மவாட்ட சுகாதரப்பிரிவினரால் கொரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய களுவாஞ்சிக்குடி சுகாதாரப்பணிமனையினால் கடந்த சில வாரங்களுக்குள் கல்முனை, மட்டக்களப்பு ஆகிய பொதுச்சந்தைகளுக்கு சென்று வந்த களுவாஞ்சிகுடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 62 பேருக்கு இன்று(31) அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என சுகாதாரப் பிரிவினர் அறிவித்தனர்.







இதுவரையான காலப்பகுதியில் களுவாஞ்சிக்குடி சுகாதாரப்பணிமனையினால் 1015 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றிவற்றில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதேசத்தில்  முன் எச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் மேற்காள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளும் கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை செய்திருக்கவேண்டும். பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளா முன்வராத வியாபாரிகள் தொடர்ந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது எனவும், நாளையும் வெள்ளிக்கிழமையும் இப்பகுதி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என களுவாஞ்சிகுடி பிராந்தி சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது. 
READ MORE | comments

கல்முனை முடக்க விவகாரத்தில் ஹரீஸ் எம்.பியும், ஹக்கீம் எம்.பியும் தலையிட்டு தீர்வை வழங்க முன்வரவேண்டும் : உல‌மா க‌ட்சித் தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்.




நூருல் ஹுதா உமர், 

க‌ல்முனை பொலிஸ் பிரிவை மூடும்ப‌டி கல்முனை பிக்கு ஒருவ‌ரும் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையின் சில‌ த‌மிழ் உறுப்பின‌ர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்ட‌ர் சுகுண‌ன், க‌ல்முனை மேய‌ர் ஆகியோரிட‌ம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மேற்ப‌டி பிக்குவின் க‌ருத்தை ஏற்று க‌ல்முனை பொலிஸ் பிரிவை மூடியிருந்தால் க‌ல்முனை லொக்ட‌வுனில் இருக்கும் போது முஸ்லிம்க‌ளின் க‌டைக‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌தை த‌விர்த்திருக்க‌லாம் என‌ உல‌மா க‌ட்சித்தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார். அந்த அறிக்கையில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

க‌ல்முனை பொலிஸ் பிரிவு என்ப‌து நீலாவ‌ணை முத‌ல் சாய்ந்த‌ம‌ருது வ‌ரையாகும். இத‌னால் முழு க‌ல்முனையும் முட‌ங்க‌ப்ப‌டும் என்பதாலும் அனைத்து ப‌குதியிலும் பொலிசும் இராணுவ‌மும் பாதுகாப்பு வ‌ழ‌ங்கியிருக்கும் என்ப‌தால் கொள்ளைச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்திருக்காது.

ஆனால் க‌ல்முனை ப‌ஸாரை ஒட்டிய‌ வ‌ட‌க்கில் க‌ல்முனை த‌மிழ் ப‌குதி, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை முழுவ‌தாக‌ திற‌ந்து விட்டு வாடி வீட்டிலிருந்து லொக் ட‌வுன் அறிவித்த‌லை ஏன் செய்தார்க‌ள் என்ப‌தை டொக்ட‌ர் சுகுண‌ம் ம‌க்க‌ளுக்கு அறிவிக்க‌ வேண்டும்.  மேற்ப‌டி கொள்ளை க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளுக்கு தெரிந்து, திட்ட‌மிட்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தா என்ப‌தையும் அதிகாரிக‌ள் ஆராய‌ வேண்டும்.


க‌ல்முனை மாந‌க‌ரை அல்ல‌து க‌ல்முனை வ‌ட‌க்கு த‌மிழ் ப‌குதியை மட்டுமாவ‌து முட‌க்கும் ப‌டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ர் முஸ்லிம் காங்கிர‌சின் க‌ல்முனை மேய‌ரிட‌ம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், க‌ல்முனை வ‌ட‌க்கை முழுவ‌தும் முட‌க்காம‌ல் க‌ல்முனை முஸ்லிம் ப‌குதியையும் சில‌ த‌மிழ் ப‌குதியையும் மேய‌ர் முட‌க்கிய‌து ஏன்?

த‌மிழ் ம‌க்க‌ள் கேட்டுக்கொண்ட‌தால் அவ‌ர்க‌ள் ப‌குதியை முட‌க்குவ‌து நியாய‌ம். முஸ்லிம்க‌ள் எவ‌ரும் த‌ம‌து ப‌குதியை முட‌க்க‌ கோர‌வில்லை. இந்த‌ நிலையில் க‌ல்முனை மேய‌ரின் இந்த‌ முடிவு தான் தோன்றித்த‌ன‌மான‌ முடிவா? க‌ல்முனை முஸ்லிம்க‌ள் அர‌சிய‌ல் அதிகார‌ம் இல்லாத‌ அனாதைக‌ளா?  இது விட‌ய‌த்தில் க‌ல்முனை தொகுதி எம் பி ஹ‌ரீசும், க‌ல்முனையை ஆளும் மு.காவின் த‌லைவ‌ரும் மௌன‌மாக‌ இருப்ப‌து ஏன்? அது ம‌ட்டும‌ல்லாது இது விட‌ய‌ங்க‌ளை பேசாம‌ல் க‌ல்முனை மாந‌க‌ர‌ச‌பையின் முஸ்லிம் காங்கிர‌சின் மேய‌ர், முஸ்லிம் உறுப்பின‌ர்க‌ள் மௌன‌மாக‌ இருப்ப‌து ஏன் என்ப‌தும் தெளிவு ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்றார். 
READ MORE | comments

தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காக மக்களின் உயிருடன் விளையாட முடியாது : பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத்


நூருள் ஹுதா உமர்.


ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு தனிநபர்களினதும், சில குழுக்களினதும் நல்லது கெட்டவைகளுக்காகவும், அஜந்தாக்களுக்கவும் மக்களை பாதகத்தில் தள்ளிவிடும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத்துறை  ஒருபோதும் சிபார்சினை வழங்க மாட்டாது என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை பகுதிவாரியாக முடக்கப்பட்டதை தொடர்ந்து சமூகத்தின் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை ஊடகவியலாளர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதேசம் ஒன்றை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது என்பது கொவிட்-19 தொற்று பாரிய அளவில் சமூகத் தொற்றாக மாறி பல உயிர்களை காவு கொள்வதை தடுப்பதற்காகவும் மக்களை அசௌகரியமில்லாது நம்பிக்கையான சுகாதார வாழ்வை உறுதிப்படுத்தவும் எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அதிகாரம் கௌரவ முதல்வருக்கு இருந்தாலும் சமீபத்தைய நாட்களில் உருவான விமர்சனங்களையடுத்து இம்முறை தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கையை சுகாதார தரப்பே முன்னெடுத்தது. சுகாதார தரப்பு அவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு ஒரு பிரதேசத்தை உட்படுத்த அதற்கான படிமுறைகள் நிறைய இருக்கின்றது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, வைரஸ் தொற்று பரவுகின்ற வேகம், தொற்று வைரஸை கண்டுபிடிக்க பரிசோதனைகளை செய்யக்கூடிய வசதி, மக்களின் பரிசோதனைகளுக்கான ஒத்துழைப்பு, மக்களின் சனத்தொகை அடர்த்தி, அப்பிரதேச மக்களால் பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகள், பொதுவிடங்களில் மக்கள் கூடுகின்ற அளவு, சுகாதாரத் துறையினரின் ஆளணி வசதி, ஏனைய பிரதேசங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து உள்வரும் வெளிச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை என்பவற்றுடன்  அந்த பிரதேசத்தில் உள்ள அலுவலகங்கள், திணைக்களங்களின் ஒருமித்த ஒத்திசைவு என பல்வேறு நடைமுறைகள் உள்ளது.

அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கையானது அப்பிராந்திய மற்றும் அந்த மாகாண பணிமனையினால் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு கொழும்பிலுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் அந்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முன்மொழியப்படும். அவர்கள் இருவரும் அந்த முன்மொழிவை தமது ஆளணியினரூடாக  பரிசீலித்து கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள  விசேட ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைப்பார்கள். விசேட ஜனாதிபதி செயலணி ஆழமாக ஆராய்ந்து தனிமைப்படுத்தல் முடிவினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக  அறிவிப்பார்கள்.

தனிமைப்படுத்தலில் இவ்வளவு விடயங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் சிறப்பான மக்கள் பணியை செய்து வரும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் மீது இருக்கும் அரசியல் காழ்புணர்ச்சிக்கும், பொறாமைதனத்திற்கும் தீனி போட இனவாதமாக, பிரதேசவாதமாக கதைகளை பரப்பி வருகிறார்கள். கல்முனை என்பது வர்த்தக தலைநகரங்களில் ஒன்று என்பதை நான் உட்பட யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் வர்த்தகத்தை விட மனித உயிர்கள் பெறுமானம் கூடியது. சிறிய பாதிப்புக்கள் இருந்த காலகட்டத்தில் அந்த சமூக தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இனவாத, பிரதேசவாத, அரசியல் அஜந்தாக்களும் தனிநபர் விருப்பு வெறுப்புக்களும் கூடியதால் வீரியமிக்க இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவது கஷ்டமாக உள்ளது. மக்கள் நலன் மிக்க எதை செய்தாலும் ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் கூச்சலிட ஆரம்பிக்கிறார்கள். பெரிய விடயங்களை கட்டுப்படுத்த போராடும் போது சிறிய விட்டுக்கொடுப்புக்கள்  வேண்டும்.

கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றத்தை உண்டாக்க கல்முனை மாநகர முதல்வர் தலைமையில் வர்த்தக பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் இராணுவம், பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி நல்ல முடிவை பெற்றுள்ளோம். வியாபார நடவடிக்கைளை மீண்டும் வீரியமாக ஆரம்பிக்கவேண்டி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், ஆணையாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உயரதிகாரிகள் இணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது பிரதேச மக்களின் உயிர்களை மதித்து சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களை ஏற்று நடப்பதுடன் எல்லா விடயங்களையும் அரசியல், இனவாத, மதவாத, பிரதேசவாத கண்கொண்டு பாராமல் நேர்பட சிந்தித்து சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசங்கள் அணிந்து, கைகளை சவர்க்கரமிட்டு கழுவி, வீணான பயணங்களை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியதுடன் எல்லா மக்களும் இப்பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காரியாலயங்களில் நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைகளை பேணி நடப்பது  இப்போது அவசியமான ஒன்றாகும் என்றார்.

READ MORE | comments

11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படாது! கல்வி அமைச்சர் அறிவிப்பு

 


2021ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை திறக்க முறையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எனினும், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்றார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஜனவரி 11 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்றார்.

READ MORE | comments

புதிய உருமாறிய கொரோனா தொற்று இலங்கையில் வந்துள்ளதா?- ஆய்வுகள் ஆரம்பம்...!!

 


உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura )இந்த பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர இதுதொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் மேற்கொள்ளப்படும் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த உருமாறிய வைரஸ் அடங்கக்கூடிய வைரஸ் தொற்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு உலகம் முழுவதிலும் பரவிவரும் இந்த உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலேயே ஆரம்பமானது. இது தற்பொழுது பல உலக நாடுகளிடையே பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். இதனால் இது தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரசுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை தேவைக்கேற்ற வகையில் சுகாதார பிரிவினர்களினால் தனிமைப்படுத்தப்படுவர். சரியான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தி தொற்று பரவலை தடுக்க முடியும். தற்போதுள்ள நிலைமையில் இது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும், ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சில வேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
READ MORE | comments

கிழக்கில் கடந்த 12 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 1188ஆக அதிகரிப்பு- பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்க்ளின் எண்ணிக்கை 1188ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.


கடந்த 12 மணித்தியாலங்களில் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களாக,
திருகோணமலை மாவட்டத்தில்- குச்சவெளியில் ஒருவரும், மூதூரில் 5 பேரும், உப்புவெளியில் ஒருவரும்,

கல்முனை பிராந்தியத்தில்- கல்முனை வடக்கில் ஒருவரும், கல்முனை தெற்கில் 14 பேரும், காரைதீவில் ஒருவரும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்- ஓட்டமாவடியில் ஒருவரும், ஏறாவூரில் 5 பேரும், மட்டக்களப்பில் 6 பேரும், வவுணதீவில் ஒருவரும், காத்தான்குடியில் 46 பேரும், பட்டிப்பளையில் ஒருவரும், ஆரையம்பதியில் ஒருவரும்,

அம்பாறை பிராந்தியத்தில்- உகனவில் ஒருவருமாக மொத்தம் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, திருகோணமலையில் 142 பேருக்கும், மட்டக்களப்பில் 204 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 39 பேருக்கும், கல்முனை பிராந்தியத்தில் 803 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1188ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பில் 2 கொரோனா மரணங்களும், கல்முனையில் 4 கொரோனா மரணங்களுமாக கிழக்கில் மொத்தம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து திருகோணமலையின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும், கல்முனையில் கல்முனை 1, 2, 3 கிராம சேவகர் பிரிவுகளும், கல்முனை குடி 1, 2, 3, கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும், கொரோனா தொற்று அபாயமுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், முகக்கவசங்களை சரியான முறையில் தொடர்ந்தும் அணியுமாறும், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படும் நபர்கள் சுகாதார பிரிவினரை அணுகி அதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், சமூக மற்றும் தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுமாறும், முகத்தை கைகளால் தொடுவதை இயன்றவரை குறைக்குமாறும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார பிரிவினர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் 63 வர்த்தகர்களுக்கு கொரோனா! மூடப்படும் வர்த்தக நிலையங்கள் மேலதிக விபரங்கள்....

Wednesday, December 30, 2020

 


மட்டக்களப்பில் வர்த்தகர்கள் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர், பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் என 1214 பேருக்கு இன்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும், மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை இன்று அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்ளொள்ளப்பட் பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை.

அதேவேளை இவர்களுடன் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான ரெக்ஸ்ரையில்கள், பான்சி கடைகள், குழந்தைகளுக்கான் பொருட்களை விற்பனை நிலையம் (பேபி) உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடினர்.

இதேவேளை காத்தான்குடியில் 665 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

காத்தான்குடி பிரதேசம் 5 நாட்களுக்கு முடக்கம்; மட்டக்களப்பு நகர் ஒரு நாள் கடைகள் அடைப்பு...!!

 


மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என அரசாங்க அதிபர் கே.கருனாகரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று (30) மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இதனைத் தொர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர். 

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைவாக இத்தொற்றாளர்களும், இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் இனங்கண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதேவேளை நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ். மயூரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு நகரில் மேற்கொண்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!


 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்று காரணமாக தொற்றாளர்கள் நாளுக்கு நாள்  அதிகரித்துவருகின்றனர். 

இன்று மட்டக்களப்பில் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிகின்ற சுமார் 553 பேருக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி கல்லாறு மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் ரபிட் அன்டிஜன் பரிசோதனை தொடர்ச்சியாக நடத்துவதற்கு சுகாதார பகுதியினர் தீர்மானித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று அறிகுறி தென்படுகின்ற பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தங்களை பரிசோதித்து கொள்வதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் அயலவர்களையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியுமென சுகாதார பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் புதுவருட கொண்டாட்டங்களை தவிர்த்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
READ MORE | comments

காத்தான்குடியில் 665 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1214 பேருக்கு இன்று புதன்கிழமை (30) பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


இன்று சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டபடி காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை இன்று அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை.

அதேவேளை இதில் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான ரெக்ஸ்ரையில்கள், பான்சி கடைகள், குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை நிலையம் (பேபி) உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடினர்.

இதேவேளை காத்தான்குடியில் 665 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


உக்ரைனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக கடந்த திங்கட் கிழமை பி.ப 2.06 மணியளவில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, மேற்படி உக்ரேனிய பயணிகள் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேற்படி சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


READ MORE | comments

அக்கரைப்பற்றில் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் சமூக மட்ட குழுக்களுடனான கலந்துரையாடல்

 


நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி கோத்தபாயவின் யோசனையில் உருவான அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு 2021-2023 திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான "கிராமத்தின் ஊடான கலந்துரையாடல் மூலம் கிராமத்திற்கு திரும்புதல்" எனும் அடிப்படையிலான சமூக மட்ட குழுக்களுடனான கலந்துரையாடலும் வேலைத் திட்டங்களை அடையாளம் காண்பதற்குமான கூட்டம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு 02 மற்றும் 01 ஆம் பிரிவுகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரஸ்.எச்.தம்ஜீத் கே.எல் ஹனூசா ஆகியோரின் தலைமையில் அக்கரைப்பற்று பாயிஷா வித்தியாலய  கேட்போர் கூடத்தில்கடந்த செவ்வாய்க்கிழமை (29) மாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் விசேட பங்குபற்றுனராக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக்  மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் குறித்த வட்டாரங்களுக்கு பொறுப்பான உறுப்பினர்களும் குறித்த பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன்,   பிரிவின் பயிலுனர் உத்தியோகத்ர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பிரிவுகளில் 2021 ல் அமுல்படுத்த உத்தேசிக்கும் திட்ட முன்மொழிவுகள், 3 ஆண்டு திட்டம் தயாரித்தல், கிராமிய மட்ட குழுக்கள் அமைத்தல் என்பனவும் நடைபெற்றது.
READ MORE | comments

மக்களின் பொடுபோக்கினால் சாய்ந்தமருதில் குப்பைக் கொத்தணி உருவாகும் அபாயம்!

எம்.வை.அமீர் & நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்துக்கு அருகில் மீண்டுமொரு குப்பைக் கொத்தணி உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இப்பிரதேச மக்களை ஆட்கொண்டுள்ளது.
2020.12.30 ஆம் திகதி சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்தை அண்மித்த பிரதேசத்தில் குப்பைகள் குவிந்ததால் அசாதாரண நிலை உருவானது. அந்த வேளையில் குறித்த இடத்துக்கு விரைந்த மாநகரசபை உறுப்பினர் எம்.வை.எம்.ஜௌபர், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

கழிவுகளை சேகரிக்கும் வாகனம் குறித்த நேரத்துக்கு வருகைதராததன் காரணமாகவே இவ்வாறானதொரு சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் நேரம் கடந்து மாநகரசபை வாகனம் வருகைதந்து கழிவுகளை சேகரித்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும் என்றும் வாகனம் பிந்திவிட்டது அல்லது வரவில்லை என்பதற்காக தங்களது கழிவுகளை வீதியில் வைத்து விட்டு செல்வது என்பது ஒழுக்கமான வழிமுறை அல்லவென்றும் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவ்வாறனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


அதேவேளை வாகனம் பிந்திவரும் அல்லது வாராது என்ற தகவல்களை மாநகரசபையின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆரம்பத்தில் குப்பை கொட்டும் தளமாக காணப்பட்ட குறித்த சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தோணா பாலத்தை அண்மித்த பிரதேசம், மக்களது பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.வை.எம்.ஜௌபர் எடுத்துக்கொண்ட முயச்சியின் காரணமாகவும் கடந்த 2018.04.18 ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் சுத்திகரிக்கப்பட்டு பேணப்பட்டுவந்தன. ஆனால் இப்போது பழைய நிலைக்கு குறித்த பிரதேசம் சென்றுவிடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமானநிலை அரசின் எல்லா கட்டமைப்புகளையும் ஆட்டம் காணவைத்துள்ள நிலையில் கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளும் மந்தநிலைக்குச் சென்றுள்ளதன்காரணமாகவும் பிரதேச மக்கள் அவர்களது இல்லங்கள் சுத்தமாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலைக்குச் சென்றுள்ளதன் காரணமாகவுமே மீண்டும் இந்த பிரதேசத்தின் குப்பை மேடு உருவாகும் நிலை உருவாகியுள்ளது.
READ MORE | comments

கல்முனையின் ஒரு பகுதி முடக்கம் : வீதியோரத்தில் பட்டினியில் வாடும் இல்லிடமற்ற ஏழைகள் !!

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு கடந்த  மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்முனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




இதனால் உள் வீதிகள் மற்றும் பிரதான வீதி சன நடமாற்றங்களோ பெரியளவிலான போக்குவரத்துக்களோ  இல்லாது மௌனமாக காட்சியளிப்பதுடன் கல்முனை உணவகங்களை நம்பி வாழும் ஏழை முதியோர்களும் உணவுகளில்லாது பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் சுகாதார நடவடிக்கைகளும் குறித்த பிரதேசத்தில் அமுலில் இருந்து வருகின்றது. கல்முனையில் அமுலில் உள்ள பகுதிவாரியான  தனிமைப்படுத்தலால் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வும் உறுப்பினர்கள் வருகை தந்திருந்த போதிலும் இன்று நடைபெறவில்லை. 
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |