கல்முனை மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்துக்கு அருகில் மீண்டுமொரு குப்பைக் கொத்தணி உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இப்பிரதேச மக்களை ஆட்கொண்டுள்ளது.
2020.12.30 ஆம் திகதி சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி, தோணா பாலத்தை அண்மித்த பிரதேசத்தில் குப்பைகள் குவிந்ததால் அசாதாரண நிலை உருவானது. அந்த வேளையில் குறித்த இடத்துக்கு விரைந்த மாநகரசபை உறுப்பினர் எம்.வை.எம்.ஜௌபர், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
கழிவுகளை சேகரிக்கும் வாகனம் குறித்த நேரத்துக்கு வருகைதராததன் காரணமாகவே இவ்வாறானதொரு சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் நேரம் கடந்து மாநகரசபை வாகனம் வருகைதந்து கழிவுகளை சேகரித்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும் என்றும் வாகனம் பிந்திவிட்டது அல்லது வரவில்லை என்பதற்காக தங்களது கழிவுகளை வீதியில் வைத்து விட்டு செல்வது என்பது ஒழுக்கமான வழிமுறை அல்லவென்றும் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவ்வாறனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை வாகனம் பிந்திவரும் அல்லது வாராது என்ற தகவல்களை மாநகரசபையின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆரம்பத்தில் குப்பை கொட்டும் தளமாக காணப்பட்ட குறித்த சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தோணா பாலத்தை அண்மித்த பிரதேசம், மக்களது பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.வை.எம்.ஜௌபர் எடுத்துக்கொண்ட முயச்சியின் காரணமாகவும் கடந்த 2018.04.18 ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் சுத்திகரிக்கப்பட்டு பேணப்பட்டுவந்தன. ஆனால் இப்போது பழைய நிலைக்கு குறித்த பிரதேசம் சென்றுவிடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமானநிலை அரசின் எல்லா கட்டமைப்புகளையும் ஆட்டம் காணவைத்துள்ள நிலையில் கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளும் மந்தநிலைக்குச் சென்றுள்ளதன்காரணமாகவும் பிரதேச மக்கள் அவர்களது இல்லங்கள் சுத்தமாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலைக்குச் சென்றுள்ளதன் காரணமாகவுமே மீண்டும் இந்த பிரதேசத்தின் குப்பை மேடு உருவாகும் நிலை உருவாகியுள்ளது.
0 comments: