தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியரிடம் காரணம் கோரி கடிதம் அனுப்புவது சட்டபூர்வமான விடயமல்லவென, இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
கம்பஹா புவனேகபாஹு வித்தியாலயத்தில் பணியாற்றும், இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி W.G.R சுபாஷினி சூலரத்னவிற்கு, டிசம்பர் 2ஆம் திகதி, ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவின் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகத்தின் கடமைகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகம் ஊடாக விமர்சித்ததமை” என்ற தலைப்பில் பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், 'நீங்கள் பேஸ்புக் ஊடாக வலைய கல்வி அலுவலகத்தின் கடமைகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்தாபனக் குறியீட்டின் விதிமுறைகளுக்கு இணங்காமைக்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால், கடிதம் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் தமது காரணங்களை சமர்ப்பிக்குமாறும் ஆசிரியருக்கு பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த முறையில் சமூக ஊடகங்களில் தனது மனக்குறையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு காரணம் கேட்டு கடிதம் அனுப்புவது சட்டபூர்வமானது அல்லவெனவும், அந்தக் கடிதத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகப் பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஒரு ஆசிரியருக்கு இதுபோன்ற கடிதத்தை அனுப்பியமைக்காக நாம் எதிர்ப்பினை அதிருப்தியையும் தெரிவிக்கிறோம். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும், அவருடைய பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கியிருக்க வேண்டும்.
அதனைவிடுத்து விளக்கம் கேட்டு ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பின் மஹாநாம கல்லூரியின் ஆசிரியர் சமந்தி பெலகெடிய, தாம் கடமையில் இருந்தபோது எதிர்கொண்ட பிரச்சினைக் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தை அடுத்து, அவருக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த விடயத்தில், இலங்கை ஆசிரியர் சங்கம் தலையீடு செய்த விடயத்தையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, 2012 இல் இந்த விடயத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததோடு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் மூலம், அரச ஊழியர்கள் தங்கள் குறைகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 11ஆம் திகதி, ஸ்ரீ ஜயவர்தனபுர வலய கல்வி அலுவலகத்திற்கு வருகைத்தந்த ஆசிரியை சுபாஷினி சூலரத்னவினால், ஒப்படைக்கப்பட்ட கோப்புகள், 25ஆம் திகதி அவர் மீண்டும் வருகைத்தந்தபோது, அந்த கோப்புகள் வாயிலுக்கு அருகிலுள்ள கட்டடத்தின் மேசையில் இருப்பதை கண்டதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டார்.
மேலும், இதுத் தொடர்பில் அந்தப் பதிவின் ஊடாகவே வலயக் கல்வி அலுவலக பணிப்பாளருக்கும் அறிவித்தார்.
இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்வி அலுவலகம் ஆசிரியர்களுக்கு உள்நுழைய முடியாதவாறு மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின், நாடு முழுவதும் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலய அலுவலகம் உள்ளிட்ட பல கல்வி அலுவலகங்கள் இவ்வாறு செயற்படுவது கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினை வழங்கி, கல்வி அலுவலகத்தை ஆசிரியர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் விடயத்தை நிறுத்துமாறும், ஆசிரியர் சுபாஷினி சூலரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர வலய கல்வி அலுவலகப் பணிப்பாளர் நிர்மலா கே. ஏகநாயக்கவிடம் கேட்டுள்ளது.
அவ்வாறு செயற்படாவிடின் ஏற்கனவே வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஆசிரியர் சுபாஷினிக்கு ஆதரவாக நீதிமன்றத்தை நாடப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
0 comments: