(செ.துஜியந்தன்- அன்றுகிராமத்தின் அழிவை பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய பதிவு)
இயற்கை எழில் கொஞ்சும் சிற்றூர்
இறையருள் விஞ்சி நிற்கும் திருவூர்
இதிகாசம் இசைக்கின்ற நல்லூர்
இதுவே எங்கள் பாண்டியூர்'
கடந்த 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்ட்டிருந்தன.
ஆழிப்பேரலையினால் கல்முனை தமிழ்ப்பிரிவில் 1364 பேர் உயிரிழந்திருந்தனர். 1050 பேர் காயப்பட்டிருந்தனர். 6380 குடும்பங்களைச் சேர்ந்த 24151 பேர் பாதிக்கப்பட்டும் 3667 வீடுகள் சேதமடைந்திருந்தன. அன்று 5595 குடும்பங்கள் முற்றாக இடம்பெயர்ந்து 19909 பேர் 15 இடைத்தங்கள் முகாமில் தங்கியிருந்தனர். அந்தளவிற்க்கு ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியிருந்தது.
இதில் பாண்டிருப்புக் கிராமம் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப் பிரிவில் பாண்டிருப்பு கிராமம் அமைந்துள்ளது. கிழக்கே கடல் வளம், மேற்கே வயல்வளம், எங்கும் வற்றாத நீர்வளம், வடக்கும், தெற்கும் நகர்வளம் சூழ நடுவில் அமைந்திருக்கின்றது அழகிய வனப்பு மிக்க பண்பாட்டுக்குப் பேர்போன கிராமம் பாண்டிருப்பு.
தன் கஷ்டங்களை தன்னோடு தாங்கிப்பிடித்து தலைநிமிர்ந்து நடக்கும் தைரியசாலிகளும், கற்றோரும், பாமரரும் நாகரிகத்தோடும் நிதானத்தோடும் சிந்தித்து செயற்படும் நல் உள்ளங்கள் வாழுகின்ற சிறப்பான சிற்றூர் பாண்டிருப்பு.
ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு. பத்தினித்தாய் பாஞ்சாலிக்கும், பாண்டவர்களுக்கும் திரௌபதை அம்மன் ஆலயம் அமைத்து பண்டாரப் பொட்டிட்டு பாரம்பரியங்களை பேணுகின்ற ஊராகவும் பாண்டிருப்பு இருக்கின்றது.
நெருக்கமான வீடுகளும், உருக்கமான உறவுகளுமாய் ஊரவர்கள் வாழ்ந்தார்கள். விசாயம், மீன்பிடி, வியாபாரம், குடிசைக்கைத் தொழில் ஆகியவற்றையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் நித்தமும் அரங்கேறும் இசைத்தமிழ் ஊர் என்றும் பாண்டிருப்பு அழைக்கப்படுகின்றது.
இயற்கையின் வனப்பில் இரண்டறக்கலந்து வாழக்கையின் வசந்தத்தை அனுபவித்துவந்த இம் மக்களின் வாழ்வை 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை புரட்டிப்போட்டது. பொங்கிவந்த கடலலையில் அலை அலையாய் மக்கள் மாண்டனர். இத் துயரச் சம்பவத்தின் பின்பு பாண்டிருப்பின் இயற்கை வளம் சிதைந்து போனது. ஏற்கனவே இப்பகுதியில் 1990 இல் ஏற்பட்ட வன்முறைகளினால் அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த கிராமமாகவும், அதிகமான யுத்த விதவைகளைக் கொண்ட கிராமமாகவும் பாண்டிருப்புள்ளது. இங்கு தான் முதன் முதலில் யுத்த்த்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1990-06-11 ஆம் திகதியன்று இக்கிராமத்தின் பிரபலமான வைத்தியர் சண்முகநாதன் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு உயிரிழந்தும், காணாமல் போயியும் இருந்தனர்
அதன் பிற்பாடு 2004 ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் 486 பேர் உயிரிழந்திருந்தனர். 2004 இல் ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியதில் பாண்டிருப்புக்கிராமத்தில் 486 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போயிருந்தனர். 119பேர் காயமடைந்தனர். 2726 குடும்பங்களைச் சேர்ந்த 8969 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1744 குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்தனர். 1203 வீடுகள் சேதமடைந்திருந்தன. இதில் 955 வீடுகள் முழுமையாகவும், 248 வீடுகள் பகுதியளவிலும்சேதமடைந்திருந்தன. அத்துடன் இரு இந்து ஆலயங்கள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம், ஒரு பாடசாலை, இரு முன்பள்ளிகள், ஐந்து பொதுக்கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்திருந்தன.
ஆழிப்பேரலையினால் தமது வாழ்வாதாரத்தை 2428 பேர் இழந்திருந்தனர். இதில் கூலித்தொழிலாளர்கள் 2019 பேர், வியாபாரம் 125 பேர், விவசாயம் 19 பேர், மீன்பிடி 13 பேர், தனியார் நிறுவன ஊழயர்கள் 61 பேர், அரச உத்தியோகஸ்தர்கள் 191 பேர் என குடும்பத்தை பொருளாதார ரீதியில் தாங்கிப்பிடித்தவர்களின் வாழ்வாதாரம் முற்றாக இழக்கப்பட்டிருந்தது.
இன்று ஆழிப்பேரலை ஏற்பட்டு 17 வருடங்கள் ஆகின்றபோதிலும் அது ஏற்படுத்திச் சென்ற வலிகளும், வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை. பாண்டிருப்பில் ஆழிப்பேரலையில் அள்ளுண்டு போனவர்களின் நினைவாக பாண்டிருப்பு சவக்காலை வீதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத் தூபிதான் உயரமான நினைவுத் தூபியாக இருக்கின்றது. டிசம்பர் 26 இல் இவ் நினைவுத் தூபிக்கு முன்பும் கடலில் மலர் தூவியும் மக்கள் உயிரிழந்த உறவினர்களின் நினைவாக அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
= மேட்டுவட்டை வீட்டுத்திட்டம்
பாண்டிருப்பில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேட்டுவட்டைப் பகுதியில் வீட்டுத்திட்டம் ஒன்றை அமைத்து வசிக்கின்றனர். இவ் வீட்டுத்திட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் நிலவுகின்றன. இன்னும் இங்கு கட்டிமுடிக்கப்படாத வீடுகள் இருக்கின்றன. இவர்களக்கான வீட்டுத்திட்டத்தை அமைத்த என்.சீ.எம். லங்கா எனும் நிறுவனம் அம் மக்களின் வீடுகளை முழுமையாக நிறைவு செய்து கொடுக்காத நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்ட்ட மக்களே தங்களது உடமைகளை விற்று வீடுகளை நிறைவு செய்திருந்தனர். இன்று அங்குள்ள வீடுகள் வெடிப்பு ஏற்பட்டு நிலம் தாழ் இறங்கிய நிலையிலுள்ளன. மேற்கூரைகள் கறையான் அரித்து இத்துப்போன நிலையிலும் உள்ளன. இவ் வீட்டுத்திட்டத்தை ஒப்பந்தத்திற்க்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள் தரமற்ற கட்டிடப்பொருட்களையும், தளபாடங்களையும் கொள்வனவு செய்து அவர்கள் லாபம் சம்பாதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையே வீடுகள் தரம் அற்றதாக அமையாகக் காரணமாகும் எனத்தெரிவிக்கின்றனர்.
அன்றை நிலையில் எப்படியோ தமக்கொரு வீடு கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலே மக்கள் இருந்தனர். இதனை சாதகமாகப்பயன்படுத்திய பல ஒப்பந்தக்காரர்கள் மக்களை ஏமாற்றி தரமற்ற கட்டிடப்பொருட்களை பெற்று வீடுகளை நிர்மாணித்தமை துரதிஷ்ட சம்பவமாகும். இவ் வீட்டுத்திட்டத்தில் வீதிக்கட்டமைப்பு இன்னும் முழுமையாக பூர்திசெய்து கொடுக்கப்படாதுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளத்தினால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவர்களை வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க குடியிருப்பு மனையைச் சுற்றி அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு மண் போட்டு நிலம் உயர்த்தப்படவேண்டும். அத்துடன் இம் மக்கள் தங்களது பொதுத்தேவைகளை நிறைவு செய்வதற்கென ஒரு பொதுக்கட்டிடம் இல்லாதுள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் பல்தேவைக் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றனர்.
யுத்தத்தாலும் இயற்கை சீற்றத்தாலும் நித்தம் அழிவுகளைச் சந்தித்த கிராமமாக பாண்டிருப்புக் கிராமம் இருக்கின்றது. எத்தனை அழிவுகள் ஏற்பட்டபோதிலும் பாண்டிருப்புக் கிராமம் பண்பாட்டையும், மரபுகளையும் இன்றும் கட்டிக்காக்கும் அழகியதொரு கிராமமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
( அகரம் செ.துஜியந்தன்)