அமேசன் மழைக்காட்டில் தொடர்ந்தும் பரவி வரும் தீயில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட் பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் பரவியுள்ளது என நாசா எச்சரித்துள்ளது.
அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொலிவியா மற்றும் பிரேசில் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட் கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதை வளிமண்டல அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை 18,000 அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைட் எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளாக நாளாக கார்பன் மோனாக்சைட் கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கின்றது. இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் இது பரவியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க பகுதியிலுள்ள காடுகளும் தீப் பற்றி எரிந்துவருகிறது
எனினும் நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைட் நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டியிருக்கும். கார்பன் மோனாக்சைட் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். அதேநேரம் அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது மரணிக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.
உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக தீப் பற்றி எரிந்துவருகின்றன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது மக்களை பெரும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரத்தை பிரேசில் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாத நிலையில், உலக நாடுகளின் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து தற்போது தீயை அணைப்பதற்கான முயற்சியை பிரேசில் மேற்கொண்டுள்ளது.
ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசன் காடுகளின் தீயை அணைப்பதற்கு 22 மில்லியன் அமெரிக்கா டொலர் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. எனினும் அந்த உதவியை பிரேசில் மறுத்துவிட்டதுடன் நிதியை ஏற்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
நாசா வெளியிட்டுள்ள ஒளிப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments