இலங்கையின் அரசியல் களத்தில் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகளின் அரசியல் போக்கு குறித்த விமர்சனங்களும் புதிய அரசியல் கட்சிகளின் உருவாக்க முயற்சிகளும் காலத்துக்கு காலம் நடைபெற்றே வருகிறது.
கிழக்கில் இருந்து கிழக்கு தமிழர்களின் பூர்விகத்தை கொண்ட அரசியல் கட்சி ஒன்றை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்ற பிரயத்தனத்தில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அனைத்து முயற்சிகளும் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறிய கதையாகத்தான் முடிந்துள்ளது.
போராட்ட இயக்கங்களின் அரசியல் பிரவேசம்!
தென்னிலங்கையில் ஆயுதம் தூக்கி போராடிய மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று இலங்கயின் அரசியல் களத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
அதுவும் போராட்ட அமைப்பு ஒன்று தனித்து நின்று தனக்கான மக்கள் செல்வாக்கை ஜனநாயக களத்தில் இந்த அளவுக்கு பெற்றுள்ளது என்றால் அது அவர்களது ஊழல்கள் அற்ற மக்கள் உரிமை செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றி.
இன்று இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் வளர்ந்து நிற்கின்றார்கள்.
ஆனால் கிழக்கில் போராட்ட களத்தில் இருந்து வந்த அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியவில்லை. என்றால் அதற்கு காரணம் என்ன?
தமிழ் மக்களுக்காக போராடப் போன பல போராட்ட அமைப்புக்களும் போராடப் போன நோக்கத்தில் இருந்து தடம்மாறிப்போனதோடு அவர்கள் தங்களையும் தாங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்வதற்கே அரசியல் கட்சிகளாக உருவெடுத்தனர். இதனால் அவர்கள் செயற்பாட்டு அரசியலை விட காலத்துக்கு காலம் தஞ்சம் அடையும் அரசியலையே மேற்கொண்டு வந்தனர் இதனால் அவர்களால் தமிழ் மக்களுக்கு காட்டி கொடுப்புக்களையும் கொலை கலாசாரத்தையுமே அதிகமாக மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி சிங்கள பாமர மக்களுடன் மக்களாக பயணிக்கிறது.
ஏழை மக்களின் பிள்ளை பிறப்பு முதல் கொண்டு இறப்பின் இறுதி சடங்கு வரை மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்டு வருகின்றனர். இது அவர்களை மக்கள் மத்தியில் உயர்த்தி உள்ளது.
தடம் மாறும் கட்சிகள்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் வடக்கில் இருந்து எடுக்கப்படுவதாக கூறும் கிழக்கு அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தீர்மானங்கள் கொழும்பில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை மறந்து விடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இதுவரை ஜனநாயக களத்தில் இருந்து தன்னெழுச்சியாக ஒரு கட்சி உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
அதனை உருவாக்க யாரும் இப்போதைக்கு விடமாட்டார்கள்.
கிழக்கில் உள்ள தலைவர்கள் ஒன்று யாழ்ப்பாணத்தையோ அல்லது கொழும்பையோ அல்லது இந்தியாவை நம்பியே அரசியல் கட்சிகளை உருவாக்குகின்றனர்.
அவர்கள் அவர்களது நிகழ்ச்சி நிரல்களுக்கே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. காரணம் கிழக்கு தலைவர்கள் அரசியலில் இலாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் அவர்கள் கிழக்கு மக்களுக்காக கட்சி ஆரம்பிப்பது இல்லை தாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் அதில் இலாபம் அடைய வேண்டும் என்பதற்காகவும் தான் கட்சி தொடங்குகிறார்கள். அதில் நட்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் அரசியலில் தோல்வி அடையக்கூடாது என்பதற்காகவும் சேரக் கூடாத இடம் சேர்ந்து கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்து விடுகின்றனர். கேட்டால் மக்களுக்காகவே அவர்களுடன் சேர்ந்தோம் இவர்களுடன் சேர்ந்தோம் என்று கூறுகின்றனர்.
கிழக்கை பொறுத்தவரை இருக்கின்ற காட்சிகள் எல்லாம் எங்கிருந்தோ இயக்கப்படுகிறதே தவிர அது தங்களது மக்களால் இயக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.
அந்த வகையில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்து தமிழ் மக்களின் வாக்கு வங்கியை கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது தீர்மானிக்கும் சக்தியை ஜனநாயக களத்தில் இன்று வரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தடுமாறியே வருகிறது.
காரணம் அது கிழக்கு யுத்த களத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் போர் கைதி? அது இலங்கை இந்திய புலனாய்வு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதனால் தன்னிச்சையாக செயல்படுவது முடியாத காரியம்.
இதன் அடிப்படையிலேயே அதன் தலைவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற விடுதலைப் புலி போராளி இலங்கையின் ஆயுதப் போராட்டத்திலும், அதன் பின்னர் நடந்த புலனாய்வு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்ட கருவி அவரால் அப்போதும் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை இப்போதும் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.
பின்னர் அவர் தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளால் வெற்றி கொள்ள முடியாத தமிழ் தேசிய ஒற்றுமையை உடைப்பதற்காக கிழக்கு அரசியலுக்குள் சிலரால் கொண்டுவரப்பட்டவரே சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவர்.
தற்போது அவர் அரசியலில் தன்னை வளர்த்துக் கொண்ட தலைவராக சிறையில் இருக்கிறார்.
அவரை நம்பி கிழக்கில் ஒரு அரசியல் களம் உருவாகி உள்ளது.
அவர் தற்போது சிறையில் இருப்பதும் அரசியல் காரணங்களுக்காகவே.
ஆனால் அவரிடம் இருக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி காரணமாக அவரை இணைத்துக்கொள்ள பல தென்னிலங்கை கட்சிகள் முயற்சி செய்தாலும் நான் ஏற்கனவே கூறியதை போன்று அவர் தென்னிலங்கையில் உள்ள ஒரு கட்சிக்கு சோந்தக்கார் அதனால்தான் அவர் சிறையில் உள்ளார்.
அவரை தொடர்ந்தும் அந்த கட்சியே வழிநடத்தும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அவர்களது சூழ்நிலை அவ்வாறே உள்ளது இது இலங்கையில் இருந்த எல்லா தமிழ் ஆயுத குழுக்களுக்கும் இருந்த சூழ்நிலைதான்.
இன்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ள பலர் இராணுவத்திடம் சம்பளம் பெறுகிறார்கள் என்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை யார் வழிநடத்துகிறார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சூழ்நிலைகளுக்குள் இருந்தே அவர்கள் அரசியல் செய்ய முடியும் அதை விடுத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிடம் இருந்து உரிமை அரசியல் தீர்வு சர்வதேச அரசியல் என பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் கிழக்கு அரசியலில் ஒரு துரும்புச் சீட்டாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கும் அதையும் தமிழர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை விட கிழக்கில் ஒரு அரசியல் கட்சிக்கான சிறந்த கட்டமைப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவாக்கி வருகிறது இது ஏனைய தேசிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது உள்ள விமர்சனங்களை மிகச் சாதகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பயன்படுத்தி வருகிறது இதுவும் அந்த கட்சிக்கு ஆதரவாளர்களை இணைத்துக்கொள்ள சாதகமாக அமைந்ததுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகாண அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து சில தமிழ் கட்சிகள் அல்லது தமிழ் தலைமைகள் செயற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடுமாறும் தலைவர்கள்!
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல ஆளுமை உள்ள தலைவர்கள் உருவாகிய மாவட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் சரி பல திறமை வாய்ந்த தலைவர்களை உருவாக்கிய மாவட்டம்.
ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் உருவெடுக்கும் அரசியல் தலைவர்கள் தங்களது கொள்கைகளில் இருந்து தடம் மாறி கட்சி தாவல்களில் ஈடுபடுவது அரசியல் ஒழுக்க நெறிகளை மீறிய செயலாக உள்ளது.
அவர்கள் அரசியலை இலாப நட்டம் பார்க்கும் வியாபாரமாக மாற்றிவிடுகின்றனர்.
உலக ஒழுங்குகள், இலங்கையின் அரசியல் போக்கு தமிழ் மக்களின் நன்மை தீமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய அரசியல் தலைவர்கள் மாறி மாறி பேரினவாதத்தின் வாய்களுக்குள்ளேயே விழுந்து விடுகின்றனர்.
தற்போது கிழக்கு கூட்டமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பும் அதில் உள்ள தலைவர்களும் புதிதாக எதையும் செய்துவிடப் போவதில்லை அவர்கள் பேரினவாத தலைவர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியுமே தவிர பேரம் பேசி எதையும் பெற்றுவிட முடியாது.
இதேபோல் தற்போது கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு பயன்படுத்தப்படுமே தவிர அவர்களினால் வேறு எதையும் செய்ய முடியாது.
எனவே கிரைக்கடைக்கு எதிர்கடை தேவை என்பது போல கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நேர் எதிரான அரசியல் கட்சி ஒன்றின் தேவை உண்டு அது தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து உருவாக வேண்டும் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கின்ற தமிழ் மக்களின் தீர்வு திட்டங்களுக்கு உரமிடுவதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.