சட்ட விரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

Saturday, December 31, 2016

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பளை பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி  அரச, காட்டுப்  பகுதிக்குள் சட்ட  விரோதமா  இயங்கிய கசிப்பு  உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு, மூன்று  இலட்சம் மில்லி லீற்றர் கசிப்புக்கோடாவும், இருபத்தி நாலாயிரம், மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தி  உபகரணங்களுடன் சந்தேகத்தின் பேரில் சம்பவ  இடத்தில் வைத்து இரண்டு  பேர் கைது செய்யப்பட்டதுடன்,   கசிப்பு உற்பத்தி நிலையமும்  நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாகவும் பளை பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை  அதிகாலை -2.00, மணியளவில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத்  தகவலின் அடிப்படையில், பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. எஸ். டபிள்யூ, ரஞ்சன பண்டார தலைமையில்  பொலிஸ் சாஜன் நவரட்னா  (36874), மற்றும் பொலிஸ் கொஸ்தபல்களான,       சுனில் (33 605 ), குணதிலக , (333 25 ), பிரசாந்த், (83 237), ஆகியோராடங்கிய பொலிஸ் அணியினரின் திடீர் முற்றுகையின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பற்றப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப்பொருட்கள்  பளை  பொலிஸ் நிலையத்  வைக்கப்ட்டிருப்பதுடன் கைதானசந்தேக நபர்களிடம் விசாரணைகள் நடைபெற்று முடிந்த  நிலையில் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும்,
எதிர் வரும் , 04/01 /2017, ஆம் திகதி புதன்கிழமை காலை  கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்களுடன் சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில்   முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்   நடைபெற்று வருவதாக பளை பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image-0-02-06-46db387dac7eda75a11c978570a9f604920ada680a632ce318a182be074e007c-V
READ MORE | comments

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும் ?

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உற்பத்திப் n;பாருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பேக்கரி உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாஜரினின் விலை விற்பனை விலையையும் விட உயர்த்தப்பட்டுள்ளது எனவும், பாம் எண்ணெயின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் சில பேக்கரி உரிமையாளர்கள் ஏற்கனவே உற்பத்திகளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதாக என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேக்கரி உற்பத்தி விலைகளை அதிகரிக்க இடமளிக்கப்படாது என அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
READ MORE | comments

ஆட்சியை கவிழ்க்க முடியுமென கனவு காண வேண்டாம் : மகிந்தவுக்கு அமரவீர பதில்

2020 வரை எவராலும் தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஆட்சியை கவிழ்க்க முடியுமென கனவில் மட்டுமே எண்ண முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மீனவருக்கு உயிர்காப்பு அங்கி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிலர் தற்போது பனிமூட்டமான காலநிலை என்பதனால் 2017 ல் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்வுகூறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தாண்டில் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கும் எதிர்வுகூறுபவர்களுக்கும் ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். காணும் கனவோ ஒருபோதும் நனவாகப் போவதில்லை. இந்த அரசை 2020ம் ஆண்டு வரை எவராலும் கவிழ்க்கவும் முடியாது அசைக்கவும் முடியாது.
ஏனெனில் இந்த அரசை மாற்ற வேண்டுமானால் அதற்குரிய முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் ஜனாதிபதிக்கு இன்னும் 4 1/2 ஆண்டுகள் செல்லும் வரை பாராளுமன்றத்தை கலைக்க அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி இந்த அரசு 2020 ம் ஆண்டு வரையும் பயணிக்கும். எனவே அரசை கவிழ்ப்பதாக கனவு காண்பவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ரத்னசிறியின் இறுதி கிரியை இன்று

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் இறுதி சடங்கு இன்று மாலை ஹொரணவில் நடைபெறவுள்ளது.
இன்று மாலை 3 மணியளவில் ஹொரண பொது மைதானத்தில் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டு தேகம் தகனம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு ஏற்கனவே அரசாங்ககம் தீர்மானித்திருந்த போதும் விக்கிரமநாயக்கவின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அது இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் 450 வீடுகள் அடுத்த ஆண்டு அமைக்கப்படும் -பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றில் அடுத்த ஆண்டு 450 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரவில் இந்த ஆண்டு 1157 திட்டங்களுக்காக 124மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிலையில் அவற்றில் 1060 திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக 108மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள வேலைத்திட்டங்களையும் விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வுசெய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் மீள்குடியேற்ற பகுதி மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப்பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
போரதீவுப்பற்றில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் 450 வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் பொருத்துவீடுகள் தேவையானவர்களும் விண்ணப்பிக்கமுடியும் என பிரதியமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.
அத்துடன் மீள்குடியேற்ற பிரதேச மக்களின் வீட்டுப்பிரச்சினையை அடுத்த ஆண்டு தீர்த்துவைக்கும் வகையில் மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு முழுமையாக வீட்டுப்பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
IMG_0011IMG_0012IMG_0026IMG_0058
READ MORE | comments

காற்றில்லாத டயர் கண்டுபிடிப்பு! இலங்கையர் ஒருவர் சாதனை!

இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
லங்கா இன்வென்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தாஹிர் (மீலான்) மொகமட் என்பவரே இந்த நவீன சிந்தனையாளராவார்.
காற்றுக்குப் பதிலாக ஜெலி போன்ற ஒரு உறுதிமிக்க பொருள் டயரில் செலுத்தப்படுகிறது. இந்தப் பொருள் காற்று போல செயல்பட்டு பாதையில் செல்லும் போது ஏற்படக் கூடிய அழுத்தம் போன்றவற்றைத் தாங்கக் கூடிய சக்தி மிக்கதாக இருக்கிறது. இதனால், இந்த டயரில் துளைவிழாது. இதுதான் அதன் சிறப்பு அம்சம் என தனது கண்டு பிடிப்பு பற்றி தாஹிர் தெரிவித்தார்.
இந்த டயரை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்த தாஹிர் திட்டமிட்டுள்ளார். இந்த டயர் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையின் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறுகின்றார்.
தாஹிர் இதற்கு முன்பும் ஒரு சாதனையைப் படைத்திருந்தார். அது அவராகவே வடிவமைத்த வாசிக்கப் பயன்படும் மூக்குக் கண்ணாடியாகும்.
இது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்குமென தயாரிக்கப்பட்டது.
இந்த மூக்குக் கண்ணாடியின் வில்லைகள் முன்னோக்கி நகரும் போது பெரிய உருவங்கள் சிறிதாகவும், பின்னோக்கி நகரும் பொது சிறிய உருவங்கள் பெருதாகத் தெரியும்படி வித்தியாசம் காட்டுகிறது. பாவிப்பவரின் வசதிக்கு ஏற்றவாறு இதை சரி செய்யவும் முடியும்.
மேலும் தூரத்தில் உள்ள ஒருவர் கடைகளில் காணப்படும் பெயர் பலகைகளையும் வாசிக்கக் கூடிய வசதி இதில் இருக்கிறது. அதாவது, ஒரு பொருளைத் தெளிவாக பார்க்கும் வரையில் இந்த விசேட மூக்குக் கண்ணாடியை நகர்த்தலாம்.
தண்ணீரில் அணிந்து நடக்கக் கூடியதும், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடியதுமான ஒரு சப்பாத்தையும் வடிவமைத்திருப்பதாகவும் தாஹிர் மேலும் தகவல் தருகிறார்.
அண்மையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர் தனது கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தவென என்ற இணையத்தளம் www.lankainvention.com ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
READ MORE | comments

ஜெயலலிதா மரணம்!- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்!

செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது.
அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள்.
டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது.
பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்களில், ‘முதல்வர் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இயன்றதைச் செய்து வருகிறார்கள்’ என ரிச்சர்ட் பியெலிடம் இருந்து வெளியான இறுதி அறிக்கை மிக முக்கியமானது.
இதையடுத்து, டாக்டர் ரிச்சர்ட் பியெலின் மின்னஞ்சல் முகவரிக்கு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாகவும், அதுநாள்வரை அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் உள்ள மருத்துவ விவரங்கள் தொடர்பாகவும் டிசம்பர் 9-ம் தேதி கேள்விகள் அனுப்பப்பட்டன.
அந்தக் கேள்விகள் இங்கே...
1. இந்தியாவில் நுரையீரல் பாதிப்படைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம். இதன் காரணம் என்ன?
2. நீங்கள் செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந்தாலும் அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெறமுடியும் என்பது உண்மையா? செப்ஸிஸ் குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா?
3. அப்போலோ மருத்துவமனையின் ஓர் அறிக்கையில், முதல்வர் ’pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்ஸிஸ் நோயிலிருந்து pulmonary edema எவ்வகையில் மாறுபட்டது?
4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில் ‘எக்மோ’ என்னும் கருவி பற்றி சாமானியர்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன? வென்டிலேட்டர் கருவியைவிட அது மேம்பட்டதா? எக்மோ கருவியின் உதவியுடன் ஒரு நோயாளியை எவ்வளவு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்?
5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா?
6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?
7. நீங்கள் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவரால் பேச முடிந்ததா? அவர் உங்களிடம் என்ன சொன்னார்?
8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி உங்களை முதன்முதலில் தொடர்பு கொண்டது யார்?
9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான உங்களது முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது?
10. ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக என்ன ஆலோசனைகளை அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கினீர்கள்? அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா?
11. நீங்கள் கடைசியாக அவரைச் சந்தித்தபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது?
12. கண் இமைக்கும் நொடியில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா?
ரிச்சர்ட் பியெலுக்கு கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறோம். `பதில் அளிப்பாரா ரிச்சர்ட்?’ என்னும் 13-வது கேள்வியுடன்!
READ MORE | comments

2017ஐ வரவேற்க இன்று இரவு கொழும்பில் விசேட வான வேடிக்கை

கொழும்பில் இன்று 31ஆம் திகதி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் விசேட வான வெடி வேடிக்கை நிகழ்வொன்றை நடத்துவதற்கு நிதி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி இரவு 11.50 மணி முதல் நாளை அதிகாலை 12.15 வரை கொழும்பு கங்காராம வீதியில் பேரே வாவியை அண்மித்த பகுதியில் இந்த வான வெடி வேடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஶ்ரீ லங்கா ரெலிக்கொம் நிறுவனம் , மொபிடெல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரனை வழங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 
READ MORE | comments

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கஜமுகா சூர சங்கார ஆரம்ப விழா

Friday, December 30, 2016


(எஸ்.ஸிந்தூ)
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 03.01.2017 செவ்வாய்கிழமை பி.ப.3.மணிக்கு கஜமுகா  சூர சங்கார ஆரம்ப விழா தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் இடம் பெறவுள்ளது.


இவ் கஜமுகா  சூர சங்கார ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக
கலாநிதி மூ.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர்   ம.தெ.எ.பற்று பிரதேச செயலகம்)  சிறப்பு அதிதிகளாக 
வைத்தியகலாநி கு.சுகுணன் (வைத்தியட்சகர் வைத்தியசாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை) மற்றும் திருமதி எழில்வாணி பத்மகுமார் (மட்டு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்)
விசேட அதிதிகளாக திரு.த.பிரபாகரன் (கலாசார உத்தியோகத்தர் ம.தெ.எ.பற்று) மு.புவனசுந்தரம் (மட்டு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர்)அழைப்பு அதிதிகளாக திருமதி. குமுதினி பரமசிவம் (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) திருமதி. ஸ்ரீபிரியா நாகையா (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) திரு.அ.உதயகுமார் (தேற்றாத்தீவு மகா வித்தியாலய அதிபர்) திரு.த.சிறிதரன் (தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய அதிபர்) கௌரவ அதிதிகளாக தேற்றாத்தீவு இந்து ஆலயங்களின் குருமார் வண்ணக்குமார்;,கழகங்கள்,மன்றங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்
READ MORE | comments

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி

(எஸ்.ஸிந்து)
ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும்.இம் முறை தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் (நேற்று  வியாழக்கிழமை(29.12.2016) மாலை  பரிவார ஆலயத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விசேட ஸ்னபான அபிஷேகம்மும் விசேட பூஜை,பஜனை மற்றும் சமய செற்பொழிவுகளும் இடம் பெற்றன.



READ MORE | comments

84 ஆண்டுகளின் பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு குடமுழுக்கு விழா: கங்கையிலிருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் சோழீஸ்வரர் கோயிலுக்கு 84 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 2-ல் குடமுழுக்கு நடக்கிறது. இதை வரலாற்று நிகழ்வாகவும் பதிவு செய்வதற்காக கங்கையிலிருந்து 108 கலசங்களில் புனித நீர் எடுத்து வந்து குடமுழுக்கு நடத்தப்படுகிறது.
1932-ல் குடமுழுக்கு
வங்கத்தை வெற்றிகொண்ட ராஜேந்திர சோழன் அதைக் கொண் டாடும் விதமாக கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து, இங்கே ஜல ஸ்தூபியை நிறுவியதுடன் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற நகரத் தையும் உருவாக்கி, சோழ நாட் டின் தலைநகரை அங்கு மாற்றி னான். கங்கைகொண்ட சோழபுரத் தில் சோழீஸ்வரர் (பிரகதீஸ்வரர்) கோயிலும் அவனால் எழுப்பப்பட் டது. இந்தக் கோயிலுக்கு 1932-ல் உடையார்பாளையம் ஜமீன்தாரால் கடைசியாக குடமுழுக்கு நடத்தப் பட்டது. அதற்கு பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை.
தொல்லியல்துறை அனுமதி
இந்தக் கோயில் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத்துறை மற்றும் யுனெஸ்கோவின் கட்டுப் பாட்டில் உள்ளதால் அனுமதி பெறுவதில் நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. இதனால், பலமுறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. கடந்த 2011 மற்றும் 2013-ம் ஆண்டு களில் கொடிமரங்கள் எடுத்து வரப்பட்ட நிலையிலும்கூட அனுமதி கிடைக்காததால் குடமுழுக்கு நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், காஞ்சிமட அன்னா பிஷேக கமிட்டியின் வேண்டு கோளை ஏற்று, சோழீஸ்வரர் கோயிலுக்கு பிப்ரவரி 2-ம் தேதி குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறையும் யுனெஸ்கோவும் இந்து அறநிலையத் துறையும் அனுமதி வழங்கி இருக்கின்றன.
gangai_3109723f
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய காஞ்சிமட அன்னாபிஷேக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோமகன், “இந்தக் கோயிலில் கொடிமரம் அமைப்பதற்குக்கூட இதற்கு முன்பு அனுமதி தரப்படவில்லை. இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்திருக்கிறது. குடமுழுக்குக்கு முன்னதாக, 43 அடி உயரத்தில் தங்க முலாம் பூசிய தாமிரப்பட்டை பொருத்தப் பட்ட கொடி மரம் நடப்படுகிறது. இதேபோல், கோயிலின் கருவறை விமானத்தில் 9 அடி உயர தங்கக் கலசமும் பொருத்தப்படுகிறது. ராஜேந்திரனின் கங்கை வெற்றி யால்தான் கங்கைகொண்ட சோழ புரமும் இந்தக் கோயிலும் உருவா னது. எனவே, இதை ஆன்மிக விழாவாக மாத்திரமில்லாமல் வர லாற்று நிகழ்வாகவும் பதிவுசெய்ய தீர்மானித்திருக்கிறோம்.
108 கலசங்களில் புனித நீர்
இதற்காக, ராஜேந்திரன் படை யெடுத்துச் சென்ற இடங்களைத் தடம் காணும் பயணக் குழுவானது ஜனவரி 6-ம் தேதி ஹரித்துவார் செல்கிறது. அங்கே 108 கலசங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, 13-ம் தேதி திருப்பனந்தாள் அருகில் உள்ள திருலோச்சி கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ராஜேந்திரன் கங்கையை வெற்றி கொண்டதைச் சொல்லும் முதல் கல்வெட்டு இங் குள்ள சிவாலயத்தில்தான் உள் ளது. அதனாலேயே கங்கை நீர் கலசங்கள் முதலில் இங்கு கொண்டு வரப்படுகின்றன. ஜனவரி 27 மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கு கின்றன.
gangai konda cholapuram
அதற்கு முன்னதாக அன்று காலையில் திருலோச்சியிலிருந்து 108 கலசங்களும் பொதுமக்கள் புடைசூழ 18 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாக சாலை பூஜையில் குடமுழுக்கு நடத்துவதற்காகச் சேர்க்கப்படும்’’ என்று சொன்னார்.
த இந்துவில் வெளியான கட்டுரை 
READ MORE | comments

உ/த பெறுபேறு தாமதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

2016 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாது தாமதப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதால் பரீட்சார்த்திகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலக்காவதாகவும் பல மாணவர்களுக்கு பல்வேறு புலமைப் பரிசில்கள் கிடைக்காது போகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இதனால் மாணவர்களுக்காக தாம் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 12ஆம் திகதியளவில் பெறுபேற்றை வெளியிட முடியுமென கருதுவதாகவும் இம்முறை தொழிநுட்ப பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதனாலேயே பெறுபேற்றை வெளியிடுவதில் தாமதமாதத்திற்கு காரணமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
READ MORE | comments

இருளில் மூழ்கப்போகும் இணைய உலகம்...! 31ஆம் திகதி நடக்கப்போவது என்ன..?

புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்திருக்க கூடிய ஒன்று.
எனினும், பல ஆண்டுகளாக சுற்றும் போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விநாடியை இழந்திருக்கும் அல்லது அதிகரித்திருக்கும்.
அதாவது புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் அதனை லீப் நேரம் என குறிப்பிடுவார்கள்.
இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி புவி தன்னை சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணிக்கு 61 விநாடிகள் காட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அனைத்து கணினிகளும் 60 விநாடிகளை மையமாககொண்டு இயங்குகின்றது. தற்போது ஒரு விநாடி அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து கணினிகளும் திடீரென நின்று போககூடிய (ஷெட் டவுன் ஆககூடிய) வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இதனை கண்டறிந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி அனைத்து எண்முறை (digital) கடிகாரங்களும் 61 விநாடிகளை காட்டவேண்டியுள்ளது.
இதன் காரணமாக கணினிகள் பலவும் நிலைத்தடுமாறி நின்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இணைய உலகம் இருளில் மூழ்கிப் போகலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில் இன்று முதல் நானோ விநாடிகளை (விநாடியை 60 பிரித்தால் மைக்ரோ விநாடி, அதனை 60ல் பிரித்தால் நானோ விநாடி) கழிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து கணினிகள் மற்றும் இணையம் சார்ந்த அனைத்து சாதனங்களும் இதற்கான மேம்படுத்தலை (அப்டேட்) தாமாகவே செய்துகொள்ள அப்பிள், மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சீர்செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டும் இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்த்தர் பலி

பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினருடன், சுற்றுலா சென்ற நிலையில், கடலில் நீராட சென்ற சமயத்திலேயே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடலில் மூழ்கியவரின் சடலத்தினை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருந்த நிலையில் சடலம் இன்று காலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பாசிக்குடா அமயா சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மூன்று நாடுகளின் எல்லையை கடந்து தப்பிய ஜேர்மன் கொலையாளி

பேர்லினில் கிறிஸ்மஸ்வியாபார நிலையங்கள் காணப்பட்ட பகுதிக்குள் லொறியை செலுத்தி பலரை படுகொலை செய்த அனீஸ் அம்ரி கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் தேடப்பட்ட நிலையில் அவரால் பல நாடுகளின் எல்லைகளை கடந்து இத்தாலிக்கு செல்ல முடிந்துள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவர் எவ்வாறு 1000 கிலோமீற்றரை கடந்தார் (பேர்லினிலிருந்து மிலான்) என்பது முக்கியகேள்வியாகவுள்ளது.அதிகாரிகள் இது குறித்து இறுக்கமான மௌனத்தைகடைப்பிடிக்கின்றனர். எனினும் பிரான்ஸ் மற்றும் இத்தாலிய ஊகங்கள் அவரால் எவ்வாறு தப்பமுடிந்தது என்ற விவரத்தை வெளியிட்டு வருகின்றன.அம்ரி கொல்லப்பட்ட பின்னர் அவரிடம் காணப்பட்ட இரு புகையிரபயணசீட்டுகள் அவர் பிரான்ஸ் ஊடாகவே தப்பிச்சென்றார் என்பதை காட்டிக்கொடுத்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.அவர் பிரான்ஸின் லைன் நகரிலிருந்து சம்பெரிக்கும் பின்னர் அங்கிருந்து இத்தாலியின் மிலானிற்கும் சென்றுள்ளார்.
அவர் இவ்வாறு நாடுகளை கடந்து பயணம் செய்துகொண்டிருந்தவேளை ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் அவர் எங்கிருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர், இறுதியில் வழமையான சோதனை நடவடிக்கையொன்றின்போதே அவர் கொல்லப்பட்டார். தன்னை சோதனையிட முயன்ற பொலிஸ் அதிகாரியை சுட்ட அம்ரியை இன்னொரு பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொன்றார்.தற்போதுஅவர் பயணம் செய்திருக்கலாம் என தாங்கள் கருதும்பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்கள் போன்றவற்றை அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர், எனினும் தடயங்களை கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளது என பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு குறித்த கேள்விகளும் இந்த சம்பவத்தின் பின்னர் எழுந்துள்ளன.
வலதுசாரி கட்சிகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கூச்சலிட ஆரம்பித்துள்ளன,பேர்லின் கொலையாளியால் மூன்று நாடுகளை கடந்து செல்ல முடிந்துள்ளமை ஐரோப்பியநாடுகளின் எல்லை பாதுகாப்பு மோசமான நிலையில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாக வலதுசாரி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

காலக்கெடு முடிந்தது: தமிழ் மக்களின் கேள்விகளால் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனத்தின் பௌத்த மேலாதிக்கவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஜனநாயக ரீதியாக சமவுரிமை, சமநீதி கேட்டு போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகளும், மகஜர்களும் வெற்றிக் காகிதங்கள் போல் தூக்கி வீசப்பட்டன. ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதிகள் கூட சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளால் இலக்கு வைக்கப்பட்டனர். தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் இனக்கலவரம் என்ற பெயரில் அடித்து விரட்டப்பட்டனர். தமிழ் மக்கள் தமது தாயாகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் கூட நிம்மதியாக வாழ முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்விளைவு இந்த நாடு 30 வருடம் ஒரு ஆயுதப்போராட்த்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும் கைகோர்த்து சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இரு தேசிய இனங்களும் தமக்குள் மோதிக் கொண்டதன் விளைவு இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. 2009 முள்ளியவாய்கால் பேரவலத்துடன் இந்த போர் மௌனிக்கப்பட்டிருக்கிறது. சமநீதி, சமவுரிமை என்பவற்றை பெற்று இந்த நாட்டில் இறையாண்மையுள்ள ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களும் வாழ வேண்டும், அதற்கு போரின் மூலம் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்களின் பெரும்பாலனவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் பூகோள அரசியல் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மேற்குலகம் மற்றும் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதனால் அதனைக் கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திற்கு அவை உதவியிருந்தன. மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனவும், பயங்கரவதத்திற்கு எதிரான நடவடிக்கை எனவும் உரிமைக்காக போராடிய தமிழ் மக்களது போராட்டம் நசுக்கப்பட்டது.
ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களது தெரிவாகியது. மீண்டும் ஜனநாயக ரீதியாக தமது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அமைப்பாக மக்கள் வேறு வழியின்றி அதனையே ஆதரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டனர். தமிழ் மக்களும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம். அவர்களும் இந்த நாட்டில் தனித்துவ இறையாண்மை உண்டு என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் இந்த நாட்டின் இன்னொரு தேசிய இனமாகிய சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனை பிரிக்கப்படாத நாட்டிற்குள் வடக்கு- கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி மூலம் வழங்க வேண்டும் என்ற கோசத்துடன் 2009 முதல் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கின்ற அத்தகைய சமஸ்டி முறை தீர்வுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது இறைமையை வழங்கி வருகிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின் போது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் நிரத்தர அரசியல் தீர்வு என்ற கோசத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். காலம் கனித்து வருகிறது. இதை குழப்பி விடாதீர்கள். 2016 இற்குள் தீர்வு காண்பதற்கு ஒட்டுமொத்த மக்களின் ஆணையையும் அவர் கோரினார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கினர். இதன் எதிரொலியாக தீவிர தமிழ் தேசியத்துடன் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி கூட்டமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. எதிர்பார்த்ததை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இரா.சம்மந்தனின் இந்தக் கூற்று தற்போதைய சூழலில் பார்க்கும் போது வெறும் தேர்தல் இராஜதந்திரமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து 15 மாதங்களும் கடந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறிய 2016 டிசம்பர் மாதமும் முடிவடைகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. 65 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் ஒரு அரசியல் பிரச்சனைக்குரிய தீர்வை ஒரு இரவில் வழங்கிவிடவோ அல்லது பெற்று விடவோ முடியாது என்பது உண்மை. ஆனால் அந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கூட 15 மாதமாக உருவாக்க முடியாத நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இருக்கிறது. இது மக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால பலமான இருப்பை கூட கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
ஏனெனில், கடந்த 2015 ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வழங்கிய வாக்கின் மூலமே நல்லாட்சி உதயமாகியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் புதிய நல்லாட்சி அரசாங்கம் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பாராளுமன்ற தேர்தலின் பின் நன்றிக்கடனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, கூட்டமைப்பு பங்காளிக் கடசி ஒன்றின் தலைவர் ஒருவருக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி என்பன அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. இது அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை தான். ஆனால் தமிழ் மக்கள் 65 வருடத்திற்கு மேலாக இந்த பதவிக்காக போராடவில்லை. ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்களும், தியாகங்களும் பதவிக்கானவை அல்ல. அவை ஒரு இலட்சியத்திற்கானவை. ஒரு இனத்தின் விடிவுக்கானவை. அவை உரிமைக்காக, சமநீதிக்காக, இறைமைக்காக போராடும் மக்களுக்கானவை. இதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது தமிழ் மக்கள் தொடர்பாக ஆசுவாசுப்படுத்தக் கூடிய கதைகளை பேசுவதால் மட்டும் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தையோ அல்லது நல்லாட்சியையோ ஏற்படுத்திவிட முடியாது. அது அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை மக்கள் பிரதிநிதிகளின் மனதில் இருந்து வரவேண்டும். அதற்கான வேலைகள் இன்று வரை நடந்திருக்கின்றதா என்ற கேள்விக்கு தான் விடை காணமுடியாமல் இருக்கின்றது.
இந்த டிசம்பருக்குள் தீர்வைத் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்த பட்சம் சில அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத நிலையில் உள்ளது. மக்களின் விருப்பப்படி ஒரு அபிவிருத்தியைக் கூட முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கின்றது. குறிப்பாக காணாமல் போகச் செய்யப்படடோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு என்பவற்றில் தமிழ் மக்கள் திருப்திப்படும் படியாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மறுபுறம் பௌத்தமயாமக்கல், திட்டமிட்ட குடியேற்றங்கள், இனப்பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் என்பன மிகவும் சூட்சுமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதாக கூறுகின்ற போதும் அதனை தமிழ் மக்களினதோ அல்லது தமிழ் மக்களின் ஆணைப்படி இயங்கும் மாகாணசபையினதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளில் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினதோ விருப்பப்படி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. வவுனியாவிற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் கூட அதனை எங்கு அமைப்பது என்ற முடிவு எட்டப்படவில்லை. அரசாங்கம் அதனை கூட்டமைப்பின் அல்லது வடமாகாண சபையின் விருப்பதற்கு அமைய அமைக்க விரும்பவல்லை. அதனால் பல சாட்டுப் போக்குகளைக் கூறி இழுத்தடிப்பு செய்து வருகிறது. மறுபுறம் மீள்குடியேறிய மக்களுக்காக அரசாங்கம் 65,000 பொருத்து வீடுகளை வழங்கவுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பொருத்து வீடுகள் தமது பகுதிக்கு பொருத்தமற்றவை என வலியுறுத்தி வருவதுடன், இது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனாலும் அரசாங்கம் மக்களதும், மக்கள் பிரதிநிதிகளினதும் ஜனநாய கருத்துக்களை மதிக்காது அதனை அதனை மக்கள் மீது திணிக்கவே முயல்கிறது. ஆக, ஒரு சாதாரண அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த நல்லாட்சி அரசாங்கமும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத தன்மையே உள்ளது. மறுபுறம் தமிழ் மக்கள் தமக்கான அபிவிருத்தியைக் கூட தீர்மானிக்க திராணியற்றவர்களாகவுள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு தீர்வு குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதமுடியும்.
ஆக, இந்த நாட்டில் தீர்வைப் பெற்று தருவோம் எனக் கூறியவர்களால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் உள்ளது. அபிவிருத்தியை மக்கள் விருப்பப்படி திட்டமிட முயடியாமல் உள்ளது. இந்த நிலையில் தீர்வு திட்டம் குறித்து எப்படி நம்பிக்கையாக செயற்பட முடியும் என தமிழ் மக்கள் மனங்களில் எழும் கேள்வி நியாயமானதே. இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி ஐ.நா அழுத்தங்களில் இருந்து காப்பாற்றி இந்த ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இனி என்ன சொல்லப் போகிறது…? ஏமாற்றமே மிஞ்சியதாய் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் எழும் கேள்விகளால் தடுமாறும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே உண்மை
READ MORE | comments

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பனிமூட்டம்

Thursday, December 29, 2016

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.
இந்நிலையில் 29.12.2016 அன்று காலை வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எறியவிட்டு வாகனங்களை  செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.ghj
READ MORE | comments

பால்மாக்களின் விலையை அதிகரிக்க அனுமதியில்லை

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்காதிருக்க நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
முக்கிய பால்மா நிறுவனங்கள் சில இறக்குமதி செய்யும் பால்மாக்களுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 100 தொடக்கம் 117 ரூபாவும், 400 கிராம் பால்மாவுக்கு 40 தொடக்கம் 46 ரூபாவும் விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் கோரியுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த விலை அதிகரிப்பு அவசியம் இல்லை என அதிகார சபை கருதுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களுக்கான விலையை அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கசித திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவுக்கு 810 ரூபாவும் 400 கிராம் பால் மாவுக்கு 325 ரூபாவும் உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நியூசிலாந்து , ஜப்பானில் மீண்டும் நில அதிர்வு!!

மத்திய நியூசிலாந்தில் மீண்டும் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.5 மெக்னிடியுடாக பதிவாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
நில அதிர்வு ஏற்பட்டு எட்டு நிமிடங்களின் பின்னர் மீண்டும் 3.4 மெக்னிடியுட் அளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளது.
டோக்கியோவில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
READ MORE | comments

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முகத்தில் வெள்ளைத்துணியை போட்டுச்செல்லும் நிலை ஏற்படும் - அமீர்அலி

நாங்கள் கொண்டு வந்த அரசாங்கம், நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை, எங்களால் தான் முதலமைச்சர் வந்தார் என்றெல்லம் கூறுகின்றனர்.ஆனால் வேலை நடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள். இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.
மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் நேற்று(28) பிற்பகல் மீன்பிடியாளர்கள் மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்த நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், இணைப்பாளர் ஜோன் லோகநாதன் பாஸ்டர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக மண்முனைப்பற்றில் வறிய நிலையில் உள்ள மீனவர்கள் மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்கள் 76பேருக்கான தொழில் உபகரணங்கள், வலைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முதல் கட்டமாக தங்களது பதிவுகளை செய்து செல்லுங்கள் என்று கூறியும் கூட்டம் நிறைவுபெற்றதும் எடுக்கப்படும் தீர்மானத்தை உங்களுக்கு தருகின்றோம்.
ஊடக நண்பர்களுக்கு சொல்லப்பட்டாலும் கூட அதுவேறு வகையாக திரிவுப்படுத்தப்பட்டு நான் அவர்களை அனுமதிக்கவில்லையென்ற காட்டமான பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
அதற்கு நான் அஞ்சுபவன் அல்ல. ஆனால் மாகாணசபையில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் மாகாணத்திற்குள் இருக்கும் அதிகாரத்தை அவர்களே கேட்டுக்கொள்ளாமல் பேசிக்கொள்ளாமல் மட்டக்களப்புக்கு வந்து செய்திகொடுப்பதற்காக செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.
மக்களை ஏமாற்றவேண்டும் என்று பேசுகின்றனர்.இதனை தவிர்த்துக் கொள்வதற்காகத்தான் ஊடக நண்பர்களை இதிலிருந்து சற்று விலகி ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
பிரதேச செயலாளர் மட்டத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நேரடியாக பேசி மாகாணசபை மட்டத்தில் பேசக்கூடிய பிரச்சினைகளை பேசி தீர்க்காமல் அதற்குரிய பிரச்சினைக்கு தீர்வுக்கொடுக்க தெரியாமல் ஒரு சிலர் வாய்க்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லாமல்பேசுகின்றனர். கவலையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.இந்த நிலை மாறவேண்டுமானால் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகவுள்ளது.அந்த பங்களிப்பு இருக்கும்போதே அவர்கள் சற்று அமைதியாக பேசும் விடயத்தினை எதிர்பார்க்கமுடியும்.
அதுமட்டுமன்றி ஒரே விடயத்தினையே எல்லோரும் பேசுகின்றனர்.ஒரு மின்கம்பம் வீழ்ந்து விட்டால் எல்லா மாகாணசபை உறுப்பினர்களும் எழுந்து அது தொடர்பில் பேசுகின்றனர்.
நானும் பேசினேன் என்று ஊடகத்தில் வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றனர். இது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் செயலாக கடந்த காலத்தில் கண்டுகொண்டுள்ளோம்.
ட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகளை நேர்மையோடும் தன்னம்பிக்கையோடும் கொண்டுசெல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நியாயமான முறையில் நேர்மையான முறையில் மக்களை ஏமாற்றாத முறையில் மக்களுக்கு போலியான பிரச்சாரங்கள் இல்லாத முறையில் அரசியலையும் அதிகாரிகளின் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவேண்டும்.
நாங்கள் விரும்பும் காரணத்தினால் ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருங்கள் என்று அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இந்த மாவட்டத்தில் எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் தவறிப்போயுள்ளது என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது தொடர்பில் பேசுவதும் கிடையாது.
அதனால் இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் பேசுவது கிடையாது. வெறுமனே மக்களுக்கு சூடேற்றி முறுக்கேற்றும் வசனங்களைப்பேசி வீர வசனங்களை பேசும் விடயங்களை கடந்த காலத்தில்செய்தார்கள்.
தற்போது ஒரு விடயமும் இல்லையென்ற காரணத்தினால் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் துவேசத்தினையும் அவர்கள் பேசுகின்றனர்.
வேலை நடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.
இதனைவிட கேவலம் என்ன உள்ளது என்று இவ்வாறு பேசும் மாகாணசபை உறுப்பினர்களிடம் நான் கேள்வியாக கேட்டேன் என்றால் அவர்கள் முகத்தில் வெள்ளைத்துணியை போட்டுக்கொண்டுசெல்லும் நிலையேற்படும்.
மேலும் அவர்கள் கொண்டுவந்த தேசிய அரசாங்கம், அவர்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் அமைச்சர்களும் மூலமாக செய்யவேண்டிய வேலைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு கொண்டுவந்து பேசி ஊடகவியலாளர்கள் ஊடாக மாவட்டத்தில் உள்ள மக்களை ஏமாற்றும் செயற்றிட்டமாகவே நான் பார்க்கின்றேன் என்பதை தெளிவாக கூறுகின்றேன் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

வீதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில் உள்ள வடினாகல பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது வரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இது வரையில் தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017 ஆண்டு 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.



இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2017 ஆண்டு  1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம், அற்புதபிள்ளையார் ஆலய வீதி, களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 .

ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: -
பாடநெறிகள்             காலம்          NVQ 
1. கணனி     06 மாதங்கள்  மட்டம் 4
2. நீர்குழாய் பொருத்துதல்    03 மாதங்கள் மட்டம் 3
3. உருக்கி ஒட்டுதல்        06 மாதங்கள் மட்டம் 3
4. மின் இனணப்பாளர்        06 மாதங்கள் மட்டம் 3;
5. அழகுக்கலை  06 மாதங்கள் மட்டம் 3
6.  தையல் 06 மாதங்கள் மட்டம் 4


NVQ முறையில் நடைபெறும்.
பாடநெறிகள்; முற்றிலும் இலவசம் 

மேலதிக தகவல்களுக்கு 
நிலைய பொறுப்பாளர்
தொழிற்பயிற்ச்சி நிலையம்
அற்புதபிள்ளையார் ஆலய வீதி 
களுவாஞ்சிகுடி.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |