Advertisement

Responsive Advertisement

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா

( நூருள் ஹுதா உமர்.)
நான் முஸ்லிம் என்பதால் என்னை இனவாதியாக சித்தரித்து என்னைப்பற்றிய பல பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் இனவாதம் பாராமல் நாடுமுழுவதும் பல மில்லியன் கணக்கான சேவைகளை செய்துவருபவன். என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிடத்தை இன்று (29) காலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அங்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தனது உரையில் மேலும்,

தோற்றா நோய்கள் வராமல் தடுக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜித அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டவர். ஏழைகளின் பல துயரங்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் பல சுகாதார திட்டங்களை வகுத்து செயலாற்றும் ஆற்றல் கொண்டவர். ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இனவாதமாக என்னை சிலர் நோக்குகின்றனர். நான் இனவாதி அல்ல. என்னை தேடிவந்து உதவி கேட்போருக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். செய்ய காத்துக்கொண்டிருக்கிறேன். நான் நாடு முழுவதும் இனவாதம், மதவாதம் பாராமல் பல சேவைகளை செய்துள்ளேன்.
இந்த வைத்தியசாலையில் பல குறைபாடுகள் உள்ளதை நான் நன்றாக அறிவேன். உங்களின் கோரிக்கைகளுக்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். சுகாதாரம் மதமற்ற ஒன்று. இனவாதமாக இங்கு யாரும் செயலாற்ற முடியாது. வைத்தியதுறை சார்ந்த நாங்கள் இனவாதம் பாராமல்  இலங்கையர்களாக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் மனகசப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ மனதார விரும்புவன் நான். வேற்றுமை  துயரம் நீங்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கையர்களாக வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments