பிரதமர் அண்மையில் காணாமல்போனவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர். இப்படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்;று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முப்பது வருட நீங்காத நினைவும் எப்போதும் மாறாத எம்மவர் துயரும் என்னும் தலைப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நினைவுப்பேருரையாற்றினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழர்களின் பகுதிகளில் சிங்கள பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு படுகொலைகளும் திட்டமிட்டவகையில் இலங்கை தீவில் இருந்து தமிழர்களை முற்றுமுழுதாக அழிக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் எங்களை அழிக்கஅழிக்க நாங்கள் வளர்ந்துகொண்டேயுள்ளோம். தமிழர்களின் போராட்டம் இந்தியா தொடக்கம் அமெரிக்காவரையில் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து போராடக்கூடிய வல்லமைகொண்ட இனமாக தமிழினம் வளர்ந்துநிற்கின்றது என்றால் அதற்கு காரணம் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையாகும்.
கொக்கட்டிச்சோலை பகுதிகளில் 1987 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன்.அந்தவேளையில் அந்த படுகொலைகளை செய்தவர்களுக்கு தெரியும் தாங்கள் கொலைசெய்பவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று.அவர்களின் நோக்கம் அன்று தமிழர்களை அழிப்பதாகவே இருந்தது.அந்த நோக்கிலேயே கடந்த காலத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் நடாத்தப்பட்டன.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தமிழ் இனத்தின் வரலாறுகள்.வடகிழக்கு இணைந்த தாயகத்தில் என்றொ ஒருநாள் தீர்வுத்திட்டத்தினைப்பெற்றுக்கொள்வோம்.அதற்காக ஒவ்வொரு தமிழனும் உயிர் இருக்கும் வரையில் போராடுவார்கள்.அது அரசியல் ரீதியாக இருக்கலாம்,ஆயுத ரீதியாக இருக்கலாம்.அகிம்சை ரீதியாககூட இருக்கலாம்.
அன்று தமிழர்கள் படுகொலைசெய்யப்படும்போது அதற்கு எதிராக அன்றைய இளைஞர்கள் போராடாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் இனமே அழிந்திருக்கும்;.முற்றுமுழுதாக சிங்கள பேரினவாத தீவாக இது மாற்றப்பட்டிருக்கும்.
எமது அடுத்த சந்ததியாவது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு கௌரவமான வாழக்கையினை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் போராட்டம் வெற்றியடையும் என நான் கருகின்றேன்.
இலங்கையின் தமிழர்கள் பகுதிகளில் நடைபெற்ற எந்த படுகொலைக்கும் இலங்கையில் இருந்த எந்த அரசாங்கமும் நீதி வழங்கவில்லை.ஒரு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டால் இன்னுமொரு நீதிமன்றத்தில் விடுதலை வழங்கப்படும் நிலையே இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியினை எதிர்பார்க்கமுடியும்.நூற்றுக்கணக்கானவர்களை படுகொலைசெய்த படுகொலைகளுக்கு நீதிவழங்காத இந்த அரசாங்கம் இலட்சக்கணக்கானவர்களை படுகொலைசெய்த இராணுவத்திற்கு உள்ளூர் பொறிமுறையூடாக எவ்வாறு விசாரணை நடாத்தி தண்டனை வழங்கமுடியும்.இது ஏமாற்றும் செயற்பாடாகும்.
வடகிழக்கில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளையும் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு வேண்டும் என்பதே உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் கோரிக்கையாகவுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருமளவான தமிழ் இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர்.இவர்களில் பலர் வீடுகளில் வைத்து வெள்ளைவானால் கடத்தப்பட்டுள்ளனர்,பலர் வீதிகளில் செல்லும்போது கடத்தப்பட்டுள்ளனர், பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர்,அதற்கு மேலாக இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் தமிழர்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இராணுவத்திடம் கொண்டுசென்று தமது பிள்ளைகளை கையளித்தவர்களுக்கு இந்த பிரதமர் என்ன பதிலை சொல்லப்போகின்றார்.அவர்களை பிரதமரா வெளிநாடு அனுப்பிவைத்தார்.அல்லது நீங்கள் அவர்களைக்கொன்றுவிட்டீர்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.
ஒருநாட்டின் பிரதமர் அந்த நாட்டின் மக்களின் மனதை,இறமையினை மதிக்கவேண்டும்.ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சு தமிழ் மக்களின் மனதில் நீங்காத வடுவினை ஏற்படுத்தியுள்ளது.நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கவேண்டும் என்பதற்கு அல்ல.மகிந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காகவே ஆதரவளித்தோம்.பிரதமரின் இந்த உரை மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.23 தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுதலைசெய்வதாக அமைச்சர் சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.உறுதியளித்து ஆறுமாதங்களைகடந்துள்ள நிலையிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை.அவர்களுக்கு இன்னும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை.
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 65ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது.இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இரண்டாயிரம் ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.மிகுதி காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் 63 வருடங்கள் காத்திருக்கவேண்டுமா என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்வினை நோக்கிய நகர்வில் பொறுமையுடன் செயற்பட்டுவருகின்றது.அந்த பொறுமையினை இந்த அரசாங்கம் பலவீனமாக கருதிவிடக்கூடாது.அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வொன்றினை முன்வைக்கும்போது அதனை ஏன் குழப்பினீர்கள் என சர்வதேசம் எங்களை கேட்ககூடாது. அந்தவகையிலேயே நாங்கள் பொறுமைகாக்கின்றோம்.