Advertisement

Responsive Advertisement

அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவோர் 10 வருட விபரத்தை சமர்ப்பித்தால் போதும்


அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவோர் தாம் ஓய்வு பெறுவதற்கு முன் உள்ள பத்து வருட காலத்திற்குரிய ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான விபரங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது என ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம், பொது நிருவாக அமைச்சு மற்றும் தொழிற் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.


இவ்விணக்கப்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை இரத்துச் செய்து புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


அரச நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வு பெறும் வரையான முழுக் காலப் பகுதிக்கும் செலுத்தப்பட்ட ஓய்வூதிய பங்களிப்பு விபரத்தை ஓய்வுபெறும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் ஓய்வூதிய திணைக்களம் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. மேற்படி சுற்று நிருபம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல அரச ஊழியர்கள் கூடுதலாக பாதிக்கப்படுவதுடன் தமது ஓய்வூதியங்களை உரிய வேளைக்கு பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தமது கடுமையான ஆட்சேபனையை மேற்படி திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தனர்.


யுத்தம், சுனாமி, இடம்பெயர்வு காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோரின் விபரங்களை பெற முடியாத நிலையில் ஓய்வூதிய திணைக்கள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தன.


இந்த சூழ்நிலையில் எமது கோரிக்கையில் உள்ள நியாயங்களை உணர்ந்து ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகளும், பொதுநிருவாக அமைச்சும் ஓய்வுக்கு முன்னரான பத்து வருட விபரம் சமர்ப்பிக்கப்பட்டால் போதுமானது என எடுக்கப்பட்ட தீர்மானம் வரவேற்புக்குரியது என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல். முஹம்மட் முக்தார் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments