Advertisement

Responsive Advertisement

தமிழர்களின் வரலாறு எதிர்கால சந்ததிக்கு உணர்த்தப்படவேண்டும்: அரியநேத்திரன்

தமிழர்களின் வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதற்காகவே படுகொலைகள் நினைவுகூரப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இன்று(28) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உரிமைக்கான போராட்டம் காரணமாக 2009ஆம் ஆண்டுவரையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களையும் 50ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளையும் இழந்து நிற்கின்ற போதிலும் இதுவரையில் தமிழர்களுக்கான எந்த தீர்வும் கிடைக்காதது கவலைக்குரியதாகும்.
இந்த மகிழடித்தீவு,கொக்கட்டிச்சோலை படுகொலைகளிலும் பல்வேறு தரப்பட்டவர்களை இந்த மண் இழந்துள்ள போதிலும் அவர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments