2020 வரை எவராலும் தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஆட்சியை கவிழ்க்க முடியுமென கனவில் மட்டுமே எண்ண முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மீனவருக்கு உயிர்காப்பு அங்கி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிலர் தற்போது பனிமூட்டமான காலநிலை என்பதனால் 2017 ல் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்வுகூறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தாண்டில் அரசை கவிழ்ப்பதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கும் எதிர்வுகூறுபவர்களுக்கும் ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். காணும் கனவோ ஒருபோதும் நனவாகப் போவதில்லை. இந்த அரசை 2020ம் ஆண்டு வரை எவராலும் கவிழ்க்கவும் முடியாது அசைக்கவும் முடியாது.
ஏனெனில் இந்த அரசை மாற்ற வேண்டுமானால் அதற்குரிய முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் ஜனாதிபதிக்கு இன்னும் 4 1/2 ஆண்டுகள் செல்லும் வரை பாராளுமன்றத்தை கலைக்க அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி இந்த அரசு 2020 ம் ஆண்டு வரையும் பயணிக்கும். எனவே அரசை கவிழ்ப்பதாக கனவு காண்பவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments