அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் OIC உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (24) இரவு 10 மற்றும் 11 க்கு இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் நிலைய பிரதான நுழைவாயிலில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியால் பொலிஸ் நிலையத்திற்குள் இருந்த அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்காக வெளியேறிய OIC ஜீப்பில் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் ஜீப் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த OIC உட்பட நான்கு அதிகாரிகள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொரு அதிகாரி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜென்ட், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான அத்திமலை பிரதேசத்திற்கு தனது தனிப்பட்ட கெப் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அவர் இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதேவேளை, விடுமுறை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த குறித்த சார்ஜன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்போது விசேட விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments