Home » » மட்டு மாநகர எல்லைக்குள் அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு!!

மட்டு மாநகர எல்லைக்குள் அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிப்பு!!


 மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தற்போது அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அறிவித்துள்ளார்.


இன்று (31) மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாக சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளமையினால். தற்போது அமுலில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் செயற்பாடானது மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களின் அத்தியவசிய சேவைகளான மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், வெதுப்பகங்கள், கோழி இறைச்சி கடைகள், மரக்கறி மற்றும் பழக் கடைகளை மாத்திரம் திறப்பதற்கு அனுமதியளிப்பதாகவும், ஏனைய வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் மூடி சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை அத்தியவசிய தேவை கருதி திறக்கப்படும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சமுக இடைவெளியினை பேணி, கைகளைக் கழுவும் வசதிகள் செய்யப்பட்டு, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக அவசியமானதாகும்.

குறித்த பணிப்புரைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாகவும், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமையவும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களும் கொரொனா அச்சத்திலிருந்து எமது பிரதேசத்தினை மீட்டெடுக்க பூரண ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாளை பிறக்கவுள்ள புதுவருடத்தினை வீட்டிலிருந்து நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறும், ஆலய வழிபாடுகளில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்வாலயம் சிறிய ஆலயம் ஆயின் 25 பேரும் பெரிய ஆலயம் ஆயின் 50பேரும் மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களை மூடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை மீறி பல வியாபார நிலையங்கள் இரகசியமான முறையில் திறக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்ததாகவும், அவர்களுக்கு இறுதி அறிவித்தல்கள் வழங்கப்பட்டு மூடப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறு அவதானிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தெரிவித்தார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |